Sunday, March 26, 2023
முகப்புசெய்திநேரலைLive: சிவக்கும் கன்னியாகுமரி - தொடரும் மீனவர் போராட்டங்கள் - நேரலை !

Live: சிவக்கும் கன்னியாகுமரி – தொடரும் மீனவர் போராட்டங்கள் – நேரலை !

-

கி புயலின் தாக்குதலால் நிலைகுலைந்து போயிருக்கின்றனர், கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள். பல நூறு மீனவர்கள் இறந்துள்ளனர். ஆழ்கடல் மீன்பிடிப்பிற்குச் சென்ற ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்களின் கதி என்ன ஆனது எனத் தெரியவில்லை என்கின்றனர் மீனவ மக்கள்.

இச்சூழலில் நேற்று (07-12-2017) காலையில் நாகர்கோவில் அருகே உள்ள இரயுமன்துறை, பூத்துறை, தூத்தூர், சின்னத்துறை, இறைவிபுத்தன் துறை, வள்ளவிளை, மார்த்தாண்டன் துறை, நீரோடி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த சுமார் 9,000 -க்கும் மேற்பட்ட மக்கள் சுமார் 15 கிமீ தூரம் பேரணியாகச் சென்று குழித்துறையில் இரயில் மறியலில் ஈடுபட்டனர். காலை 9.30 மணியளவில் மறியல் போராட்டத்தை அறிவித்த மக்களை, தடுத்து நிறுத்த போலீசு பல்வேறு முயற்சிகளை எடுத்தது.

குழித்துறை நோக்கி போராட்டத்திற்கு செல்லும் பெண்கள்

அனைத்தையும் முறியடித்து குழித்துறை இரயில் நிலையத்திற்கு நுழைந்த மக்களை தடுத்து நிறுத்த முடியாமல் திணறியது போலீசு. மக்கள் தொடர்ச்சியாக இரயில் மறியலில் ஈடுபட்டனர். அதில் கலந்து கொண்ட மீனவர்கள் மத்திய, மாநில அரசுகளின் மெத்தனப் போக்கையும், திமிர்த்தனமான நடவடிக்கைகளையும் கண்டித்து கோஷம் எழுப்பினர்.

கேரள முதல்வர் எடுத்த துரித நடவடிக்கைகளையும், அங்கு மீனவர்கள் விரைவில் மீட்கப்பட்டதையும், உரிய நிவாரணத் தொகை அம்மீனவர்களுக்கு வழங்கப்பட்டு வருவதையும் மீனவர்கள் சுட்டிக் காட்டினர். மாநில அரசுக்கும், மத்திய அரசுக்கும் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தான் கவனத்தில் கொண்டிருப்பதையும், மீனவர்கள் பிரச்சினை குறித்து அவர்கள் கவலை கொள்வதில்லை என்பதையும் மீனவர்கள் சுட்டிக் காட்டினர். தங்களது மாவட்டத்தை கேரளத்தோடு இணைத்து விடும்படியும் ஊடகங்களுக்கு பேட்டியளித்துள்ளனர்.

ஆறு மாவட்ட போலீசுப்படையும் அங்கு குவிக்கப்பட்டு இருந்தது. நேற்று மதியம் அப்பகுதியில் மழை பெய்த சமயத்திலும், நனைந்து கொண்டே இரயில் மறியலை மீனவர்கள் தொடர்ந்து நடத்தினர்.

இந்நிலையில் நேற்று இரவு 7.00 மணியளவில் மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் சவான், மாவட்ட எஸ்.பி. துரை ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் முதல்வரோ, துணை முதல்வரோ நேரில் வந்து தங்களுக்கு பதில் சொல்ல வேண்டும் என்றும், தங்களது கோரிக்கைகளுக்கு பதில் கிடைக்காமல் அங்கிருந்து கிளம்பப் போவதில்லை என்றும் மீனவர்கள் கூறியுள்ளனர்.

இரவு பதினோரு மணிக்கும் மேல் அங்கு கொட்டும் பனியிலும், பெண்கள், குழந்தைகள் உள்ளிட்டு அனைவரும் மறியலை தொடர்ந்து நடத்தினர். மக்களோடு இணைந்து போரட்டத்தில் ஈடுபட்டிருந்த பங்குத் தந்தை மற்றும் மீனவர் சங்கப் பிரதிநிதிகளுடன் இரவு நடைபெற்ற பேச்சுவார்த்தையின் அடிப்படையில் போராட்டம் முடித்துக் கொள்ளப்பட்டது.

பங்குத் தந்தை போராட்டத்தை முடித்துக் கொள்வதாக அறிவித்தாலும், மீனவர்கள் பலரும் இது தற்காலிகப் பின்வாங்கல் தான். கோரிக்கைகளும், வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படாவிட்டால் போராட்டம் மீண்டும் தொடரும் எனத் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தை ஆளும் ‘டெட்பாடி’ அரசோ, மீனவர்கள் போராட்டம் கடுமையான பிறகுதான் 5 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை அவசர அவசரமாக மற்ற மாநிலங்களுக்கு அனுப்பி வைத்துள்ளது.  புயலில் சிக்கி மரணமடைந்த மீனவர்களின் குடும்பத்திற்கு தலா 10 இலட்சம் ரூபாய் நிவாரணம் தற்போதுதான் அறிவித்துள்ளது.

நேற்று குளச்சல் பகுதியைச் சேர்ந்த சுமார் 15 கிராமங்களுக்கும் மேற்பட்ட மீனவ மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போராட்டம் இன்றும் தொடர்ந்து நடைபெறுகிறது. இன்று காலை சுமார் 4,000 -க்கும் மேற்பட்ட மீனவ மக்கள் குளச்சல் பேருந்து நிலையத்தை நோக்கி பேரணியாகச் சென்றனர்.

பின்னர் அங்கிருந்து மணவாளக்குறிச்சி பகுதியில் சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர். மேலும் அரசு இப்படி மெத்தனமாக இருந்து கொண்டிருந்தால், அருகில் உள்ள கேரள மாநிலத்தோடு தாங்கள் இணைந்து கொள்ள இருப்பதாகவும் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்று வரும் போராட்டங்களை, வினவு இணையதளத்தில் தற்போது நேரலையாக உங்களுக்கு வழங்குகிறோம்.

முந்தைய பதிவுகளைப் பார்க்க, பதிவின் முடிவில் “Load More entries…” என்ற Button-ஐ அழுத்தவும்


 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க