மீனவர் துயரம் : உறங்காதே தமிழகமே, போராடு !

0
6

பேரழிவைத் தோற்றுவித்த ஓக்கி புயல் கடந்து சென்று விட்டது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் திரும்பவில்லை என்று உரிய விவரங்களுடன் மக்கள் கூறுகிறார்கள். சாவு எண்ணிக்கையைக் குறைத்துக் காட்டவேண்டுமென்கின்ற கிரிமினல் புத்தியை தனது இயல்பாக கொண்டிருக்கும் அதிகாரவர்க்கமும், உழைக்கும் வர்க்கத்துக்கு எதிரான வெறுப்பைத் தனது பிறவிக் குணமாக கொண்டிருக்கும் பார்ப்பனப் பாசிஸ்டுகளின் மத்திய அரசும் எண்ணிக்கையைக் குறைத்துக் கூறுகின்றன.

எண்ணிக்கை எதுவாக இருந்தாலும், நிவாரணத் தொகையிலும் மறு கட்டுமானப் பணியிலும் தமக்கு கிடைக்கக்கூடிய லஞ்சப்பங்கை எண்ணி எச்சில் ஊறக் காத்திருக்கிறது அதிமுக என்றழைக்கப்படும் பிணந்தின்னிக் கூட்டம். இப்படி ஒரு கிரிமினல் முக்கோணத்தில் சிக்கியிருக்கிறது மீனவர்களின் உயிர்.

ஊடக விளம்பரத்துக்காக மக்களை சந்திக்கும் தருணத்தில் கூட முகத்தில் கருணையை வரவழைத்துக்கொள்ள இயலாத அளவுக்கு மேட்டிமைத்தனத்தால் முகம் இறுகிய நிர்மலா சீதாராமன்தான் மீனவர்களுக்கு “ஆறுதல்” கூறவந்த மோடியின் தூதர். நிவாரணப் பணிகளை கண்காணிப்பதாக கிளம்பி, சுசீந்திரம், கன்னியாகுமரி கோயில்கள் மற்றும் விவேகானந்தர் பாறைக்குச் சென்று தரிசனம் செய்து விட்டு, மிச்சமிருந்த நேரத்தில் தன்னை தரிசிக்குமாறு மீனவர்களை அழைக்கும் புரோகிதருக்குப் பெயர், தமிழகத்தின் ஆளுநர்.

ஓகி புயலால் குமரி மாவட்டம் சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கும்போது அந்தப் பக்கம் தலையைக்கூடத் திருப்பாமல், எம்.ஜி.யாருக்கு நூற்றாண்டு விழா கொண்டாடி, கம்பராமாயணம் எழுதிய சேக்கிழார் தஞ்சாவூரில் பிறந்தவர் என்று ஒரு வாக்கியத்தில் ஒன்பது உளறல்களை எழுதிவைத்துப் படிக்கும் எடப்பாடி, ஒரு முதலமைச்சர்.

நடுக்கடலில் தத்தளிக்கும் தம் சொந்தங்களை மீட்பதற்கு இவர்களிடம் மன்றாட வேண்டியிருந்த போதிலும், இந்தக் கும்பல் வெளியிடும் நிவாரணங்கள் மற்றும் வாக்குறுதிகளின் பொய்மையை மீனவ மக்கள் அம்பலப்படுத்துகிறார்கள். உண்மை விவரங்கள் அதனினும் கூடுதலாக இவர்களை அம்பலப்படுத்துகின்றன.

முதலாவதாக, இந்தப் புயல் குறித்து இந்திய வானவியல் ஆய்வு மையம் முன் எச்சரிக்கை செய்யவில்லை. ஆனால், “தமிழ்நாடு வெதர்மேன்” என்ற பிரபல தன்னார்வலர், தனது முகநூலில் “நவ 29 காலை 9.12 மணிக்கே கடலுக்குள் செல்லவேண்டாமென்று குமரி, கேரள மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுத்தார். நவ, 30 காலை 9.57 க்கு ஓக்கி புயல் குமரிக்கு வெகு அருகில் உள்ளது. இது குமரி, திருவனந்தபுரம் கரையைக் கடக்காது. அவற்றைத் தொட்டுச் செல்லும். (ஓக்கி புயல் குறித்து வானியல்துறை இதுவரை அறிவிக்கவில்லை. விரைவில் அறிவிக்கக் கூடும்)” என்று எழுதியிருந்தார்.

தன்னார்வலர் “தமிழ்நாடு வெதர்மேன்” தனது முகநூலில் ஓக்கி புயல் குறித்து வெளியிட்ட எச்சரிக்கை செய்தி ( படங்கள் )

வானிலை ஆய்வு மையத்தின் இந்த தோல்வி குறித்து இந்தியன் எக்ஸ்பிரஸுக்கு விளக்கமளித்த அதன் டில்லி தலைமையக அதிகாரி மிருத்யுஞ்சய் மொகபாத்ரா, “தொலைதூரக் கடலில் இந்தப் புயல் உருவாகியிருந்தால் கணிப்பதற்கு அவகாசம் இருந்திருக்குமென்றும், குமரிக்கு அருகில் இது உருப்பெற்ற காரணத்தினால் கணிக்க இயலாமல்” போனதாகவும் விளக்கமளித்துள்ளார்.

ஒரு ஆர்வலரால் செய்ய முடிந்த கணிப்பை தொழில்நுட்பத்தையும் வல்லுநர் படையையும் வைத்திருக்கும் அரசுத்துறையால் செய்ய இயலாமைக்கு காரணம் அதன் அதிகாரவர்க்கத் தடித்தனமா, மக்கள் நலனில் அக்கறையற்ற அலட்சியமா, அறிவீனமா என்பதை யோக்கியமாக ஆய்வுக்குட்படுத்தியிருக்க வேண்டும்.

தமது குற்றத்தின் காரணமாகத்தான் நூற்றுக்கணக்கான உயிர்கள் பலியாகின்றன என்ற குற்றவுணர்வோ, நேர்மையோ கடுகளவேனும் இருந்திருந்தால் அப்படியொரு பரிசீலனை நடந்திருக்கும். மாறாக,  அதிகாரவர்க்க வார்த்தை ஜாலங்கள் மூலம் தாங்கள் 28 ஆம் தேதியே எச்சரிக்கை கொடுத்துவிட்டதாகவும் கேரள அரசுதான் செயல்படவில்லை என்றும் ஒரு பச்சைப்பொய்யை தனது கைக்கூலி ஊடகங்கள் மூலம் பரப்புகிறது மோடி அரசு.

ஓகி புயல் மோடியின் குஜராத்தை தாக்குமா என்பதே வானியல்துறைன் ஒரே கவலையாக இருந்தது என்பதற்கு அதன் அறிக்கைகளே சான்று. நடுக்கடலில் புயலின் பாதையில் சிக்கக்கூடிய தமிழக, கேரள மீனவர்களைப் பற்றி வானிலை ஆய்வு மையம் கவலை கொள்ளவே இல்லை என்பதுதான் உண்மை. ஒருவேளை முறையாக எச்சரிக்கை கொடுக்கப்பட்டிருந்தாலும், அது ஆழ்கடற்பகுதிகளில் இருந்த மீனவர்களை சேர்ந்திருக்காது.

கரையிலிருந்து சுமார் 200 கிமீ இல் தொடங்கி 600 கிமீ தூரம் வரை சென்று மீன்பிடிக்கும் மீனவர்களுக்கு, 15 கிமீ தொலைவுக்கு எட்டக்கூடிய ஒயர்லெஸ் கருவிகளை மட்டுமே அனுமதித்திருக்கிறது இந்திய அரசு. சிங்கள மீனவர்கள் வளைகுடா கடல்பகுதியிலிருந்து குடும்பத்துடன் பேசிக்கொள்ளும் விதத்தில் அவர்களுக்கு சாட்டிலைட் போனை அனுமதித்திருக்கிறது இலங்கை அரசு. தேசப் பாதுகாப்பு என்ற பெயரில் இந்திய அரசு நமது மீனவர்களுக்கு அதைத் தடை செய்திருக்கிறது. இப்படி மீனவர்களை மரணத்துக்குத் தள்ளியிருக்கும் இந்திய அரசுதான், இப்போது மீட்புப்பணி என்ற நாடகத்தை அரங்கேற்றிக் கொண்டிருக்கிறது.

“மீட்புப்பணிக்கு செல்லும் ஹெலிகாப்டர்களின் எரிபொருள் ஒன்றரை மணி நேரம் மட்டுமே தாங்குமென்பதால், எரிபொருள் நிரப்பும் வசதி கொண்ட விமானந்தாங்கி கப்பல்களைப் பயன்படுத்தினாலன்றி அவை ஆழ்கடலுக்கு போகவே முடியாது. தேடவேண்டிய இடத்தை காட்டுமாறு எங்களை அழைத்துப்போன கடலோர காவல்படை, 12 கடல் மைல் தொலைவுக்கு மேல் செல்வதற்கு தங்களுக்கு அனுமதியில்லை என்று திரும்புகிறது.  200 கடல் மைல்களுக்கு அப்பாலிருந்துதான் தேடுதலை தொடங்கவே வேண்டும் எனும்போது இந்த தேடுதல் நடவடிக்கையே ஒரு ஏமாற்று. செயற்கைக்கோள் (GPS) தொழில் நுட்பத்தின் மூலம் கடல்பரப்பில் ஒரு சதுர மீட்டரில் என்ன இருக்கிறது என்பதைக் கூட கண்டுபிடிக்கின்ற தொழில்நுட்ப வசதி இருந்தும் அதனை மீனவர்களுக்காக பயன்படுத்த மறுக்கிறது இந்திய அரசு” – என்று அடுக்கடுக்காக குற்றம் சாட்டுகிறார்கள் குமரி மீனவர்கள்.

ஒரு நூற்றாண்டில் அரபிக்கடல் கண்ட கொடிய புயல் இது என்பதால், இதனை தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டுமென்று கோரியிருக்கிறார் பினராயி விஜயன். இந்து தேசியத்தை நிராகரிக்கின்ற தமிழக, கேரள மக்களின் துயரம் “தேசிய” பேரிடராக கருதத் தக்கதல்ல என்பது மோடி அரசின் நிலையாக இருக்கக் கூடும். இந்தியக் கடற்பரப்பை சூறையாடுவதற்கு பன்னாட்டு மீன்பிடி டிராலர்களை அனுமதித்த பின்னரும், அவர்களுடன் போட்டி போட்டு ஆழ்கடலில் மீன்பிடித்து வாழ்கிறார்கள் மீனவர்கள்.

“தூங்க முடியவில்லை அய்யா”

பின்னர், கூடங்குளம் அணு உலையை எதிர்த்தார்கள். இன்று இந்தியக் கடற்கரைகளை கார்ப்பரேட் துறைமுகங்களாக மாற்றும் சாகர்மாலா என்கிற பேரழிவுத் திட்டத்தையும், எண்ணூர், சீர்காழி, ஏணையம் துறைமுகங்களையும் எதிர்க்கிறார்கள். சென்னை மீனவ மக்களின் குடியிருப்புகளை அகற்றுவதற்கு கிடைத்த நல்வாய்ப்பாக சுனாமியைப் பயன்படுத்திக் கொண்டதைப்போல, குமரி மீனவர்களை அப்புறப்படுத்தக் கிடைத்த நல்வாய்ப்பாக ஓகி புயலை மோடி எடப்பாடி அரசுகள் பயன்படுத்துவார்கள் என்பதில் ஐயமில்லை.

இந்த மக்கள் விரோதிகளை அப்புறப்படுத்துவதற்குக் கிடைத்த வாய்ப்பாக தமிழக மக்கள் இதனைப் பயன்படுத்த வேண்டும். இது தமிழகத்தின் உரிமைக்காக மெரினாவில் ரத்தம் சிந்திய மீனவ சமூகத்துக்கு தமிழ் மக்கள் செலுத்த வேண்டிய நன்றி. டில்லியின் அதிகாரத்தைக் கேள்விக்குள்ளாக்குவது மட்டுமின்றி, தமது அதிகாரத்துக்கான பாதையை உருவாக்கிக் கொள்ளவும் மக்களுக்கு கிடைத்திருக்கும் வாய்ப்பு.

“தூங்க முடியவில்லை அய்யா” என்ற மீனவத் தாய்மார்களின் ஓலம்,… கையில் இறுகப்பற்றிய தின்பண்டத்துடன் தீயில் வெந்துதுடித்த இசக்கிமுத்துவின் குழந்தைகளுடைய அலறல்,… அனிதாவின் தொண்டைக்குழியில் தேங்கிநின்ற துயரம்…. இத்தனைக்கும் பின்னர் தமிழகம் உறங்கக்கூடாது. எதிரிகளை உறங்க விடவும் கூடாது.

-சூரியன்


 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க