“மீனவர்கள் துயரத்திற்கு நீதி வேண்டும்! புயல் முன்னறிவிப்பு இல்லை! ஆழ்கடல் மீனவர்களுக்கு தகவல் இல்லை! புயலில் சிக்கிய மீனவர்களை உடனே காக்க வில்லை! இறந்த மீனவர்களின் உடலை மீட்கவில்லை! அனைத்திலும் இந்த அரசுகள் தோல்வி அடைந்து நிற்கிறது. மீனவர்களின் துயரத்திற்கு மத்திய மாநில அரசுகள்தான் குற்றவாளிகள்…!” என்ற முழக்கங்களை முன் வைத்து 11-12-17 அன்று மாலை 5 மணி அளவில் புதுச்சேரி மாநிலம் மதகடிப்பட்டில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்பாட்டத்திற்கு புதுச்சேரி மாநில மக்கள் அதிகாரத்தின் பொருளாளர் தோழர் சாந்தகுமார் அவர்கள் தலைமை தாங்கினார். மக்கள் அதிகாரத்தை சேர்ந்த தோழர் செல்வமுருகன், திராவிட விடுதலைகழகத்தின் விழுப்புரம் மாவட்ட தலைவர் தோழர் இளையரசன், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி புதுச்சேரி மாநில பொதுசெயலாளர் தோழர் லோகநாதன், மக்கள் அதிகாரத்தின் புதுச்சேரி மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் கலை ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் புயல் அறிவிப்பை முன்கூட்டியே சொல்லாத அரசு, ஆழ்கடலுக்கு ஆயிரக்கணக்கில் சென்ற மீனவர்களை பற்றி அக்கரை இல்லாது பொறுப்பற்றத் தனமாக இருந்த அரசு, புயலில் சிக்கிய மீனவர்களை முதல் நாள் 200 பேருதான் என்று சொன்ன அரசு, பிறகு மீனவர்கள் 2000 பேர் கடலுக்கு சென்றுள்ளார்கள் என்று சொன்ன பிறகும், மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமாரும், மத்திய அமைச்சர் பாஜக நிர்மலா சீதாராமனும் 2000 பேர் என்பது பொய் என்று சொன்னவர்கள் பின்பு 744 மீனவர்களை பத்திரமாக மீட்டு படகில் கொண்டு வருகிறோம் என்றார்கள். கடைசியில் ஜெயக்குமார் 2540 மீனவர்கள், 350 படகுகள் மீட்கப்பட்டதாக தெரிவிக்கிறார்.
இப்படி மாற்றி மாற்றி பொய் சொல்லி இன்று வரை ஒரு மீனவன் கூட இராணுவம் மீட்டு வீடு வந்து சேரவில்லை. மீனவர்களுக்கு முன் அறிவிப்பு தரவில்லை என்பது மட்டுமல்ல காப்பாற்றவும் துப்பில்லை. மக்களுக்கு நேர்மையாகவும் இருக்க வக்கில்லை. கடலில் செத்து மிதக்கும் மீனவனின் மரணத்திற்கு இந்த அரசும் ஆட்சியாளர்ககளும் தான் குற்றவாளிகள் .
பதவி, அதிகாரம், முப்படை, ஊடகம், தகவல் தொடர்பு என மக்களுடைய வரிப்பணத்தில் இயங்கும் இந்த அரசு கட்டமைப்பும் இதில் அமர்ந்துக் கொண்டு தின்று கொழுக்கும் அதிகாரிகளும் ஆட்சியாளர்களும் அந்த மக்களையே காப்பாற்ற முடியவில்லை என்றால் அனைத்தையும் கலைச்சிட்டு விட்டுக்கு போக வேண்டியது தானே.
இந்த மக்களை ஆள்வதற்கு என்ன தகுதி இருக்கு உங்களுக்கு ? இந்த கொலை குற்றத்திற்கு யாரிடம் நீதி கேட்பது ? மாவட்ட கலெக்டர் இடம் கேட்கலாம் என்றால் ? அவன் சாராயம் விக்கிறான், ஆற்று மணல் திருடுற, அரசு நிலங்களை பட்டாப் போட்டு விக்கிற திருடனா இருக்கான். முதல்வரிடம் கேட்கலாம் என்றால் மாநிலத்தையே விலை பேசி விக்கிற கொள்ளைக்காரனா இருக்கான். நீதிபதி இடம் போகலாம் என்றால் ? கட்டப் பஞ்சாயத்து செய்கிற கிரிமினலா இருக்கான். பிரதமரிடம் கேட்கலாம் என்றால் ? 2000 பேரை கொலை செய்த குற்றவாளியாக இருக்கான். ஜனநாயகத்திற்கு விரோதமாக இருக்கிற இந்த அரசிடம், மக்களுக்கு விரோதமாக இருக்கிற அரசிடம் நீதி எப்படி கிடைக்கும் ? இந்த அரசுக்கு எதிராக போராடி, அரசிடம் நீதிக் கேட்டு மக்களுக்கு இதுவரை என்ன கிடைச்சுருக்கு?
விவசாயம் செய்ய போனா விவசாயம் செய்ய இந்த அரசு விடுவதில்லை, தொழில் நடத்தலாம் என்றால் GST போட்டு தடுக்கிறான், அரசு வேலைக்கு போகலாம் என்றால் சம்பளம் கொடுக் மறுக்கிறான், தனியார் கம்பெனிக்கு வேலைக்கு போகலாம் என்றால் அடிமையாக இருக்க வேண்டி இருக்கு, கேட்க நாதியில்லை. மீன் பிடிக்க போகலாம் என்றால் நடுகடலிலே வச்சி கொல்றான். எங்க போறது? யார்கிட்ட சொல்றது?
இதுக்கு மாற்று என்ன ? என்பது தான் நம் முன்னே உள்ள கேள்வி. ஒரு கலெக்டருடைய அதிகாரம், நீதிபதியோட அதிகாரம், MLA மந்திரியோட அதிகாரம் நம்மை காப்பாற்றாத போது அந்த அதிகாரத்தை நாமே கையில் எடுத்து நம்மை காப்பற்றிக் கொள்வதை தவிர வேற என்ன வழியிருக்கு ? அது தான் மக்கள் அதிகாரம். மக்கள் அதிகாரத்திற்கு மாற்றாக வேற எந்த வழியும் இல்லை.
ஜல்லிக்கட்டு உரிமையை அவர்கள் அதிகாரம் நமக்கு கொடுக்கவில்லை. டாஸ்மாக்கை மூடுவதற்கு அவர்கள் அதிகாரம் நமக்கு ஒத்துழைக்கவில்லை. மாறாக அவர்களின் அதிகாரம் நமக்கு எதிராய் நின்றது, நம்மை அச்சுறுத்தியது. ஆனால் அந்த அதிகாரத்தை மக்களாகிய நாம் கையிலெடுத்த பிறகுதான் நமது கோரிக்கை வெற்றி பெற முடிந்தது. இது தான் மக்கள் அதிகாரம் .
வாருங்கள், அனைத்து தரப்பு மக்களும் வாருங்கள் அதிகாரத்தை நம் கையில் எடுக்க. மக்களையும் நாட்டையும் காக்க என்று அறைகூவி இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசப்பட்டது. மக்கள் அனைவரும் நின்று கவனித்தார்கள்.
தகவல் :
மக்கள் அதிகாரம்,
புதுச்சேரி.
***
வேதாரண்யம் பகுதி ஆறுகாட்டுத்துறை மீனவ பகுதியில் டிச, 10 2017 அன்று ஒக்கி புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களையும், இறந்த மீனவர்களின் உடல்களையும் மீட்க கோரியும், மேலும் மீனவர்களுக்கு மழைக்கால தடைக்கான நிவாரண நிதி அளிக்கப்படாததை கண்டித்தும். கடந்த 3 ½ ஆண்டுகளாக சொசைட்டி கூட்டம் கூட்டாமல் 100 -க்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்களுக்கு அரசால் ஒதுக்கப்படும் நிதிகளை சுருட்டிக்கொண்ட அதிகாரிகளை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
மத்திய மாநில அரசின் கையாலாகாத நிலையை கண்டித்து சொசைட்டிக்கு 4-ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி எனும் முழக்கத்தில் போஸ்டர் ஒட்டப்பட்டு, மனித உரிமை தினத்தில் மீனவர்களை மனிதனாக மதிக்காத நாட்டில் மனித உரிமை தினம் ஒரு கேடா ? என்று அப்பகுதி மக்கள் , மீனவ பாதுகாப்பு குழு மற்றும் மக்கள் அதிகாரம் சார்பில் கருப்புக்கொடி ஏந்தி 120 -க்கும் மேற்பட்ட கிராம இளைஞர், சிறுவர், பெண்கள் ஆகியோருடன் கிராமத்தின் உள்ளே அனைத்து தெரு மற்றும் அக்கிராம நாட்டாரு வீடு முன்பாகவும் பேரணியாக சென்றனார்.
இந்நிகழ்விற்கு மக்கள் அதிகாரம் தோழர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். வட்டார பொறுப்பாளர் தோழர் தனியரசு அரசின் நிலையை “எருமை மாட்டு தோல் அரசு. இது ஒருபோதும் மக்களுக்கு சேவை செய்யாது நமது அதிகாரத்தை கையிலெடுத்தால் மட்டும் தான் உரிமையை பெறமுடியும்” என உரையாற்றினார்.
அப்பகுதி மீனவ பெண்கள் இந்த போராட்டத்திற்கு பிறகு அரசு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ளாவிட்டால், அடுத்த கட்டமாக எந்தவிதமான போரட்டத்திற்கும் நாங்கள் தயாராக உள்ளோம் என எச்சரித்துள்ளனர்.
மீனவ பாதுகாப்பு குழு ஒருங்கிணைப்பாளார் தேவி மற்றும் பழனிமுருகன் ஆகியோர் பத்திரிக்கைக்கு பேட்டி அளித்தனர். அப்போது “ஒட்டுமொத்தமாக தமிழகம் முழுவதும் மீனவர்களின் நிலை வாழ்வாதாரம் பறிபோகும் நிலையில் உள்ளது. இந்த அரசு உடனடியாக அனைத்து மீனவர்களின் பிரச்சினைக்கும் சரியான தீர்வு காண வேண்டும். தற்போது தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக மீனவர்களிடையே இந்த நாறிபோன அரசின் மீது ஒரு கோவத்தையும் கொந்தளிப்பையும் உருவாக்கியுள்ளது. இந்நிலையில் சரியான முடிவை எடுக்காவிட்டால் மிகப்பெரிய போராட்டத்தை அரசு சந்திக்க நேரிடும்” என்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர்.
இந்த போராட்டத்திற்கு பிறகு அப்பகுதி மீனவ பெண்கள் மிகுந்த உற்சாகத்துடனும் உறுதியுடனும் உள்ளோம். மீண்டும் அடுத்தடுத்த மக்கள் அதிகாரம் போராட்டங்களில் நாங்களும் கலந்து கொள்வோம் என்று கூறினர்.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
தகவல் :
மக்கள் அதிகாரம்,
வேதாரண்யம்.
***
கடந்த 29 -ம் தேதி கன்னியாகுமரியில் ஒக்கிப்புயலில் மாவட்டமே சிதைந்ததோடு மீனவர்களின் வாழ்க்கை அடியோடு சின்னாபின்னமானது, இந்நிலையில் ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்றவர்கள் 30, 01, 02 தேதிகள் ஆகியும் வரவில்லையே என்ன நடந்திருக்குமோ, என்ற அச்சத்துடன் குமரி மீனவ குடும்பங்கள் கடலோர காவல்படையிடம் பலமுறை பேசியும் பலனில்லாததால் நூற்றுக்கணக்கானோர் 2 நாள், 3 நாள் ஆகியும் கப்பற்படை போகாததால் சோறு, தண்ணிரின்றி இரவு பகல் ஆழ்கடலிலேயே பிணமானார்கள்.
சில நூற்றுக்கணக்கானவர்கள் கேரளா, கர்நாடகா, குஜராத் மாநிலம் மற்றும் சில தீவுகளில் ஒதுங்கினார்கள். கடற்படையின் இந்தக்கொடுஞ்செயலைக் கண்டித்தும், குமரி மாவட்டமே போர்களத்தில் குதித்தது. அரசை முடக்கியது. இந்நிலையில் மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் கடந்த 11.12.2017 அன்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டு கடலூர் மாவட்ட கடலோர மீனவ கிராமங்களில் பிரச்சாரம் மேற்கொண்டோம். கடலூர் தேவனாம்பட்டினம் சின்னுர், புதுப்பேட்டைப் பகுதிகளைச் சேர்ந்த 23 பேர் கரை திரும்பவில்லை. இத்தகவலை அறிந்த மக்கள் அதிகாரம் அமைப்பினர் தாழங்குடா, தேவனாம்பட்டினம், முதுநகர் பகுதிகள், சொத்திக்குப்பம், ராசாப்பேட்டைப் பகுதி இளைஞர்கள், பெண்களிடம் ஊர் கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு பிரச்சாரம் செய்தோம்.
ஒரு பள்ளி மாணவன் தாக்கப்பட்டதால், பல்கலைக்கழகம் வரை போராட்டம் நடக்கும்போது, குமரி மீனவர்களுக்காக நாம் ஏன் போராடக்கூடாது என்று கேள்வி எழுப்பினோம். இதன் விளைவாக மீனவப் பஞ்சாயத்துகளில் பேசப்பட்டது. சின்னப்பட்டினம், பெரியபட்டினம் மற்றும் கடலூர் முதுநகர் மக்களும் ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் எனப்போராட ஆரம்பித்தனர். இந்த அனைத்துப் போராட்டங்களிலும் மக்கள் அதிகாரம் தோழர்கள் உதவினார்கள். இந்நிலையில் போராட்டம் தீவிரமடைவதைக் கண்ட போலீஸ் மக்கள் அதிகாரத்திற்கு மடடும் அனுமதி மறுத்தது. இதன்பின் கடலூர் பகுதி மக்கள் அதிகாரம் தோழர்கள் பேசி SP யைச் சந்தித்து போராடி அனுமதி வாங்கி 13.12.2017 அன்று மாலை 4.00 மணிக்கு தலைமை தபால் நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இவ்வார்ப்பாட்டத்திற்கு மக்கள் அதிகாரம் தோழர். இராமலிங்கம் தலைமை தாங்கினார். அனைத்து பொது நல இயக்கங்கள் ஒருங்கிணைப்பாளர் குமார் அவர்கள், குமரியே சாவு வீடாக இருக்கும் போது 500 கோயில்களில் MGR -க்கு விழா, RK நகர் தேர்தல் தேவையா? இந்த மத்திய, மாநில அயோக்கியர்களை செருப்பால் அடிக்கனும் என்றார்.
மீனவர் விடுதலை வேங்கைகள் தோழர் கோ.வெங்கடேசன் பேசுகையில் மீனவர்களான எங்களுக்கு இப்புயல் மட்டுமல்ல இதுபோன்று கடலில் பல இடற்பாடுகளையும் எதிர்த்து வாழ்வது எங்கள் இயல்பு. ஆனால் இதில் இறப்பு அதிகமாவதற்கு காரணம் அரசுதான் எத்தனையோ அதிநவீன கருவிகளை வைத்துள்ள அரசு ஏன் காப்பாற்றவில்லை என்பதே கேள்வி ? எனவே அனைத்தையும் வைத்துக்கொண்டு காப்பாற்றாதா இந்த அரசே கொலைக்குற்றவாளி என்று சாடினார். இறுதியாக அவர் மக்கள் அதிகாரத்தில் அனைவரும் இணைந்து செயல்படவேண்டும் என்று கூறினார்.
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் வழக்கறிஞர் செந்தில்குமார் பேசுகையில் “மிகப்பெரிய கப்பற்படை வைத்துள்ள அரசு, தன் நாட்டு மக்கள் கொடுந்துயரத்தில் சிக்கிக் கொண்ட போது அவர்களைக் காப்பாற்றவில்லை என்னும்போது, மக்கள் வரிப்பணத்தில் இவர்கள் சம்பளம் வாங்கிகொண்டு உயிர்வாழ நாம் ஏன் அனுமதிக்கவேண்டும்” என்று அம்பலப்படுத்தினார்.
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தோழர் நடேசன் பேசுகையில் இலட்சக்கணக்கான போலீஸ் உள்ளது. பலதுறை போலீஸ் உள்ளார்கள். தொப்பிப்போட்ட போலீஸ், தொப்பி போடாத போலீஸ், யூனிபார்ம் போட்ட போலீஸ், யூனிபார்ம் போடாத போலீஸ் என நிறையபேர் உள்ளனர். இதில் எத்தனைப்பேர் போனீர்கள் மீனவர்களை காப்பாற்ற, கேட்டால் காவல் துறை உங்கள் நண்பன் என சொல்லறான். ஆனால் மீனவர்கள் தான் எங்கள் நண்பன். அந்த மீனவர்களை பாதுகாக்க புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, மக்களை திரட்டுவோம். மாணவர்கள், இளைஞர்களை திரட்டுவோம். நோட்டீஸ் கொடுப்போம். இன்றைய இளைஞர்கள் வருங்கால தலைவர்கள் என்ற சொல்லுவோம் அதில் என்ன தவறு இருக்கிறது. சுனாமி நேரத்தில் எந்த அதிகாரிகள் மக்களை காப்பாற்றினார்கள். மீனவர்கள் தான் மக்களை காப்பாற்றினார்கள்.
கப்பற்படையை சேர்ந்த 30,000 அதிகாரிகள் இருக்கிறார்கள். மீனவர்களை காப்பாற்ற 30 அதிகாரிகள் கூட போகவில்லை. நேவி, அமைச்சர், லொட்டு லொசுக்குனு இருக்கிறிங்களே, இப்ப எங்கடா போனீங்க…? டெங்குல போதிய மருத்துவம் இல்லாம மக்கள் இறந்தாங்க அப்ப இந்த அரசு தள்ளிநின்னு வேடிக்கை பார்த்தது. நீட்தேர்வுல மாணவி அனிதா இறந்தபோதும் இந்த அரசு தள்ளிநின்னு வேடிக்கை பார்த்தது. விவசாயிகள் கொத்துகொத்தாக தற்கொலைசெய்து இறந்தாங்க அப்பவும் இந்த அரசு தள்ளி நின்னு வேடிக்கைப்பார்த்தது. இப்ப நீங்க இங்க வந்து பதில் சொல்லனும். ஏதோ மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் நடத்திட்டாங்க. இதோடு இவங்க வேலை முடிச்சிச்சுன்னு நினைக்கறிங்க. மீனவ மக்கள் எங்க கூட இருக்காங்க. இந்த அரசுக்கு எதிராக” என பேசினார்.
அதன் பின் சிறப்புரையாற்றிய புதுவை மாநில ஒருங்கிணைப்பாளர், மக்கள் அதிகாரம் தோழர் கலை பேசுகையில் 28.11.2017 அன்று புயல் வீசும் என்று வானிலை அறிக்கை தெரிவித்தது. 80-85 கி.மீ வரை காற்றுவீசக்கூடும் என்று கூறினார்கள்.
மீனவர்கள் ஆழ்கடலுக்கு செல்ல வேண்டுமென்றோ! குமரிமாவட்டத்திற்கென்று மீனவ மக்களுக்கென்று ஒக்கி புயல் பற்றிய எச்சரிக்கை அறிவிப்புகள் எதுவும் மீனவ மக்களுக்கென்று சொல்லப்படவில்லை.
தமிழக அரசாங்கம் பலியானவர்கள் எண்ணிக்கைப்பற்றி துல்லியமான புள்ளிவிவரங்களை வழங்கவில்லை. 200 பேர்தான் கடலுக்குச் சென்றார்கள் என்றும் அதில் 100 பேரை மீட்டு கரைசேர்த்துவிட்டோம் என்றும் கூறினார்கள். ஆனால் உண்மையில் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் 2000 பேர், என மீனவ மக்கள் தெரிவித்துள்ளனர். இப்படிப்பட்ட பேரிடர் நிகழ்கின்ற காலத்தில் மக்களை மீட்பதற்காக ஆண்டொன்றுக்கு 4,100 கோடி நிதி ஒதுக்கப்படுகிறது. காணாமல் போன மீனவர்கள் வெறும் 200 பேர்தான் என்று சொன்ன மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் 700 பேரை பத்திரமாக மீட்டுவருகிறோம் என்ற முரண்பட்ட தகவலை கூறினார். பிறகு 2000 மீனவர்களைக் கூட்டிக்கொண்டு வருகிறோம் என்று கூறினார். மக்களை ஏமாற்றுவதற்கே இவ்வாறு இந்த ஆளும் கட்சியினர் கூறுகின்றனர்.
மோடி அரசின் பண மதிப்பு நீக்க நடவடிக்கை தொடர்பாக இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் நடுத்தர, சிறு குறு வியாபாரிகள் கடுமையாக பாதித்துவிட்டனர். உதாரணமாக சென்னை “பம்பலில்’ ஜவுளி வியாபாரியின் தாமோதரனின் குடும்பத்தை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டு இருக்கிறார். இதுபோலவே கந்துவட்டி கொடுமை, வங்கிகளில் மக்கள் சேமித்த தொகையை அவசரத்தேவைக்கு பயன்படுத்த முடியாத நிலையை மோடி அரசு உருவாக்கியிருக்கிறது.
திவாலாகும் தனியார் வங்கிகளை காப்பாற்றும் முயற்சியில் மோடி இறங்கியிருக்கிறார். 3500 கோடி வாராக்கடனை வசூலிக்க முடியாமல் திணறுகிறது. இதனால்தான் மக்கள் சேமிப்பில் கைவைக்கிறார்கள். விஜய் மல்லையாவிடம் 9000 கோடி வசூலிக்க இயலாமல் இருக்கின்றனர். மோடியின் ஆட்சியில்தான் விஜய்மல்லையா வெளிநாடு தப்பி சென்றான். காவல்துறை ஒரு ஏவல்துறையாக செயல்படுகிறது. இந்தக்கூட்டத்திற்கு நம்மை வீடியோ எடுக்கும் போலீஸ், விஜய் மல்லையாவை வீடியோ எடுப்பாறா. எல்லா துறைகளிலும் போராட்டம் நடக்கிறது. தனித்தனியாக போராடுவதால் மாற்று கிடைக்காது. எல்லோரும் சேர்ந்து போராடனும் உதாரணமாக மக்கள் டாஸ்மாக்கை எதிர்த்து போராடியது அதுதான் மக்கள் அதிகாரம்.
தோழர்களுக்கு ஒன்றை குறிப்பிடுகிறோம். போராட்டத்திற்கு மைக்செட்டு வைத்து பேசுவதற்குதான் காவல்துறையிடம் அனுமதி கேட்கவேண்டும். பொது இடங்களில் நாம் பேசுவதற்கு அனுமதி தேவையில்லை. மணல்குவாரிகளில் 3 -அடிதான் மணல் எடுக்கவேண்டும் என்பது சட்டம். ஆனால் 300 அடி மணல் எடுக்கிறார்கள். இது பற்றி தாசில்தாரரிடம் விவாதித்தால் அவர் கூறுகிறார். 3 அடிதான் கொடுத்தேன் என்று பலமுறை 3 அடிதான் கொடுத்ததை கூறுகிறார்.
இந்த அரசியல் அமைப்பு தோத்து போச்சு, கையாலாகாததனத்தை காட்டுகிறது. நாங்கள் ஒன்றும் மக்கள் அதிகாரம் என்று கடமைக்கு பேர் வைத்து கொள்ளவில்லை. இரண்டு ஆண்டுகள் ஆய்வு செய்தபின்புதான் இந்த அரசுக் கட்டமைப்பு தோத்து போச்சு. மக்கள் தான் அதிகாரம். அதிகாரத்தை மக்கள் கையில் எடுக்கவேண்டும் என்று கூறி தனது உரையை நிறைவு செய்தார்.
தகவல் :
மக்கள் அதிகாரம்,
கடலூர்.
***
திருச்சி ஈ.வெ.ரா கல்லூரியில் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி சார்பாக 13.12.17 புதன் கிழமை அன்று மீனவர்களைக் கொன்ற அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
2000 -க்கும் மேற்பட்ட மீனவர்கள் புயலால் கடலில் தத்தளிக்கும் போது மோடி எடப்பாடி அரசுகள் கும்மாளம் போட்டதில் 13 நாட்கள் ஆயினும் இன்னமும் 1000 -க்கும் மேற்பட்ட மீனவர்களின் நிலை என்ன என்றே தெரியாமல் உள்ளது. இதை கண்டு கொள்ளாமல் RK நகரில் ஓட்டு கேட்கிறது எடப்பாடி அரசு. இதை கண்டித்து மீனவர் போராட்டத்திற்கு மாணவர்கள் நாம் முன் வர வேண்டும் என பு.மா.இ.மு தோழர் விஜய் விளக்கி பேசினார்.
மேலும் பு.மா.இ.மு மாவட்ட செயலாளர் தோழர் மணிமாறன் மீனவர்கள் தொடர்ச்சியாக கடலில் இறங்கி போராடிக்கொண்டிருக்கிறார்கள்.அவர்களுக்கு ஆதரவாக நாமும் வீரியமாக களத்தில் இறங்கி போராட வேண்டும் என்றும் பேசினார்.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
தகவல் :
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி
திருச்சி.
செத்து மிதந்தது மீன்களல்ல
இனி சோறுபோட யாருமில்ல
விழித்திருந்து தினம் அழுகின்றோம்
வீதியில் விழுந்து புரளுகின்றோம்
பத்து ஹெலிகாப்டர்கள் விட்டாங்களாம்
கண்ணில் ஒன்றும் காணலியே
தினம் கரையொதுங்கும் பிணங்களே
சாட்சி சொல்ல போதலையா.