Thursday, December 12, 2024
முகப்புகலைகவிதைகவுசல்யா இந்த மண்ணின் பெருமை !

கவுசல்யா இந்த மண்ணின் பெருமை !

-

இவளல்லவோ பெண்!

சாதிய – மத எதிர்ப்பில்,
மண் என்றால்
அது தமிழ்நாடு
பெண் என்றால்
அது கவுசல்யா
தந்தை என்றால்
அது பெரியார்!

கவுசல்யா…
பெண்ணின் பெருமை
மட்டுமல்ல
இந்த மண்ணின் பெருமை,
ஆயிரம் அடக்குமுறைகள்
அழுத்தினாலும்
சாதிய வேலிகள் தடுத்தாலும்
சமுதாயம்
முன்னோக்கி வளர்ந்தே தீரும்
என்ற வரலாற்றின் உண்மை.

படம் : நன்றி – இது வேற தமிழ்நாடு முகநூல் பக்கம்

தனிப்பட்ட
காதலுக்காக மட்டுமன்றி
தான் வாழும் சமூகத்தின்
கொடுமைகளுக்கு
எதிராகத் துடிக்கும்
அவள் இதயம்.
என்ன ஒரு திண்மை!

சாதிவெறியைப் பார்த்து
சொந்த தந்தையையும்
வெறுத்தாள்.
சமத்துவத்தை நேசிக்கும்
சுயமரியாதை
உணர்வைப் பார்த்து
பெரியாரை தந்தையாய்
நினைத்தாள்.
இவளல்லவோ பெண்!

நேசித்த காதலனை
கண் எதிரே
வெட்டி வெறியாடிய போதும்
நிலைகுலைந்த
தனக்காக மட்டும்
கதறவில்லை
அந்தக்காதல்.

வெறுக்கத்தக்க சாதிவெறியை
கட்டி அழும்
சமூகத்தின் குரூரத்தை
பேசுகிறது அவள் குரல்.

கவுசல்யா,
யாரையும்
பாவப்பட  கூப்பிடவில்லை,
சாதிவெறி ஆணவத்திற்கு எதிராக
கோவப்பட கூப்பிடுகிறாள்…

விலங்குகள் கூட
விளங்கிக் கொள்ளும்
சக அன்பை,
மனிதர்களுக்கு மறுக்கும்
கயமைத்தனம் தான் சாதி.
கவுசல்யா போல்
சுயசாதிக்கு எதிரான
கலகம்தான் நீதி!

வெட்டியவர்கள்
சமூகத்தின் கண்களுக்கு
தழும்பாக,
வெட்டுப்பட்டவளோ
சமூக நீதியின் பிழம்பாக,

சங்கர்
வெட்டவெட்ட துளிர்க்கிறான்
கவுசல்யாவிடம்,
பெரியார் மொழியில்
நகைக்கிறான்

சாதிய மனம்
இருந்தாலும்
அழுகிடும் பிணம்

சங்கர் இறந்தாலும்
கவுசல்யாவின்
கருத்தில் பரவிடும்
சமூக நறுமணம்.

ஒரு ஆணை
விரும்பியதைவிட
சங்கர் எனும்
தாழ்த்தப்பட்டவரை
காதலித்தது தான்
சாதிய மனநிலைக்கு
கடுங்குற்றம்.

சங்கரின் மீதான காதல்
சமூகத்தின் மீதான காதலாக
விரிவதைப்பார்த்து
ஆணாதிக்கத்தின் வக்கிரங்கள்
வசவுகளில் வாழ்கிறது.
உண்மையில்
‘வாழா வெட்டி’யானது
கவுசல்யா அல்ல,
வக்கிரம் பிடித்த சாதிவெறி.

கெட்ட வார்த்தை சாதிக்காரர்களே
தாங்கள் கெட்டழிவது திண்னம்!
பல கவுசல்யாக்களை உருவாக்கும்
பெரியார் மண்ணில்
பலிக்காது உங்கள் எண்ணம்!

கவுசல்யாவின்
தனிப்பட்ட காதல் பிரச்சனை என்று
யாரும் ஒதுங்கிட முடியுமா?

சாதியின் காதலர்கள்
வெறியோடு
எகிறி வரும் போது,

காதலுக்காக
உருகுபவர்கள்,
காதலுக்காக
படம் எடுப்பவர்கள்,
காதலுக்காக
தத்துவம் பேசுபவர்கள்,
சுடப்பட்ட காவலர்க்கு
வீரவணக்கம் செலுத்தும்
விசித்திர காதல் தளபதிகள்
யாருமே
வெட்டப்பட்ட
கவுசல்யா பக்கம்
காணவில்லையே ஏன்?

சாதிவெறி
அரிவாளோடு சுத்தும்
கூலிப்படை என்று
நாம் நினைத்தால்
அது அறியாமை.

சாதிவெறியர்கள்…
சினிமாவாக
இலக்கியாமாக, எழுத்தாக
பேஸ்புக்காக, டிவிட்டராக
நம்மை சுற்றி திரிகிறார்கள்.

சமூகத்தின் காதலர்களே
நாம்
கவுசல்யாக்களாக
உரு‍வெடுப்போம்
சாதிவெறிக்கு எதிராக
பெரியாரின் தடியை
முன்னேடுப்போம்!

-துரை. சண்முகம்


 

  1. ஆண்மை எனும் அகந்தை
    பெண்மை எனும் அடிமைத்தனம்
    சொத்துரிமை காக்கும் ச(ஆ)தித்தனம்
    என மூடத்தனத்தின் முடைநாற்றத்தைப்
    போக்கவந்த வீரமங்கையிவர்.
    ஈன்றாள் துயரினும், மாது ஒரு பாகம்
    எனும் சமூக உண்மையை சுற்றங்களின்
    செவியில் அறைந்தயெம் தோழரிவர்.
    அன்று மதுரை எரிந்தது கண்ணகியால்
    இன்று சாதி ஆணவம் ஊனமானது கவுசல்யாவால்.
    தனலிட்டப்புழுவாய் சாதிச்சங்கங்கள்
    வசைபாடும் கயமையுடன் மெய்நிகருலக ஊடக முகமூடியுடன்.

  2. கணவன் கண்ட துண்டமானாலும் தன் காதலின் நினைவின் மரியாதையாய் சாதி ஒழிப்பே பிரதானமாய் சங்கரின் குடும்பத்தாருடனே வாழ்ந்து வரும் வீராங்கனை கவுசல்யாவிடம் மண்டியிட்டு தலை வேறு முண்டம் வேறாய் வீழ்ந்து கிடக்கிறது சாதி.பாசமா சாதியமா என்று வரும்போது கொலைகாரர்கள் பாசத்தைக்கொன்று புதைத்துவிட்டு சாதிச்சனியனை காக்கிறார்கள்.அடுத்த சாதீக்காரரீன் உழைப்பின்றி எந்த சாதிக்காரனும் வாழ முடியாது எனும் உண்மையை சாதி வெறியர்களுக்கு செவிப்பறையில் உணர்த்தூவோம்.நாடெங்கிலும் சொந்த சாதிக்கெதிராக திரண்டெழ கவுசல்யாவாக மானத்தோடு மாறுவோம்.ஆம் நம் வயிற்றுக் கழிவென்றாலும் அதன் பெயரும் “மலம்”தானே?

  3. சாதி ஒழிந்து வருகிரது,
    சாதி ஒழிப்பு உர்சாகதில் can we support the gallows planted by mecaulay. When hue and cry has been made for abolition of death penalty for Rajiv Murder accused, Coimbatore bomb blast accused why there is rejoice and celebration over the death penalty. Also Madurai Based NGOS are secretly receiving money from western countries and against any governance by Governments and opposed to communism and they act like a bulwak against spread of communism. Can Evidence Kathir be trusted for his intentions. Punising the culprits for a longer term in jail would be appropriate

    • /can we support the gallows planted by mecaulay/

      Macaulay’s system of education has spoiled India in one way. On the contrary, it paved the way to remove Sanakrit media of education, changed the medium of education to mother-tongue and English, and opened the gates of education uniformly to all classes. For the first time it was possible for Dalits to enter inside school.

      Next to Mahatma Jyothi Rao Phule, Mahatma Macaulay thought of egalitarian society in this part.

      http://www.thehindu.com/opinion/op-ed/reappraising-the-raj/article19664266.ece

      “In an India of Macaulay’s vision Dalits would enjoy equal rights and freedoms while gau rakshaks are put behind bars. And India would trade with Britain as an equal.”

      “A man with such a vision must be an Indian and if he happens to be the first to have that vision, he must be a Mahatma!”

  4. கௌசல்யா மட்டுமல்ல, இக்கட்டான நேரத்தில் அப்பெண்ணுக்கு துணை நின்ற அனைவருமே பாராட்டுக்குரியவர்கள். இத்தோடு நிறுத்தாமல் அப்பெண்ணுக்கு மறுவாழ்வு அமைத்துத்தர அவர் வயதுக்கு ஏற்ற ஆசாபாசங்களுடன் வாழ யாராவது நல்லமனம் கொண்டவர்கள் முன்வர வேண்டும்.

    மிகச்சிறிய வயதுதான் அப்பெண்ணுக்கு, இத்தனை துயரங்களையும் போராட்டங்களையும் தாங்கும் வயதல்ல. இனி வரும் காலம் அவர் வாழ்வில் நிம்மதியும் மகிழ்ச்சியும் நிலவட்டும்.

    வாழ்த்துக்கள் கௌசல்யா…. இலங்கையிலிருந்து ….

  5. அருமை நண்பா…இந்த தீர்ப்பை குடும்ப மானம்,தந்தை பாசம்…..எனக்கூறி சாதிச்சாயம் பூசுகிறார்கள்…

    ஒரு பெண் தனக்கு பிடித்தவனை காதலித்து திருமணம் செய்தால் அவள் ஓடுகாலியாம்…..

    தாய் ,தந்தை பார்த்து திருமணம் செய்து வைத்தால் அது பண்பாடு பாரம்பரியமாம்……நன்றாக சென்னால் இது கூட்டிக்கொடுப்பது…..

  6. பெண்ணுக்காக சாவு வரை சண்டை போடும் விலங்குகள் கூட சாதி கேட்டா உறவு கொள்கிறது? இன்னுமொரு மிக முக்கியமான விடயம், சில ‘முற்போக்கு’ ‘முன்னேறுதோழா’ ‘மாணவர் சக்தி’ முழக்க நடிகர்கள் என்னதான் கல்வி உரிமை, மக்கள்சேவை, மசாலா தோசை என கலந்து கட்டி அடித்தாலும், ‘சாதி’ எனும் ஒரு வார்த்தை அந்த பிரச்சினையில் வந்தாலும் போதும், குசு கூட விட மாட்டனுங்க நாதாரிங்க என்ன அவனுங்களுக்கே அதில ப்ராபிட் உண்டு, அதனால இளைஞர்கள் தங்கள் ஆதர்ச நாயகர்களை தூக்கி எரிந்து விட்டு சங்கரை கவுசல்யாவை ரோல் மாடல்களாக கொள்ள கேட்டு கொள்கிறேன்.

  7. தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் என்று சொல்லப்படும் ஏகாதிபத்தியக் கைகூலிகள் தான் உடன் இருந்து கௌசல்யாக்களை அடையாளம் காடும் நிலைக்காக அரசியல், அமைப்பு சார்ந்தவர்கள் வெட்கப்பட வேண்டும்.தன்னை சாதி மறுப்புப் போராளியாக வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் கௌசல்யா இறுதிவரை நின்று போராட களம் அமைத்துத் தரவேண்டியது சாதி மறுப்பாளர்கள் அனைவரின் கடமை.

  8. சாதியை ஒழிக்கும் புரட்சிகரப் போராட்டத்தோடு கௌசல்யாக்களை இணைக்கவேண்டும்.கவிஞர் துரை சண்முகம் ,கௌசல்யாவின் சாதி எதிர்ப்புப் போராட்டத்தின் அகக் கூறுகளை நயமாகக் கண்டு சொல்லியுள்ளார்.

  9. இந்த சிறிய வயதில் இவ்வளவு மன உறுதியா ? உறுதியோடு இருந்து சமுதாயத்திற்கு சம்மட்டி அடி கொடுத்து இருக்கிறார் .

    சரியான கவிதை .

    ஊழல் அரசியல் தலைவர்களை பற்றி பாடம் வைப்பது நீக்கி விட்டு இப்படிப்பட்ட சமூக புரட்சியாளர்களை பற்றி பாடம் வைக்க வேண்டும்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க