Thursday, September 23, 2021
முகப்பு செய்தி மீனவர்கள் படுகொலை ! சாக சொல்லும் அரசு வாழவிடுமா ? திருச்சி ஆர்ப்பாட்டம்

மீனவர்கள் படுகொலை ! சாக சொல்லும் அரசு வாழவிடுமா ? திருச்சி ஆர்ப்பாட்டம்

-

“ஒக்கிப்புயல் : மீனவர்கள் படுகொலை! சாக சொல்லும் அரசு வாழவிடுமா ? பாதிக்கப்பட்ட மீனவர்களுக்காக போராடிய மக்கள் அதிகாரத்தின் தோழர்கள் 7 பேரை உடனடியாக விடுதலை செய்!” என்ற தலைப்பில் 15.12.2017 அன்று காலை திருச்சி ஜங்சன் விக்னேஷ் ஹோட்டல் அருகில் காலை 10.30 மணியளவில் மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, தமிழக விவசாயிகள் சங்கம், திராவிடர் விடுதலைக் கழகம், தந்தை பெரியார் திராவிடர் கழகம் என மாற்றுக் கட்சியினரும் கலந்து கொண்டு அரசை கண்டித்து தங்களது கண்டனங்களை தெரிவித்தனர்.

ஆர்ப்பாட்டத்தை மக்கள் அதிகாரத்தின் திருச்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தோழர் செழியன் தலைமையேற்று தொடங்கி வைத்தார். அவர் பேசுகையில்ஒக்கிப்புயலின் பாதிப்பு மீனவ மக்களை ஆழ்கடலில் பிணமாக்கியுள்ளது. மீனவர்களை பாதுகாக்க வேண்டும், மீட்க வேண்டும் என்று மோடி, எடப்பாடி அரசு சிந்திக்கவில்லை. அதற்கு மாறாக மோடி அரசு ரிசா்ட்டுகள் கட்டுவது, துறைமுகங்களை கட்டுவது என மீனவர்களை அங்கிருந்து விரட்டி அடிக்கிறது. மீனவர்களின் கோரிக்கைகளான GPS கருவி, சாட்டிலைட் போன் போன்றவற்றை கொடுக்காமல் சாகடிக்கிறது. மீனவர்களுக்காக போராடிய தோழர்களை சிறையில் தள்ளுகிறது இதை வன்மையாக கண்டிப்பதுடன் தொடர்ந்து போராடுவோம்” என்று தனது உரையை முடித்தார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நாடாளுமன்ற தொகுதி செயலாளர் தோழர் ஜெ.தங்கத்துரை பேசுகையில் “காசுமீர் பிரச்சனை என்றால் கருத்து கூறும் அரசு குமரி மாவட்ட மீனவர்களை மீட்கவும், பாதுகாக்கவும் எந்த வித முயற்சியும் எடுக்காமல் மெத்தனமாக செயல்படுகிறது. கோடிக்கணக்கில் செலவு செய்து வாங்கி வைத்த கருவிகள் மீனவர்களை மீட்க பயன்படாதது ஏன்?

மீனவர்களை காப்பாற்ற துப்பில்லாமல் இறந்தவருக்கு விழா எடுக்கும் எடப்பாடி அரசு. மாவட்ட கலக்டரோ உறங்கிக் கொண்டு இருக்கிறார். கடலோர பகுதி மத்திய அரசிடம் உள்ளது. கடலில் தத்தளிக்கும் மீனவர்களை காப்பாற்றாமல் மீட்கச்சொல்லி போராடுபவர்களை சாதி, மத அடையாளம் பூசி மக்கள் மீது பழி போடுகிறார்கள் மத்திய அமைச்சர்கள். மேலும் இந்த கொடுமைகளை கண்டு போராடிய மக்கள் அதிகாரம் தோழர்களை கைது செய்தது கண்டிக்கத்தக்கது” என்றார்.

தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர் ம.ப.சின்னத்துரை பேசுகையில் “இந்தியா வல்லரசுனு சொல்லுறீங்க, உலக நாடுகளோட போட்டி போடுறோம்னு சொல்லுறீங்க, அந்த மீனவனுக்கு ஏண்டா தகவல் சொல்ல முடியல. புயலால் பாதிக்கப்பட்ட ரப்பர் தோட்டத்துக்கு ஏக்கர் நாப்பதாயிரம்னா, ஒரு மரம் உருவாக்கவே பத்தாயிரம் ஆகும்னு சொல்லுறான். உன் விவசாய துறைக்கும் தோட்டகலைதுறைக்கும் கணக்கு தெரியாதாடா?” என்று கேள்வி எழுப்பினார்.

“மத்திய மாநில அரசு இணக்கமாக இருக்கோம்னு சொல்லுறியே, மீனவர்களை காப்பாற்ற துப்பில்லை, காவிரி தண்ணியை வாங்கி தர வக்கில்லை. நீயெல்லாம் நல்லரசு, வல்லரசுனு பேசுறுயே மக்களை காப்பாற்ற யோக்கியதை இல்லை என்று சாடினார். எங்கள் ஓட்டை வாங்கிகொண்டு எங்களை கொள்ளை அடிக்கிறீங்களாடா, உங்களை காணாமல் செய்து விடுவோம்” என்று தனது கண்டன உரையை முடித்தார்.

திரவிடர் விடுதலை கழகத்தின் மாவட்ட இணை ஒருங்கிணைப்பாளர் தோழர் புதியவன் பேசுகையில்இயற்கை பேரிடரான ஒக்கிப்புயல் ஆழ்கடல் மீனவர்களையும் கறை ஒதுங்க வைத்துள்ளது. மக்களுக்கு ஒரு பிரச்சனைன்னா அரசு தான் சரி செய்ய முடியும். எங்க வரி பணத்த உனக்கு தான் கொடுக்கிறோம், ஆனால் எங்க பணத்துல 5 லட்சம் கோடி ஒதுக்கி வாங்கின ரேடார் நவீன கருவிகளை என்ன செய்த? என் மீனவ மக்களை காப்பற்ற துப்பில்ல, அப்புறம் எதுக்கு நீ வேணும்.

மாநில எடப்பாடி அரசு கையாலாகாத அரசுன்னா, மோடி ஆர்.எஸ்.எஸ் காரன். உ.பி. -யில் சாமியார் முதல்வர் இவன் மதவெறிய மட்டுமே பேசுறான். குமரியில் போராடுபவர்களை கிறிஸ்தவர் என முத்திரை குத்துகிறது ஆர்.எஸ்.எஸ்..

உரிமைக்காக, நீதிக்காக போராடினா லத்திய தூக்குது போலீசு. உழைக்கும் மக்கள், ஒடுக்கப்பட்ட மக்களை வெறிநாயாக பாய்ந்து தாக்குது. நியாயம் கேட்க சென்ற மக்கள் அதிகாரம் தோழர்களை நிர்வாணப் படுத்தியுள்ளது. மதவெறி, சாதிவெறிக்கு சவுக்கடி கொடுப்பதுடன் அரசு எந்திரம் நமக்காக திரும்பாவிடில் நாம் மக்கள் அதிகாரத்தை கையில் எடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும்” என எச்சரித்தார்.

தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் மாவட்ட செயலாளர் தோழர் கமலக்கண்ணன் பேசுகையில்மீனவன காப்பாத்த திராணியில்ல ஊருக்கு ஊரு எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா எவன்டா கேட்டான், ரேசன் கடைகளை ஒழித்துவிட்டு மானியம் என்று கொள்ளையடிக்குது மோடி அரசு. வீரபாண்டிய கட்டபொம்மன் வாழ்ந்த காலத்தில் இருந்த எட்டப்பன் போல் இன்று எடப்பாடி அரசு உள்ளது. இந்த துரோகிகளை வீழ்த்த மக்கள் அதிகாரத்தை கையிலெடுக்க வேண்டும்” என்றார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் தோழர் சுரேஷ் பேசுகையில்இந்திய நாட்டின் பொருளாதாரமான கடல் வளங்களையும், இயற்கை வளங்களையும் கொள்ளையடிக்கதான் தொழில்நுட்ப வசதி இருக்கு. அதை வைத்து மீனவர்களை காப்பாற்றாமல் கொலை செய்துள்ளது மத்திய அரசு.

மக்கள் அதிகாரம் தோழர்கள் மீது எத்தனை பொய்வழக்கு போட்டாலும், நிர்வாணப்படுத்தி ஒடுக்கினாலும், போலீசின் இந்த கேவலமான செயல் மேலும் சமூகத்திற்காக போராட தூண்டி அவர்களை தலைவர்களாக உருவாக்கும், ஒருபோதும் போராட்டத்தை தடுக்க முடியாது. மக்களை காக்க நாம் ஒன்றுபட்டு நிற்போம்” என்று தனது கண்டன உரையை பதிவு செய்தார்.

மக்கள் அதிகாரத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜூ பேசுகையில் “சாக சொல்லும் அரசு, மீனவர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள் போராட கூடிய அனைவருக்கும் இது பொருந்தும். ஒக்கிப்புயல் ஒரு வழக்கமான புயல் என்று தான் தமிழகம் நம்பியது, ஆனால் ரப்பர் மரம், மின்சாரம், போக்குவரத்து என குமரியே சின்னாபின்னமானது. மேலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்களை காணவில்லை. படகுகள் சேதம் மிகப்பெரிய பேராபத்தை உருவாக்கியது. இது கப்பற்படைக்கு, மீன்வளத்துறைக்கு ஏன் தெரியவில்லை. விமானம் கடலில் விழுந்தால் உலகமே தேடுகிறது. ஏனென்றால் அவன் பணக்காரன், காணாமல் போனவர்கள் மீனவர்கள்தானே !

சுனாமியால் மீனவர்களைக் கடற்கறையை விட்டு வெளியேற்றினார்கள். விவசாயிகளை விளை நிலங்களில் இருந்து விரட்டி அடிக்கிறார்கள். இது தானே அரசின் கொள்கை. இந்த அரசு, கடலோர காவல்படை, இந்திய கப்பல்படை என வைத்திருந்தும் என்ன பயன்? சொந்த நாட்டு மீனவனை காப்பாற்ற துப்பற்று நின்றது. இது கூலிக்கு வேலை செய்யும் படை, இது மக்களை காப்பாற்றாது. எனவே தான் ராணுவத்தில் 50% வேலை வாய்ப்பு வேண்டும் என்கின்றனர்.

ஜெயலலிதா எப்படி செத்தார் என்ற நாடக்திற்கு விசாரணை கமிஷன் வைக்கும் இந்த அரசுகளிடம், மீனவர்கள் படுகொலைக்கு குற்றவாளி யார்? அவர்களுக்கு என்ன தண்டனை என்று நாம் கேட்க வேண்டும். பன்னாட்டு நிறுவனங்களிடம் போட்டி போடும் குமரி மீனவர்களின், கடல் அறிவு, ஆற்றல், வீரம் அனுபவம், திறமை தியாகத்தை இந்த அரசு விஞ்ஞானிகள் போல மதிக்க வேண்டும்.

இறந்தவர்களுக்கு நீதி வேண்டும், இந்த அரசு கட்டமைப்பில் மீண்டும் படுகொலை நடக்காமல் இருப்பதற்கு என்ன உத்திரவாதம். சாட்டிலைட் கொண்டு மீனவர்களை எங்கே என்று பார்க்க முடியும், ஆனால் மறுக்கிறார்கள். நம்மை பாதுகாக்காத இவர்களுக்கு ஏன் நாம் வரிகட்ட வேண்டும். ஒத்துழைக்க வேண்டும்.

அரசு பணியின் போது பெரியபாண்டி உயிரைவிட்டார் என்பதற்காக பெருமைபடும் அரசுகள், கந்துவட்டி, ஹாவாலா, குட்கா ஊழல், சிலைகடத்தல் போன்ற செயல்களில் ஈடுபடும் போலீஸ் அதிகாரிகளுக்கு ஏன் பாதுகாப்பு கொடுக்குது? ஏன் மதிப்பு கொடுக்கிறது. ஏன் நடவடிக்கை எடுக்கல என்று கேள்வி எழுப்பினார். மக்கள் பிரச்சனையை முன்வைத்து எந்த தேர்தல் நடக்கிறது. இது தரம் தாழ்ந்த அரசியல். ஜெயா என்ற தீயசக்தி இந்த தமிழ் சமூகத்தை சீரழிக்க வளர்த்த வளர்ப்பு பிராணிகள்தான் இந்த அமைச்சர்கள், இந்த  சமூகத்தில் வாழ்வதற்கு நாம் வெட்கபட வேண்டும் என்று கூறினார்.

வறண்ட பாலைவனத்தில் நீர் கசிந்தால் வேர் எப்படி ஈர்த்து கொள்ளுமோ, அதுபோல போராட கூடிய மக்கள், மக்கள் அதிகார அரசியலை வறித்து கொள்கிறார்கள். இந்த அரசிடம் எந்த பிரச்சனைக்கும் தீர்வு இல்லை. அரசின் தோல்விதான் அனைத்து பிரச்சனைக்கும் காரணம். இந்த அரசிடம் மண்டியிட்டு மீனவர்களுக்கு நீதி கிடைக்காது. பாதிப்புக்கு காரணமான அதிகாரிகள் தண்டிக்கபட வேண்டும். கடைசி ஒருவர் உள்ள வரை அரசின் அடக்குமுறையை எதிர்த்து மக்கள் அதிகாரம் தோழர்கள் போராடுவார்கள்” என கூறி தனது உரையை முடித்தார்.

கன்னியாகுமாரி மாவட்டம் சின்னதுறை கிராமத்தை சேர்ந்த திருச்சி கல்லூரி மாணவர் ஜாக்சன் இந்த ஆர்ப்பாட்டதை கேள்விப்பட்டு தன்முயற்சியாக அங்கு வந்து அவரது கண்டனங்களை பதிவு செய்தார். அவர் பேசுகையில் “மனித உணர்வுகள் என்பது மக்கள் அதிகாரத்திடம்தான் உள்ளது. அதை நேரில் பார்க்கிறேன். இந்த மீனவர் பிரச்சனையை மதரீதியாக எவரும் பார்க்க வேண்டாம் ஏனென்றால் சிலர் அப்படி மாற்ற முயற்சிக்கிறார்கள். பாதிரியார்கள் அன்று முன் வந்து போராடியதை மத சாயம் பூசுகிறார்கள். வானில் இருந்து அவர்களை கடவுளா அனுப்பி வைத்தார் இல்லை. அவர்களுடைய அண்ணன், தம்பி, அப்பா, மாமா என இரத்த உறவுகள் அனைவரும் மீனவர்களாக அங்கு உள்ளனர். அதுதான் அவர்களை போராட வைத்தது.

என் வீடு – மரங்களெல்லாம் சாய்ந்து புயலால் மிகவும் பாதிப்படைந்தது, அதை பற்றி எனக்கு கவலை இல்லை. ஆனால் நடுகடலில் 600 -க்கும் மேற்பட்ட மீனவர்கள் உயிருக்கு போராடுகிறார்கள் அவர்களை பற்றிதான் எங்களது கவலை. மீனவர்களை கடலை விட்டும் கடற்கரையை விட்டும் துரத்தியடிக்கப் பார்க்கிறது இந்த மத்திய அரசு.

ஏனென்றால் பன்னாட்டு நிறுவனங்கள் கொள்ளையடிக்கவும் கடல் வளத்தை சீரழிக்கவும் கொண்டு வருகிற இணையம் சரக்கு பெட்டக துறைமுகத்தை கன்னியாகுமரி முதல் நீரோடித்துறை வரை உள்ள 48 மீனவ கிராம மக்களும் எதிர்கிறோம், என்ற காரணத்திற்காக எங்களை காப்பாற்ற மறுக்கிறது இந்த மத்திய அரசும் மாநில அரசும். இந்த கொடுமைகளை அம்பலப்படுத்தி தட்டிகேட்டு எங்களுக்கு ஆதரவாக வந்து நின்ற மக்கள் அதிகாரம் தோழர்களை கைது செய்து சித்ரவதை செய்து சிறையில் அடைத்துள்ளது இந்த அரசு.

கைது செய்யப்பட்டவர்கள் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கும், மீனவர்களுக்கும் உரிய நிவாரண தொகை வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட அனைவருக்கும் எல்லோரும் ஆதரவு கொடுப்போம்” என தனது உரையை முடித்தார்.

இறுதியாக புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் மாவட்ட செயலர் தோழர் மணிமாறன் நன்றியுரையாற்றினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய, மாநில அரசை கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இடையிடையே மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் தோழர் கோவன் மற்றும் கலைக் குழுவினர் மீனவர்களுக்கு ஆதரவாகவும் அவர்களை காப்பாற்ற வக்கில்லாத அரசை கண்டித்தும் புரட்சிகர பாடல்கள் பாடினார்கள்.

இடையிடையே மழை பெய்தாலும் ஆர்ப்பாட்டத்தின் இறுதிவரை நூற்றுக்கணக்கானோர் பங்கேற்று சிறப்பித்தனர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் அதிகாரம்,
திருச்சி.


 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க