privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திதிருச்சியில் 'கண்ணீர்க் கடல்' ஆவணப்பட வெளியீடு !

திருச்சியில் ‘கண்ணீர்க் கடல்’ ஆவணப்பட வெளியீடு !

-

திருச்சியில் கண்ணீர்க் கடல்  ஆவணப்படம்!

குமரியில் கடந்த நவம்பர் 30, 2017 அன்று வீசிய ஒக்கிப் புயல் மீனவர்களின் வாழக்கையை சூறையாடியது. யாரேனும் காப்பாற்ற வருவார்களா என்ற எதிர்பார்ப்பில் கடலிலேயே கிடந்து செத்து மிதந்தார்கள் மீனவர்கள். அந்த நேரத்தில்  தமிழகத்தில் ஆர்.கே நகர் இடைத்தேர்த்தில் எடப்பாடி அரசும் , குஜராத்தில் மோடியும் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தார்கள்.

பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று சந்திக்காமல் வாழைகளை பார்வையிட்டார் எடப்பாடி. குமரிக்கு சென்று போட்டோக்களை பார்வையிட்டார் மோடி. மீனவர்களை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம்  அரசுக்கும் இல்லை.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட மக்களின் துயரங்களை வெளிவுலகுக்கு கொண்டு வர வேண்டும் என்ற  நோக்கத்தில், வினவு பாதிக்கபட்ட மக்களை நேரில் சந்தித்து கண்ட பேட்டியின் அடிப்படையில் தயாரித்த ஆவணப்படம் திருச்சி தில்லை நகரில் கீழ்வெண்மணி தியாகிகள் தினமான டிசம்பர் 25 நேற்று  வெளியடப்பட்டது.

தோழர் கோவன்

இந்த ஆவணப்படத் திரையிடலுக்கு தலைமை தாங்கிய தோழர் கோவன், டிசம்பர் 25 1968 அன்று கீழ் வெண்மணியில் நிகழ்த்தப்பட்ட படுகொலையில் முக்கிய குற்றவாளியான கோபாலகிருஷ்ண நாயுடுவை, “காரோட்டும் கைகள் சேரிக்குடிசைக்கு தீ வைக்காது” என்று கூறி விடுதலை செய்தது.  நீதி மன்றத்தின் மூலம் நீதி கிடைக்காது என்பதை உணர்ந்த மக்கள் தாங்களே தீர்ப்பு எழுதினார்கள்.
அதேபோலத்தான், கடலுக்குள் சென்ற மீனவனை இந்த அரசு காப்பாற்றவில்லை.  இனி இந்த அரசை நம்பி பலனில்லை என்பதை உணர்ந்த மீனவர்கள் தாங்களே கடலுக்குள் இறங்கி ஆழ்கடலில் தத்தளித்த மீனவர்களை மீட்டார்கள்.

அன்று இந்த அரசு குறித்த பார்வை கீழ்வெண்மணி மக்களுக்கு என்ன இருந்ததோ அதே பார்வை தான் இன்றும் தமிழக மக்களுக்கு உள்ளது. அதாவது அரசு காப்பாற்றாது. அன்று “கீழ்வெண்மணி மக்கள் உணர்த்தினார்கள். இன்று இந்த ஆவணப்படம் மூலம் மீனவர்கள் நமக்கு உணர்த்துகிறார்கள்”  என்றார்.

புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியை சேர்ந்த தோழர் மணிமாறன் பேசுகையில்,  சென்னையில் வெள்ளம் வந்த போது அரசு  காப்பாற்றவில்லை. மீனவர்கள் தான் காப்பாற்றினார்கள். உணவின்றி தவித்த மக்களுக்கு உணவினை வழங்கி உயிரைக் காப்பாற்றினார்கள்.

தோழர் மணிமாறன்

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் மாணவர்களையும், மக்களையும் காப்பாற்றியவர்கள் மீனவர்கள். அவர்களுக்கு எந்த அங்கீகாரத்தையும் வழங்காத அரசு, பெரியபாண்டி என்ற போலிசின் மரணத்திற்கு அங்கீகாரம் வழங்குகிறது.  அன்று சென்னை மீனவர்களுக்கு இந்த அரசு கொடுத்த பரிசு குடிசை எரிப்பு. இன்று குமரி மீனவர்களின் உயிர் பறிப்பு.

சமவெளியில் வாழும் மக்களுக்கு ஏதேனும் பிரச்சினை என்றால்  அவர்களுக்கு உதவிக்கரம் நீட்டுவது மீனவர்கள் தான்.  அந்த மீனவர்களை அரசு காப்பாற்றவில்லை என்பதை ஆவணபடம் நமக்கு புரிய வைக்கிறது என்றார்.

இந்த ஆவணப்படம் குறித்து வினோத் என்பவர் , “புயல் என்று செய்திகளில் பார்த்து கூட அந்த பிரச்னையை முழுமையாக புரிந்து கொள்ளவில்லை.  இந்த ஆவணப்படத்தின் மூலம் மீனவர்களின் உண்மையான துயரத்தை புரிந்து கொள்ள முடிந்தது”. இந்த படம் கடலுக்குள் சென்று மீன் பிடிப்பவர்களுடன் பயணித்தது போன்ற உணர்வை ஏற்படுத்தியதாகவும் கூறினார். மேலும் இந்த ஆவணப்படத்தை நண்பர்கள் மற்றும் மக்கள் மத்தியில் கொண்டு செல்வதாக கூறினார்.

பெண் ஒருவர், ”விவசாயிகள் பிரச்சினையை பல தரப்பு மக்களால் புரிந்து கொள்ள முடியவில்லை என்பது எவ்வளவு உண்மையோ அதே தான் மீனவர்கள் பிரச்சனையையும் புரிந்து கொள்வதில்லை. ஆனால் இந்த ஆவணப்படம் மீனவர்களின் வலி மிகுந்த  வாழ்க்கையை புரிய வைக்கிறது” என்றார்.

ஜீவா கூறுகையில், ”மற்ற நாடுகளில் மீன் பிடிப்பவர்களை டிஸ்கவரி சேனலில் காட்டும் பொழுது பார்த்திருக்கிறேன். அவர்களுக்கு முழு பாதுகாப்பு இருக்கும். அங்கே மீன் பிடிப்பவர்கள் கூட நல்ல உடையணிந்து இருப்பார்கள். ஆனால் நம் மீனவர்களை இந்த அரசு எவ்வாறு நடத்துகிறது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது” என்றார்.

இந்த ஆவணப்படம் திரையிடலுக்கு முன்னர், வெண்மணி தியாகிகள் நினைவாகவும், மீனவர்களின் துயரத்தை எடுத்துரைக்கும் விதமாகவும் மகஇக சார்பாக இரண்டு பாடல் பாடப்பட்டது. இந்த திரையிடலுக்கு 70 பேர் வரை கலந்து கொண்டார்கள்.  இந்த ஆவணப்படம் திரையிடல் முடிந்தும் ஐந்து நிமிடம் வரை நிலவிய நிசப்தம் படம் பார்த்தவர்களின் மத்தியில் அது  ஏற்படுத்தியிருக்கும் தாக்கத்தை உணர்த்தியது !

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

-வினவு செய்தியாளர்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க