privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபுதிய ஜனநாயகம்இந்தியாபணிந்தால் பதவி - சதாசிவம் ! மறுத்தால் மரணம் - ஹர்கிஷன் லோயா !!

பணிந்தால் பதவி – சதாசிவம் ! மறுத்தால் மரணம் – ஹர்கிஷன் லோயா !!

-

பணிந்தால் பதவி !  மறுத்தால் மரணம் !!

சோராபுதீன் கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த அமித் ஷா விடுவிக்கப்பட்டதன் பின்னே நடந்துள்ள சதிகளை, அவ்வழக்கை விசாரித்து வந்த நீதிபதி லோயாவின் மர்ம மரணம் அம்பலப்படுத்துகிறது.

குஜராத் மாநில போலீசால் மோதல் என்ற பெயரில் சுட்டுக் கொல்லப்பட்ட சோராபுதின் கொலை வழக்கை விசாரித்து வந்த மும்பய் சி.பி.ஐ. நீதிமன்ற நீதிபதி பிரிஜ்கோபால் ஹர்கிஷன் லோயா மூன்று ஆண்டுகளுக்கு முன்பு – நவம்பர் 30, 2014 அன்று நள்ளிரவில் நாக்பூரில் மாரடைப்பால் இறந்ததாகக் கூறப்பட்டது. நீதிபதி லோயாவின் மரணம் குறித்துப் பல்வேறு சந்தேகங்களை அவரது தந்தையும், சகோதரிகளும் தற்பொழுது எழுப்பியுள்ளனர்.

கேரவன் என்ற ஆங்கில இதழின் பத்திரிகையாளர் நிரஞ்ஜன் தாக்லே, லோயாவின் தந்தை, லோயாவின் சகோதரி டாக்டர் அனுராதா பியானி, அவருடைய மகள் மற்றும் லோயா மரணமடைந்த நேரத்தில் அவருக்கு அருகிலிருந்தவர்கள் போன்றோரைக் கடந்த ஓராண்டாகச் சந்தித்து, விவரங்களைச் சேகரித்து, “ஒரு குடும்பத்தின் மௌனம் கலைகிறது – சோராபுதின் வழக்கை விசாரித்து வந்த நீதிபதியின் மரணத்தில் எழும் அதிர்ச்சியூட்டும் விவரங்கள்” என்ற கட்டுரையை கேரவன் இணையதளத்தில் கடந்த மாதம் வெளியிட்டார்.

சோராபுதின் கொலை வழக்கின் முக்கிய குற்றவாளியான அமித் ஷாவின் அதிகாரத்துக்கும் இலஞ்சப் பணத்துக்கும் பணிய மறுத்த காரணத்தினால் லோயா கொல்லப்பட்டாரா என்பதுதான் கேரவன் கட்டுரை எழுப்பும் கேள்வி. அதனால்தான், அக்கட்டுரை வெளியானவுடனேயே டெல்லி உயர்நீதி மன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஏ.பி. ஷா, மும்பய் உயர்நீதி மன்ற முன்னாள் நீதிபதி பி.ஹெச். மார்லபள்ளி ஆகிய இருவரும் லோயாவின் மரணம் குறித்து உச்சநீதி மன்றமோ அல்லது மும்பய் உயர்நீதி மன்றமோ உடனே விசாரிக்க வேண்டும் எனக் கோரினர்.

சோராபுதின் கொலை வழக்கு – சதிகளும் முறைகேடுகளும்

சோராபுதின் குஜராத் போலீசால் அகமதாபாத் நகரில் நவம்பர் 26, 2005 அன்று சுட்டுக் கொல்லப்பட்டார். “சோராபுதின் லஷ்கர்-இ-தொய்பாவைச் சேர்ந்த தீவிரவாதியென்றும், அவன் மோடியைக் கொல்வதற்காக குஜராத்திற்குள் நுழைந்ததாகவும், குஜராத் போலீசின் தீவிரவாதத் தடுப்புப் படையினர் அவனைப் பிடிக்க முயன்றபொழுது நடந்த மோதலில் சோராபுதின் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும்” கூறியது, குஜராத் மாநில அரசு.

டிசம்பர் 28, 2006 அன்று சோராபுதினின் கூட்டாளி துளசிராம் பிரஜாபதி குஜராத்-ராஜஸ்தான் மாநில எல்லையையொட்டியுள்ள கிராமத்தில் குஜராத் போலீசால் சுட்டுக் கொல்லப்பட்டார். நீதிமன்றத்துக்கு அழைத்து வரும்போது போலீசாரைத் தாக்கிவிட்டுத் தப்ப முயன்றபோது கொல்லப்பட்டதாகத் தெரிவித்தது, குஜராத் போலீசு.

இக்கொலைகள் நடந்த சமயத்தில் நரேந்திர மோடி தலைமையில் இருந்த குஜராத் மாநில அரசில் உள்துறை இணை அமைச்சராக இருந்தவர் பா.ஜ.க.வின் இன்றைய தேசியத் தலைவரான அமித் ஷா.

சோராபுதினின் தம்பி ருபாபுதின் தனது சகோதரனின் மரணம் குறித்தும், அவர் இறந்துபோன அதே சமயத்தில் தனது அண்ணி கவுசர் பீ காணாமல் போனது குறித்தும் உச்சநீதி மன்றத்திற்குக் கடிதம் எழுதினார். ருபாபுதினின் கடிதத்தை வழக்காக எடுத்துக்கொண்ட உச்சநீதி மன்றம், சோராபுதினின் கொலை குறித்து விசாரணை நடத்துவதற்கு சிறப்பு விசாரணைக் குழுவை நியமித்தது.

இவ்விசாரணையில், “சோராபுதின் தீவிரவாதி அல்ல, சிறு குற்றங்களைச் செய்துவந்த கிரிமினல். குஜராத், ம.பி., மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களைச் சேர்ந்த பா.ஜ.க. தலைவர்களுக்கு நெருக்கமானவன். பா.ஜ.க. தலைவர்களுக்கும் போலீசுக்கும் கட்டுப்படாமல் நடந்து கொண்டதால் போலி மோதலில் சுட்டுக் கொல்லப்பட்டார். சோராபுதின் மோடியைக் கொல்ல வந்த தீவிரவாதி என்பது கட்டுக்கதை” என்ற உண்மைகள் தெரியவந்தன.

சோராபுதின் கொல்லப்படுவதற்கு மூன்று நாட்கள் முன்பே, அவனும், அவனது மனைவி கவுசர் பீயும் கூட்டாளி துளசிராம் பிரஜாபதியும் குஜராத்திற்குக் கடத்தி வரப்பட்டு, அம்மூவரும் சட்டவிரோதக் காவலில் வைக்கப்பட்டனர். சோராபுதினைக் கொன்ற குஜராத் தீவிரவாத தடுப்புப் படை, கவுசர் பீயைப் பாலியல் வல்லுறவு செய்திருக்கிறது. பின் மயக்க ஊசி போட்டுக் கொன்று, அவரது சடலத்தை இரகசியமாக எரித்தும் விட்டது. மிச்சமிருந்த ஒரே சாட்சி துளசிராம் பிரஜாபதி என்பதால், அவனையும் சுட்டுக்கொன்றது குஜராத் போலீசு.

2010-இல் உச்சநீதி மன்றம் இவ்வழக்கை சி.பி.ஐ. வசம் ஒப்படைத்தது. சி.பி.ஐ. நடத்திய விசாரணையில், “இம்மூன்று படுகொலைகளும் குஜராத் மாநில உள்துறை இணை அமைச்சராக இருந்த அமித் ஷா மற்றும் ராஜஸ்தானைச் சேர்ந்த பா.ஜ.க.வின் முன்னாள் உள்துறை அமைச்சர் குலாப் சாந்த் கடாரியா ஆகிய இருவரின் உத்தரவுப்படியே நடந்தன. அமித் ஷா இப்படுகொலைகள் நடந்த காலம் நெடுகிலும், இக்கொலைகளைத் தலைமையேற்று நடத்திய வன்சாரா உள்ளிட்ட போலீசு அதிகாரிகளோடு நேரடியாகவே தொலைபேசி மூலம் தொடர்பு வைத்துக்கொண்டு, இப்படுகொலைகளை மேற்பார்வையிட்டிருக்கிறார். இக்கொலைகள் தொடர்பாக அமித் ஷாவிற்கும் சம்மந்தப்பட்ட போலீசு அதிகாரிகளுக்கும் இடையே ஏறத்தாழ 331 தொலைபேசி உரையாடல்கள் நடந்துள்ளன” என்பவையெல்லாம் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த ஆதாரங்களின் அடிப்படையில் அமித் ஷா குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டு சிறையிலும் அடைக்கப்பட்டார்.

நீதிபதி லோயா மரணத்தின் பின்னணி

வழக்கு விசாரணை குஜராத்தில் நடந்தால் சாட்சியங்கள் கலைக்கப்படலாம் என்ற அடிப்படையில் 2012-ஆம் ஆண்டில் மும்பய் சி.பி.ஐ. நீதிமன்றத்திற்கு மாற்றிய உச்சநீதி மன்றம், இவ்வழக்கை தொடக்கம் முதல் இறுதி வரை ஒரே நீதிபதிதான் விசாரிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. ஜே.டி.உத்பத் என்பவரை விசாரணை நீதிபதியாக நியமித்தது, மும்பய் உயர்நீதி மன்றம்.

நரேந்திர மோடி மே,2014-இல் பிரதமரான பிறகு, இவ்வழக்கைச் சீர்குலைக்கும் சதிகளை சி.பி.ஐ. அரங்கேற்றத் தொடங்கியது. அமித் ஷா நீதிமன்றத்தில் ஆஜராவதற்கு விலக்கு அளிக்க கோரினார். நீதிபதி ஜே.டி.உத்பத் அச்சலுகையைத் தர மறுத்து, ஜூன் 26, 2014 அன்று ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டார். ஜூன் 25, 2014 அன்று அவரைத் திடீரென்று இடமாற்றம் செய்தது மும்பய் உயர்நீதிமன்றம். இவ்வழக்கை ஒரே நீதிபதிதான் விசாரிக்க வேண்டும் என்ற உச்சநீதி மன்ற உத்தரவைத் துடைத்துப் போட்டுவிட்டு, இம்மாறுதல் செய்யப்பட்டது. எனினும் இந்த அத்துமீறலை உச்சநீதி மன்றம் கண்டுகொள்ளவில்லை.

உத்பத்தின் இடத்தில் நீதிபதி பிரிஜ்கோபால் ஹர்கிஷண் லோயா நீதிபதியாக நியமிக்கப்பட்டார். “அரசியல் பழிவாங்கும் நோக்கில்தான் இந்த வழக்கில் தன்னைச் சேர்த்திருப்பதாகவும், தன்னை வழக்கிலிருந்து விடுவிக்க வேண்டுமென்றும்” அமித் ஷா கோரினார். இதனை ஏற்க மறுத்த லோயா, டிசம்பர் 15, 2014 அன்று அமித் ஷா நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என அக்.31 அன்று உத்தரவிட்டார். ஆனால், டிசம்பர் முதல் தேதி அவர் உயிருடன் இல்லை.

நீதிபதி லோயாவிற்குப் பின் எம்.பி.கோசாவி நீதிபதியாக நியமிக்கப்பட்டார். தன்னை விடுவிக்க கோரிய அமித் ஷாவின் மனுவை டிசம்பர் 15, 16 ஆகிய இரு தினங்களில் விசாரித்து, டிசம்பர் 30, 2014 அன்று அமித் ஷாவைக் குற்றமற்றவர் எனத் தீர்ப்பளித்து விடுவித்தார் கோசாவி. அமித் ஷா அரசியல் காரணங்களுக்காகத்தான் வழக்கில் சேர்க்கப்பட்டிருக்கிறார் என்பதைத் தான் ஒத்துக்கொள்வதாகக் குறிப்பிட்டு, அமித் ஷாவை விடுதலை செய்தார் கோசாவி.

இத்தீர்ப்பு வெளியாகி மூன்று ஆண்டுகள் கடந்துவிட்ட பிறகும் சி.பி.ஐ. இதற்கு எதிராக மேல்முறையீடு செய்யவில்லை. இந்தப் பின்னணியில் வைத்துப் பார்த்தால்தான், நீதிபதி லோயாவின் மரணத்தை விசாரணைக்கு உட்படுத்த வேண்டிய அவசியத்தைப் புரிந்துகொள்ள முடியும்.

சந்தேகங்களும் பூசிமெழுகும் விளக்கங்களும்

நீதிபதி லோயா சக நீதிபதியின் மகள் திருமணத்தில் கலந்துகொள்வதற்காக நாக்பூருக்குச் சென்ற இடத்தில்தான் திடீரென இறந்து போகிறார். அவரது அகால மரணம் சந்தேகத்திற்குரியது என அவரது குடும்பத்தினர், மிக முக்கியமாக லோயாவின் சகோதரியும் மருத்துவருமான அனுராதா பியானி கருதுவதற்கு 16 விதமான ஐயங்களை எழுப்பியிருக்கிறார்கள்.

இந்தத் திருமணத்திற்குச் செல்லும் எண்ணமே லோயாவுக்கு இல்லை. தன்னுடன் பணியாற்றும் இரண்டு நீதிபதிகளின் வற்புறுத்தலின் காரணமாகவே லோயா திருமணத்திற்குச் சென்றிருக்கிறார். அந்த இரண்டு நீதிபதிகளிடமிருந்து விலகியிருக்குமாறு நீதிபதி லோயாவின் கைபேசிக்கு ஒரு குறுஞ்செய்தி வந்திருக்கிறது.

அமித் ஷாவிற்குச் சாதகமாகத் தீர்ப்பு அளிக்குமாறு பல்வேறு இடங்களிலிருந்து நிர்பந்தம் கொடுக்கப்படுவதாக நீதிபதி லோயா தனது தந்தை மற்றும் சகோதரிகளிடம் தெரிவித்திருக்கிறார். குறிப்பாக, அச்சமயத்தில் மும்பய் உயர்நீதி மன்றத் தலைமை நீதிபதியாக இருந்த மோஹித் ஷாவே லோயாவைச் சந்தித்து நூறு கோடி வரையில் பணமாகவோ அல்லது மும்பயில் வீடாகவோ தருவதாகப் பேரம் பேசியதாக லோயா தன் குடும்பத்தினரிடம் கூறியிருக்கிறார்.

மேலும் அமித் ஷாவை விடுதலை செய்யும் தீர்ப்பை டிசம்பர் 30-இல் அறிவிக்குமாறும், அன்று வேறொரு முக்கியமான நிகழ்வு தலைப்புச் செய்தியாகிவிடும் என்பதால், அமித் ஷா விடுதலை குறித்த தீர்ப்பை யாரும் கண்டுகொள்ள மாட்டார்கள் என்றும் மோஹித் ஷா லோயாவிடம் தெரிவித்ததாக லோயாவின் சகோதரி கூறுகிறார்.

அவர் இறந்த பிறகு நீதிபதியாக நியமிக்கப்பட்ட கோசாவியும் டிச.30, 2014-இல்தான் அமித் ஷாவை விடுதலை செய்யும் தீர்ப்பை அளிக்கிறார். அன்றுதான் கிரிக்கெட் டெஸ்ட் போட்டிகளிலிருந்து டோனி விலகும் செய்தி வெளியாகி, அது ஊடகங்களில் பரபரப்புச் செய்தியாக அடிபட, அமித் ஷா விடுதலையான செய்தி பின்னுக்குத் தள்ளப்பட்டது.

திடீரென ஏற்பட்ட மாரடைப்பு, coronary artery insufficiency காரணமாக இறந்து போனதாக லோயாவின் பிரேதப் பரிசோதனை அறிக்கை தெரிவிக்கிறது. இரத்த அழுத்தம், சர்க்கரை நோய் உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்குத்தான் இந்த வகை மாரடைப்பு ஏற்படுமென்றும், நீதிபதி லோயாவிற்கு இந்த வகையான நோய்கள் எதுவுமே இல்லையென்றும், தமது சந்ததியில் யாரும் இந்த நோய்களால் பீடிக்கப்பட்டோ, மாரடைப்பு ஏற்பட்டோ இறந்து போகவில்லை என்றும் மறுக்கிறார், மருத்துவரான அனுராதா பியானி.

வெளியூருக்கு வந்த இடத்தில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது உண்மையானால், மருத்துவமனைக்கு கொண்டு செல்கிறோம் என்ற தகவலை, லோயாவுடன் இருந்த நீதிபதிகள் லோயாவின் குடும்பத்தினருக்கு உடனே சொல்லியிருக்க வேண்டும். ஆனால், டிசம்பர் 1 அதிகாலை ஐந்து மணிக்கு லோயா இறந்துவிட்டாரென்ற தகவலைத் தங்களுக்கு அறிமுகமேயில்லாத விஜயகுமார் பார்தே என்ற நீதிபதி தொலைபேசியில் தெரிவித்ததாக அவரது குடும்பத்தினர் கூறுகின்றனர்.

பிரேத பரிசோதனை அறிக்கையிலோ அவர் டிச.1 காலை 6.15 மணிக்கு இறந்து போனதாக கூறப்பட்டிருக்கிறது. கேரவன் பத்திரிகையாளர் நிரஞ்ஜன் தாக்லே நாக்பூர் அரசு மருத்துவமனையில் நடத்திய விசாரணையில், பெயர் வெளியிட விரும்பாத சிலர், அவரது உடல் நவ.30 அன்று நள்ளிரவே மருத்துவமனைக்கு வந்துவிட்டதாகவும், பெயருக்குப் பிரேத பரிசோதனை நடத்தினால் போதும் என மருத்துவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டதாகவும் கூறியிருக்கின்றனர்.

இந்த முரண்பாடுகள் ஒருபுறமிருக்க, மாரடைப்பு ஏற்பட்டு இயற்கையாக மரணமடைந்ததாகக் கூறப்படும் நீதிபதி லோயாவின் உடலைப் பிரேதப் பரிசோதனை செய்ய வேண்டிய அவசியமென்ன? அதற்கான சம்மதத்தை லோயாவின் மனைவி, தந்தை உள்ளிட்ட நெருங்கிய உறவினர்கள் யாரிடமும் பெறாமல், லோயாவின் தந்தை வழி உறவினர் என நாக்பூரைச் சேர்ந்த பிரசாந்த் ரத்தி என்ற மருத்துவரை செட்டப் செய்து, பிரேதப் பரிசோதனையை நடத்தி, சடலத்தையும் அவரிடம் ஒப்படைத்தது ஏன்?

லோயாவின் மனைவியும் மகனும் மும்பயில் வசித்துவரும் நிலையில், அவரது உடல் குஜராத்திலுள்ள அவரது சொந்த கிராமமான கேட்காவ்னுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. அவரது சடலம் மகாராஷ்டிராவிலிருந்து குஜராத்திற்கு யாருடைய துணையுமின்றித் தனியாக அனுப்பி வைக்கப்பட்டதாகக் கூறுகிறார், அனுராதா பியானி. மேலும், அவரது தலைப்பகுதியில் காயம் இருந்ததாகவும், அவரது சட்டையின் காலர் பகுதியில் இரத்தக் கறை இருந்ததாகவும் கூறும் அவர், இரண்டாவது பிரேதப் பரிசோதனை நடத்த தாங்கள் கோரியதாகவும், அதனை லோயாவின் சக நீதிபதிகள் விரும்பாமல் தடுத்துவிட்டதாகவும் கூறுகிறார், அவர்.

லோயாவிடமிருந்து எடுக்கப்பட்ட பொருட்களை போலீசுதான் குடும்பத்தினரிடம் ஒப்படைத்திருக்க வேண்டும். ஆனால், லோயாவின் கைபேசியை குஜராத்-லட்டூர் பகுதியைச் சேர்ந்த ஈஷ்வர் பஹேதி என்ற ஆர்.எஸ்.எஸ்.காரன்தான் லோயாவின் குடும்பத்தினரிடம் ஒப்படைத்திருக்கிறான். அக்கைபேசியில் அனைத்துப் பதிவுகளும் அழிக்கப்பட்டிருந்தன, “அந்த இரண்டு நீதிபதிகளிடமிருந்து விலகி இருங்கள்” என்ற குறுஞ்செய்தி மட்டும் தப்பியிருக்கிறது.

இந்த சந்தேகங்களும் முரண்பாடுகளும் நிரஞ்ஜன் தாக்லே எழுதிய கட்டுரை வழியாக வெளியே வந்துவிட்ட நிலையில், அவற்றுக்குச் சப்பைக்கட்டும் விதத்தில் விளக்கங்கள் தரப்படுகின்றன. லோயாவிற்கு மாரடைப்பு ஏற்பட்டவுடனேயே கொண்டுபோய்ச் சேர்த்ததாகக் கூறப்படும் தாண்டே மருத்துவமனையில் ஈ.சி.ஜி. இயந்திரமே வேலை செய்யவில்லை எனக் குற்றஞ்சுமத்தியிருந்தார், அனுராதா பியானி. அங்கு ஈ.சி.ஜி. எடுக்கப்பட்டதாகக் கூறி, அதனின் நகலைத் தற்பொழுது வெளியிட்டுள்ளனர். லோயாவிற்கு டிச.1, அதிகாலை 4.00 மணிக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகக் கூறப்படும் நிலையில், வெளியிடப்பட்டுள்ள ஈ.சி.ஜி.யில், அது எடுக்கப்பட்ட தேதி நவம்பர் 30 எனப் பதிவாகியிருப்பதோடு, லோயாவின் பெயரும் தவறாக உள்ளது. இவையெல்லாம்  தொழில்நுட்பக் கோளாறு எனச் சமாளித்திருக்கிறார்கள்.

பிரேதப் பரிசோதனைக்கான ஒப்புதலைத் தந்தவர் எங்கள் பெற்றோர் வழி உறவினரே அல்ல என லோயாவின் குடும்பத்தினர் மறுத்துவரும் நிலையில், ஒப்புதலைத் தந்தவர் லோயாவின் தந்தை வழி உறவினரின் உறவினர் எனக் கதை எழுதியிருக்கிறார்கள்.

நீதிபதி லோயாவின் சடலத்தோடு யாரும் வரவில்லை என்கிறார், அவரது சகோதரி பியானி. நீதிபதி லோயா இறந்துபோன நேரத்தில், அவரை வற்புறுத்தி திருமணத்துக்கு அழைத்துச் சென்ற இரு நீதிபதிகள் மட்டுமின்றி, 100 கோடி தருவதாகப் பேசிய மும்பய் உயர்நீதி மன்ற நீதிபதி மோஹித் ஷாவும் இருந்ததாக அவர்களே கூறுகின்றனர். ஆனால், தாங்கள் வேறு இரண்டு நீதிபதிகளை அனுப்பி வைத்ததாகவும், அவர்கள் பயணித்த கார் விபத்துக்குள்ளானதால் சடலத்தோடு வரமுடியாமல் போய்விட்டதாகவும் கதை சொல்கிறார்கள். நாக்பூர் போலீசோ, அந்த இரு நீதிபதிகளும் ஆம்புலன்ஸில் லோயாவின் உடலுடன் சென்றதாகச் சாதிக்கிறது.

‘மோடிக்கேத்த’ மூடியாய் நீதிமன்றம்

நீதிபதி லோயா இறந்து போன மூன்றாவது மாதத்திலேயே அவரது அகால மரணம் குறித்து விசாரணை வேண்டுமென லோயாவின் மகன் அனுஜ் மும்பய் உயர்நீதி மன்ற நீதிபதி மோஹித் ஷாவிடம் நேரிலேயே கடிதம் கொடுத்தும் அது கமுக்கமாகக் குப்பைக்கூடைக்கு அனுப்பப்பட்டுவிட்டது.

அமித் ஷாவை விடுதலை செய்த தீர்ப்புக்கு எதிராக மும்பய் உயர்நீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்த சோராபுதின் தம்பி ருபாபுதின், ஒரு கட்டத்தில் தனது மேல்முறையீட்டு மனுவைத் தனது வழக்குரைஞருக்கே தெரியாமல் திரும்பப் பெற்றுக்கொண்டார். ருபாபுதின் மிரட்டப்படாமல், இது நடந்திருக்காது. ஆனால், ருபாபுதின் மிரட்டப்படவில்லை என மும்பய் உயர்நீதி மன்றம் விளக்கமளிக்கிறது.

அமித் ஷாவை விடுவித்த தீர்ப்பை மீளாய்வு செய்யவேண்டுமென்று, குஜராத் படுகொலைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாகத் தனது பதவியைத் துறந்த ஐ.ஏ.எஸ்.அதிகாரி ஹர்ஷ் மந்தேர் மும்பய் உயர்நீதி மன்றத்திலும், அதன் பின் உச்சநீதி மன்றத்திலும் வழக்கு தொடுத்தார். இரு நீதிமன்றங்களும் இதில் தலையிட மூன்றாவது நபருக்கு உரிமையில்லை எனக் கூறி, அவரது மனுக்களைத் தள்ளுபடி செய்தன.

காந்தி கொலையிலிருந்து இந்து மதவெறி கும்பலை விடுவிக்கும் நோக்கத்தில் அந்த
வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டுமென்று அபிநவ் பாரத் என்ற அமைப்பின் டிரஸ்டியான பங்கஜ் பட்னிஸ் என்ற “மூன்றாவது நபர்” தாக்கல் செய்த மனுவை அனுமதித்து, இப்பிரச்சினை தொடர்பாக நீதிமன்ற ஆலோசகரை (amicus curie) நியமித்துள்ள உச்சநீதி மன்ற நீதிபதி எஸ்.ஏ.பாப்டே அமர்வுதான், ஹர்ஷ் மாந்தேரின் மனுவைத் தள்ளுபடி செய்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. காந்தி கொலை வழக்கை மீண்டும் விசாரிப்பதை எதிர்த்து அவருடைய கொள்ளுப்பேரன் துஷார் காந்தி தாக்கல் செய்த மனுவையும் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்திருக்கிறது.

தமக்கு உடன்பட்டுக் கைக்கூலிகளாகச் செயல்படுபவர்களுக்குப் பதவியும் சன்மானமும் அளிக்கவும் தமக்கு எதிராகத் துணிந்து நிற்பவர்களைத் தூக்கியெறிய எந்த எல்லை வரை செல்லவும் மோடி-அமித் ஷா கும்பல் தயங்கியதேயில்லை.

துளசிராம் பிரஜாபதி போலிமோதல் கொலை வழக்கில் அமித் ஷா மீது சி.பி.ஐ. தாக்கல் செய்த இரண்டாவது குற்றப்பத்திரிகையை ரத்து செய்து தீர்ப்பளித்த உச்சநீதி மன்றத் தலைமை நீதிபதி சதாசிவம் கேரள ஆளுநராகிவிட்டார்.

குஜராத் முசுலீம் படுகொலைகளில் மோடிக்கு பொறுப்பில்லை என்று  அறிக்கை அளித்த சி.பி.ஐ.யின் முன்னாள் இயக்குநர் ராகவன், சைப்ரஸ் தூதராகிவிட்டார்.

இஷ்ரத் ஜஹான் போலிமோதல் கொலை வழக்கில் கைதாகிச் சிறையில் அடைக்கப்பட்டுப் பிணையில் வெளிவந்த பி.பி. பாண்டே குஜராத் போலீசுதுறையின் டி.ஜி.பி.யாக பதவி உயர்வு பெற்றார்.

அதே சமயம், அமித் ஷா நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டுமென உத்தரவிட்ட சி.பி.ஐ. நீதிபதி உத்பத் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டார்.

சோராபுதின் போலிமோதல் கொலை வழக்கில் நீதிமன்ற ஆலோசகராக நியமிக்கப்பட்ட உச்சநீதி மன்ற மூத்த வழக்குரைஞர் கோபால் சுப்பிரமணியன், அமித் ஷாவுக்கும் குஜராத் அரசுக்கும் எதிராக அறிக்கை அளித்ததன் காரணமாக, அவர் மீது சி.பி.ஐ. மூலம் அவதூறு பரப்பி, அவரை உச்ச நீதிமன்ற நீதிபதியாகவிடாமல் தடுத்தது மோடி-அமித் ஷா கும்பல்.

குஜராத் படுகொலையில் மோடியின் பங்கு குறித்த உண்மையைக் கூறிய குஜராத்  உள்துறை அமைச்சர் ஹரேன் பாண்டியா மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டார்.

குஜராத் படுகொலையை நியாயப்படுத்துவதற்கும் தன்னைத் தீவிரவாதத்தை ஒழிக்க வந்த நாயகனாக காட்டிக்கொள்வதற்கும் 2002 – 2006 காலகட்டத்தில் 20-க்கும் மேற்பட்ட போலி மோதல்களை அரங்கேற்றியிருக்கிறது மோடி-அமித் ஷா கும்பல். 2002 குஜராத் படுகொலை மூலம் அம்மாநிலத் தேர்தலில் வெற்றி பெற்றதைப் போலவே, 2014-இல் லவ் ஜிகாத் என்ற பொய்யைக் கிளப்பி, முசாபர்பூர் கலவரத்தை நடத்தி உ.பி. நாடாளுமன்றத் தொகுதிகளைக் கைப்பற்றியது, அக்கும்பல்.

அதிகாரத்தைக் கைப்பற்றவும், தக்கவைக்கவும் எந்த எல்லை வரையும் செல்லத் தயங்காத கிரிமினல்தான் மோடி. பணமதிப்பழிப்பு நடவடிக்கையின் மூலம் கோடிக்கணக்கான மக்களை நடுத்தெருவில் நிறுத்தத் தயங்காத சர்வாதிகாரிதான் மோடி. அதன் காரணமாக இறந்து போனவர்களைக் கேலி பேசிய இரக்கமற்ற கொடூரன்தான் மோடி. இத்தகைய கிரிமினலின் ஆட்சியில் நீதி, நியாயத்தின் பக்கம் நிற்பவர்களுக்கு எது வேண்டுமானாலும் நடக்கக்கூடும் என்பதைத்தான் லோயாவின் மரணம் எடுத்துக் காட்டுகிறது.

-செல்வம்

-புதிய ஜனநாயகம், டிசம்பர் 2017

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். உங்களுக்கான பணம் செலுத்தும் முறையை தெரிவு செய்து பணத்தை செலுத்துங்கள்.

இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். உடன் உங்களுக்கு மின் நூல் அனுப்பி வைக்கப்படும்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com