privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்மீனவர்கள்சென்னை திருவெற்றியூர் - குமரி வள்ளவிளை : கண்ணீர்க் கடல் ஆவணப்படம் திரையிடல்

சென்னை திருவெற்றியூர் – குமரி வள்ளவிளை : கண்ணீர்க் கடல் ஆவணப்படம் திரையிடல்

-

சென்னை திருவெற்றியூர் பகுதியில் மீனவ சங்க பிரதிநிதிகள் முயற்சியால் ஒக்கி புயலில் மரணமடைந்த மீனவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏற்றி அவர்களை நினைவு கூர்ந்து 2 நிமிடம் மவுன அஞ்சலியோடு “கண்ணீர்க் கடல்” ஆவணப்படம் திரையிடல் நிகழ்ச்சி நடந்தது. இதில் நூற்றுக்கணக்கான மீனவ மக்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்வில்பல்வேறு மீனவ சங்கப் பிரதிநிதிகள், இளைஞர்கள், மாணவர்கள் பங்கேற்றனர். ஆவணப்படம் முடிந்த பிறகு பலரும் தாங்கள் உணர்ந்த கருத்துகளைப் பதிவு செய்தனர்.

இதில் மீனவர்கள் – வியாபாரி சங்க கெளரவத் தலைவர் ஒருவர் பேசும் போது “ஒக்கி புயலின் போது பாதிக்கப்பட்ட, மீனவ சொந்தங்களின் பாதிப்புகளை உணர்வுப் பூர்வமாக பதிவு செய்திருக்கும் இந்த ஆவணப்படம் என் கண்களில் கண்ணீரை வரவழைத்து விட்டது. அந்தக் கதறலை என்னால் தாங்க முடியவில்லை! இந்த ஆவணப்படத்தை தயாரித்த குழுவிருக்கு இந்த நேரத்தில் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த ஆவணப்படத்தின் மூலம் நான் ஒரு விசயத்தை பதிவு செய்ய விரும்புகிறேன்.

நாம் பல சங்கங்களாகவும், கட்சிகளாகவும் பிரிந்து இருக்கிறோம். இது தான் நமது உரிமைகளை மீட்டெடுக்க தடையாக உள்ளது. நமக்குள் பல கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் ஒரு பொது காரியத்துக்காக நம் சமுதாய மக்களுக்காக ஒன்று கூடி முடிவெடுக்க வேண்டிய தருணம் இது.

சீன இஞ்ஜின் படகு இறக்குமதி செய்து நம் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கும் திட்டத்திற்கு நமது சமுதாயத்தை சேர்ந்த மீன்வளத்துறை அமைச்சரே ஆதரவாக இருப்பது வருத்தமளிக்கிறது. மீன்கள் பெருக்கத்திற்காக அரசானது 2 மாத காலம் மீன் பிடி தடை காலம் என்று அறிவித்ததை ஏற்று அதற்கு நாம் கட்டுப்பட்டு இருக்கின்றோம் ஆனால் வெளிநாட்டு கம்பெனிக்காரன்களுக்கு அந்த இடைப்பட்ட காலத்துல அரசு அனுமதி கொடுக்குது. அவன் ராட்சச மீன்பிடி வலைகளை போட்டு குஞ்சுலருந்து எல்லாத்தையும் அள்ளிகிட்டு போயிடுறான். அவனுக்குத் தடை இல்லை.

அடுத்து நம்ம சங்கங்கள ஏற்றுமதிக்கான ஒரு கட்டிடம் கட்டுவதற்கு ஆலோசனை நடத்தினாங்க. ஆனால் இப்போ ஏற்றுமதி செய்யும் பெரிய கம்பெனிகளுக்கு ஆதரவாக அங்கு போய் மீன விக்க சொல்றாங்க. இது ஒரு கல்லுல ரெண்டு மாங்கா மாதிரி, நாம காலம் காலமாக வார்ப்பு இடங்களில் மீனை ஏலம் போட்டு வித்துட்டு வர்றோம். ஆனால் கரையோரம் இருக்கக்கூடிய வார்ப்பு இடமானது அதானி போன்ற பெரிய கம்பெனிகளுக்கு தேவை என்பதால அந்த இடத்துல இருந்து நம்மள காலி பண்ண வைக்கிறது, ரெண்டாவது ஏற்றுமதியாளர்கள் மொத்தமா மீன கொள்முதல் செய்யுறதால நம்ம வியாபாரிகளே அவங்ககிட்ட தான் மீனு வாங்கி விக்கக்கூடிய சூழ்நிலை உருவாகப் போகுது.

நாம எப்படி வாழறதுன்னு தெரியல. நாம் ஏற்கனவே டீசல் மானியம், இத்தொழிலில் மாற்று வேலை வாய்ப்பு, கூடுதல் உதவித்தொகை, மீனவர் குழந்தைகளுக்கான அரசு பள்ளிகூடம் போன்ற உரிமைகளுக்காக போராடனும்னு நினைக்கும் நேரத்தில், ஒக்கி புயலில் அரசின் மெத்தனத்தை பார்க்கும்போது மீனவன் அழிஞ்சா போதும்னு அரசு நினைக்குது என்ற விசயம் இந்த ஆவணப்படத்தின் மூலம் தெரியுது, ஆக நாம் மீனவனாக வாழனும்னாலே, நம்ம மீன்பிடித் தொழிலை தக்க வச்சிக்கனும்னாலே அனைத்து சங்கங்களும் ஒன்றிணைவது தான் நிரந்தர தீர்வு” என்று கூறினார்.

அவரைத் தொடர்ந்து மீனவர் ஒருவர் கூறுகையில் ”அரசானது மீனவர்களுக்காக வயர்லஸ் கருவி வாங்கி சாக்கு மூட்டையில் வச்சிருக்கிறதா சொல்றாங்க. அது நமக்காக வாங்கியிருந்தா கொடுக்க வேண்டியதுதானே ஏன் கொடுக்கலே? நாமளும் அத பத்தின விழிப்புணர்வு இல்லாம இருந்திருக்கிறோம். நாமளும் விவசாயி மாதிரி தான் நம்ம பாட்டன், பூட்டனுங்க கத்து கொடுத்தததான் நடைமுறையில தொழில் பண்றோம், நாம் தனித்துவமாக இருக்கிறோம் நம்மளால தான் அரசுக்கு வருமானம் வருது. அதிலிருந்து தான் அரசும் சில சலுகைகள் அறிவிச்சிருக்கு அந்த சலுகைகள் கூட நமக்கு வந்து சேர தடையாக இருப்பதே இந்த மீன்வளத்துறை தான்.

குமரி மாவட்ட மீனவர்களுக்கு நிகழ்ந்த துயரம் நாளைக்கு நமக்கும் நடக்காம இருக்கனும்னா நாம ஒண்ணு சேரணும். சாவு இயற்கையாக வரலாம், செயற்கையாக வரக்கூடாது. ஒக்கி புயல் மரணங்கள் செயற்கையான மரணங்கள்” என்று கூறி தன் கண்டனத்தை பதிவு செய்தார்.

இவரைத் தொடர்ந்து அப்பகுதி மாணவர் கூறுகையில் “மீனவர்களாகிய நம் மூலம் அரசுக்கு சுமார் பல ஆயிரம் கோடி வருமானம் கிடைக்குது. ஆனால் மாநில அரசாலும் சரி, மத்திய அரசாலும் சரி மீனவர்களுக்கு எந்த சலுகையும் வழங்கப்படவில்லை. மாநில அரசில் மீனவராகிய ஜெயக்குமார் சார் இருந்தாலும் பொம்மையாத்தான் இருக்குறாரு. இங்கு ஒவ்வொரு சங்க நிர்வாகிகளும் ஒவ்வொரு கட்சியில இருக்கீங்க ஏனென்றால் உங்கள் பிள்ளைகளை படிக்க வைக்கவோ, குடும்பத்த காப்பாத்தவோ கட்சியில இருக்கீங்க. ஆனால் இன்று ஒக்கி புயலால நம்ம மீனவர்கள் செத்துகிட்டு இருக்காங்க. மீனவ சமுதாயம் அழிஞ்சிக்கிட்டு இருக்கு, இதே நிலைமை தான் நாளை நமக்கும்.

நீங்க கட்சியில இருக்கிறதாலேயே கட்சிகாரங்க உங்க பிள்ளைகளையோ, மீனவ சமுதாயத்தையோ காப்பாத்தப் போறதில்ல. அப்போ கட்சியெல்லாம் தாண்டி மீனவர்களாக வெளிய வந்து நம்ம சமுதாயத்திற்காக வாழனும். சில பேர் ஆசைக்காக கட்சிய சார்ந்து இருக்காங்க ஆனால் மீனவர் சமுதாயம் யாரையும் சார்ந்து வாழல. சட்டப்படியே நம்ம அரசானது செத்த பிறகு 7 வருடம் கழிச்சு தான் பத்து லட்சம் ரூபாய் பணம் தருது. ஆக மீனவர்களான நாமெல்லாம் ஒன்று சேர்ந்து கூட்டம் கூடி நமக்கான உரிமை சட்டத்தை மீட்கனும் உரிமையென்றால் என்ன என்பதை சொல்லித்தரனும்.

ஒரு மீனவனுக்குத் தர வேண்டிய தொலைத்தொடர்பு கருவி அரசாங்கம் தராது, ஏனெனில் அது அதானிக்கு தான் கைக்கூலியா இருக்கு. நம்ம மீனவர் சங்கங்களிலேயே பெரிய பெரிய சங்கங்களெல்லாம் இருக்கு அதெல்லாம் நம்ம சமுதாயத்திற்கு உதவி செய்யுமானு தெரியல, ஆனால் அந்த சங்கங்கள்ல படிச்சவங்களெல்லாம் இருக்காங்க அவங்க என்ன செய்யனும்னா இந்த சட்டம் எப்படி இருக்கு, நமக்கான உரிமைகள தெரிஞ்சுகிட்டு அப்டேட்டா இருந்து மத்தவங்களுக்கும் சொல்லித்தரனும்.

மீனவன் தான் உயிர பணயம் வச்சு கடலுக்கு போறான். அரசோ மீனவ மக்களின் உயிரை ஒரு உசுரா மதிக்கல என்பது இந்த படத்தின் மூலம் தெரியுது. ஒரு எம்.எல்.ஏ. -வோ எம்.பி. -யோ செத்திருந்தா இப்படி சும்மா இருப்பாங்களா! அப்போ மீனவ மக்கள் செத்தா சாகட்டும்னு இருக்குது அரசு. இங்கு பிரச்சன வேற மாதிரி முன்னமாதிரி சாதாரணமா இருக்க முடியாது”. என்று ஆதங்கத்தோடு முடித்தார்.

மேலும் இந்த ஆவணப்படத்தை CD யாக போட்டு மக்களிடம் பரவலாக எடுத்துக்கொண்டு போக வேண்டும் என்ற கருத்தையும் முன் வைத்தனர்.

மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் தயாரிப்பில் வினவு உருவாக்கிய இந்தஆவணப்படம் மீனவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அமைந்தது.

தகவல் :
வினவு செய்தியாளர், சென்னை.

________________

குமரி மாவட்டத்தின் மீனவ கிராமமான வள்ளவிளையில் “கண்ணீர்க்கடல்” ஆவணப்படத்தின் திரையிடல் கடந்த 30.12.2017 சனிக்கிழமை அன்று நடந்தது. 500-க்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர். ஊர் மையத்தில் இருக்கும் கால்பந்து திடலில் புரோஜொக்டர் மூலம் படம் காட்டப்பட்டது.

வள்ளவிளையில் இருந்த தொழிலுக்குச் சென்ற 70 பேர் கடலில் காணாமல் போயிருக்கின்றனர். இதில் மூவரின் மரணம் நேரில் பார்த்தவர்களை வைத்து உறுதி செய்யப்பட்டிருக்கிறது. மற்றவரின் கதி இன்னமும் தெரியவில்லை. அதில் கடலூர், ஆந்திரா, அஸ்ஸாமைச் சேர்ந்த தொழிலாளிகளும் உண்டு.

தற்போது ஐந்து படகுகளில் மீனவர்கள் தெற்கே டீக்கோகார்சியா தீவு வரையிலும் தேடிப் பார்க்க சென்றிருக்கின்றனர். இப்படகுகள் ஜனவரி 5 அன்று திரும்பும் என்று பகுதி மீனவர்கள் கூறுகிறார்கள்.

“கண்ணீர்க் கடல்” ஆவணப்படத்தை மற்ற கிராமங்களில் திரையிடல் செய்யவும் ஏற்பாடுகளை செய்திருப்பதாக பகுதி மீனவர்கள் கூறுகிறார்கள்.

தகவல்: வினவு செய்தியாளர், குமரி

_____________________________

 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க