தேர்தல் நிதிப்பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகள் நன்கொடை பெறுவதற்கான புதிய நெறிமுறைகளை மத்திய அரசு, ஜனவரி 2, 2018- அன்று வெளியிட்டிருக்கிறது. இதன் படி இனி தனி நபர்கள், மத நிறுவனங்கள், அரசு சார தொண்டு நிறுவனங்கள் உள்ளிட்டவர்கள் யாரும் கட்சிகளுக்கு நிதியளித்த விவரங்களை வெளிப்படுத்த தேவையில்லை. தேர்தல் நிதி பத்திரங்களை 2017 பிப்ரவரி மாதம் இந்திய அரசின் வரவு செலவு திட்டத்தை வெளியிட்ட போது மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி அறிமுகப்படுத்தினார்.
நாட்டின் அரசியல் நிதி அமைப்பு முறையை தூய்மைப்படுத்துவதற்காக தேர்தல் நிதிப்பத்திரங்களின் திட்டத்தை இந்திய அரசு அறிவிக்கிறது என்று அரசின் பத்திரிக்கை தகவல் அலுவலக இணையத்தளம் தெரிவித்திருக்கிறது. இது தூய்மைப்படுத்துவதா, கறைகளை மறைக்கும் உத்தியா? அதற்கு முன் நிதிப்பத்திரங்கள் குறித்த அரசின் விளக்கத்தை பார்ப்போம்.
நிதிப்பத்திரங்களுக்கான கட்டுப்பாடுகள்: இது வட்டியில்லாத கடனுறுதி ஆவணங்களாக இருக்கும்; இந்த பத்திரங்கள் ஓராயிரம், பத்தாயிரம், ஒரு இலட்சம் மற்றும் ஒரு கோடி ரூபாய் வடிவில் இருக்கலாம்.
நிதிப்பத்திரங்களை நாடு முழுவதும் உள்ள பாரத ஸ்டேட் வங்கியின் 52 கிளைகளில் ஜனவரி, ஏப்ரல், ஜூலை, அக்டோபர் ஆகிய நான்கு மாதங்களில் மட்டும் பெற்றுக் கொள்ளலாம்.
தேர்தல் நிதிப்பத்திரங்கள் 10 நாட்களுக்கு மட்டும் இக்காலங்களில் கிடைக்கும். சட்டப்படி பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்குவதற்காக மட்டுமே இது பயன்படும் இத்தேர்தல் பத்திரங்களின் ஆயுட்காலம் 15 நாட்கள் மட்டுமே. பொதுத் தேர்தல் காலங்களில் கூடுதலாக மேலும் 30 நாட்கள் வழங்கப்படும்.
கடைசிப் பொதுத்தேர்தலில் குறைந்தது 1 விழுக்காடு வாக்குகள் பெற்ற அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு மட்டுமே இந்த நிதிப்பத்திரங்களை வழங்க முடியும்.
ஆயினும் இந்நெறிமுறைகள் மத்திய அரசு சொல்லிக்கொள்ளும் “வெளிப்படைத்தன்மை”யின் எதிர்நிலையை மேலும் தீவிரமாக அதிகரிக்க செய்யும் என்பது வெள்ளிடைமலை.
பத்திரிக்கை தகவல் அறிக்கையில் கூறாத வேறு சில விடயங்களும் உள்ளன. நிறுவனங்கள் சட்டப்படி(Company Act) ஏற்கனவே ஒரு நிறுவனம் தன்னுடைய ஆதாயத்தில் இருந்து அளிக்கக்கூடிய தேர்தல் நிதியின் உச்சவரம்பு 7.5 விழுக்காடாக இருந்தது தற்போது நீக்கப்பட்டுள்ளது. இது பத்திரிக்கை தகவல் அலுவலக அறிக்கையில் இல்லை. மேலும் அச்சட்டத்தின் படி நிறுவனங்கள் எந்த கட்சிகளுக்கு எவ்வளவு நிதி வழங்கின என்பதை தெரிவிக்க வேண்டும் என்பதற்கும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது குறித்து அதில் தகவல் இல்லை.
அதாவது யார் வேண்டுமானாலும் எவ்வளவு வேண்டுமானாலும் ஒரு கட்சிக்கு நிதி வழங்க முடியும். அதை பொதுவெளியில் தெரியப்படுத்த தேவையில்லை. தேர்தல் நிதிப்பத்திரங்கள் பற்றிய தகவலானது பத்திரம் வழங்கப்பட்ட வங்கி(Issuing Bank), வழங்கிய பரத ஸ்டேட் வங்கி(SBI) மற்றும் ரிசர்வ் வங்கி என்று பயணம் செய்து கடைசியில் நிதியமைச்சகத்தை அடைந்து விட்ட பிறகு வேறு யாருக்கும் தெரியாது.
நன்கொடை பற்றிய தகவல்கள் வங்கியின் இருப்பு நிலைக்குறிப்பில் (Balancd Sheet) குறிப்பிடப்பட்டிருப்பதையே வெளிப்படைத்தன்மை என்று பா.ஜ.க ஆதரவாளர்கள் தொலைக்காட்சி விவாதங்களில் தம்பட்டம் அடிக்கிறார்கள். ஆனால் அதில் எவ்வளவு தொகை கொடுக்கப்பட்டிருக்கும் என்பது தான் இருக்குமே ஒழிய யார் கொடுத்தார்கள் என்ற தகவல் இருக்காது.
பெருநிறுவனங்கள் கட்சிகளுக்கு தாராளமாக பணம் செலவழிப்பது இனி செல்லுபடியாகாது, அனைத்தும் கணக்கில் வந்து தானே ஆக வேண்டும் என்று பெருமை பொங்குபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். பொதுமக்கள் மற்றும் எதிர்கட்சிகளுக்கு மட்டும் தான் இச்செயல்முறை இரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. ஆனால் யார் அதிகமாக நிதி அளித்துள்ளார்கள் எந்த கட்சிகளுக்கு அளித்தார்கள் தங்களுக்கு யார் அளிக்கவில்லை என்ற விவரம் KYC விதிமுறைகளின் படி ஆளுகின்ற அரசிற்கு அதாவது பா.ஜ.கவிற்கு மட்டுமே வெளிப்படையானது என்று அவர்களுக்கு டோனி ஜோசப் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிலளிக்கிறார்.
“எந்தவொரு நபருக்கும் தகுதியுள்ள அரசியல் கட்சிகளுக்கும் இடையில் பரிவர்த்தனைகளை மேற்கொள்வதற்கான ஒரே புதிய நாணய வடிவத்தை இந்த தேர்தல் நிதிப்பத்திரங்கள் மூலம் உருவாக்க அரசாங்கம் முயல்கிறது” என்று காமன்வெல்த் மனித உரிமைகள் முன்முயற்சி நிறுவனத்தில் (Commonwealth Human Rights Initiative) தகவல் பெரும் திட்ட ஒருங்கிணைப்பாளரான வேங்கடேஷ் நாயக் கூறினார். நிறுவனங்கள் சட்டத்தில் சேர்க்கப்படும் சட்டத்திருத்தங்கள் அடையாளத்தை வெளிப்படுத்த தேவையில்லை என்பதால் கருப்புப்பணத்தை அரசியல் கட்சிகளுக்கு கொண்டு சேர்க்கும் முதன்மையான வழிமுறையாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.
ஏற்கனவே கார்ப்பரேட் நிறுவனங்களின் பேராதரவு பா.ஜ.க-விற்கு இருக்கும் நிலையில் பா.ஜ.க-விற்கு மட்டுமே இது பயனளிக்க கூடியது என்பதை யாரும் விளக்க தேவையில்லை. இதை வைத்து எதிர்கட்சிகளுக்கான நிதியாதாரத்தை எளிதாக பா.ஜ.க-வினால் கட்டுப்படுத்த முடியும். மேலும் ஒரு சதவீத வாக்கு பெற இயலாத, அங்கீகாரம் அற்ற கட்சிகளுக்கு வரும் நன்கொடைகளை ஒழிப்பது மூலம் நேரடியாக பாஜக, காங் மற்றும் மாநில அளவிலான ஆளும் வர்க்க கட்சிகள் மட்டும் நன்கொடைகளை பெற முடியும். இதன் மூலம் தேர்தல் அரசியலிலேயே கூட சிறு கட்சிகள் இயங்க முடியாத நிலை உருவாக்கப்படும்.
கருப்புப்பணத்தை ஒழிக்கிறோம் என்று தேர்தல் நிதியை 2,000 ரூபாயாக குறைத்தது பா.ஜ.க. அதே சமயத்தில் காசோலை மற்றும் இணைய பரிமாற்றம் மூலம் கார்ப்பரேட் நிறுவனங்களை நிதியளிக்க பரிந்துரைத்தது என அனைத்திற்கும் பின்னரும் இந்த நடவடிக்கைகள் தான் இருந்தன.
இங்கு மட்டுமல்ல அமெரிக்காவிலும் கூட தேர்தல் பிரச்சாரத்திற்காக எவ்வளவு நிதி வேண்டுமென்றாலும் பெருநிறுவனங்கள் செலவிடலாம், அதை வெளியே தெரியப்படுத்தத் தேவையில்லை என்றும் அமெரிக்காவின் உச்ச நீதிமன்றம் ஒரு சர்ச்சைக்குரிய தீர்ப்பை 2010-ம் ஆண்டு வழங்கியது.
அமெரிக்க ஜனநாயகம் முதல் உலகின் மிகப்பெரிய ஜனநாயகம் வரை கதை இதுதான். இதைதான் வெளிப்படைத்தன்மை என்று அருண் ஜெட்லியும் பா.ஜ.க அடிப்பொடிகளும் கூறுகிறார்கள். இந்நடவடிக்கை கறுப்புப் பணத்தை ஒழித்து விடும் என்று பா.ஜ.க பாதந்தாங்கி ஊடகங்களும் சேர்ந்து கோரஸ் பாடுகின்றன. இதுதான் முதலாளித்துவ ஜனநாயகத்தின் யோக்கியதை.
மேலும் படிக்க:
Much Ado About Nothing: Electoral Bonds and an Unapologetic Lack of Transparency
The fine print: Groups of individuals, NGOs can buy electoral bonds without public disclosure
The Daily Fix: What transparency?Anonymous electoral bonds will make Indian politics even more hazy
மறைமுக லஞ்சத்தை கொடுத்து பழகிய கையும் — வாங்கி நிரப்பிய பையும் — பொய் பேசிய வாயும் … !
என்றைக்கும் யோக்கியமாகவும் — சும்மாவே இருந்தது இல்லை — !!நேர்மையானவர்கள் என்று காட்ட முயற்சிக்கிறார்களாம் … ?