Wednesday, October 23, 2019
முகப்பு கட்சிகள் அ.தி.மு.க பேருந்து தொழிலாளிகளுக்காக தமி்ழகமெங்கும் மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் !

பேருந்து தொழிலாளிகளுக்காக தமி்ழகமெங்கும் மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் !

-

நாள் 10-1-2018

பத்திரிக்கைச் செய்தி

 

ன்புடையீர் வணக்கம் !

தமிழக போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம் ஒருவாரத்திற்கு மேல் தொடர்கிறது. மேலும் தீவிரமடைந்து வருகிறது. அவர்களுக்கு தரவேண்டிய பணத்தை தருவதற்கு உரிய நடவடிக்கை எடுக்காமல், போராடும் தொழிலாளர்களை சஸ்பெண்ட, கைது, போலீசு தாக்குதல் என அடக்குமுறை மூலம் அச்சுறுத்தி எடப்பாடி அரசு பணிய வைக்க முயற்சிக்கிறது. இதை மக்கள் அதிகாரம் வன்மையாக கண்டிப்பதோடு 11-1-2018 அன்று தமிழகம் தழுவிய அளவில் ஆர்ப்பாட்டம் நடத்தவும் உள்ளோம். மக்கள் அனைவரும் தொழிலாளர்களுக்கு ஆதரவாக களத்தில் இறங்கி போராட வேண்டும்.

ரூபாய் ஏழாயிரம் கோடி தொழிலாளர்களின் சம்பளப்பணத்தை பறித்துக் கொண்டு ஆயுள் காப்பீடு, சொசைட்டி, பி.எப். ஆகியவற்றிற்கு முறையாக செலுத்தாமல் மோசடி செய்தது கிரிமினல் குற்றம். சம்பந்தபட்ட அதிகாரிகளை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். குற்றம் நிரூபிக்கபட்டால் அவர்களுக்கு ஆயுள் தண்டனை வரை வழங்க முடியும்.

ஓய்வு பெற்ற பிறகு தனக்கு சேர வேண்டிய பணி பயன்கள் அனைத்தும் சீட்டு கம்பெனி போல் ஏமாற்றபட்டுவிடுமோ என்ற அச்சத்தில் பறிகொடுத்த தொழிலாளர்கள் வீதியில் நின்று போராடுகிறார்கள். ஒரு நடத்துனர் பணத்தை தாமதமாக கட்டினால், அல்லது ஒருவருக்கு டிக்கட் போட தவறினால், ஒரு குடிகாரன் தள்ளாடி பேருந்தில் விழுந்து இறந்துவிட்டால் நடத்துனரும், ஓட்டுநரும், வழக்கு, கோர்ட், சஸ்பெண்ட் ஊதிய உயர்வு ரத்து என பல தண்டனைகளை நிரூபிக்கபடாமலேயே அனுபவிக்கிறார்கள்.

போக்குவரத்து கழகம் நட்டமடைந்ததற்கு இரவு பகலாக உயிரை பணயம் வைத்து பணி செய்த தொழிலாளிகள் எந்தவிதத்திலும் காரணமல்ல. ஊழல் – முறைகேடு நிர்வாகம் செய்த அதிகாரிகள் மற்றும் அரசுதான் காரணம். அரசு போக்குவரத்து கழக கட்டிடங்கள், பணிமனைகளை பல ஆயிரம் கோடிக்கு அடகு வைப்பது, ஓய்வு எடுக்க சென்ற தொழிலாளர்கள் பழுதடைந்த கட்டிட பணிமனை இடிபாடுகளில் இறந்து போனது, தொழிலாளிகளை பாதுகாக்க வக்கற்ற நிர்வாகத்தைதான் தமிழக அரசு நடத்தி வருகிறது.

நீதிமன்றங்கள் தங்கள் அதிகார வரம்பை தாண்டி கருத்து சொல்வது, ஒருதலைபட்சமாக உத்திரவு போடுவது ஆகியவற்றின் மூலம் அரசின் குற்றங்களுக்கு துணைபோகிறது. டாஸ்மாக்கை மூட வேண்டும் என மக்கள் கதறுகிறார்கள். நீதிமன்றம் அரசின் கொள்கை முடிவு நாங்கள் என்ன செய்யமுடியும்? என கைவிரிக்கிறது. அதே நேரத்தில் பேருந்தை தனியார்மயமாக்க கொள்கை வகுக்க அரசுக்கு அறிவுறுத்துகிறது. பல நூறு நீதிமன்றத் தீர்ப்புகளை அரசு அதிகாரிகள் அமுல்படுத்துவதில்லை. அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை.

தமிழக சட்டமன்றத்தில் எடப்பாடி அரசுக்கு அறுதி பெரும்பான்மை இல்லை என்பது அனைவரும் அறிந்த உண்மை. அது நீடிப்பதற்கான அருகதையை இழந்துவிட்டது. மோடி அரசால் முட்டு கொடுத்து நிறுத்தப்பட்டு வருகிறது. பெரும்பான்மையை நிரூபிக்கக் கோரி, எதிர்க்கட்சிகள் நீதிமன்றத்தில் வழக்கு போட்டு தீர்ப்புக்காக காத்திருப்பதும், சட்டமன்றத்தில் பங்கேற்பதும், வேறு வகையில் எடப்பாடி அரசுக்கு முட்டு கொடுப்பது ஆகும்.

எனவே இந்த சட்டமன்ற கூட்டத் தொடரிலேயே அனைத்து எதிரக்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களும் ராஜினாமா செய்துவிட்டு போராடும் தொழிலாளர்களோடு களத்தில் இறங்க வேண்டும்.

போக்குவரத்து துறையில் மட்டுமல்ல, ஒட்டு மொத்த மத்திய மாநில அரசுகள் பொருளாதார ரீதியில், அரசியல் ரீதியில் திவாலான நிலையில் உள்ளது. வளர்ச்சி விகிதம் இரண்டாண்டு பின்னோக்கி போய் விட்டது. “இரண்டு கோடி பேருக்கு வேலை வாய்ப்பு!” வெறும் அறிவிப்பாகவே உள்ளது. வங்கிகள் திவாலாகும் சூழல், மக்கள் சேமிப்பு பணத்தை வலுக்கட்டாயமாக பிடுங்குதல், ஜி.எஸ்.டி. தோல்வி, அரசு ஊழியர்களுக்கு சம்பளம் தரமுடியாத நிலை.

பல லட்சம் கோடி கடன் மற்றும் அதன் மீதான வட்டிச்சுமை, மக்கள் நலத்திட்டங்களுக்கு செலவுகளை சுருக்குதல், மானியம் ரத்து ஆகியவை குறித்து பொருளாதார வல்லுநர்கள் தொடர்ந்து எச்சரித்து வருகிறார்கள். மோடி எடப்பாடி அரசுகள் இந்த உண்மையை மறைத்து மேலும் மேலும் நெருக்கடிகளை மக்கள் மீது சுமத்துகின்றன.

இந்நிலையில் போக்குவரத்து தொழிலாளர்கள் தங்களுக்கு தர வேண்டிய பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ள ரூ 7,000 கோடியை கேட்டுப் போராடி வருகிறார்கள். ஒன்றரை லட்சம் போக்குவரத்து தொழிலாளர்களை தமிழக அரசு ஏமாற்றிவிட்டது. அதிகமாக ஊதிய உயர்வு கேட்கிறார்கள் என பொய்ப பிரச்சாரம் செய்கிறது. எதிர்க்கட்சிகள் தூண்டிவிடுகிறார்கள் என அவர்கள் போராட்டத்தை எடப்பாடி அரசு கொச்சைப்படுத்துகிறது.

ஜாக்டோ ஜியோ போராட்டம். செவிலியர்கள் பணிநிரந்தரம், மின்வாரிய ஊழியர்கள் போராட்டம். விவசாயிகள் போராட்டம், மீனவர்கள் போராட்டம், என மக்கள் பிரச்சினைகள் தீர்ப்பதற்கு வக்கற்று வழியற்று போனது எடப்பாடி அரசு. போராடும் மக்கள் அனைவரும் அவர்கள் பிரச்சினையை அவர்களே பார்த்து கொள்ள வேண்டும் என்ற அரசின் கொள்கையை அதன் அதிகாரத்தை கேள்விக்குட்படுத்த வேண்டும்.

தமிழகத்தை ஆள அருகதை இழந்த எடப்பாடி அரசு இனியும் நீடிக்க அனுமதிக்க கூடாது. எதிர்க்கட்சிகள் இந்த சட்டமன்ற தொடரிலேயே அனைவரும் ராஜினாமா செய்ய வேண்டும். போராடும் மக்கள் பிரிவினரோடு இணைய வேண்டும்.

வழக்கறிஞர் சி. ராஜு
மாநில ஒருங்கிணைப்பாளர்
மக்கள் அதிகாரம்.

தகவல் :
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு.  தொடர்புக்கு : 80157 21152.

 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க