privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்தொழிலாளர்கள்திருடிய பணத்தை திருப்பிக் கொடு ! பேருந்து தொழிலாளர்கள் குடும்பத்துடன் போராட்டம் - படங்கள் !

திருடிய பணத்தை திருப்பிக் கொடு ! பேருந்து தொழிலாளர்கள் குடும்பத்துடன் போராட்டம் – படங்கள் !

-

போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. தொழிலாளர்களின் கோரிக்கையை அரசு ஏற்கமறுப்பதால் போராட்டத்தை தொடர்வது தவிர வேறு வழி அவர்களுக்கில்லை. இதனால் பொதுமக்களுக்கு சிரமம் ஏற்பட்டிருந்தாலும் அதை பெரும்சுமையாக கருதாமல் தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கையை  மக்கள் ஆதரித்து வருகிறார்கள்.

தொழிலாளர்களின் இந்த போராட்டம் குறித்து அலுவலகம் ஒன்றில் துப்புரவு பணி மேற்கொள்ளும் ஒருவரிடம் கேட்டபோது, “எவ்ளோ கஷ்டப்பட்டு உழைக்கிறவங்களுக்கு சம்பளம் உயர்த்தினா தான் என்ன… கோடி கோடியா செலவு பண்ணி எனக்கு விழா எடுங்கன்னு எம்ஜியார் வந்து சொன்னாரா? தேவை இல்லாம அதுக்கு பண்றானுங்க.. தொழிலாளிங்கள இவ்ளோ கஷ்டப்படுத்துறானுங்க. இன்னா அய்யோக்கியத்தனம் இது” என்று சொல்லி விட்டு கிளம்பினார். பெரும்பான்மையான உழைக்கும் மக்களின் மனஓட்டம் இதுதான்.

ஊடகங்களின் துணை கொண்டு பொதுமக்களுக்கு எதிராக போராட்டத்தை திருப்பி விடலாம். வழக்கம்போல பேச்சு வார்த்தைக்கு அழைத்து ஏமாற்றி விடலாம் என்று மனக்கோட்டை கட்டிய இந்த அடிமை எடப்பாடியின் கோட்டை சரிந்தது.

ஜாக்டோ-ஜியோ மற்றும் செவிலியர்கள் போராட்டத்தில் நீதிமன்றத்தை ஏவிவிட்டு முடிவுக்கு கொண்டு வந்ததைப் போல, நீதிமன்றத்திற்கு இப்பிரச்சனையை கொண்டு சென்றார்கள். இந்த போராட்டத்திலும் தனது ஆண்டைத்தனத்தை கொண்டு “போராடும் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம்” என்று முதலில் நீதிமன்றம் ஆலோசனை வழங்கியது.

ஆனால் இதே நீதிமன்றம் தொழிலாளர்களின் நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்று பிறப்பித்த உத்தரவை கொஞ்சம் கூட இந்த அரசு மதிக்கவில்லை. அப்படி இருக்கும் பொழுது நாங்கள் மட்டும் ஏன் மதிக்க வேண்டும் என்று நீதிமன்ற மிரட்டலுக்கும் அஞ்சாமல் போக்குவரத்து தொழிலாளிகள் போராட்டத்தை தொடர்கிறார்கள்.

போராட்டத்தில் உரையாற்றும் திரு. சௌந்திரராஜன் (சிஐடியூ)

தனது உத்தரவு கடுகளவு கூட எடுபடவில்லை என்று தெரிந்தவுடன் “நீதிமன்றத்தின் உத்தரவு இல்லாமல் தொழிலாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது” என்றொரு தீர்ப்பை வழங்கி “மீசையில் மண் ஒட்டாததைப் போல” காட்டிக்கொண்டது சென்னை உயர்நீதிமன்றம்.

இனி எப்படிப்பட்ட தீர்ப்பும் தொழிலாளர்களை கட்டுப்படுத்த போவதில்லை. போராட்டம் ஒன்று மட்டும் தான் சரியான தீர்ப்பாக இருக்கும் என்பதை தொழிலாளர்கள் உணர்ந்து விட்டார்கள். அரசுக்கெதிரான தங்களின் கோபம் எரிமலையாய் வெடித்துள்ளது என்பதே உண்மை. இதற்கு சாட்சியமே 09.01.2018 அன்று தமிழகம் முழுவதும் உள்ள கோட்ட அலுவலகங்கள் எதிரில் தொழிலாளர்கள் குடும்பத்துடன் நடத்திய போராட்டம்.

சென்னையில் பல்லவன் பணிமனை முன்பு அரசாங்க போக்குவரத்து ஊழியர் சங்கத்தின் தலைவர் திரு. பாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்துடன் வந்து கலந்து கொண்டனர். ஓவ்வொரு தொழிலாளியின் முகத்திலும் ஒரு நம்பிக்கை. போராட்டத்தின் மூலம் கோரிக்கையை வென்றே தீருவோம் என்ற முழக்கம்.

போராட்டத்திற்கு வரும் பெண்களுக்காக வழிவிடும் தொழிலாளிகள்

போராட்டத்திற்கு பெண்கள் எண்ணிக்கை அதிகரித்தவுடன், “லேடிஸ் வராங்க.. அவங்களுக்கு இடம் விடுங்க” என்று தொழிலாளிகள் வரவேற்று எழுந்தார்கள். இத்தனைக்கும் பேருந்துகள் ஓடவில்லை என்றாலும் ஆயிரக்கணக்கில் திரண்டுள்ளார்கள். அவரவர்கள் சொந்த செலவில் வாகனங்களை ஏற்பாடு செய்து வந்திருந்தார்கள். போராட்டத்தின் இடையில் சிறியளவு மழைத்தூரல் விழுந்ததும், நாற்காலியையே குடையாக பயன்படுத்தி கலையாமல் நின்றார்கள்.

“2015 மழை வெள்ளத்திலும், வர்தா புயலிலும் வண்டியை ஓட்டியவர்கள் நாங்கள். எங்களை இந்த மழை ஒன்றும் செய்து விடாது” என்று மேடையிலேயே அறிவித்தனர். சாலையின் ஒரு பக்கம் போராடும் தொழிலாளர்களின் காக்கி சட்டைகள். மற்றொரு பக்கம் போராட்டத்தை ஒடுக்கும் நிற்கும் காக்கி சட்டைகள். அமைப்பு ரீதியாக திரண்டுள்ள தொழிலாளர்கள் என்பதால் போலீசை அவர்கள் ஒரு பொருட்டாகவே கருதவில்லை. “போலிசு யாராவது உள்ளே வந்தால் பெரிய பிரச்சனையாகிவிடும். நாங்கள் இங்கே பத்தாயிரம் பேர் கூடியிருக்கிறோம், இன்னும் நெறைய தொழிலாளர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள்” என்று உறுதியுடன் அறிவித்தார்கள்.

மேடையின் அருகே நின்றிருந்த தொழிலாளர்கள், “எல்லா கணக்கையும் சரியாக ஒப்படைக்கிறோம் என்று பத்திரிக்கைகளுக்கு சொல்கிறார்களே, தைரியம் இருந்தால் அமைச்சராகட்டும், யாராகட்டும் இங்கே வந்து அதனை சொல்ல சொல்லுங்கள் பார்க்கலாம். என்று சவால் விடுகிறார்கள்.

“எங்களிடம் இருந்து திருடிய பணத்தை திருப்பி கேட்கிறோம். எவ்வளவு திருடப்பட்டுள்ளது என்பது வரை எங்களிடம் கணக்கு உள்ளது” என்று இந்த சுரணையற்ற அரசுக்கு உறைக்கும்படி கேட்கிறார்கள். தொழிலாளர்களின் கேள்விக்கோ, அவர்களின் கோரிக்கைக்கைக்கோ நேர்மையாக பதில் சொல்ல துணிவற்று கிடக்கிறது இந்த அரசு.

“தஞ்சையில், தற்காலிக ஓட்டுனர்களை பணி செய்ய விடாமல் தடுத்தாக கூறி ஆறு தொழிலாளர்களை சஸ்பென்ட் செய்திருக்கிறார்கள். ஆனால், தற்காலிக ஓட்டுனர்களை வைத்து மக்களின் உயிரை பறித்த இந்த அரசை என்ன செய்வது?” என்று கேள்வி எழுப்புகிறார்கள்.

டிரேசி சாப்மனின் பாடல் வரிகளில் “இந்த அநீதிக்கெல்லாம் பதில் சொல்லாமல் தப்ப முடியாது” என்று வருவதைப்போல ஒரு முட்டுச்சந்தில் மாட்டிக்கொண்டு திணறுகிறது அரசு நிர்வாகம். எங்கள் பிரச்சனைக்கு தீர்வு தெரியாமல் போராட்டத்தை முடித்துக்கொள்வதாய் இல்லை என்கிறார்கள் தொழிலாளர்கள். இனியும் இந்த அரசு தப்பிக்க முடியாது.

இதன் தொடர்ச்சியாக இன்று தமிழகம் முழுவதும் உள்ள தொழிலாளர் நல ஆணையத்தை முற்றுகையிடும் போராட்டத்தையும் அறிவித்துள்ளார்கள். அவர்களின் போராட்டம் தொடரட்டும் ! வெல்லட்டும் !! அனைவரும் அவர்களுக்கு தோள் கொடுப்போம்!

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

நேர்காணல், படங்கள் -வினவு செய்தியாளர்