Tuesday, September 26, 2023
முகப்புசெய்திகுஜராத்தில் மருத்துவர் மாரிராஜை வதை செய்யும் பார்ப்பனியம் !

குஜராத்தில் மருத்துவர் மாரிராஜை வதை செய்யும் பார்ப்பனியம் !

-

நெல்லை மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள ராமேசுவரம் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் மாரிராஜ். மோடியின் குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் உள்ள BJ மருத்துவக் கல்லூரியில், அறுவை சிகிச்சைகான (surgery) MS மேற்படிப்பு படித்து வருகிறார். கடந்த ஜனவரி 5, 2018 அன்று மதியம் தனது அறைக்குச் சென்று அதிகமான தூக்க மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவருடன் படிக்கும் மாணவர்கள் சரியான நேரத்தில் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்ததால், தற்போது ஆபத்துக் கட்டத்தை தாண்டியுள்ளார்.

மருத்துவ மாணவர் மாரிராஜ்

மாரிராஜ் தலித் குடும்பப் பின்னணியில் இருந்து தனது கடின உழைப்பால் மருத்துவ பட்டமேற்படிப்புக்கு நீட் தேர்வு மூலம் தேர்வாகி MS படித்து வருகிறார். சிறுவயதிலேயே இவரது தந்தை இறந்துவிட்ட நிலையில், இவர் மற்றும் இவரது இரண்டு சகோதரர்கள் மற்றும் ஒரு சகோதரி ஆகியோரை அவரது தாய் இந்திரா கூலி வேலை செய்து படிக்க வைத்துள்ளார்.

இந்நிலையில் மாரிராஜை அவரது சாதியை வைத்தும் மொழியை வைத்தும் அவர் பயிலும் மருத்துவக் கல்லூரியின் அறுவை சிகிச்சைத் துறையின் ஒரு பிரிவின் தலைவரான ஜே.வி. பாரிக்கும் மற்றொரு மருத்துவருமான பார்த் தலால் என்பவரும் மற்ற ஆசிரியர்களும் தொடர்ச்சியாக அவமதித்து வந்துள்ளனர்.

சிறு பள்ளி மாணவர்களுக்கு தண்டனை வழங்குவது போல் வகுப்பறைக்கு வெளியே நிற்க வைப்பது, செமினார் எடுக்க வாய்ப்புகள் மறுப்பது, மற்ற மாணவர்களுக்கு தேநீர் கொடுக்கச் சொல்வது, சர்ஜரிக்கு படிக்கும் அவரை இறுதியாண்டு படிப்பை தொட்ட பின்னரும் இன்று வரை அறுவை சிகிச்சைகள் செய்ய அனுமதிக்காதது என மாரிராஜ் கல்லூரியில் சேர்ந்த நாள் முதல் தொடர்ந்து பல்வேறு வன்கொடுமைகளை கல்லூரி ஆசிரியர்கள் அரங்கேற்றியிருக்கின்றனர்.

அனைத்திற்கும் உச்ச கொடுமையாகக் கடந்த அக்டோபர் மாதம் 8 -ம் தேதி அன்று வகுப்பறையில் அனைத்து மாணவர்களின் முன்னிலையில், மாரிராஜ் எம்.பி.பி.எஸ். முடித்ததில் சந்தேகம் இருப்பதாகக் கூறி அவரது எம்.பி.பி.எஸ். சான்றிதழைக் கொண்டு வந்து காட்டுமாறு வற்புறுத்தியுள்ளார்.

அதே போல கடந்த ஆகஸ்ட் 14 -ம் தேதிமுதல் மருத்துவமனை வார்டுகளில் அவரை வேலை செய்ய அனுமதிக்கவில்லை. பல்வேறு சமயங்களில், அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்போது எல்லாம் அவருக்கு ஹிந்தியும், குஜராத்தியும் தெரியாததை அனைத்து மாணவர்களுக்கும் முன்னால் வைத்தே கேலி பேசியிருக்கின்றனர்.

இது குறித்து துறைத்தலைவருக்கும், கல்லூரி நிர்வாகத்திற்கும் மாரிராஜ் பலமுறை புகார் கடிதம் எழுதியுள்ளார். கடந்த 2015 -ம் ஆண்டு செப்டம்பர் 11 அன்றும் 2017 -ம் ஆண்டு ஆகஸ்ட் 14 அன்றும் அவரது துறைத்தலைவருக்கு ஆசிரியர்களின் இத்தகைய சாதிய வன்மம் குறித்தும் புகார் கடிதம் எழுதியுள்ளார். எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இச்சூழலில், 2017 -ம் ஆண்டு ஆகஸ்ட் 17 அன்று முதுகலைப் பட்டப்படிப்பின் இயக்குநருக்கு புகார் கடிதம் எழுதியுள்ளார். அவரது உத்தரவின் பெயரில், அமைக்கப்பட்ட விசாரணைக் கமிட்டி, கண் துடைப்புக்கு விசாரணை செய்துவிட்டு, பழியை மாரிராஜ் மேலேயே போட்டது. மாரிராஜை மன்னிப்புக் கடிதம் எழுதித்தர வற்புறுத்தியது.

இதன் பிறகு கடந்த 2017 -ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 26 -ம் நாள் அன்று மாரிராஜின் தாயார் இந்திரா அவர்கள், கல்லூரியில் தொடர்ச்சியாக தனது மகன் மீது திணிக்கப்பட்டு வரும் சாதிய வன்கொடுமைகளைக் குறிப்பிட்டு குஜராத் மாநில தாழ்த்தப்பட்டோருக்கான தேசிய ஆணைய இயக்குநருக்கு புகார்க் கடிதம் ஒன்றை அனுப்பினார். அதற்கும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.

அதன் பின்னர் கடந்த ஜனவரி 5, 2018 அன்று அவரது வகுப்பு மாணவர்கள் அனைவரும், ஆசிரியரின் உத்தரவுப்படி ஒரு அறுவை சிகிச்சை அரங்கில் (OT) நடைபெற்ற ஒரு அறுவை சிகிச்சையை பார்வையிடச் சென்றிருந்தனர். மாரிராஜ் சென்றதும் அவரை மட்டும் அங்கிருந்து வெளியேறுமாறு அவரைப் பார்த்துக் கத்தியிருக்கிறார் ஆசிரியர்.

இதனால் மனமுடைந்த மாரிராஜ் தனது அறைக்குச் சென்று தனது அண்ணனிடம் தொலைபேசியில் தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாகக் கூறிவிட்டு, அதிகத் தூக்கமாத்திரைகளை உட்கொண்டிருக்கிறார். ஆபத்தான நிலைமையில் அருகில் உள்ள மாணவர்களால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாரிராஜ், முதல்கட்ட சிகிச்சைக்குப் பின்னர் நினைவு திரும்பி ஆபத்துக் கட்டத்தைத் தாண்டியுள்ளார். அதன் பிறகும் கூட அந்த சாதிவெறி கிரிமினல்களுக்கு மனம் இரங்கவில்லை.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாரிராஜுக்கு பாதுகாவலராக உறவினர்கள் யாரும் அருகில் இல்லாத சூழலில் கல்லூரி நிர்வாகம் தான் சட்டப்படி பாதுகாவலராக இருந்து அவருக்கு அனைத்து உதவிகளையும் செய்து தந்திருக்க வேண்டும். ஆனால் மாரிராஜுக்கு உணவு கூட வழங்க யாரும் வரவில்லை. அங்கு அருகில் இருந்த நபர்களின் உதவியுடன் தான் உணவு வாங்கி வரச்சொல்லி உணவருந்தியிருக்கிறார். 4 நாட்களாகியும் இது தான் நிலைமை.

அதோடு இரண்டு நாட்களுக்கு முன்பே முறையற்ற விதமாக அவருக்கு தெரியாமலேயே அவரை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்துவிட்டதாக அறிக்கை கொடுத்திருக்கிறது. அவ்வாறு அறிக்கை அளித்து டிஸ்சார்ஜ் செய்ய வேண்டுமெனில் சம்பந்தப்பட்ட நபரின் பாதுகாவலரின் கையெழுத்து பெற்றிருக்க வேண்டும். ஆனால் அத்தகைய முறைகள் எதுவும் பின்பற்றாமலேயே, அவரை டிஸ்சார்ஜ் செய்திருக்கிறது.

அதிகாரவர்க்கத்தின் அனைத்துத் தூண்களிலும், துரும்புகளிலும் இந்து மதத்தின் சாதி வெறி ஊறிப் போன ஒரு கொடூரமான மாநிலமாகவே மோடியின் குஜராத் விளங்குகிறது. அதன் ஒரு பரிமாணம் தான் குஜராத்தின் ‘படித்த’, ‘பண்பானவர்கள்’ உள்ள துறையாக மெச்சப்படும் மருத்துவத்துறையினரின் இலட்சணம். ஏற்கனவே “உனா” தாக்குதல்கள் நாட்டையே அதிர்ச்சியடைய வைத்தது. அதனுடைய தொடர்ச்சியாக குஜராத்தில் இன்னும் மதவெறியும் சாதிவெறியும் பல இடங்களில் கோலேச்சுகின்றன.

மாரிராஜ் தற்போதும் தனக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார். “முதல் தகவலறிக்கையில் தன்னை தற்கொலைக்குத் தூண்டியதாகக் கூறப்பட்டிருக்கும் ஆசிரியர்களைக் கைது செய்ய வேண்டும். மருத்துவமனையில் தாம் பூரணமாக குணமாகும் வரை தனக்கு ஒரு பாதுகாவலரை உடனடியாக கல்லூரி நிர்வாகம் சார்பில் நியமிக்க வேண்டும். தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரியில் தமக்கு மாற்று இடம் அளிக்க வேண்டும்” என்பதில் உறுதியாக இருக்கிறார் மாரிராஜ்.

பாஜக ஆட்சியில் தலைவிரித்தாடும் பார்ப்பனியக் கொடுங்கோன்மைக்கு ஏற்கனவே ஹைதராபாத் பல்கலையின் ரோகித் வெமுலாவையும், எய்ம்ஸ் மாணவர் செந்தில்குமாரையும் இழந்திருக்கிறோம். பார்ப்பனியத்தின் கோரப் பற்களில் சிக்கி வாழ்க்கையை முடிக்கத் துணிந்த மாரிராஜ் கடைசி நிமிடத்தில் காப்பாற்றப்பட்டிருக்கிறார். நம் கண் முன் வராத பார்ப்பனிய தூண்டுதலிலான தற் ‘கொலைகள்’ இன்னும் எத்தனையோ!

தலித் என்பதாலும், ஹிந்தி, குஜராத்தி தெரியாதவர் என்பதாலும் ஒரு மருத்துவர் இழிவாக நடத்தப்பட்டிருப்பது குஜராத்தில் எவ்விதத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. அது அங்கு படர்ந்து அடர்ந்திருக்கும் தாமரையின் விளைவு. அந்தத் தாமரைதான் இங்கேயும் அடர்ந்து படரத் துடிக்கிறது.

பாஜக என்பது மற்றொரு அரசியல் கட்சி போல ஒரு ஜனநாயக அமைப்பில் இடம்பெற முடியாது என்பதற்கு வேறு என்ன சான்று வேண்டும்?

இது மாரிராஜ் மருத்துவமனையில் இருந்த போது ஜிக்னேஷ் மேதானிக்கு அளித்த நேர்காணல் வீடியோ