Tuesday, June 28, 2022
முகப்பு கட்சிகள் அ.தி.மு.க நீதிபதிக்கும் எம்.எல்.ஏ.-வுக்கும் சம்பள உயர்வு ! தொழிலாளிக்கு கிடையாதா ?

நீதிபதிக்கும் எம்.எல்.ஏ.-வுக்கும் சம்பள உயர்வு ! தொழிலாளிக்கு கிடையாதா ?

-

ட்டமன்ற உறுப்பினர்களுக்கான சம்பளம் மற்றும் இதர படிகளை உயர்த்தி வழங்குவதற்கான சட்ட மசோதாவை, தமிழக சட்டசபையில் கடந்த 10.01.2018 அன்று பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.

சட்டமன்ற உறுப்பினர்கள் மாதச் சம்பளமாக, அனைத்துப் படிகளும் சேர்த்து ஏற்கனவே ரூ. 55,000 வாங்கிக் கொண்டிருந்தனர். இந்நிலையில் மாநில அரசு தாக்கல் செய்திருக்கும் மசோதாவின் படி, வரும் மாதங்களில் இருந்து அவர்களது சம்பளம் ரூ. 1,05,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

இது போக அவர்களது ஓய்வூதியம், அமைச்சர்கள், சபாநாயகர்களுக்கான கூடுதல் படிகள் மற்றும் மருத்துவச் சிகிச்சைத்தொகை போன்றவையும் உயர்த்தப்பட்டுள்ளன. அதுவும் கடந்த 2016 ஜூலை 1 முதல் இந்தச் சம்பள உயர்வு கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அரசுக்கு ஆண்டுக்கு சுமார் ரூ. 25.32 கோடி கூடுதல் செலவு ஏற்படும்.

குட்கா தொடங்கி ஆற்றுமணல் வரை அனைத்திலும் கமிஷன் அடித்து கொழுத்துத் திரியும் எம்.எல்.ஏ -க்களுக்கும் அமைச்சர்களுக்கும் ஒவ்வொரு ஆண்டும் கூடுதலாக சுமார் ரூ. 25.32 கோடி மக்கள் வரிப்பணத்தை அள்ளிக் கொடுக்கவிருக்கும் இதே அரசு தான்போக்குவரத்து தொழிலாளர்களுக்கு கொடுக்க “மனம் உண்டு, பணம் இல்லை” என எதுகை மோனையில் நையாண்டி செய்கிறது.

தொழிலாளர்களின் வருமானத்திலிருந்து அவர்களது வருங்கால பாதுகாப்பிற்காக பிடித்தம் செய்யப்படும், வருங்கால வைப்புநிதி, இன்சுரன்ஸ், சொசைட்டிக்கு கட்டுவதற்கான பணம் என அனைத்தையும் அவர்களது அனுமதி இல்லாமலேயே பல ஆண்டுகளாக திருடித் தின்றிருக்கிறது ஜெயா அரசு. அதன் தொடர்ச்சியாக எடப்பாடி அரசும் அதையே செய்து வந்திருக்கிறது. தொழிலாளர்களுக்குக் கொடுக்கப் பணமில்லை என்று சொல்லிவிட்டு சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மட்டும் ஊதிய உயர்வை அமல்படுத்தியுள்ளது எடப்பாடி அரசு.

பாதிக்கப்பட்டுள்ள தொழிலாளர்களுக்கும், மக்களுக்கும் தாம் பதில் சொல்லக் கடமைப்பட்டவர்கள் என்பதைக் கூட கவனத்தில் கொள்ளாது இந்த சட்டமசோதாவைத் தாக்கல் செய்திருக்கிறது.

இதே போல, கடந்த 2017-ம் ஆண்டு நவம்பர் மாதம் “நீதிபதிகளுக்கு சம்பளத்தை உயர்த்த வேண்டும் என்பதை மறந்து விட்டீர்களா ?”என மத்திய அரசுக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியதை இங்கு நாம் நினைவில் கொள்ள வேண்டும். அதே ஆண்டில் மார்ச் மாதத்தில் அதற்கான குழு அமைக்கப்பட்டு அது ஆய்வு செய்து நீதிபதிகளுக்கு சம்பள உயர்வு வழங்க வேண்டும் என பரிந்துரைத்தது. அதனை சட்ட மசோதாவாக்காமல் மத்திய அரசு இழுத்தடித்து வருவதைச் சுட்டிக் காட்டியே நீதிபதிகள், உச்சநீதிமன்ற ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்துவது தொடர்பான ஒரு வழக்கில், மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலைப்பார்த்து தான் இக்கேள்வியை கேட்டனர் நீதிமான்கள்.

அதனைத் தொடர்ந்து ஒரே மாதத்தில் சம்பள உயர்வு மசோதாவை தாக்கல் செய்து நீதிபதிகளின் கோபத்தை தணித்தது மத்திய அரசு. நீதிபதிகளின் நடப்புச் சம்பளத்தைவிட 280% சம்பள உயர்வை வழங்கியது மத்திய அரசு. உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியின் மாதச்சம்பளம் மட்டுமே ரூ. 2,80,000. இது பல போக்குவரத்துத்துறை தொழிலாளர்களின் வருடச் சம்பளத்தை விட அதிகம்.
ஏற்கனவே அதிகமாக வாங்கிக் கொண்டிருக்கும் தனது சம்பளம் போதாதென்று அரசை மிரட்டிக் கேட்கும் நீதிமான்கள் தான், தங்களுக்கு அளிக்கப்படும் அற்பச் சம்பளமான ரூ.7000 போதவில்லை எனப் போராடும் செவிலியர்களைப் பார்த்தும், பல ஆண்டுகளாக தங்களது சம்பளத்தில் இருந்து திருடப்பட்ட பணத்தை திருப்பிக் கேட்கும் போக்குவரத்துத் தொழிலாளர்களைப் பார்த்து “சம்பளம் போதவில்லை என்றால் வேறு வேலை பார்த்துக் கொள். போராடாதே” என நையாண்டி பேசுகிறது.

இதனை சமூக வலைத்தளங்களில் மக்கள் கிழித்துத் தொங்கவிட்ட பின், போக்குவரத்துத் தொழிலாளர்களிடம் “உங்கள் மன்சாட்சிப்படி யோசித்து நல்ல முடிவு எடுங்கள்” எனக் கூறுகிறது.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த அரசாங்கம் தொழிலாளிகளின் பணத்தை மோசடி செய்திருக்கிறது. அதனைக் கண்காணிப்பதாகக் கூறிக் கொள்ளும் நீதித்துறையும் அந்த மோசடியைக் கேள்வி கேட்காமல் மவுனமாக இருக்கிறது. ஆளத்தகுதியற்ற இந்த ஜனநாயகத் தூண்களிடம் கெஞ்சினால் எகத்தாளம் தான் பதிலுக்குக் கிடைக்கும். இவ்வளவு நாட்கள் போராடிய பிறகுதான் தொழிலாளிகள் என்றால் கொஞ்சம் பயப்படுகிறார்கள். தற்போது முன்னாள் நீதிபதியை போட்டு மத்தியஸ்தம் செய்ய முன்வந்திருக்கிறார்கள். இது தொழிலாளிகளுக்கு நிவாரணம் அளிக்குமா,  இல்லை போராட்டத்தை தணிக்கச் செய்யும் தந்திரமாக என்பதை கூடிய சீக்கிரம் பார்க்கலாம்.

ஆனால் ஒன்று நிச்சயம். இனி தொழிலாளிகளை பள்ளி வகுப்பு மாணவர்களை மிரட்டுவது போல செய்ய முடியாது என்பதை போக்குவரத்து தொழிலாளிகளின் இந்த புத்தாண்டு போராட்டம் நிலை நாட்டியிருக்கிறது.

 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க