Tuesday, September 22, 2020
முகப்பு வாழ்க்கை அனுபவம் மொறம் பூசும் பாப்பாத்தியின் பொங்கல் !

மொறம் பூசும் பாப்பாத்தியின் பொங்கல் !

-

ந்த  பொங்கலுக்கு எதுவும் வாங்கப் போவதில்லை என்று சபதம். டிவியில் ஜொலிக்கும் விளம்பரங்களைப் பார்த்தால், வாங்காமல் விட்டால், நாம வாழறதே வேஸ்ட் என்ற ரேஞ்சுக்கு  ஒரே கூச்சல்……, புடவை ஒண்ணு வாங்கினா இரண்டு புடவை இலவசம், ஒரு சவரனுக்கு 1000 ரூபா….. தள்ளுபடியாம்!, வீட்டு உபயோக சாமான்களும் எல்லாத்துக்கும் ஆஃபர்….  நம்ம  கஷ்டத்த தீர்க்க முதலாளிங்க கங்கணம் கட்டிக்கிட்டு இருப்பது தெரிந்தது டிவியில்.

அப்போது தெருவுல ஒரு குரல், மொறம் பூசுறதே….. மொறம்……மொறம் பூசு… றதே… மொறம் ….

வெளிய எட்டிப் பார்க்கும் போது நினைச்சேன்… 50 வயதுக்குமேல இருப்பாங்கனு…. ஆனா, 25 வயசுக்குள்ள இளம் பெண். கூடையை  சுமந்து, இரண்டரை வயது மகனை இடுப்பில் அணைத்துக் கொண்டு வந்தார்.

மேல என்ன கேக்கிறதுனு எனக்கு தெரியல… எதாவது பேசியாகுனமேன்னு, கூலி, 10 ரூபா குறைக்கச்சிக்கோ என்றேன்.

பொங்கலு வேலைக்கா….., வருசத்துல 10 நாளைக்குத்தான்க்கா வேலை…. வேலையில குறை இருக்காதுக்கா சரி 60 ரூபாத்தான் கொடு  போ, மொறத்தை எடுத்துட்டு வா…. என்றார்.

பழைய மொறத்தைப் பார்த்ததும், வேலையில் இறங்கினார்.  குழந்தையை கீழே இறக்கிவிட்டுவிட்டு,  உடைந்த பகுதியை, மூங்கிலால் முடைந்துக் கொண்டே பேசத் துவங்கினார்….

உங்க பேரு என்னாக்கா ? இதே ஊரா ? நீங்க வேலைக்கி ஏதும் போறீங்களா ?  சிம்பிளா இருங்கீங்க ? என்றார்.

….நானும் ஆரம்பித்தேன்.

பேரு என்னம்மா? ”பாப்பாத்தி”
ஏன் இந்த பேரு வைச்சாங்க?
குழந்தையில நல்லா குண்டா, வெளுப்பா இருப்பேணாம். அதனால…. !
ஊரு?
விருத்தாசலத்திலிருந்து ஸ்ரீமுஷ்ணம் போற ரூட்டுல கிராமம்.

சொந்த வேலையே இதுதானா?

இல்லக்கா… இது எங்களுக்கு கைத்தொழில் மாதிரி தினமும் கூலிக்கு  எல்லா வேலையும் செய்வோம். கிராமத்துல விவசாயம்தான் முக்கியம், நெல்லு, கரும்பு, மெல்லாட்டை(வேர்கடலை)  போடுவாங்க. கழனி வேலைக்குப் போவோம். இப்ப கழனிக்காரங்களே வேல இல்லாம இருங்காங்க. எதையும் பயிர் வைக்கல….…… எங்களுக்கு  வேலை ஊர்ல இல்ல. அதான் ஆளுக்கு ஒரு மூலையா கூலி வேலை செய்துட்டு இருக்கோம்.

பத்து நாளைக்கி இந்த வேலை பிறகு இன்னா செய்வீங்க….

கிடைக்கற வேலைய செய்வோம்க்கா….. கொளுத்து வேல, கூட முடையறதுன்னு எதோ ஒண்ணு செய்தாகனுமே.

அக்கா, கொஞ்சம் போன் தர்றீங்களா, எம்புள்ள அவங்க அப்பாகிட்ட பேசுவான்…. காலையிலயே ஒருந்தவங்கக்கிட்ட கேட்டு போன் போட்டேன், அப்ப நைட்டெல்லாம் கண் முழிச்சி வேலை செய்துட்டு, இப்பத்தான் முடிவெட்ட கடைக்கி போய்கிறார்னு  சொன்னாரு என்றார்.

போன் நெம்பர் கேட்டு போட்டுக் கொடுத்ததும், அவரது குழந்தை சிவாவிடம் போனைக் கொடுத்து, பாட்டிலு, கீட்டிலு அடிக்காதனுச் சொல்லு என்றார் சிரித்துக்கொண்டே .

மழலை அப்பாவிடம் போனில், ” அம்மா ஊசிப் போட்டீச்சி, பொங்கலுக்கு வா, வண்டி வாங்கினு வா…. அண்ணா அழுவுது, சாப்பிட்டியா, பொங்கலுக்கு வா. வண்டி வாங்கினு வா….ன்னு பேசிக்கொண்டே அப்பா குரலைக் கேட்டு அழ ஆரம்பித்துவிட்டான்… அம்மாவை அடித்தான்.

….புரியாமல், ஏன் அடிக்கிறான்? என்றேன்.

அப்பாவை….. அவனிடமிருந்து பிரிச்சது நான்தான்னு கோவம் என்றார்.

போனை வாங்கிய பாப்பாத்தி,  போன்ல காசு இருக்கா நானும் கொஞ்ச நேரம் பேசிக்கிடவா  என்று கேட்டு பேசினார்.

குழந்தைக்கு சளிப் பிடிச்சிருக்கு, தண்ணி மாறுதுல்ல அதான் வர வழியில.  கவர்மெண்ட் ஆஸ்பத்திலியில காட்டி மருந்து, குழத்தைக்கு வாங்கினேன்…. ஊசி போட்டாங்க. அத சொல்லுறான் அவன். நாங்க வெள்ளிக்கிழமை இங்க கெளம்பிடுவோம்  நீயும் வந்துடு, பெரியவன் அங்க… அழறனாம்.  நாங்க சாப்பிட்டோம். வேலை செஞ்சவங்கக் கிட்டவே கேட்டு சாப்பிட்டேன். ரெண்டு இடத்துல  சேலையும் கேட்டு வாங்கிட்டேன். எனக்கு எதுவும் துணிமணி வேணாம். நீ நல்லா சாப்பிட்டுட்டு குழந்தைகளுக்கு மட்டும் துணி எடுத்துக்க. சின்னது சைக்கிள் வேணும்னு அழுவுது. எங்கனா செகண்டுல கிடைக்குமா பாரு…. இல்ல வேலை செய்யறவங்கக் கிட்ட கேளு…..  நாளைக்கு எங்கனா வேலை செய்யும்போது போன் கேட்டு பேசறேன். வைக்கிட்டுமா….என்றார். குழந்தை மறுபடியும் போனை பிடுங்கி சிரித்து, அழ தொடங்கினான்.

…. அப்பா மேல அவனுக்கு உசிரு….. எல்லா இடத்துக்கும் தூக்கிட்டுப்போய் ….. திங்க வாங்கிக் கொடுப்பாரு, பாசமா பாத்துக்குவாரு… குரல கேட்டால அழறான் என்ன பண்ணுறது.

அழுத  குழந்தைக்கு … பக்கத்துவீட்டு அம்மா, கரும்பு  துண்டு கொடுத்தார். குழந்தை சிரித்துக் கொண்டே வாங்கிக் கொண்டது.

பாப்பாத்தி, ”சிவா…., பொங்கல், உனக்கு வந்துடுச்சிடா” என்று கரும்பை தோலுரித்து அவனிடம் தந்தார்.

…..எங்க வீட்டுக்காரு மெட்றாசுல கொளுத்து வேலைக்கு போயி இருக்காரு…. வர்ற வருமானம்  சாப்பாட்டுக்குத்தான் சரியா இருக்கு…  பத்தாம… பிராந்தி குடிப்பாரு. கேட்டா… உடம்பு வலி, வீட்ட பிரிஞ்ச  துக்கம் னுவாரு. பெரியவன் கவர்மெண்டு ஸ்கூல்ல 2 வது படிக்கிறான். கவர்மெண்ட் சட்டை, சாப்பாடுதான்.  மாமியார் மாமனார் வயசானவங்க.  அலைஞ்சி வேல செய்ய முடியாது. வீட்டுல குழந்தைய பாத்துக்கிறாங்க. என்னயவாது எங்க வீட்டுல படிக்க வைச்சிருந்தா எதாவது கட கண்ணிக்குப் போயாவது வீட்டோட இருந்திருப்பேன், வெளியில இப்படி சுத்த வேண்டியதில்ல எல்லாம் என் தலையெழுத்து என்றார்.

எங்க தங்கறீங்க… நீங்களும் மெட்ராஸ் பக்காமாவே போய் வீட்டுக்காரரோட, இந்த வேலை பாக்கலாமே ஏன் பிரிஞ்சி வேலை செய்யணும் என்றேன்.

மெட்றாசுல….. எல்லாம் டீசன்டா இருப்பாங்க. அங்க, மொறம் பூசறது எல்லாம் கிடையாது. பிளாஸ்டிக் மொறம், சில்வர் மொறம்னு  வைச்சிருப்பாங்க.

அவங்கள மாதிரி டீசன்டா எல்லாம் எனக்கு இருக்க தெரியாது. இங்க காஞ்சிபுரத்துல கோயில் மடத்தாண்ட தங்கிக்குவேன். பக்கதுல கிராமங்கள்ள  மொறம் பூச தருவாங்க சோறுக் கேட்டாலும் போடுவாங்க, துணிமணி கேட்டாலும் கொடுப்பாங்க, நம்ம வீட்ல இருக்கற மாதிரி இருக்கும் என்றார்.

நான் அந்தப் பெண்ணிடம் பல விசயங்கள் பேசினேன். கடைசியாக, ரஜினி அரசியலுக்கு வர்றாரே தெரியுமா? என்றேன்.

நடிப்பாரு தெரியும்…. அரசியலுக்கு வந்து என்ன செய்யப் போறாரு? யாரு வந்தாலும் நான் கஷ்டப்பட்டாத்தான் என் புள்ளங்கள  காப்பத்த முடியும் என்று குழந்தையை இடுப்பில் அணைத்துக் கொண்டு கிளம்பினார்.

பக்கத்துல பஸ் ஸ்டாப்பு எங்க இருக்குக்கா? என்றார்.

இந்த தெரு கோடி  பஸ் ஸ்டாப்புத்தான். ஷேர் ஆட்டோவும் வரும். பொழுதோட போய்டலாம், என்றேன்.

அக்கா…மணி நால்ரைதான் ஆகுது. அடுத்த ஸ்டாப்புல போய் ஏறிக்கிறேன். அதுக்குள்ள யாரவது மொறம் பூச தருவாங்க  அதுக்கு அடுத்த ஸ்டாப்புக்கு வழி சொல்லு, என்றார்.  அடுத்த, பஸ் ஸ்டாப்புக்கு வழி சொன்னேன்.

…அந்தப் பெண் கிளம்பிவிட்டார்.  அவரது பையன் அப்பாவிடம் மழலையில் பேசிய பொங்கல் அழைப்பு வார்த்தைகள் நெடுநேரம் மனதைக் குழைந்தவாறு இருந்தது.

அனுபவம், படங்கள் : லட்சுமி

 

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

  1. இது போன்ற எளியோரின் வாழ்க்கையை அடிக்கடி பதிவிடுங்கள் தோழர்களே!

  2. மாட்டு பாெச்சை குமபிடுறவன்களுக்கும் … கங்கையை தூய்மை படுத்த என்று பல ஆயிரம் காேடிகளை வீணாக்குறவர்களுக்கும் … அடிமை அரசியல் நடத்தறவர்களுக்கும் .. ஆன்மீக அரசியல் என்று கப்சா விடுகிறவர்களுக்கும் … மொறம் பூசுறதே….. மொறம்……மொறம் பூசு… றதே… மொறம் …. என்பவர்களின் குரல் …கேட்கவே ..கேட்காது … !! கேட்டாலும் ” நாடு வல்லரசா ” ஆகுது என்று பசப்புவானுங்க …!!!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க