முகப்புபுதிய ஜனநாயகம்அலைக்கற்றை வழக்கு தீர்ப்பு : பல்லிளிக்கிறது பார்ப்பன சதி !

அலைக்கற்றை வழக்கு தீர்ப்பு : பல்லிளிக்கிறது பார்ப்பன சதி !

-

2ஜி வழக்கில் ‘தாழ்த்தப்பட்ட’ ஆ.ராசாவையும், ‘சூத்திர’ கனிமொழியையும் விடுதலை செய்து டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பு, பா.ஜ.க.வின் தலையில் இடியைப் போல இறங்கியிருக்கிறது. இந்தக் ‘குற்றத்திற்காக’ நீதிபதி சைனியை மட்டுமின்றி, அவ்வழக்கை நடத்திய சி.பி.ஐ., அரசு தரப்பு வழக்குரைஞர்களையும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி வருகிறது, பார்ப்பனக் கும்பல். இன்னொருபுறம், படித்த நடுத்தர வர்க்கம் என்று கூறப்படுகிற, ஆனால், எதையும் படிக்காத நடுத்தர வர்க்கத்தினர் இதனை விலைக்கு வாங்கப்பட்ட தீர்ப்பு எனக் கரைகண்டவர்கள் போலப் பேசிவருகிறார்கள்.

அலைக்கற்றை வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டுள்ள ஆ. ராசா, கனிமொழி

அலைக்கற்றை வழக்கு குறித்து சாமானிய மக்கள் அறியாத உண்மை என்ன தெரியுமா? அலைக்கற்றை விற்பனையால் நாட்டிற்கு 1,76,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாகக் கூறப்பட்டதே, அக்குற்றச்சாட்டை மையப்படுத்தி இந்த வழக்கு நடைபெறவேயில்லை. சொல்லப்போனால், அரசு தரப்பு, தனது குற்றப் பத்திரிகையில் அமைச்சர் ஆ.ராசா மீது அந்தக் குற்றச்சாட்டை சுமத்தவேயில்லை. சி.பி.ஐ. தரப்பு முன்வைத்த முப்பதாயிரத்து சொச்சம் கோடி நட்டம் என்ற கண்டுபிடிப்பையும் நீதிமன்றம் குற்றச்சாட்டாகப் பதியவில்லை.

“யுனிடெக், ஸ்வான் டெலிகாம் ஆகிய இரு உப்புமா கம்பெனிகளுக்கு அலைக்கற்றைகளை ஒதுக்கீடு செய்யும் தீய நோக்கத்தில், அந்த இரண்டு நிறுவனங்களோடு சேர்ந்து சதி செய்து, அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யும் தேதியைத் தன்னிச்சையாக மாற்றினார். பிரதம மந்திரி, நிதியமைச்சர், சட்டத்துறை அமைச்சர், மைய அரசின் தலைமை வழக்குரைஞர் ஆகியோரையெல்லாம் ஏமாற்றிவிட்டு, முதலில் வருபவருக்கு முன்னுரிமை என்ற கொள்கையை அந்நிறுவனங்களுக்குச் சாதகமாக வளைத்தார்.

நிதியமைச்சர் ப.சிதம்பரம் சொன்ன பிறகும் அலைக்கற்றை விலையை உயர்த்த மறுத்து, அந்த இரண்டு நிறுவனங்களுக்குக் குறைந்த விலையில் அலைக்கற்றைகளைத் தூக்கிக் கொடுத்தார். பிரதமர் மன்மோகன் சிங் சொல்லியும் அலைக்கற்றைகளை ஏலத்தில் விட மறுத்தார். இதில் பலனடைந்த ஸ்வான் டெலிகாம் நிறுவனம் கலைஞர் டி.வி.க்கு 200 கோடி ரூபாய் இலஞ்சம் கொடுத்தது” என்பவைதான் ஆ.ராசா மீது சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டுகள்.

“இக்குற்றச்சாட்டுகள் எதற்கும் ஒரு ஆதாரம்கூடக் கிடைக்கவில்லை” எனத் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ள நீதிபதி சைனி, குற்றமே நடக்கவில்லை என்ற முடிவுக்கு வருகிறார்.

“நுழைவுக் கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் எனத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் பரிந்துரை செய்ததாகக் கூறப்படுவதற்கு எந்தவிதமான எழுத்துப்பூர்வமான ஆதாரங்களும் இல்லை. மாறாக, நுழைவுக் கட்டணத்தை அதிகரிக்கத் தேவையில்லை எனத் துறைரீதியாக முடிவெடுத்ததற்கு வலுவான ஆதாரங்கள் உள்ளன.”

“விண்ணப்பத் தேதியை அக்.1, 2007 -லிருந்து செப்.25, 2007 -க்கு மாற்றியது ஆ.ராசா எடுத்த தன்னிச்சையான முடிவும் இல்லை. அம்முடிவில் எந்தச் சதியும் நடைபெறவில்லை. மாறாக, இந்த முடிவு தொலைத்தொடர்பு அதிகாரிகளோடு விவாதித்து எடுத்த முடிவாகும்.”

“2ஜி அலைக்கற்றைகளை ஒதுக்கீடு செய்வது தொடர்பாக தனது துறை செய்யப் போகும் மாற்றங்கள் குறித்த தகவல்களை 26.12.2007 அன்று பிரதம மந்திரி அலுவலகத்துக்கு எழுதிய கடிதத்தில் ஆ.ராசா குறிப்பிட்டிருக்கிறார். அக்கடிதத்தைப் பிரதமரின் முதன்மைச் செயலர் புலோக் சக்கரவர்த்தி படித்துவிட்டு, தொலைத்தொடர்புத் துறை செயலரிடம் பேசியிருக்கிறார்.”

அலைக்கற்றை வழக்கை விசாரித்த சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி..சைனி

“கலைஞர் டி.வி.க்கு 200 கோடி ரூபாய் இலஞ்சம் கொடுத்தது தொடர்பான குற்றச்சாட்டுக்கு விசாரணை அதிகாரியின் வாய்வழி சாட்சியத்தைத் தவிர, வேறு எந்த ஆதாரத்தையும் தரவில்லை” எனத் தக்க ஆதாரங்களோடு அரசு தரப்பின் குற்றச்சாட்டுகளை ரத்து செய்து தீர்ப்பளித்திருக்கும் நீதிபதி சைனி, “இந்தக் குற்றப் பத்திரிகை ஜோடிக்கப்பட்ட ஒன்று” என்றும் அம்பலப்படுத்தியிருக்கிறார்.

“ஒரு சில உண்மைகளைத் தந்திரமாகத் திரித்து, இனங்காணமுடியாதபடி அவற்றை இமாலய அளவுக்கு ஊதிப்பெருக்கி உருவாக்கப்பட்டதுதான் இந்த ஊழல் புகார்” எனக் குறிப்பிட்டு வழக்கின் அடிப்படையையே தகர்த்துவிட்டார் சைனி.

சாமானியர்களைப் போலவே நீதிபதி சைனியும் வழக்கின் தொடக்கத்தில் 1,76,000 கோடி ரூபாய் ஊழல் என்ற பொய்ப் பிரச்சாரத்திற்குப் பலியாகி இருந்தவர்தான். அதனாலேயே, பெண் என்பதால் கருணையெல்லாம் காட்ட முடியாது எனக் காட்டமாகக் கூறி, கனிமொழிக்குப் பிணை வழங்க மறுத்தார். மேலும், கடந்த ஆறு ஆண்டுகளாக ஆதாரங்களுக்காகக் காத்திருந்திருக்கிறார். சட்டப்படி செல்லத்தக்க ஒரு ஆதாரமும் கிடைக்கவில்லை என்ற நிலையில்தான் குற்றஞ்சாட்டப்பட்ட 17 பேரையும் விடுதலை செய்திருக்கிறாரேயொழிய, அவர் நீதிபதி குமாரசாமியைப் போலக் குத்து மதிப்பாக இத்தீர்ப்பை எழுதவில்லை.

* * *

1,76,000 கோடி ரூபாய் ஊழல் என்ற கட்டுக்கதை வழக்கிற்குள் வராமலேயே அடிபட்டுப் போய்விட்டதால், பா.ஜ.க., அ.தி.மு.க., உள்ளிட்ட கட்சிகளும்; சு.சாமி, பிரசாந்த் பூஷண் உள்ளிட்டவர்களும் சைனியின் தீர்ப்பை மறுப்பதற்கு விநோதமான காரணங்களை, குதர்க்கமான வாதங்களை, அவதூறுகளை ஜோடித்து வருகிறார்கள்.

ஸ்வான் டெலிகாம் மற்றும் யுனிடெக் நிறுவனங்களின் அதிபர்கள் ( மேலிருந்து – கடிகாரச் சுற்றுப்படி ) ஷாகித் உஸ்மான் பல்வா, வினோத் கோயங்கா, சஞ்சய் சந்திரா மற்றும் கரீம் மொரானி.

2ஜி வழக்கிலிருந்து குற்றவாளிகள் விடுதலையாவதற்கு பா.ஜ.க.வினரே உள்ளடி வேலை செய்திருக்கிறார்கள் எனப் பரபரப்பாக பேட்டியளிக்கிறார், சு.சாமி.

சொராபுதீன் கொலை வழக்கிலிருந்து அமித் ஷாவை விடுதலை செய்த போது சி.பி.ஐ அமைப்பை நம்பிய குருமூர்த்தி, இப்பொழுது சி.பி.ஐ. அமைப்பை நம்ப முடியாது என அன்றே சோ சொல்லிவிட்டார் என நினைவூட்டுகிறார்.

குற்றப் பத்திரிகையில் அடிப்படை முகாந்திரம் இருப்பதை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டாலே குற்றம் நிரூபிக்கப்பட்டதற்குச் சமம் என்று வாதிடுகிறது துக்ளக். இந்தக் குதர்க்க வாதப்படி எந்த குற்றவழக்கிலும் யாரையும் விடுதலை செய்யவே முடியாது, கூடாது.

உச்சநீதி மன்றம் 122 உரிமங்களை ரத்து செய்து தீர்ப்பளித்த வழக்கு சிவில் வழக்கு. சி.பி.ஐ. நீதிமன்றத்தில் நடந்ததோ கிரிமினல் வழக்கு. இரண்டும் அடிப்படையிலேயே வேறுபட்ட வழக்குகள் என்றபோதும், அந்த சிவில் வழக்கிலேயே குற்றம் நிரூபிக்கப்பட்டது போல பச்சைப் பொய்யைத் துணிந்து கூறிவருகிறது, பா.ஜ.க.

உச்சநீதி மன்றம் அளித்த தீர்ப்புதான் இறுதியானது என்றால், அந்நீதிமன்றம் ஆ.ராசா உள்ளிட்டவர்களை அப்பொழுதே ஏன் சிறைக்கு அனுப்பவில்லை? ஆறு ஆண்டுகளாக நடந்துவந்த விசாரணையை ஏன் கண்காணித்து வந்தது? என்ற கேள்விகளுக்கு அவர்களிடம் பதிலில்லை.

ஜெயா – சசி கும்பலை விடுதலை செய்யும் உள்நோக்கத்தோடு நீதிபதி குமாரசாமி எழுதிய அடிமுட்டாள்தனமான தீர்ப்பைக் கேள்விக்குள்ளாக்காத இப்பார்ப்பனக் கும்பல், ராசா விடுதலை என்றவுடன், அடிப்படை அறிவுக்கும் நியாயத்துக்கும் பொருந்தாத கேள்விகளோடு வானத்துக்கும் பூமிக்குமாக எகிறிக் குதிக்கிறது.

* * *

1,76,000 கோடி ரூபாய் அலைக்கற்றை ஊழல் என்பது மாபெரும் கட்டுக்கதை மட்டுமல்ல. அது பல்வேறு நோக்கங்களைக் கொண்ட அரண்மனைச் சதி. பா.ஜ.க., அ.தி.மு.க., மத்திய தணிக்கைத் துறை, உச்சநீதி மன்றம், வட இந்திய கார்ப்பரேட் ஊடகங்கள், தமிழகத்துப் பார்ப்பன பத்திரிகைகள், அர்னாப் கோஸ்வாமி, பர்கா தத், ரங்கராஜ் பாண்டே உள்ளிட்ட ஊடகவியலாளர்கள், ஆசிர்வாதம் ஆச்சாரி, சுப்பிரமணிய சுவாமி, அன்னா ஹசாரே, ராம்தேவ், கிரண் பேடி ஆகிய பா.ஜ.க.வின் அடியாட்படை, ஏர்டெல், ஏர்செல், டாடா உள்ளிட்ட கார்ப்பரேட் நிறுவனங்கள் என ஒவ்வொருவரும் இந்தச் சதியில் குறிப்பிட்ட நோக்கத்திற்காக குறிப்பிட்ட பாத்திரத்தை ஏற்றுச் செயல்பட்டனர்.

1,76,000 கோடி ரூபாய் ஊழல் என ஊதிப் பெருக்கிய மத்திய கணக்காளர் விநோத் ராய்

தற்போதைய தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை இயக்குநராகக் கொண்ட விவேகானந்தா இண்டர்நேஷனல் பவுண்டேஷன் என்ற சிந்தனைக் குழாம் ஆர்.எஸ்.எஸ்.-இன் துணை அமைப்பு. இந்த சிந்தனைக் குழாமால் இயக்கப்பட்ட அன்னா ஹசாரேவை சோளக்கொல்லை பொம்மையாக முன்நிறுத்தி நடத்தப்பட்ட ஊழலுக்கு எதிரான இந்தியா இயக்கம், பா.ஜ.க.-வை ஆட்சியில் அமர்த்துவதை இலக்கு வைத்து நடத்தப்பட்டது.

ஏர்டெல், ஏர்செல் ஆகிய கார்ப்பரேட் நிறுவனங்கள் தொலைதொடர்புத் துறையில் புதிதாக நுழைந்த ஸ்வான் டெலிகாம், யுனிடெக் ஆகிய நிறுவனங்களை வீழ்த்த இந்தச் சதியைத் தீட்டி அரங்கேற்றின என்றால், பா.ஜ.க.-ஆர்.எஸ்.எஸ். கும்பல் காங்கிரசை வீழ்த்தி ஆட்சியைப் பிடிக்க இந்தச் சதியைப் பயன்படுத்தியது. கைபேசி சேவையில் ஏகபோகக் கொள்ளை நடத்தி வந்த ஒரு கார்ட்டெல், இந்தத் துறையில் போட்டியை அறிமுகப்படுத்தியதால், தன்னைப் பழிவாங்கிவிட்டதாக ஆ.ராசா கூறியிருப்பதில் உண்மை இல்லாமலில்லை.

காங்கிரசுக்கும் பா.ஜ.க.விற்கும் இடையே நடந்த இந்த அதிகாரப் போட்டியில் தி.மு.க.வும், ஆ.ராசாவும் பலிகிடா ஆக்கப்பட்டதை, அ.தி.மு.க. ஜெயாவும் தமிழகத்துப் பார்ப்பனக் கும்பலும் பயன்படுத்திக் கொண்டனர். கார்ப்பரேட் தொலைக்காட்சிகளும் தினமணி, துக்ளக், தந்தி டி.வி. உள்ளிட்ட ஊடகங்களும் ஊடகவியலாளர்களும் பா.ஜ.க.வின் ஊதுகுழலாக அவதாரமெடுத்தன. மத்திய தணிக்கைத் துறையும், உச்சநீதி மன்றமும் இந்தச் சதிக்கு ஒரு சட்டபூர்வத் தகுதியை ஏற்படுத்திக் கொடுத்தன.

அடைமழை போல நாலாபுறமும் இருந்து பொழிந்த இந்த அவதூறு பிரச்சாரம் படித்தவன், படிக்காதவன் என்ற பேதமின்றி, பெரும்பாலான மக்களை மூளைச் சலவை செய்து இதனைப் பிரம்மாண்டமான ஊழலாக நம்ப வைத்தது. புதிய ஜனநாயகமும் தொடக்க காலத்தில் இந்தப் பொய்ப் பிரச்சாரத்தில் சிக்கிக் கொண்டது. எனினும், ஆ.ராசா பதவி விலகியதையடுத்து வெளியான ஆவணங்களின் அடிப்படையில் இதன் பின்னுள்ள கார்ப்பரேட்–பா.ஜ.க. கூட்டுச் சதியை பு.ஜ.-வில் அம்பலப்படுத்தத் தொடங்கினோம்.

கூட்டுச் சதி, அதிகார அத்துமீறல், பாரபட்சமான நீதி பரிபாலணம் என விதவிதமான அயோக்கியத்தனங்களை இந்த 2ஜி வழக்கு விசாரணை நெடுகிலும் காணமுடியும். 3ஜி அலைக்கற்றை விலையில் 2ஜி அலைக்கற்றைகளை விற்காததால், அரசிற்கு 1,76,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருக்கிறது என்பதுதான் மத்திய கணக்காளராக இருந்த விநோத் ராயின் கண்டுபிடிப்பு. மேற்சொன்ன கார்ப்பரேட் – ஆர்.எஸ்.எஸ் கூட்டுச்சதி வலையின் முக்கியமான கையாள்தான் வினோத் ராய். அவருக்கு மோடி அரசில் கிடைத்த பரிசு, வங்கி சீர்திருத்த கமிட்டியில் பதவி.

இந்த நாடகத்தில் உச்ச நீதிமன்றத்தின் பாத்திரமும் மிக முக்கியமானது. ஆ.ராசாவிற்கு முன்பிருந்த அமைச்சர்களால் முதலில் வந்தவருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் ஒதுக்கப்பட்ட எந்தவொரு அலைக்கற்றை உரிமத்தையும் ரத்து செய்ய மறுத்தது, உச்சநீதி மன்றம்.

2ஜி அலைக்கற்றை விற்பனையில் சம்பந்தப்பட்டிருந்த மன்மோகன் சிங், ப.சிதம்பரம், மைய அரசின் தலைமை வழக்குரைஞர் வாகன்வாதி, ரத்தன் டாடா, அனில் அம்பானி ஆகிய மேட்டுக்குடி கனவான்களை அவ்வழக்கில் சேர்க்காமல் விடுவித்த உச்சநீதி மன்றம், தி.மு.க.வைச் சேர்ந்த ஆ.ராசாவை உள்நோக்கத்தோடு குற்றவாளியாக்கியது.

அலைக்கற்றை ஒதுக்கீடு வழக்கில் ஒரு தலைப்பட்சமாகத் தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.கே.கங்குலி

2ஜி அலைக்கற்றை விற்பனையில் ஆ.ராசாவும் தி.மு.க.வும் புறங்கையை நக்கவேயில்லையா? எனக் கேள்வி எழுப்புகிறது பார்ப்பனக் கும்பல். ஆனால், இவர்களோ, 1,76,000 கோடி ரூபாய் ஊழல் என்ற கட்டுக்கதையைப் பயன்படுத்தி முழு தேனடையையும் அல்லவா விழுங்கி நிற்கிறார்கள். இந்து மதவெறி கொலைகாரனாக அம்பலமாகியிருந்த மோடி, ஊழல் எதிர்ப்புப் போராளியாகி பிரதமர் நாற்காலியைப் பிடித்தார். சொத்துக் குவிப்பு வழக்கில் வசமாகச் சிக்கியிருந்த ஜெயா, 2ஜி ஊழல் என சவுண்டு விட்டு 2014 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் மாபெரும் வெற்றியைக் குவித்தார். துக்ளக், தினமணி, தந்தி டி.வி. உள்ளிட்ட தமிழக ஊடகங்கள், 2 ஜி ஊழலைப் பெரிதுபடுத்தி, தமிழகத்தில் ஜெயா கும்பல் நடத்திவந்த கொள்ளையை இருட்டடிப்பு செய்தன.

ஊழல், கருப்புப் பணத்திற்கு எதிராக சவுண்டுவிட்ட பதஞ்சலி ராம்தேவ், ஒரே நாள் இரவில் மாபெரும் கார்ப்பரேட் சாம்ராஜ்ஜியத்தைக் கட்டினார். ஓய்வுபெற்று பொழுதுபோக்கிக் கொண்டிருந்த முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி கிரண் பேடி பாண்டிச்சேரி ஆளுநர் பதவியில் அமர்ந்துவிட்டார். ஆசிர்வாதம் ஆச்சாரியும், சுப்பிரமணிய சுவாமியும் பா.ஜ.க.வில் இணைந்துகொண்டனர். அஜித் தோவல் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டார். அர்னாப் கோஸ்வாமி புதிய செய்தி தொலைக்காட்சியைத் தொடங்கும் அளவிற்கு வளர்ச்சி அடைந்தார். இவையெல்லாம், கலைஞர் டி.வி. பெற்றதாகக் கூறப்பட்ட 200 கோடி ரூபாயைவிடப் பல மடங்கு அதிகமானது மட்டுமல்ல, கண்ணுக்குத் தெரிந்து நடக்கும் உண்மையும்கூட!

அம்பானியும் அதானியும் கொடுத்த பணத்தில்தான் மோடி நாடாளுமன்றத் தேர்தலைச் சந்தித்தார், பிரதமர் பதவியைப் பிடித்தார் என்பது ஊரே அறிந்த உண்மை. மோடி பிரதமர் ஆன மறுநிமிடமே, அதானி ஆஸ்திரேலியாவில் நிலக்கரிச் சுரங்கத்தை வாங்குவதற்கு புரோக்கர் வேலை செய்தது பத்திரிகைகளில் படத்தோடு வெளிவந்தது. அந்நிலக்கரிச் சுரங்கத்தை வாங்க அதானிக்குக் கடன் கொடுக்க மறுத்த ஸ்டேட் பாங்க் நிர்வாகத்தைப் பணிய வைத்தார். ரிலையன்ஸ் நிறுவனம் ஜியோ கைபேசி சேவையைத் தொடங்கியபோது, அதற்கு விளம்பரத் தூதராக பிரதமர் மோடி படத்தையே பயன்படுத்திக் கொண்டது. மோடியின் ஆட்சி இந்தியத் தரகு முதலாளிகளும் பன்னாட்டு நிறுவனங்களும் குத்தகைக்கு எடுத்த ஆட்சி என்பது மிகவும் வெளிப்படையாகத் தெரியும்போது, ஆ.ராசா இரண்டு கார்ப்பரேட் நிறுவனங்களுக்குச் சாதகமாக நடந்துகொண்டார் என இந்து மதவெறிக் கும்பல் குற்றஞ்சாட்டுவது ஈயத்தைப் பார்த்து பித்தனள இளித்த கதையைத்தான் நினைவுபடுத்துகிறது.

2ஜி அலைக்கற்றைகளை 1 மெகாஹெர்ட்ஸ் 276 ரூபாய் என்ற விலைக்கு ஒதுக்கீடு செய்தார் ஆ.ராசா. இதனை ரூ.3,350 விற்றிருக்க வேண்டும் எனக் கணக்குப் போட்டுத்தான் 1,76,000 கோடி ரூபாய் நட்டம் எனக் குற்றஞ்சுமத்தியது, சி.ஏ.ஜி. இதோ மோடியின் ஆட்சியில் 350 மெகாஹெர்ட்ஸ் கொண்ட அலைக்கற்றைகளை ரூ.297-க்கு விற்றிருக்கிறார்கள். சி.ஏ.ஜி.யின் கணக்குப்படி பார்த்தால் இந்த ஒதுக்கீடில் ஏற்பட்ட நட்டம் 11 இலட்சம் கோடி ரூபாய். ஆனால், இந்த அனுமான நட்டம் குறித்து இப்பொழுது யாரும் வாய்திறக்கவில்லை.

மேலும், ஆ.ராசாவிற்கு முன்னதாக இருந்த அமைச்சர்கள் அனைவரும், விதிவிலக்கின்றி வாஜ்பாயி ஆட்சியிலும், முதலில் வருபவருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் அலைக்கற்றைகளை ஒதுக்கீடு செய்ததில் ஏற்பட்டிருக்கும் இழப்பு ஐந்து இலட்சம் கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டிருக்கிறது. உச்சநீதி மன்றத்தின் அறிவுரைப்படி, முதலில் வருபவருக்கு முன்னுரிமை என்ற கொள்கையை வகுத்து அமலுக்குக் கொண்டுவந்தவர்களே மோடியின் மூதாதையர்கள்தான். அலைக்கற்றைகளை ஏலம் எடுத்த நிறுவனங்கள் தமது பங்குகளை விற்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டதும் வாஜ்பாயி ஆட்சியில்தான்.

இவ்வளவு உண்மைகளையும் மூடிமறைத்துவிட்டு, ஏதோ ஆ.ராசாதான் அலைக்கற்றைகளை முறைகேடாக ஒதுக்கீடு செய்து நாட்டிற்கு நட்டம் ஏற்படுத்திவிட்டதாகக் குறிவைத்து குற்றஞ்சுமத்தப்பட்டதற்குக் காரணம், பார்ப்பன பாசிச கும்பலின் திராவிட எதிர்ப்பு அரசியல்தான்.

அப்படியானால் ஒரு பைசாகூட ஊழலே நடக்கவில்லையா என்று நரித்தனமான கேள்வியொன்றை பார்ப்பனக் கும்பல் எழுப்பக்கூடும். பொதுச்சொத்தை கார்ப்பரேட் நிறுவனங்களுக்குத் தாரை வார்க்கும் தனியார்மயம்-தாராளமயம் என்ற கொள்கையே ஊழல்தான். இந்த அரசு எந்திரத்தின் அன்றாட இயக்கத்துக்கும், தேர்தல் அரசியலுக்குமான எரிபொருளே ஊழல்தான் என்பது பாமரனும் அறிந்த உண்மை. இதற்கு எந்தத் தேர்தல் அரசியல் கட்சியும் விதிவிலக்கில்லை. ஆனால், பிரச்சினை அதுவல்ல. 1,76,000 கோடி ரூபாய் ஊழல் என்ற பொய்க்குற்றச்சாட்டின் நோக்கம் என்ன என்பதே கேள்வி.

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடை முன்வைத்துப் பார்ப்பன பாசிசக் கும்பல் முன்னெடுத்த பிரச்சாரம், வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம் உள்ளிட்ட முக்கியமான பிரச்சினைகளைப் பின்னுக்குத் தள்ளிவிட்டதோடு, ஊழல்தான் இந்தப் பிரச்சினைகளுக்கான காரணம் என்பது போல ஒரு மோசடியான சித்திரத்தைப் பொதுமக்களின் புத்தியில் பதிய வைத்திருக்கிறது. ஊழல் ஒழிப்பு என்ற போர்வையில் எத்தகைய சட்டவிரோத நடவடிக்கைகளையும் துணிந்து எடுக்கலாம், கொடிய பொருளாதாரத் தாக்குதலையும் மக்கள் மீது தொடுக்கலாம் என்ற துணிவைப் பார்ப்பன பாசிசக் கும்பலுக்குக் கொடுத்திருக்கிறதே, அதுதான் இந்தப் பொய்ப்பிரச்சாரத்தின் வழியாக உருவாகிவிட்ட மாபெரும் அபாயம்.

-செல்வம்

புதிய ஜனநாயகம், ஜனவரி 2018.

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். உங்களுக்கான பணம் செலுத்தும் முறையை தெரிவு செய்து பணத்தை செலுத்துங்கள்.

இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். உடன் உங்களுக்கு மின் நூல் அனுப்பி வைக்கப்படும்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com