privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்சிறப்புக் கட்டுரை : தில்லிக்கு கொடுக்க வேண்டிய பிரசாதம் - நீதிபதிகள் ஊழல் அம்பலம்...

சிறப்புக் கட்டுரை : தில்லிக்கு கொடுக்க வேண்டிய பிரசாதம் – நீதிபதிகள் ஊழல் அம்பலம் !

-

அலகாபாத் உயர் நீதிமன்றம், பிரசாத் கல்வி அறக்கட்டளை, உச்ச நீதிமன்றம் மற்றும் சிபிஐ அலுவலகம் (கடிகாரச் சுற்றுப்படி )

புது தில்லி, சர்ச்சைக்குரிய மருத்துவ கல்லூரி லஞ்ச வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களான ஓய்வு பெற்ற ஒதிசா உயர்நீதிமன்ற நீதிபதி ஐ.எம். குதூஸி, இடைத்தரகர் விஷ்வநாத் அகர்வாலா மற்றும் பிரசாத் கல்வி அறக்கட்டளையைச் சேர்ந்த பி.பி யாதவ் ஆகியோரின் தொலைபேசி உரையாடல்களின் விவரம் தற்போது வெளியாகியுள்ளது.

இந்த உரையாடல்களில், கல்லூரி நிர்வாகிகள் தமக்குச் சாதகமான தீர்ப்பைப் பெறுவதற்காக உச்சநீதிமன்றம் மற்றும் அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் மூத்த நீதிபதிகளோடு லஞ்ச பேரம் நடத்திய விசயம் அம்பலமாகியுள்ளது.

வழக்கை நடத்தி வரும் மத்திய புலனாய்வுத் துறையின் வசமுள்ள தொலைபேசி உரையாடல்கள் ‘தி வயர்’ இணைய பத்திரிகைக்கும் கிடைத்துள்ளது. தற்போது உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிக்கும் அதே நீதிமன்றத்தின் நான்கு மூத்த நீதிபதிகளுக்கும் இடையே சர்ச்சை எழுந்துள்ள நிலையில் இவ்விவகாரம் மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றது. கடந்த ஜனவரி 12 -ம் தேதி நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், “நீதிமன்றத்தின் மரபுகளை மீறி எந்த ஒரு நேர்மையான அடிப்படையும் இன்றி தமக்கு விருப்பமான நீதிபதிகள் அடங்கிய பெஞ்சுகளுக்கு வழக்குகளை ஒதுக்குவதாக” தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவின் மேல் நான்கு மூத்த நீதிபதிகள் குற்றம் சாட்டியிருந்தனர்.

பொதுவாக ‘நீதித்துறை ஊழல்’ எனும் பேசாப் பொருள், பிரசாத் கல்வி அறக்கட்டளை மூத்த நீதிபதிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற விவாகரத்தின் மூலம் தற்போது முக்கியத்துவம் பெற்ற ஒன்றாக மாறியுள்ளது.

தனது அறக்கட்டளை சார்பாக நடத்தப்படும் குலோக்கல் மருத்துவ கல்லூரி, பல்நோக்கு மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் இந்திய மருத்துவ கவுன்சிலால் தடை செய்யப்பட்டிருந்த நிலையில் அத்தடைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தையும் அலகாபாத் உயர்நீதிமன்றத்தையும் நாடியது பிரசாத் கல்விக் குழுமம். இந்நிலையில் கடந்த 2017 -ம் ஆண்டு செப்டம்பர் 3 மற்றும் 4 -ம் தேதிகளில் தான் குற்றம் சாட்டப்பட்ட மூவரும் தொலைபேசியில் லஞ்சம் கொடுப்பது குறித்து உரையாடி உள்ளனர்.

ஆகஸ்ட் 2017 -ல் இருந்து செப்டெம்பர் 2017 வரையில் நடந்த நீதிமன்ற விசாரணைகளில் பிரசாத் அறக்கட்டளைக்கு சாதகமான பல்வேறு உத்தரவுகளை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அடங்கிய உச்சநீதிமன்ற பென்ச் வழங்கியது.

மருத்துவக் கல்லூரி லஞ்ச ஊழல் வழக்கின் நதிமூலம் :

குலோக்கல் மருத்துவக் கல்லூரி உள்ளிட்டு மொத்தம் 46 கல்வி நிறுவனங்களுக்கு கடந்த 2017 -ம் ஆண்டு முதல் அடுத்த இரண்டு கல்வியாண்டுகளுக்கு மாணவர்களை சேர்த்துக் கொள்ளத் தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து இந்திய மருத்துவ கவுன்சிலும் இந்தக் கல்வி நிறுவனங்கள் போதுமான உட்கட்டமைப்பு வசதிகளைக் கொண்டிருக்கவில்லை என்கிற அறிக்கையையும் சமர்ப்பித்தது.

ஐ.எம். குதூஸி

எனினும், கடந்தாண்டு ஆகஸ்டு மாதம் துவங்கி உச்சநீதிமன்றமும் அலகாபாத் உயர்நீதிமன்றமும் பிரசாத் அறக்கட்டளைக்கு சார்பான பல்வேறு உத்தரவுகளை வழங்கியிருந்தது.

ஆகஸ்ட் 1, 2017 உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அடங்கிய பென்ச், மருத்துவ கவுன்சில் வழங்கிய பரிந்துரைகளை மறுபரிசீலனை செய்யுமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.

நீதிமன்ற உத்தரவை அடுத்து குலோக்கல் கல்லூரி தரப்பு விளக்கங்களை மத்திய அரசின் மேல்முறையீட்டுக் கமிட்டி மறுபரிசீலனை செய்தது. எனினும், இப்பரிசீலனைக்குப் பின் தடை நடவடிக்கை சரி என முடிவு செய்த மேல்முறையீட்டுக் கமிட்டி, பிரசாத் அறக்கட்டளை சார்பாக நட்டஈட்டிற்காக பிணைத் தொகையாக செலுத்தப்பட்டிருந்த 2 கோடி வங்கி உத்திரவாத தொகையை இந்திய மருத்துவ கவுன்சில் எடுத்துக் கொள்ளலாம் எனவும் அனுமதியளித்தது.

ஆகஸ்ட் 24, 2017 மத்திய அரசின் முடிவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தை நாடிய பிரசாத் கல்வி அறக்கட்டளை, பின்னர் தனது மனுவைத் திரும்ப பெற்றுக் கொண்டது. தலைமை நீதிபதி அடங்கிய உச்சநீதிமன்ற பெஞ்ச், பிரசாத் அறக்கட்டளை தாக்கல் செய்த ரிட் மனுவைத் திரும்ப பெற்றுக் கொள்ள அனுமதியளித்ததுடன், மேற்படி அறக்கட்டளை ஏற்கனவே இது தொடர்பாக அலகாபாத் உயர்நீதிமன்றத்தை நாடியதற்கும் ஒப்புதல் அளித்தது. இதே காலகட்டத்தில் மருத்துவ கவுன்சிலால் தடைசெய்யப்பட்டிருந்த பிற கல்லூரிகளின் வழக்கில் மாணவர் சேர்க்கையைத் துவங்க கூடாது என்று உத்தரவுகளை வழங்கிக் கொண்டிருந்த அதே தலைமை நீதிபதி, பிரசாத் அறக்கட்டளையின் வழக்கில் அதற்குச் சாதகமான உத்தரவுகளை வழங்கியது அப்போதே வழக்கத்திற்கு மாறானதாக பார்க்கப்பட்டது.

ஆகஸ்ட் 25, 2017 அதற்கு மறுநாளே அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் நீதிபதி நாராயண் சுக்லா தலைமையிலான பென்ச், பிரசாத் கல்வி அறக்கட்டளை மாணவர் சேர்க்கைக்கான கவுன்சிலிங்கை நடத்தலாம் எனவும், மேற்படி அறக்கட்டளை வழங்கியிருந்த வங்கி உத்தரவாதமான 2 கோடியை இந்திய மருத்துவக் கவுன்சில் எடுத்துக் கொள்ளக் கூடாது எனவும் உத்தரவிட்டது.

ஆகஸ்ட் 29, 2017 அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து இந்திய மருத்துவக் கவுன்சில் உச்சநீதிமன்றத்தை நாடுகிறது. உயர்நீதிமன்றத்தில் பிரசாத் அறக்கட்டளை தாக்கல் செய்த ரிட் மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியின் பென்ச், மேற்படி அறக்கட்டளை அரசியல் சட்டப்பிரிவு 32 -ன் கீழ் மீண்டும் உயர்நீதிமன்றத்தை அணுக அனுமதியளித்தது.

இந்த விசாரணையின் போது, உயர்நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் தனது வங்கி உத்திரவாத தொகையை மருத்துவ கவுன்சில் எடுத்துக் கொள்ளக் கூடாது என்பதைத் தவிர தாம் வேறு எந்த அனுகூலத்தையும் கோரப் போவதில்லை என பிரசாத் அறக்கட்டளை தெரிவித்திருந்தது. அறக்கட்டளையின் உயர்நீதிமன்ற ரிட் மனுவைத் தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்த போதிலும், மாணவர் சேர்க்கைக்கான நேர்காணல்களை நடத்த உயர்நீதிமன்றம் வழங்கியிருந்த இடைக்கால அனுமதியைத் தடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

செப்டம்பர் 4, 2017 அறக்கட்டளை சார்பாக புதிதாக தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவின் மீது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அறிவிப்பு வெளியிடுகிறார்.

நீதிபதி நாராயன் சுக்லா

செப்டம்பர் 18, 2017  (செப்டம்பர் 21, 2017 -ல் உத்தரவு இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது) : தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அடங்கிய பென்ச், 2017 – 18 கல்வியாண்டிற்கான அங்கீகாரத்தை புதுப்பிக்க மறுத்து உத்தரவிடுகிறது. எனினும் இதே உத்தரவில், பிரசாத் அறக்கட்டளை வழங்கியிருந்த வங்கி உத்திரவாத தொகையை மருத்துவ கவுன்சில் எடுக்க கூடாது என்றும் தெரிவித்தது.

மேலும், இந்திய மருத்துவ கவுன்சில் தனது ஆய்வுக் குழுவை மீண்டும் குலோக்கல் கல்லூரிக்கு அனுப்பி 2018 – 19 கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கு அனுமதி வழங்குவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் எனவும் உத்தரவிடுகிறது. மத்திய அரசு ஏற்கனவே வழங்கிய தடை 2017 – 18 மற்றும் 2018 – 19 ஆகிய கல்வியாண்டுகளுக்கானது என்பது குறிப்பிடத்தக்கது.

மத்திய குற்றப் புலனாய்வுத் துறை குதூசி, யாதவ் மற்றும் அகர்வாலா உள்ளிட்டவர்கள் மேல் மூத்த நீதிபதிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயற்சித்ததாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ததற்கு இரண்டு நாள் கழித்து, செப்டம்பர் 18 -ம் தேதி வழங்கிய உத்தரவு உச்சநீதிமன்ற வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது. குதூசி உள்ளிட்டவர்களை சி.பி.ஐ கைது செய்ததோடு மேலும் இரண்டு நீதிபதிகளான நாராயண் சுக்லா மற்றும் விரேந்திரா குமார் ஆகியோருக்கு இவ்விவகாரத்தில் உள்ள தொடர்புகளையும் விசாரிக்கத் துவங்கியது. அதைத் தொடர்ந்து நடந்த சோதனைகளில் சுமார் 2 கோடி ரூபாய் பணத்தையும் முக்கியமான ஆதாரங்கள் அடங்கிய ஆவணங்களையும் கைப்பற்றுகிறது சி.பி.ஐ.

*****

தொலைபேசி உரையாடல்களில் இருப்பது என்ன?

குற்றம் சாட்டப்பட்டவர்களிடையே செப்டம்பர் 3 மற்றும் 4 -ம் தேதிகளில் நடந்த உரையாடல்கள் சி.பி.ஐ வசமுள்ளது. இந்த உரையாடல்களின் மூலம் அறக்கட்டளையின் இடைத்தரகர் யாதவ் நீதிபதிகள் குதூசி மற்றும் அகர்வாலா ஆகியோருடன் கல்லூரியின் அங்கீகாரத்தை மீட்பதற்காக லஞ்ச பேரத்தில் ஈடுபட்டதும் கல்லூரி வழங்கியிருந்த 2 கோடிக்கான வங்கி உத்திரவாத பத்திரத்தை மருத்துவ கவுன்சில் எடுப்பதைத் தடுப்பது தொடர்பாகவும் பேசியது தெளிவாகத் தெரிகிறது.

செப்டம்பர் 3 -ம் தேதி விஸ்வநாத் அகர்வாலா மற்றும் குதூசி ஆகியோரிடையே நடந்த உரையாடல் கீழே தரப்பட்டுள்ளது :

அகர்வாலா : ஆமாம் என்று நினைக்கிறேன். எந்தக் கோவிலாம்? அலகாபாத் கோவிலா, தில்லி கோவிலா?

குதூசி : இல்லை இல்லை.. கோவிலுக்கு என்பது இன்னும் முடிவாகவில்லை. ஆனால் இப்போது முடிவு செய்யப்பட வேண்டும்.

அகர்வாலா : ஆமாம் ஆமாம்.. இப்போது நீங்கள் பேசலாம், அவர் செய்வார். அதைப் பற்றி நானும் அங்கே பேசி விட்டேன்.

குதூசி : அவரும் உறுதியாகச் சொல்லி விட்டாரா ?

அகர்வாலா : ஆமாம் ஆமாம். இதுல ஒரு விசயம் பாருங்க… நம்ம தலைவர் நம்மாளுதான். இதெல்லாம் 100 சதவீதம் நம்ம தலைவரின் மூலமே நடக்கிறது. என்ன பிரச்சினை வந்துவிடும்? சொல்லுங்க?

*****

செப்டம்பர் 3 -ம் தேதி நடந்ததாகச் சொல்லப்படும் இந்த உரையாடலுக்குப் பின் செப்டம்பர் 4 -ம் தேதி அறக்கட்டளை சார்பாக மனு தாக்கல் செய்யப்படுகிறது. இந்த மனுவின் மேல் உச்சநீதிமன்ற பெஞ்ச் அரசியல் சட்டப் பிரிவு 32 -ன் கீழ் உத்தரவு ஒன்றை பிறப்பிக்கிறது.

உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா

நீதிமன்றத்தில் இருந்து சாதகமான உத்தரவைப் பெற்றுத் தருவதற்குப் பொறுப்பானவராக குறிப்பிடப்படும் பெயரற்ற நபரை “தலைவர்” (Captain) என்று உரையாடல்களில் குறிப்பிடுகிறார்கள். “டீக்கடைக்காரனின் அரசாங்கம் எல்லோரையும் கவனித்துக் கொண்டிருக்கிறது. அது தான் பிரச்சினையே” நீதிபதிகள் குதூசி மற்றும் விஸ்வநாத் அகர்வாலா ஆகியோர் இடையே செப்டெம்பர் 3 மற்றும் 4 -ம் தேதிகளில் நடந்த தொலைபேசி உரையாடல்களின் மூலம் அவர்கள் அறக்கட்டளை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவைப் பற்றியும், யாதவிடம் அதிகப் பணத்திற்கு பேரம் பேசுவது பற்றியும் பேசியது தெரிகிறது.

லஞ்சம் கொடுப்பவர்களும் வாங்க முயற்சித்தவர்களும் “டீக்கடைக்காரனின் அரசாங்கம்” “எல்லோரையும் கவனித்துக் கொண்டிருப்பது ஒரு பிரச்சினை” என்பதால் அச்சமடைந்திருந்தனர் என்பதும் தெரிய வருகிறது.

யாதவ் : அண்ணே, அன்றைக்கு நான் ஏன் உச்சநீதிமன்றத்திற்கு சென்றேன் என்றால், அந்த சமயத்தில் பணம் மாட்டிக் கொண்டிருந்தது. நான் அதைப் பற்றி தெளிவாக சொல்லி விட்டேன். அதனால் தான் அங்கே சென்றேன். அங்கே அவர்கள் ஒரு உத்தரவைக் கொடுத்தார்கள். இங்கே வந்த பின் அவர்கள் அதை தள்ளுபடி செய்து விட்டார்கள். அவர்கள் புதிதாக ஒரு மனுவை தாக்கல் செய்யச் சொல்லி விட்டார்கள். சட்டப்பிரிவு 32ன் கீழ் ஒரு புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதில் ஒரு தேதி குறிப்பிட்டிருந்தது. அவர்கள் அதை (தேதியை) 11 -ம் தேதியாக தள்ளி வைத்து விட்டனர். அந்த தவறுக்கு பரிகாரமாக நாளைக்கு உங்களுக்கான சீட்டை கொடுத்து விடுகிறோம். உங்களிடம் கொடுக்கிறோம் விஸ்வநாத்ஜி.. இப்போ எங்க வேலையை மட்டும் முடித்துக் கொடுத்து விடுங்கள்.

விஸ்வநாத் அகர்வாலா : வேலையைப் பொறுத்தவரை 100 சதவீதம் இல்லை, 500 சதவீதம் முடிவது உறுதி. ஆனால், பெட்டி அதற்கு முன்பே கொடுக்கப்பட்டு விட வேண்டும். ஏனென்றால், நடந்து கொண்டிருக்கும் டீக்கடைக்காரனின் அரசாங்கம் எல்லாரையும் கவனித்துக் கொண்டிருக்கிறது.. இது ஒரு பிரச்சினை.

யாதவ் : அவர் என்னைச் சந்திக்கும் படி செய்ய மாட்டேன். நானும் அவரை நேரில் பார்க்கத் தேவையில்லை.

அகர்வாலா : சந்திப்புக்காக இல்லை.. அவர் வீட்டுக்குப் போய்விடுவார்; அவர்கள் கவனிப்பதாக இவர் நம்பவில்லை அதே போல் அவர்கள் பார்க்கும் எல்லாவற்றையும் நம்பிவிடுவார்கள் என்றும் இவர் கருதவில்லை. வேலையைப் பொறுத்தவரை முன்பே பேசியபடி 100 சதவீதம் முடிந்து விடும். அதற்குத் தான் நான் அவசர அவசரமாக அங்கே போய்விட்டு வருகிறேன்.

யாதவ் : இல்லை… பரவாயில்லை. சார், உங்கள் சீட்டை அனுப்பி வைக்கிறோம் அகர்வால்ஜி. நாளைக்கு நீங்கள் வாருங்கள்.. இல்லையென்றால் நாளைக்கு நீங்கள் எங்களிடம் சொல்லுங்கள்.

யாதவ் : அட… எனக்கு முதலில் உத்திரவாதம் வேண்டும். எல்லோரும் பைத்தியக்காரப் பசங்க. அதனால.. முதலில் நமக்கு நீதிபதியோடு நல்ல உறவு இருக்க வேண்டும். அப்போது தான் நீதிபதியின் வார்த்தைக்கு நாம் மதிப்புக் கொடுப்போம்.

அகர்வாலா : இல்லை.. நான்(நாங்கள்) உறுதியளிக்கிறேன். அப்படியில்லை என்றால் நான் சொல்லவே மாட்டேன். ஏன்னா நாங்க இந்த வேலையைத் தான் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இது (உறுதி) வியாபாரத்தில் ரொம்ப முக்கியம். மருத்துவத் துறை ஆட்கள் தேவை தான்… அதில் ஒன்றும் பிரச்சினை இல்லை. ஆனால், அங்கே இருப்பவர்களுக்குப் பிரசாதம் கொடுக்கவில்லை என்றால் ஒரு வேலையும் நடக்காது.

யாதவ் : பிரசாதம் தேவை தான். நாங்கள் பிரசாதம் கொடுத்து விடுகிறோம். கொடுக்கத் தானே வேண்டும்.

அகர்வாலா : வேலை 100 சதவீதம் நடந்து விடும். ஆனால், நான் நாளைக்கோ நாளை மறுநாளோ பேச மாட்டேன். நீங்க பெட்டிய தயாராக வைத்துக் கொள்ளுங்கள். கொடுத்த உடனே வேலையை 100 சதவீதம் முடித்துக் கொடுத்து விடுகிறோம்.

*****

நீதிபதிகள் விஸ்வநாத் அகர்வாலாவுக்கும் குதூசிக்கும் இடையே நடந்த உரையாடல்

குதூசி : அவர்கள் மனுவைத் தாக்கல் செய்து விட்டதாக சொன்னார்கள். திங்கள் கிழமை என இன்றைக்கு தேதி சொல்லி விட்டார்கள். எப்போது, எப்படி எவ்வளவு என்பதை அவர்கள் கேட்கிறார்கள். இரண்டாவது., தங்களோட வேலை எப்படி கட்டாயம் நடக்கும் என்பதையும் கேட்கிறார்கள்.

அகர்வாலா : யார், மருத்துவ ஆட்களா?

குதூசி : ஆமாம் ஆமாம்.

அகர்வாலா : சரி அப்படி என்றால் திங்கட் கிழமைக்கு தேதி குறிக்கப்பட்டுள்ளதா?
அகர்வாலா : அப்படியென்றால் அது பரிசீலனை தானே?

குதூசி : இல்லை.. அது சட்டப்பிரிவு 32 -ன் கீழான மனு.

அகர்வாலா : ஆமாமா…. இப்போதைக்கு எந்த உத்திரவாதமும் இல்லை. அவர்கள் விசயத்தைக் கொடுத்து விட்டால் வேலையை 100 சதவீதம் முடித்து விடலாம்.

குதூசி : இல்லை.. பணம் அங்கே இருக்கிறது என்று அவர் சொன்னார். யாராவது அந்த வீட்டுக்குள்ளே போய் பேசனும்.

அகர்வாலா : அது சரி தான்.. ஆனால், அவர் நம்மை நம்பாமல் இருப்பது சரியில்லையே.

குதூசி : இல்லை அவர்கள் நம்மை நம்புகிறார்கள். ஆனால், விசயம் மூன்றாவது நபரின் கையில் இருந்தால் எப்படி முடிக்க முடியும் எனக் கேட்கிறார்கள். நம்முடைய வேலையை அவர்கள் முடிக்கவில்லை என்றால், நமது நிலைமை மோசமாகி விடும் என்று சொல்கிறார்கள்.

அகர்வாலா : இல்லை, வேலை முடிந்து விடும். இல்லையென்றால் நாம் ஏன் நெருப்புக்குள் குதிக்க வேண்டும்? அவர்களிடம் வேலை 100 சதவீதம் முடிந்து விடும் என்று சொல்லுங்கள்.

குதூசி : சரி, இந்த விசயத்தைக் கொஞ்சம் கவனியுங்கள்.. ஹா ஹா

அகர்வாலா : சரி.. வேலை 100 சதவீதம் முடித்துக் கொடுக்கப்படும். நாங்கள் அங்கே பேசினோம் என்பதால் தான் உங்களிடம் பேசிக் கொண்டிருக்கிறோம். இல்லையென்றால் இதையெல்லாம் சொல்ல மாட்டோமே.

இவர்கள் இருவரும் செப்டம்பர் 4 -ம் தேதிக்குப் பின் வரும் திங்கட்கிழமையைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறார்கள் (அதாவது செப்டம்பர் 11). அன்றைக்குத் தான் அறக்கட்டளை வழக்கு பட்டிலிடப்பட்டது. செப்டம்பர் 11 -ம் தேதியன்று தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான பெஞ்ச் வழக்கு விசாரணையை செப்டம்பர் 18 -ம் தேதிக்கு ஒத்தி வைத்து அன்றைக்கே (18 -ம் தேதி) இறுதி தீர்ப்பையும் வழங்கினார்.

லஞ்சப் பணத்திற்கான கடுமையான பேரம் :

இந்த உரையாடல் நெடுக குற்றம்சாட்டப்பட்ட மூவரும் கைமாறப் போகும் தொகைக்கான பேரத்தை நடத்துகின்றனர். உதாரணமாக, யாதவ், விஸ்வநாத் அகர்வாலா மற்றும் குதூசி ஆகியோரிடையே நடந்த இந்த உரையாடலில், “நீதிபதிக்கு” எப்படி பணம் அனுப்ப வேண்டும், எங்கே செலுத்த வேண்டும் என்பதைப் பற்றிப் பேசுகிறார்கள். பணத்தைப் பற்றிப் பேசும் போது அதை (பணத்தை) புத்தகம், சட்டி மற்றும் பிரசாதம் போன்ற குறியீட்டு வார்த்தைகளில் சுட்டிப் பேசுகின்றனர்.

யாதவ் : என்ன தர வேண்டும் என்று சொல்லுங்கள். என்னிடம் ஒரு கல்லூரி உள்ளது, மற்றவர்களை நம்ப முடியாது.

அகர்வாலா : ஒன்றுக்கு முடித்து விடலாம்.

யாதவ் : நான் என்ன கொடுக்க வேண்டும் என்பதைத் தெளிவாகச் சொல்லுங்கள். எங்களிடம் அதிகம் இல்லை. தலைவர் இருந்தால் அவரிடம் எங்களைப் பேச வையுங்கள். நான் தலைவரிடம் பேசிக் கொள்கிறேன்.

அகர்வாலா : ஒன்றும் பிரச்சினை இல்லை. நான் வேலையை முடித்துக் கொடுக்கிறேன்.

*****

கீழே உள்ளது அகர்வாலாவுக்கும் குதூசிக்கும் இடையேயான உரையாடல்

அகர்வாலா : இல்லை.. அவர் ஒன்று என சொல்லி இருக்கிறார். நானும் ஒன்றுக்குத் தான் பேசினேன். அவர் மூன்று என்றார். அதில் இரண்டரை அங்கே கொடுக்க வேண்டும் என்றும், ஐம்பதை நாம் வைத்துக் கொள்ளவும் சொன்னார்.

குதூசி : எவ்வளது முன்பணமாக கொடுக்க வேண்டும்?

அகர்வாலா : இப்போதைக்கு முன்பணம்…. மறுபரிசீலனை மனு தக்கல் செய்யும் போது மற்றது.. மறுபரிசீலனை அனுமதிக்கப்பட்டால் உங்களுக்கே கூட தெரியும்… அப்போது…

குதூசி : அப்படியென்றால் நீங்கள் ஒன்று செய்யுங்கள். அவரது மனு திங்கட் கிழமைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது. அதை மூன்று நான்கு நாட்கள் தள்ளிப் போடுங்கள்.

அகர்வாலா : நாம் சில ஆட்களை அனுப்பி வைப்போம். மூன்று நான்கு நாட்கள் என்றால்…. நீங்கள் இரண்டு ஆட்களைத் தாருங்கள் நாம் மூன்று நான்கு நாட்களுக்குத் தள்ளி வைப்போம்.

அகர்வாலா : திங்கட் கிழமை நாம் முடிவு செய்து விடலாம். அவர்கள் பெட்டியைக் கொடுத்து விடுவார்கள்.. இரண்டோ இரண்டரையோ இருக்கும்.. ஒன்றும் பிரச்சினை இல்லை, ஏதாவது உத்தரவு கிடைத்து விடும். அதனால் எனக்கோ உங்களுக்கோ பிரச்சினை வராது. ஏனென்றால் அங்கே சங்கம் பேசிக் கொள்ளும். நாம் தலையிட வேண்டாம்.. இல்லையென்றால் பிரச்சினையில் சிக்கிக் கொள்வோம். நம்மால் வேலையை முடிக்க முடியவில்லை என்றால் பெட்டியைத் திருப்பிக் கொடுத்து விடுவோம். வேலை நடக்காமல் இருக்க வாய்ப்பில்லை. அங்கே நாம் தெளிவாக பேசி விட்டோம், அது (மனு) அனுமதிக்கப்பட்டு விடும்.

குதூசி : இங்கே அவர்களிடம் பேசி விடுங்கள்.

அகர்வாலா : தெளிவாக பேசி விட்டோம். மூன்றுக்கு கணக்குப் போட்டிருக்கிறோம். மூன்றுக்கு கீழே செய்து கொடுக்க மாட்டார்.

*****

கீழே உள்ளது யாதவுக்கும் அகர்வாலாவுக்கும் இடையேயான உரையாடல்

யாதவ் : ஹலோ

அகர்வாலா : நாம் கடந்த முறையே பேசினோம் அல்லவா. ஒன்று எனப் பேசினோம், அவர்கள் மூன்று கேட்கிறார்கள். மொத்தமாக மூன்று கொடுத்தால் மனுப் போட்டவர்கள் அனுமதிக்கப்படுவார்கள். நான் அவரிடம் சொன்ன போது அவர் ஐந்து கேட்டுக் கொண்டிருந்தார். அவர்கள் அப்போது 15 செங்கல்களை கேட்டுக் கொண்டிருந்தார்கள் – போன முறை பேசிய போது கூட அதையே தான் சொன்னார்கள்.

யாதவ் : அப்படியென்றால் மொத்த தொகையும் முன்பணத்திற்கே சரியாகி விடும்.

அகர்வாலா : சார், நான் எந்த ரிஸ்க்கும் எடுக்க விரும்பவில்லை. ஏனென்றால் இதில் 100 சதவீத உத்திரவாதம் இருக்கிறது. அப்படி இப்படியென்று எந்த உழப்பலும் இல்லை. வேலை முடிந்த பின் ஐயா 10 – 15 மாதங்கள் இருப்பார். அப்போது நீங்கள் 14 – 15 வேலைகளை முடித்துக் கொள்ளுங்கள்; அப்போது நீங்களே நம்புவீர்கள். அவர் 101 சதவீதம் செய்து விடுவார்.
யாதவ் : சரி, எப்போது கொடுக்க வேண்டும் என்பதைச் சொல்லுங்கள்.

அகர்வாலா : 11 -ம் தேதி அல்லவா.. எனவே எங்களுக்கு 6 அல்லது 7 -ம் தேதி கிடைக்கிற மாதிரி பார்த்துக் கொள்ளுங்கள். நாங்கள் உங்கள் வேலை 11 -ம் தேதி முடிக்கப்பட்டு விடும்.

யாதவ் : இரண்டரைக்கு முடித்துக் கொடுங்கள் பாஸ்… அது தான் என்னால் முடிந்த தொகை (Capacity)

அகர்வாலா : சார்… நான் பொய் சொல்லவில்லை. முதலில் 18 -க்கு 5 என இருந்தது. அப்புறம் நாங்கள் பேசினோம். இப்போது 15 -க்கு 3 என்று வந்துள்ளது. பின்னர் இன்னும் நாலு வரும் என நாங்கள் அவரைச் சமாளித்துள்ளோம்.

யாதவ் : சரி கவனிங்க. இப்போதைக்கு 2 வாங்கிக் கொள்ளுங்கள். எங்களுக்கு உத்தரவு கிடைத்து மாணவர் சேர்க்கை துவங்கிய பின்னர் 1 கோடியை நீதிபதிக்குக் கொடுத்து விடுகிறோம். உங்கள் இடத்திலோ, குதூசி சாரின் இடத்திலோ.. இந்த மாதிரி செய்வோம்.

அகர்வாலா : சார், நான் பேசி விட்டு காலையில் உறுதிபடுத்துகிறேன்.

சிபிஐ வசமுள்ள உரையாடல்களின் படி பேரம் நடந்ததும் வழக்கின் தீர்ப்பு குறித்து பேசப்பட்டதும் தெரிகிறது. ஆனால், திட்டம் வெற்றியடைந்ததா என்பதும் அதன் (லஞ்சம் கொடுக்கும் திட்டத்தின்) பாதிப்பு என்னவென்பதும் தெளிவாகத் தெரியவில்லை. ஆனால், என்ன தெளிவாகத் தெரிகிறது என்றால் – வழக்கின் ஒவ்வொரு கட்டத்திலும் பிரசாத் கல்வி அறக்கட்டளை பலனடைந்துள்ளது.

சிபிஐ விசாரணையின் முதற்கட்ட அறிக்கை :

அலகாபாத் உயர்நீதிமன்றத்தைச் சேர்ந்த நீதிபதி ஒருவர் “சட்டவிரோதமான வெகுமதிகளைப்” பெற்றார் என சி.பி.ஐ தெளிவாக குற்றம் சாட்டுகிறது.

கடந்த 2017 -ம் ஆண்டு செப்டம்பர் 8 -ம் தேதி சிபிஐ பதிவு செய்த முதற்கட்ட விசாரணை அறிக்கையில் (இதன் ஒரு பகுதி தி வயர் இணையப் பத்திரிகையிடம் உள்ளது) அலகாபாத் உயர்நீதிமன்றத்தைச் சேர்ந்த நீதிபதி ஒருவரின் பெயரைக் குறிப்பிட்டு அவர் குதூசியிடம் இருந்து “சட்டவிரோதமாக வெகுமானம்” பெற்றார் என்று குறிப்பிட்டுள்ளது.

“சாட்சி ஒருவர் வழங்கிய தகவலின் படி திரு ஐ.எம் குதூசி அவர்கள் அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னோ அமர்வைச் சேர்ந்த மேதகு நீதியரசர் நாராயண் சுக்லா அவர்களை இந்த விவகாரத்தைக் கையாள வேண்டும் என அணுகியுள்ளார். சாட்சி மேலும் தெரிவித்த தகவலின் படி, திரு ஐ.எம் குதூசியும் திரு பி.பி யாதவும் நீதியரசர் திரு நாராயண் சுக்லா அவர்களை 25.08.2017 அன்று காலையில் லக்னோவில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து இது தொடர்பாக சட்டவிரோத வெகுமானங்களை (illegal gratification) வழங்கியுள்ளனர்” என்கிற சி.பி.ஐயின் முதற்கட்ட விசாரணை அறிக்கை தெரிவிக்கிறது.

மேலும் முதற்கட்ட அறிக்கையில் இருந்து, “சாட்சி மேலும் சொன்ன தகவல்களின் படி 25.08.2017 அன்று பிரசாத் அறக்கட்டளை தாக்கல் செய்த மனு ஒன்றின் மேல் தலைமை நீதிபதி திரு நாராயண் சுக்லா அடங்கிய அமர்வு (அமர்வு எண் 19870) உத்தரவு ஒன்றை பிறப்பிக்கிறது. மேலும், மனுதாரரின் கல்லூரி நேர்காணலுக்கென்று குறிப்பிடப்பட்டுள்ள கல்லூரிகளின் பட்டியலில் இருந்து வழக்கின் மறுவிசாரணை நடக்கும் நாள் வரை (அதாவது 31.8.2017) நீக்கப்படாது என்று மேற்படி உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. மறுவிசாரணை நாள் வரை வங்கி பிணைத்தொகை உத்திரவாதத்தை காசாக மாற்றக் கூடாது என்றும் அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது”

இதில் ஆச்சர்யம் என்னவென்றால், உயர்நீதிமன்றத்தின் முன் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவை உச்சநீதிமன்றம் அகஸ்ட் 29 -ம் தேதி தள்ளுபடி செய்ததை அடுத்து தான் கொடுத்த பணத்தைத் திரும்பக் கேட்டு குதூசியின் மூலம் நீதிபதி சுக்லாவுக்கு அழுத்தம் கொடுத்துளார் யாதவ்.

சி.பி.ஐ விசாரணை அறிக்கையில் மேலும் குறிப்பிடப்படுவதாவது ; “சாட்சி அளித்த கூடுதல் தகவலின் படி முன்பு சொன்ன நிகழ்வுகளுக்குப் பின் (அதாவது உயர்நீதிமன்ற மனு தள்ளுபடி செய்யப்பட்டபின்) திரு ஐ.எம் குதூசியையும் திருமதி பாவனா பாண்டேவையும் நீதியரசர் திரு நாராயண் சுக்லாவிடம் கொடுக்கப்பட்ட தனது பணத்தை திரும்ப வாங்கித் தரும்படி அழுத்தம் கொடுத்துள்ளார் திரு பி.பி யாதவ். மேலும் திரு குதூசி நீதியரசர் திரு நாராயண் சுக்லாவை தொடர்பு கொண்டு அவருக்கு அளிக்கப்பட்ட லஞ்சத் தொகையைத் திரும்பக் கொடுக்குமாறு கோரியுள்ளார் என நமது சாட்சி தெரிவிக்கிறார். மேலும், திரு ஐ.எம் குதூசியிடம் முன்பு பெற்றுக் கொண்ட லஞ்சப் பணத்தில் ஒரு பகுதியை உடனடியாக திரும்பக் கொடுத்து விடுவதாக நீதியரசர் திரு நாராயண் சுக்லா தெரிவித்துள்ளார்”

உயர்நீதிமன்ற நீதிபதிக்கு எதிரான வழக்கை நடத்த சி.பி.ஐ. -க்கு அனுமதி மறுக்கிறார் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி.

சிபிஐ தனது முதற்கட்ட விசாரணை அறிக்கையை கடந்தாண்டு செப்டம்பர் 8 -ம் தேதி தாக்கல் செய்ததாக ‘தி வயர்’ பத்திரிகைக்கு கிடைத்த தகவல் உறுதிப்படுத்தியுள்ளது. மேலும், இந்த விசாரணை அறிக்கையுடன் உரையாடல் விவரங்களையும் பிற ஆவணங்களையும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவிடம் செப்டெம்பர் 6 -ம் தேதி சமர்பித்த சிபிஐ, நீதியரசர் சுக்லாவுக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய அனுமதி கோரியுள்ளது.

எனினும், சி.பிஐக்கு முதல்தகவல் அறிக்கை பதிவு செய்ய அனுமதி மறுத்ததன் மூலம் அதற்கு மறுநாள் (அதாவது செப்டம்பர் 7 -ம் தேதி) தான் வாங்கிய லஞ்சப் பணத்தைத் திரும்பக் கொடுத்த நீதியரசர் சுக்லா கையும் களவுமாக கைது செய்யப்படுவதை உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி தடுத்துள்ளார்.

நீதியரசர் சுக்லாவுக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்வதற்கு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி தெரிவித்த மறுப்பை எழுத்துப் பூர்வமாக சிபிஐ -யின் சட்ட அதிகாரிகள் பதிவு செய்துள்ளதாக ‘தி வயர்’ பத்திரிகைக்குக் தகவல் கிடைத்துள்ளது. இதற்கிடையே வேறு மருத்துவக் கல்லூரிகள் தொடர்பான இதே போன்ற பிற வழக்குகளில் தான் அளித்த தீர்ப்புகளின் அடிப்படையில் நீதியரசர் சுக்லாவின் மேல் துறைவாரியான விசாரணை ஒன்றுக்கு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. எவ்வாறாயினும், இதுவரை பிரசாத் கல்வி அறக்கட்டளை வழக்கு தொடர்பாக அவர் மேல் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை.

நீதியரசர் சுக்லா மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய சிபிஐ கோரியது தொடர்பாக உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியிடம் இருந்தோ அல்லது அவரது அலுவலகத்தில் இருந்தோ ஏதேனும் விளக்கங்கள் அளிக்கப்பட்டால் அதை தி வயர் இந்தக் கட்டுரையில் சேர்த்துக் கொள்ளும்.

சி.பி.ஐ -யின் முதற்கட்ட விசாரணை அறிக்கை முழுவதுமே “சாட்சி” தெரிவித்த கருத்துக்களின் அடிப்படையிலானதா அல்லது முழுமையான விசாரணையின் அடிப்படையிலானதா என்பது குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. எனினும், நீதிமன்றத்தில் தமக்குச் சாதகமான உத்தரவைப் பெற குலோக்கல் மருத்துவக் கல்லூரி முறைகேடான வழிகளில் முயற்சித்துள்ளது என்பது மட்டும் தெளிவாக உள்ளது.

கடந்த 2017 -ம் ஆண்டு நவம்பர் மாதம், உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியால் உருவாக்கப்பட்ட நீதிபதிகள் அமர்வு ஒன்று அதற்கு முந்தைய தினம் உச்சநீதிமன்ற நீதியரசர்கள் ஜே. செலமேஷ்வர் மற்றும் எஸ். அப்துல் நசீர் ஆகியோர் மருத்துவக் கல்லூரி லஞ்ச ஊழல் வழக்கில் அமைக்கப்பட்ட அரசியல் சாசன அமர்வில் இருந்து தலைமை நீதிபதியை விலக்கி அளித்த உத்தரவை செல்லாதவை என அறிவித்ததை அடுத்து நீதிமன்றத்தில் சூடான விவாதங்கள் நடந்ததைப் பார்த்தோம்.

மூத்த வழக்கறிஞர் காமினி ஜெய்ஸ்வால் தாக்கல் செய்த வழக்கில் அது வரை முன்னுதாரணம் இல்லாத தீர்ப்பு ஒன்றை வழங்கியது செலமேஷ்வர் மற்றும் நசீர் ஆகியோர் அடங்கிய அமர்வு. அதாவது, பிரசாத் கல்வி அறக்கட்டளை தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதிகள் அமர்வில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவும் பங்கேற்று இருந்த காரணத்தால், தான் சம்பந்தப்பட்ட வழக்கில் அவரே நீதிபதியாக இருக்க முடியாது என இத்தீர்ப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஊழலை விசாரிக்க நீதிமன்றத்தின் மேற்பார்வையில் சிறப்புப் புலனாய்வுக் குழு ஒன்றை அமைக்க வேண்டும் என தனது மனுவில் கோரியிருந்தார் வழக்கறிஞர் காமினி ஜெய்ஸ்வால். இடைத்தரகருக்கும் ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதிக்கும் அரசின் உயர் பொறுப்புகளில் இருந்த சிலருக்கும் இடையே நடந்த உரையாடல் விவரம் சிபிஐ -யின் முதல் தகவல் அறிக்கையில் வெளியானதைத் தொடர்ந்தே இந்த வழக்கைத் தாக்கல் செய்தார் காமினி ஜெய்ஸ்வால்.

எனினும், எந்த வழக்கை எந்த நீதிபதி விசாரிப்பது என ஒதுக்கும் அதிகாரம் தலைமை நீதிபதிக்கே உண்டு என தலைமை நீதிபதியால் அமைக்கப்பட்ட அமர்வு தெரிவித்திருந்தது, அந்த சமயத்தில் பெரும் சர்ச்சையானது. தற்போது நான்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் தமது பத்திரிகையாளர் சந்திப்பில் தலைமை நீதிபதியின் கீழ் உச்சநீதிமன்றம் செயல்படும் விதம் குறித்து கேள்வி எழுப்பியிருக்கும் நிலையில் சிபிஐ வசமிருந்த உரையாடல் விவரங்கள் கசிந்திருப்பது மேலும் விவாதங்களைத் தூண்டிவிட்டுள்ளது.

மொழியாக்கம் : சாக்கியன்

நன்றி : ‘தி வயர்’ (மூலக்கட்டுரை – By )