Tuesday, September 27, 2022
முகப்பு செய்தி ஜார்கண்டில் தொழிற்சங்கத்தை தடை செய்த பாஜக அரசு !

ஜார்கண்டில் தொழிற்சங்கத்தை தடை செய்த பாஜக அரசு !

-

மஸ்தூர் சங்கதன் சமிதி (MSS) மீதான தடை, நிர்வாகிகள் மீதான பொய் வழக்குகள்!

ந்திய தொழிலாளர் வர்க்க இயக்கத்தின் மீது ஏற்படுத்தப்பட்டு இருக்கும் வரலாற்று அவமானம் குறித்த செய்தி இது.

ஜார்கண்ட் மாநிலம் தன்பாத் பிரதேசத்தில் மஸ்தூர் சங்கதன் சமிதி (MSS) என்ற தொழிற்சங்கம் இயங்கி வருகிறது. இந்தச் சங்கம் நிலக்கரி சுரங்கங்கள், அனல்மின்நிலையங்கள் மற்றும் விவசாயத் தொழிலாளர்கள் என 22 ஆயிரத்திற்கும் மேலான உறுப்பினர்களைக் கொண்டு 30 ஆண்டுகளாக தொழிலாளர் வர்க்க இயக்கமாகச் செயல்பட்டு வருகிறது.

இந்தத் தொழிற் சங்கத்தை ஜார்கண்ட் மாநில பா.ஜ.க. அரசு 27.12.2017 -இல் தடை செய்ததோடு அதன் நிர்வாகிகள் மீது பொய் வழக்குகளையும் போட்டுள்ளது. இந்தச் சங்கத்தைத் தடை செய்வதற்கான காரணமாக பா.ஜ.க. அரசு கூறுவது கேலிக் கூத்தாக உள்ளது. MSS சங்கம் ரசிய புரட்சியின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்திற்கு தெலுங்கு கவிஞரும், நக்சல்பாரி அரசியலை இந்திய விடுதலைக்கான மாற்றாக பேசும் முற்போக்காளருமான தோழர் வரவரராவ் அவர்களைப் பேசுவதற்கு அழைத்து இருந்தது.

இந்த செயலுக்காகத்தான் MSS அமைப்பின் மீதும், அதன் நிர்வாகிகள் மீதும் குற்றவியல் திருத்தச் சட்டத்தின்கீழ் (Criminal Law Amendment Act) பொய் வழக்குகள் புனையப்பட்டு தடை செய்யப்பட்டுள்ளது. மேற்கண்ட செயலின் மூலம் MSS அமைப்பு மாவோயிஸ்ட் அமைப்புடன் இணைந்துவிட்டது என ஒரு சப்பை வாதத்தை வைத்து தடை போட்டுள்ளதாகக் கூறுகிறது ஜார்கண்ட் பா.ஜ.க. அரசு.

இதுவரை நக்சல்பாரி அரசியலைப் பேசவும் எழுதவும் செய்த அறிவுத் துறையினர் மீதான கைது நடவடிக்கைகளில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புகளில் சமூக விரோத செயல்களில் ஈடுபடுவதும் நக்சல்பாரி அரசியலை ஆதரிப்பதும் ஒன்றல்ல என்றும் மக்கள் வாழ்வாதாரத்துக்கான விடுதலைக்கு மாற்று அரசியல் வடிவத்தை முன் வைத்து இயங்குவது சமூகவிரோதச் செயல் அல்ல என்று தெளிவுபடுத்தியுள்ளனர்.

தோழர் வரவரராவ்

மேற்கண்ட சம்பவத்தில் காரணகர்த்தாவாக கூறப்படும் தோழர் வரவரராவ் அவர்கள் பேசுவதற்கு தடை விதிக்கப்பட்டவரோ அல்லது குற்றச்சாட்டுகளில் தேடப்படுபவரோ இல்லை. ஆனால் பல்வேறு கிரிமினல் குற்றச்சாட்டுகளில் ஈடுபட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டு தேடப்படும் குற்றவாளிகளாக உள்ளவர்களே MLA -க்களாாகவும் MP -க்களாகவும் கொண்ட கட்சி பா.ஜ.க. கட்சி என்பது நாடறிந்த உண்மை. எனவே MSS தடைக்கான போதுமான காரணம் இதுவல்ல என்பதே உண்மை.

மஸ்தூர் சங்கதன் சமிதி (MSS) 1985 -இல் சத்திய நாராயணா பட்டாச்சார்யா என்ற வழக்கறிஞரால் நிறுவப்பட்டு 1989 -இல் பதிவு செய்யப்பட்டு சட்டப்பூர்வமாக இயங்கி வரும் ஒரு பிரபலத் தொழிற்சங்கம் ஆகும். இந்தச் சங்கம் தொழிலாளிகளுக்கான மாதாந்திர செய்தி பத்திரிகை ஒன்றையும், ஜார்கண்டில் ஒரு பொது மருத்துவமனையையும் நிறுவி அனைத்துத் தொழிலாளர்களுக்கும், பழங்குடி மக்களுக்கும் இலவச மருத்துவ சேவையையும் வழங்கி வருகிறது. மேலும் அமைப்பு சாராத தொழிலாளிகளை அமைப்பாக்கி பழங்குடி மக்களையும் தொழிலாளர்களையும் ஒருங்கிணைத்து உரிமைக்கான போராட்டங்களை MSS சங்கம் முன்னின்று நடத்திக் கொண்டு உள்ளது.

முப்பது ஆண்டுகளாக சட்டப்பூர்வ தொழிற்சங்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் ஒரு மக்கள் திரள் அமைப்பு MSS ஆகும். இதுவரை இந்த அமைப்பின்மீது எந்தவிதமான சட்ட விரோத நடவடிக்கைகள் சம்மந்தமான வழக்குகளும் பதிவு செய்யப்படவில்லை. இருந்தும் இந்த அமைப்பு ஏன் தடை செய்யப்பட்டது?

கார்ப்பரேட் முதலாளிகளின் கையாளான பாரதிய ஜனதா கட்சி தொழில் உறவை மேம்படுத்துவது, தொழில் வளர்ச்சியை ஊக்குவிப்பது என்கிற போர்வையில் பன்னாட்டு முதலாளிகள், கார்ப்பரேட் முதலாளிகளுக்கு எல்லா உதவிகளையும் செய்து வருகிறது. அதன்படி இந்திய தொழிலாளர் வர்க்கத்தை கேள்விமுறை இன்றி சுரண்டும் நோக்கத்திற்காக, தொழில் தொடங்கி வரும் நிறுவனங்களுக்கு உள்ள நிபந்தனைகளை எளிமையாக்குவது எனத் தெரிவித்து தொழிலாளர் சட்டங்களைத் திருத்தி வருகிறது.

இதுவரை தொழிலாளி வர்க்கம் தங்கள் அளப்பரிய தியாகத்தால் போராடி பெற்ற உரிமைகளைப் பன்னாட்டு கார்ப்பரேட் கம்பெனிகளின் கொள்ளை லாபத்திற்காக திருத்துவதற்கு எதிராக MSS சங்கம் ஜார்கண்ட் மாநில தொழிலாளர் மத்தியில் அம்பலப்படுத்தி ஒருங்கிணைத்து போர்க் குணத்துடன் எதிர்த்து வருகிறது. இந்த செய்கைதான் ஜார்கண்ட் மாநில பா.ஜ.க.வைத் தொடர்ந்து அச்சம் கொள்ளச் செய்கிறது.

இது மட்டுமின்றி ஜார்கண்ட் முன்னேற்றத்துக்கான (Momentum Jharkhand Program) அரசின் வளர்ச்சி திட்டம் என்ற பெயரில் பழங்குடி மக்களை அவர்களின் பூர்வீக வாழ்விடங்களில் இருந்து வெளியேற்றுவதன் மூலம் அவர்களின் வாழ்வாதாரத்தையே அழிக்கிறது. இதற்கு எதிராக குரல் எழுப்பிய மோடிலால்பாய் என்ற தொழிலாளியைக் கொலை செய்தது பா.ஜ.க. அரசு. இந்தச் சட்ட விரோத அரசு கொலைக்கு எதிராக மக்களைத் திரட்டி போராட்டம் நடத்தியதோடு நீதி விசாரணையையும் கோரியது MSS அமைப்பு. இது பா.ஜ.க. கும்பலுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியது.

அமைப்பு சாரா தொழிலாளர்களை அமைப்பாக்கித் தொடர்ந்து அவர்கள் நலனில் அக்கறையோடு இருப்பதோடு அரசை அம்பலப்படுத்துவதில் முன்னிலை வகிக்கிறது MSS அமைப்பு. தொழிலாளர் வர்க்க உரிமைக்காக அரசுடன் நேரடி மோதலை நடத்துவதால் இதனை ஒழித்துக்கட்ட  பார்ப்பன இந்து மதவெறி கும்பல் பாசிச நாஜி ஹிட்லரின் பாணியில் இந்தத் தொழிற் சங்கத்தை ஒழித்துக் கட்டியுள்ளது.

இதற்கு எதிராக இந்திய தொழிற்சங்க அமைப்புகள் எந்தவிதக் கண்டனத்தையும் பதிவு செய்யவில்லை. இதற்கு எதிராக இப்போது நாம் போராடாமல் இருப்போமானால் இனி எப்போதுமே போராட முடியாமல் நசுக்கப்படுவோம் என்பதை உணரவேண்டும்.

– ஆதி நந்தன்

 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க