privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.ககாசு மிச்சம் பண்ண கலெக்டர் வேலையா செய்யுறேன் ? படங்கள்

காசு மிச்சம் பண்ண கலெக்டர் வேலையா செய்யுறேன் ? படங்கள்

-

மிழகத்தையே கொள்ளையடித்த A1 குற்றவாளி ஜெயலலிதா கடந்த 2011 -ல் ஆட்சிக்கு வந்தவுடன் பேருந்து, பால் மற்றும் மின் கட்டணத்தை அதிரடியாக உயர்த்தி மக்களை அதிர்ச்சியில் உறைய வைத்தார். இந்த உயர்வுக்கு காரணம் அரசு நட்டத்தில் இயங்குகிறது. அதனை மக்கள் பொறுத்துத் தான் ஆக வேண்டும் என்று நாடகமாடினார். இதற்கு முன் ஆட்சி செய்த திமுக -வே இதற்கு காரணம் என்றும் ‘நியாயம்’ பேசினார்.

கட்டணத்தை உயர்த்திய பின்னரும் எந்த முன்னேற்றமும் இல்லை. குறிப்பாக போக்குவரத்துறை மேலதிகமாக நட்டத்தை சந்தித்தன என்பதை போக்குவரத்து தொழிலாளர்களின் தொடர்ச்சியான போராட்டம் அம்பலப்படுத்தியது. ஜெயாவின் வழி தோன்றிய அவரின் அடிமைகள் இன்று எவ்வித முன்னறிவிப்புமின்றி பேருந்து கட்டணத்தை வரலாறு காணாத வகையில் உயர்த்தியிருக்கின்றது. இதற்கு இவர்கள் கூறும் காரணம் ஏற்கனவே போக்குவரத்துத்துறை ஒன்பது கோடி நட்டத்திற்கு இயங்கியது. தொழிலாளர்களின் சம்பள உயர்வுக்குப் பிறகு அது பன்னிரண்டு கோடியாக உயர்ந்துள்ளது. இதனை சமாளிக்க வேண்டும் என்றால் கட்டண உயர்வைத் தவிர வேறு வழியில்லை என்கிறார்கள்.

தொழிலாளர்கள் போராட்டம் என்பது வெறும் சம்பள உயர்வுக்கானது மட்டுமல்ல.. எங்கள் சம்பளத்தில் பிடித்தம் செய்த பணத்தை திருப்பிக் கொடுக்க வேண்டும் என்பதும் தான். அந்த பணம் எங்கே போனது, என்ன செய்தார்கள் என்பதே இதுவரை தெரியவில்லை. மொத்த பணத்தையும் ஏப்பம் விட்டுள்ளது போக்குவரத்து கழகமும் அடிமை அரசும். இந்த கயவாளிகள் தின்று கொழுத்ததற்கு நம் தலையில் பாரத்தை ஏற்றியிருக்கிறார்கள்.

இந்த உயர்வு குறித்து கோயம்பேடு பேருந்து நிலையத்தில் தொழிலாளர்களிடம் கேட்டதற்கு வருடா வருடம் உயர்த்தி இருந்தால் இந்த பிரச்சனை வந்திருக்காது. மொத்தமாக உயர்த்தியது தான் பெரும் பிரச்சனை என்றார்கள். சரி மக்கள் என்ன சொல்லுகிறார்கள் என்று அங்கேயே உள்ள பயணிகளிடம் கேட்டோம். முன் எப்பொழுதும் இல்லாத அளவிற்கு தாமாக முன்வந்து அடிமை அரசின் மீதான கோபக்கனலை கொட்டித்தீர்த்தார்கள். நீங்களும் கேளுங்கள்!

பாபு, திரைப்பட  செட் அசிஸ்டெண்ட், திருவொற்றியூர்.

பேருக்கு தான் சினிமாவுல இருக்கேன். மாசத்துல நாலுநாள் கூட வேலை கிடைக்காது. இப்படி திடீர்னு கட்டணத்தை உயர்த்திடானுங்க. ஏன்டான்னு கேட்டா தரத்தை உயர்த்தறேன்னு சொல்றானுவ… இப்ப இவனுங்க என்ன தனியார் பஸ் மதிரியா விடப்போறானுங்க. அதே ஓட்ட பஸு தான். அவன் (மோடி) தான் ரெண்டாயிரபா நோட்ட ராவோட ராவா கொண்டு வந்து எல்லாத்தையும் அழிச்சான். இவனும் அதே வழியில தான் போறான். ராவோட ராவா வண்டி சார்ஜ ஏத்திட்டான். ஊருக்கு போன என்னோட பிரண்டுங்க எல்லாம் காசு இல்லாம போன் பண்ணி காசு போடுடா’ன்னு சொல்லுறானுங்க. இந்த கொடுமைய எல்லாம் எங்க போயி சொல்றது…!

எங்ககிட்ட இருந்து வாங்கி அவங்களுக்கு (தொழிலாளிகளுக்கு) கொடுக்க நீ எதுக்குடா? நீ என்ன இடைத்தரகரா? அவங்க என்கிட்டே கேட்டா நாங்களே கொடுத்திருப்போம்ல..எங்களுக்காக வண்டி ஓட்டுரவங்களுக்கு நாங்களே செய்வோம். நாங்க ஒருத்தவங்களுக்கு ஓட்டுப்போட்டா அம்பது பேர் வந்து ஆளுரானுங்க. பெரும்பான்மை இல்லாதவனா வச்சி ஆட்சி நடத்தினு கீறான்… சட்டம், ஜனநாயகம் ஏதும் இங்க இல்ல……இதுல ரஜினி, கமல் எல்லாம் வந்து இன்னா பண்ண போறாங்க. வரதுக்கும் சான்ஸ் கிடையாது.

இளையராஜா, திருச்சியைச் சேர்ந்த கார் ஓட்டுனர்.

வேளச்சேரியில் தங்கி தனியார் நிறுவனத்துல கார் ஓட்டிட்டு இருக்கேன். இப்ப நான் வேளச்சேரியிலிருந்து பள்ளிக்கரணை வழியா கோயம்பேட்டுக்கு வந்திருக்கேன். வேளச்சேரி டூ பள்ளிக்கரணை வரைக்கும் பத்து ரூபாயிலிருந்து பதினைந்து ரூபாயாக மாத்திட்டாங்க. பள்ளிகரணை டூ கோயம்பேடு இருபத்தி ஏழு ரூபாயாக மாத்திட்டாங்க. இப்ப இங்கிருந்து நான் மதுரவாயிலுக்கு வேற போவனும். இதை எல்லாம் மொத்தம் கணக்கு போட்டு பாருங்க. ஏறக்குறையை நூரு ரூபா இதுக்கு செலவழிக்கனும். சம்பாரிக்கிறது முழுசா முன்னூறு ரூபா கிடையாது. எல்லாத்தையும் டிக்கெட்டுக்கே கொட்டனும். இப்ப ஒயிட் போர்டு கூட கிடையாது. டெய்லி கொடுக்கிற ஐம்பது ரூபா சீட்டும் இல்ல. மாதாந்திர பயண சீட்டும் இல்லை. மூணு விதமா நாலு விதமா ஏத்தியிருக்கிறதா சொல்லுறானுங்க. ஆனா ஒரே வண்டி தான் ஓடுது. சார்ஜ் எல்லாம் இரண்டு மடங்கா இருக்கு!

ராணி,வந்தவாசி கூலி விவசாயி.

எங்க ஊர்ல எந்த வேலையும் இல்ல. கூலிக்கு வேலைக்கு போவோம். காலைல போனா மூனு மணிக்கு தான் வீட்டுக்கு வருவோம். மதியம் சாப்பாடு கூட இல்ல. சிலர் தருவாங்க. சிலர் தரமாட்டாங்க. இதுக்கு வெறும் நூறு ரூபா தான் கூலி. நா ஒரு ஆளு தான் சம்பாதிக்கிறேன். இந்த கூலிய வச்சிக்கினு நா எப்படி கரையேறது? எம்பொண்ண இங்க கட்டிக் கொடுத்திருக்கேன். ஏதாவதுன்னா நா தான் வரணும்.. முன்னாடி வந்தவாசில இருந்து காஞ்சிபுரம்,அப்பறம் அங்கிருந்து கோயம்பேடு வருவோம். இதுக்கு மொத்தமா 60 ரூபா தான் ஆகும். ஆனா இப்ப 85 ரூபா புடுங்கிட்டானுங்க .

பிரேமா. போளூர், திருவண்ணாமலை மாவட்டம்.

கூலி விவசாயி… காலு வலி நடக்க முடில. நடந்தா முட்டி நோவுதுன்னு அடிக்கடி ஆஸ்பித்திரிக்கு வருவேன். நான் வரும்போது ஒன்னும் இல்ல. இப்ப சார்ஜ் ஏத்திட்டானுங்கன்னு சொல்றிங்க. நா…. எங்க போறது….எப்படி போறது தெரிலையே…. நூறு நாள் வேல கூட இப்ப இல்ல. மூணு நாலு மாசமா நிறுத்திட்டானுங்க. நா எப்படி பொழப்பேன்…

பானு, வீட்டு வேலை செய்பவர்.

ஆட்சி செய்யிறனுவ எல்லாம் வாயிலேயே முழம் போடுறானுங்க. நம்ம சம்பளத்த எல்லாம் புடுங்கி டிரைவருங்களுக்கு கொடுக்க போறானுவ…அப்புறம் எதுக்கு அரசாங்கம்? இத எதிர்த்து நூறு இருநூறு பேரு போராடுனா பத்தாது. ஜல்லிக்கட்டு போராட்டம் மாதிரி மொத்தமா எல்லோரும் போராடனும். டிரைவர் எல்லாம் ஒரு வாரமா போராடுனாங்க. நாம டிக்கெட் வெலைய கொறைக்கிற வரைக்கும் விடக்கூடாது. இவனுங்க எல்லாம் மோடிக்கு அடிமையாகிட்டானுங்க. முன்னாடி எல்லாம் கோவளத்துல இருந்து பிராட்வே வரதுக்கு 23 ரூபா ஆகும். இப்ப 43 மூணு ரூபா வாங்குறானுங்க. நா..வேலைக்கு போயிட்டு வீட்டுக்கு வரதுக்கு 100 ரூபா ஆகிடுது. ஒவ்வவொரு வீடா பத்து பாத்திரம் தேச்சி குடும்பத்த நடத்துறேன்… சம்பாரிக்கிறத எல்லாம் இவனுங்க கிட்ட கொடுத்துட்டு போக நா என்ன கலக்டர் வேலையா செய்யுறேன் சொல்லுங்க… காச மிச்சம் பன்னா கொஞ்சம் சும குறையுமேன்னு ஒயிட் போர்டா பாத்து வரேன்…. இவனுங்க டீலக்ஸ் பஸ் மாதிரி கட்டணத்த ஏத்திடானுங்க….

துரைராஜ், திருநெல்வேலி.

நான் மூட்ட தூக்குற வேலை செய்யிறேன். எங்க குடோன்லையே தங்கிகிறேன். பொண்டாட்டி புள்ள எல்லாம் ஊருல தான் இருக்காங்க. அவங்கள பாக்குறதுக்காக ஊருக்கு போவேன். போறதுக்கும் வரதுக்கும் தொள்ளாயிரபா ஆகும். இப்ப ஆயிரத்தி முன்னூறு ஆகுது. எல்லா விலைவாசியும் ஏறிடுது.ஆனா என் கூலி மட்டும் ஏறல. ஒரு மூட்டைய ஏத்துறதுக்கு பத்து ரூபா. இறக்கு கூலி ஆறு ரூபா. ஒரு நாளைக்கு நானூறு ரூபா சம்பாரிக்கிறதே பெரிய விஷயம். இது என்னோட சாப்பாட்டுக்கே சரியா போயிடும். மூட்ட தூக்குற நானு இரண்டு இட்லி, மூணு இட்லி சாப்பிட முடியுமா? நல்லா சாப்பிட்டா தான் வேலைய செய்ய முடியும். முகூர்த்த நாள், விஷேச நாளா இருந்தா இருநூறு, முன்னூறு கூட கிடைக்கும். இதை வச்சிக்கிட்டு வேலை இல்லாத நாள்ல சாப்பிடனும். வீட்டுக்கும் கொடுக்கணும். முன்னாடி பொண்டாட்டி புள்ளைய பார்க்க மாசம் ஒரு முறை போறதுக்கே யோசிப்பேன். இனிமே எப்படி போறதுன்னு தெரியல. அது தடப்படும்னு தான் நெனக்கிறேன்.

மாலதி, ஜூனியர் ஆர்டிஸ்ட் மற்றும் புடவை வியாபாரம் செய்பவர்.

நான் அம்மா கட்சி தான். எம்ஜியார் நகர்ல இருந்து கோயம்பேடு வரதுக்கு 15 ரூபா ஆக்கிடானுங்க. இன்னா அநியாயம் இதெல்லாம். நஷ்டத்துல ஓடுதுன்னா வருசத்துக்கு ஒரு ரூபா ரெண்டு ரூபா ஏத்திக்கலாம். அத வுட்டுட்டு ஒரேடியா இப்படி ஏத்துனா ஜனங்களால இன்னா பண்ண முடியும். இவனுங்கள சும்மா விடக்கூடாது. அங்கங்க பஸ்ஸ ஒடக்கிறதா கேள்வி பட்டேன். இது தமிழ்நாடு முழுக்க பத்திகிறதுக்குள்ள இவனுங்க முழிச்சிக்கணும். நாமளும் இனிமே இந்த பஸ்ல போவக்கூடாது. அதான் நான் எல்லார்கிட்டயும் ஷேர் ஆட்டோவுல போக சொல்லுறேன். பஸ்ல ஏறாம போனாதான் இவனுங்க திமுரு அடங்கும்.!

தாரிக் அசிஸ், திருப்பத்தூர், சிவகங்கை மாவட்டம்.

பிஎஸ்சி கெமிஸ்ட்ரி படிச்சிருக்கேன். குடும்பத்துல கொஞ்சம் பிரச்சனை. அதனால வேலை தேடி வந்தேன். எங்க ஊர் பக்கம் இருக்க கார்பரேட் விளம்பரங்களை நம்பி வந்தேன். வந்த பிறகு தான் தெரியுது எல்லாம் ஃபிராடு கம்பனியா இருக்கு. நேர்ல போயிட்டு கேட்டதுக்கு எட்டாயிரம் கட்டு மூணுமாசம் ட்ரைனிங் கொடுப்போம்னு சொல்றான். இதே மாதிரி தான் போற இடம் பூரா சொல்லி ஏமாத்துறானுங்க. தங்கறதுக்கு கூட இடமில்ல. இங்க யாரையும் எனக்கு தெரியாது. ஆனா வந்துட்டேன். சரி,ஏதாவது லாட்ஜில தங்கலாமேன்னு போயிட்டு கேட்டா 300, 400ன்னு கேக்குறானுங்க. கையில காசும் இல்ல. அதனால இரண்டு நாளா இந்த பஸ் ஸ்டாண்டுலயே தூங்குறேன். பகல்ல வேலை தேடி போனா டிக்கெட் கட்டணமும் ஏத்திடாங்க. இருக்க காச இதுக்கே செலவு பண்ணிட்டா சாப்பாட்டுக்கு என்ன பணன்றது. அதனால தான் வேற வழி இல்லாமா சரவணா ஸ்டோர்ல வேலை கேட்டேன். .6000 ரூபா தரேன்னு சொன்னாங்க. போகலாம்னு இருக்கேன். இப்போதைக்கு அங்க தான் சோறும் தங்க இடமும் கொடுக்கிறாங்க…என்று கூறிகொண்டே தலையை தாழ்த்திக் கொண்டார்.

ராஜேந்திரன்… தலைவாசல். தமிழ்நாடு விவசாய சங்கத்தின் சேலம் தலைவாசல் ஒன்றியத் தலைவர்.

நாங்க எங்க சங்கம் சார்பா ஆத்தூர் பேருந்து நிலையத்துல மறுநாளே போராட்டம் நடத்தினோம். ஊருக்கு போனதும் மீண்டும் போராட்டத்த தொடங்கனும். இந்த டிக்கெட் வெல தாறுமாறா ஏத்துனதால ரயில்ல வந்தேன். நிக்க கூட இடம் இல்ல. அவ்ளோ கூட்டத்துல மூச்சுகூட விட முடியாம வந்தோம்…. என்று சொல்லிக்கொண்டே ரயில் டிக்கெட்டை எடுத்து காண்பிக்கிறார்.

ஆறுமுகம் மனைவி மற்றும் குழந்தைகளுடன்…..

சுங்காசத்திரத்துல இருந்து கோயம்பேடு வந்தா எங்க நாலு பேருக்கும் தொண்ணூறு ரூபா ஆவும். இப்ப நூத்தி முப்பத்தாறு ரூபா குடுத்திருக்கேன். இப்ப நா இங்கிருந்து ஓட்டேரிக்கு எங்க அம்மா வீட்டுக்கு போவனும். குழந்தைங்க ஆயாவா பாக்கனும்னு சொல்லுதுங்க. அதான் கூட்டிட்டு போறோம். எங்க வீட்டுக்காரு பூ வேலை செய்யிராரு. இருநூறு ரூபா சம்பளம். இந்த சம்பளத்துல ஆயிரம் ரூபா வாடகைக்கு போயிடும். மீதிய வச்சி தான் குடும்பம் நடத்துறேன். இப்படியே திரும்ப திரும்ப ஏழைங்க கிட்ட தான் புடுங்குறானுங்க… இதுல எப்படி ஊரு நாட்டுக்கு போயிட்டு சொந்தபந்தங்கள பாக்குறது சொல்லுங்க….என்கிறார் பரிதாபமாக….

சகுந்தலா…

கோயில்ல பெருக்குற வேலை செய்யுறேன். மாசம் ஐநூறு ரூபா தராங்க….வியாசர்பாடி பேரன் வூட்டுக்கு வந்தேன்… டிக்கெட் வேலைய ஏத்திடானுங்க…அத கேட்டு கம்முனு ஒக்கந்துட்டேன். நீ வேற கேள்வி கேட்டுகுனு…. வயித்தெரிச்சல கேளப்பாத….

ஜெகநாதன்…மேடைக் கச்சேரி பாடகர்.

ஒரு புரோகிராம்னா ஆயிரத்து ஐநூருல இருந்து ரெண்டாயிரம் கொடுப்பாங்க. இந்த கோடிக்கும் அந்த கோடிக்கும் போனா தான் ஏதோ வேலை கெடைக்கும். ஒரு மாசத்துக்கு நாலு புரோகிராம் கிடைக்கிறதே கஷ்டம். இதுல டிக்கெட் வேற ஏத்திட்டாங்க. இந்த செலவ எப்படி ஈடுகட்டுறதுன்னு தெரியல. இனிமே தான் அவங்க கிட்ட கேக்கணும். பத்து வருசமா இந்த வேலை செய்யுறேன். ஆனா கூலி எதுவும் இரண்டு மடங்கா ஏறல. இந்த வேலை சரியா கெடைக்கலன்னு கொருக்குபேட்டையில சில்வர் பாலிஸ் குடிசை தொழில் வேலை செய்யுறேன். இன்னும் என்ன வேலை செய்யுரதுன்னு தெரியல….என்று விரக்தியாக சொல்கிறார்.

-வினவு செய்தியாளர்கள்