அனைத்து சாதியினரும் அர்ச்சகராக வீதியில் இறங்கு ! தோழர் மருதையன் உரை

60
31

அனைத்து சாதியினரும் அர்ச்சகராக முடியாதா? தீர்ப்பு கூறுவது என்ன? இனி நாம் செய்ய வேண்டியது என்ன? என்ற தலைப்பில் 02.12.2017 அன்று சென்னையில் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் சார்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. அந்த கருத்தரங்கில் மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் பொதுச்செயலாளர் தோழர் மருதையன் ஆற்றிய உரையின் வீடியோ…

தோழர் மருதையன் உரையின் சுருக்கம்:

வ 26, 1957 -ல் பெரியார் அரசியல் சட்ட எரிப்பு போராட்டம் நடத்தினார். அரசியல் சட்டம் 25, 26 பிரிவு சாதி அதிகாரத்தையும், சாதிக்கான உரிமையையும் நியாயப்படுத்துகிறது என்று கூறி சட்ட எரிப்பு போராட்டம் நடத்தினார். அப்போராட்டத்தில் கலந்து கொண்ட பல்லாயிரக்கணக்கானோரை கைது செய்து ரிமாண்டு செய்தது அரசு.

அதில் கைது செய்யப்பட்ட சிறுவனிடம் பேசிய அதிகாரி ஒருவர், “தெரியாமல் செய்துவிட்டேன், செய்தது தவறு” என எழுதிக் கொடு. உன்னை விட்டுவிடுகிறேன் எனக் கூறியிருக்கிறார். ஆனால் அச்சிறுவனோ தான் செய்தது நியாயம் என்று கூறினார். “என்னை வெளியே விட்டாலும் மீண்டும் கொளுத்துவேன்” என்று கூறினார். அப்போராட்டத்தில் உயிரிழப்பு மொத்தம் 20 பேர்.

சாதாரண மக்கள் இப்போராட்டத்தில் பங்கேற்றனர். சாதி என்னும் இழிவை நியாயப்படுத்தும் அரசியல் சாசன சட்டத்தை கொளுத்தினால் போதும் என்று தெரிந்து வைத்திருந்தனர்.

இன்று கேரளாவில் யதுகிருஷ்ணா என்றொரு தலித் இளைஞர் அர்ச்சகர் பயிற்சி பெற்று அங்கு அர்ச்சகர் ஆகியிருக்கிறார். அவருக்கு பயிற்சியளித்த குரு, “யதுகிருஷ்ணா 10 ஆண்டுகள் பயிற்சி பெற்றிருக்கிறார். இப்போது அவர் எல்லாவிதங்களிலும் ஒரு பார்ப்பனர்” என்று கூறியிருக்கிறார்.

ஒரு சூத்திரன் பார்ப்பனியத்தைக் கடைபிடித்து அர்ச்சகர் ஆவதை ஆர்.எஸ்.எஸ். விரும்புகிறது. அக்காரணத்தால் தான் ஆர்.எஸ்.எஸ். இந்த நியமனத்தை வரவேற்கிறது. அது தான் இப்போது கேரளாவில் நடந்திருப்பது. இது தான் ஒழிக்கப்படவேண்டும். பெரியார் ஜாதியை அழிக்க விரும்பினார். ஆர்.எஸ்.எஸ். கும்பல் சாதியை நிலைநாட்ட விரும்புகிறது.

அரசுக்கு கோவில் மீது உரிமை கூடாது என்கிறது ஆர்.எஸ்.எஸ். இந்து அறநிலையத் துறையை மூடத் திட்டம் தீட்டுகிறது ஆர்.எஸ்.எஸ். கோவில்களை மீட்போம் என்ற பெயரில் தனது நடவடிக்கைகளைத் தொடங்கியிருக்கிறது. சுப்பிரமணிய சாமி புள்ளி விவரங்களோடு பேசுகிறார். தமிழகத்தில் கோவில்களுக்குச் சொந்தமாக கிராமப்புறங்களில் 4.7 இலட்சம் ஏக்கர் விவசாய நிலம் இருக்கிறது.  2.6 கோடி சதுர அடி நிலம் இருக்கிறது. நகர்ப்புறங்களில், 20 கோடி ச.அடி. இடம் இருக்கிறது. இதனை மொத்தமாக சுருட்டிக் கொள்ள ஆர்.எஸ்.எஸ். கும்பல் விழைகிறது. வெறும் விநாயகர் ஊர்வலத்தை மட்டும் வைத்துக் கொண்டு நாடு முழுக்க இவ்வளவு பெரிய கலவரங்களைச் செய்தவர்கள், கோவில்களைக் கைப்பற்றினால் என்ன நடக்கும்?

சி.பி. இராமசாமி ஐயர் கொடுத்த அறிக்கையில், தமிழகத்தின் பல்வேறு கோவில்களின் விக்கிரகங்கள், நகைகள், நிலங்கள் பிராமணர்களால் திருடப்பட்டுள்ளன என்று தெரிவித்திருந்தார். இந்த அறிக்கையின் அடிப்படையில் தான் இந்து அறநிலையத் துறை வசம் கோவில்கள் ஒப்படைக்கப்பட்டன.

கடந்த 1993 -ம் ஆண்டு மே மாதம், ம.க.இ.க கருவறை நுழைவுப் போராட்டம் நடத்தியது. மே -1 அன்று சுமார் 1000 பேரை தடுத்து கைது செய்து ரிமாண்ட் செய்தது. மே 24 அன்று பெண்கள் உட்பட தோழர்கள் கருவறைக்கு உள்ளே நுழைந்து பெரியார் அம்பேதக்ர் படம் வைத்தும் போட்டோ எடுத்தனர். அப்போது ம.க.இ.க. -வினர் நீதிமன்றத்தில் உள்ளே சென்றோம் எனக் கூறினர். ஆனால் சாட்சி சொல்ல வந்த பார்ப்பனர்கள் யாரும் அவர்களைப் பார்க்கவில்லை எனக் கூறிவிட்டுச் சென்றனர்.

இவ்வழக்கு வெற்றி எனப் பேசுகிறார்கள். அது நடைபெறவில்லை. அரசியல் சட்டம் அப்படி ஒளிரவில்லை. தற்போது அர்ச்சகர் வழக்குத் தீர்ப்பு, யானையை பானைக்குள் அடைக்கத் தடையில்லை என்பதைப் போன்றதுதான்.

அன்று நூற்றுக்கணக்கான பாளையக்காரர்கள், குறுநில மன்னர்கள் கட்டப் பஞ்சாயத்து செய்தது போல் இன்று உச்சநீதிமன்றமும், உயர்நீதிமன்றங்களும் செய்கின்றன. சாதி உரிமைகளை அரசியல் சட்டம் 25, 26 பாதுகாக்கிறது. வெறும் இந்துத்துவம் மட்டும் அல்ல அனைத்தும் மதங்களிலும் நடக்கும் ஒடுக்குமுறைக்கு துணை நிற்கிறது.

அம்பேத்கர் இந்த அரசியல் சட்டத்தை கொளுத்துவேன் என்றார். பெரியார் 1957 -லேயே கொளுத்திவிட்டார். இது கொளுத்தப்பட வேண்டியது. இப்பிரச்சினையை நீதிமன்றத்தில் தீர்க்க முடியாது. பிரச்சினையை தெருவில் தான் தீர்க்கவேண்டும்.

 

 

சந்தா