Monday, February 24, 2020
முகப்பு செய்தி சுவிசில் உதார் விட்ட மோடி !

சுவிசில் உதார் விட்ட மோடி !

-

சுவிட்சர்லாந்து நாட்டின் டாவோசில் நடைபெற்ற உலக பொருளாதார மாநாட்டில் இந்தியாவை மோடி சந்தைப்படுத்திக் கொண்டிருந்த அதே நேரத்தில் தான் இந்தியாவில் 2017 -ம் ஆண்டு திரட்டப்பட்ட ஒட்டுமொத்த செல்வத்தில் 73 விழுக்காட்டை வெறும் 1 விழுக்காட்டு இந்திய பணக்காரர்கள் வசம் இருப்பதாக ஆக்ஸ்ஃபாம் நிறுவன அறிக்கை கூறியிருக்கிறது.

டாவோஸ் மாநாட்டில் மோடியால் சந்தைப்படுத்தப்பட்ட பணக்கார இந்தியாவுக்கும் உண்மையான ஏழை இந்தியாவுக்கும் இடையேயான முரண்பாடுகள் தான் ஆக்ஸ்ஃபாம் அறிக்கையில் வெளிவந்திருக்கிறது.

இந்நிலையில் டாவோசின் கடுங்குளிரிலும் அங்கு குழுமிய உலக கார்ப்பரேட் கும்பல்களின் பிரதிநிதிகளுக்கு இதமளித்த மோடியின் வாய்ஜாலங்கள் சிலவற்றை பார்ப்பது காலத்தின் கட்டாயம்.

“கடன்மதிப்பீட்டை சீர்செய்ய நாங்கள் செய்த சீர்திருத்தங்கள் பற்றி நீங்கள் அறிவீர்கள். ஆனால் இந்திய மக்கள் அவற்றை ஏற்றுக்கொண்டது தான் அதைவிட இன்றியமையாதது”

பெருமை பொங்க மோடி கூறிய அந்த சீர்திருத்தங்களான பணமதிப்பழிப்பு மற்றும் பொருட்கள் மற்றும் சேவை வரியின் யோக்கியதை குறித்து இரகுராம்ராஜன், அமர்த்தியா சென் உள்ளிட்ட முதலாளித்துவ பொருளாதார அறிஞர்கள் ஏற்கனவே காறித் துப்பியுள்ளனர். ஏனெனில் ஆர்.எஸ்.எஸ் கும்பல் உறுதியளித்த அந்த நல்ல மாற்றங்கள் கண்ணுக்கு இன்னும் புலப்படவேயில்லை. மாறாக முதலாளித்துவ அளவுகோலின் படியே இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சி கடுமையாக சரிந்துவிட்டது.

“சிவப்பு நாடாவை ஓரங்கட்டிவிட்டு சிவப்பு கம்பளம்”

சமீபத்தில் 100 விழுக்காடு அந்நிய நேரடி முதலீட்டை மேக் இன் இந்தியா திட்டத்திற்காக அனுமதித்ததையே திருவாளர் 56 இஞ்சு இங்கே குறிப்பிடுகிறார்.

ஏற்கனவே பாரிஸ் சுற்றுச்சூழல் மாநாட்டில் 2022 –ம் ஆண்டிற்குள் சூரிய, காற்று மற்றும் உயிரி எரிசக்தி மூலம் 175 ஜிகா வாட்ஸ் மின்சாரம் தயாரிக்க திட்டமிட்டு இருப்பதாக மோடி உறுதி பூண்டிருந்தார். ஆயினும் அதை நடைமுறைப்படுத்த இதுவரை எந்த ஆக்கபூர்வமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதானி உள்ளிட்ட சில தரகு முதலாளிகளைத் தவிர ஏனைய இந்தியாவின் தேசிய தொழில் முனைவோர்களை மோடி அரசு ஒழித்து விட்டது.

இந்நிலையில் உள்நாட்டு சூரிய எரிசக்தி தகடு உற்பத்தி தேவையான பற்றாக்குறையாக உள்ள நிலையில் சீனாவின் மலிவான சூரிய எரிசக்தி தகடிற்கு 60 விழுக்காடு காப்பீடு வரி விதித்து நெருக்கடியை மோடி அரசு மேலும் அதிகரித்து விட்டது.

“இந்தியர்கள் வேலைத்தேடுபவராக இல்லாமல் வேலைகளை உருவாக்குபவராக இருக்க வேண்டும் என்பதே என்னுடைய குறிக்கோள்”

இந்தியப் பொருளாதாரத்தின் மீதான சங்க பரிவாரங்களின் கடுமையான நடவடிக்கைகள் வேலைதேடுபவர்களையும் தொழில் முனைவோர்களையும் ஒருசேர கடுமையாக பாதித்திருக்கிறது. தொழில் முனைவோர்களை ஊக்குவிப்பதாக கூறிக்கொண்டு மோடி தொடங்கிய “ஸ்டார்ட்அப் இந்தியா” இரண்டாண்டுகளுக்குப் பிறகு படுதோல்வியை தழுவி இருக்கிறது.

முத்ரா திட்டம் உருவாக்கியதாக மோடி கூறும் 200 ரூபாய் சம்பாதிக்கும் போண்டா சுடும் தொழில் முனைவோர்களையும் உள்ளடக்கிப் பார்த்தாலும் வேலை வாய்ப்புகள் அதிகரிக்கவில்லை என்பதே நடைமுறை உண்மையாக இருக்கிறது.

முறைசார்ந்த துறைகளில் 2009 ஆண்டு 8.7 இலட்சமாக இருந்த வேலை வாய்ப்புகள் 2016 ஆண்டு புள்ளிவிவரங்கள் படி வெறும் 1.35 இலட்சமாக சுருங்கி விட்டது மென்பொருள் நிறுவனங்கள் உள்ளிட்ட சேவைத்துறை நிறுவனங்களில் தொடர்ச்சியாக நடக்கும் ஆட்குறைப்பு பிரச்சினைகள் உண்மையான இந்தியாவை நமக்கு படம் பிடித்து காட்டிக் கொண்டே இருக்கிறது.

“வங்கிக்கணக்குகளை கோடிக்கணக்கான மக்களுக்கு தொடங்கியதாக இருக்கட்டும் அல்லது மானியங்களை டிஜிட்டல் இந்தியா மூலம் நேரடியாக மக்களிடம் சேர்த்ததாக இருக்கட்டும் அனைவைரையும் உள்ளடக்குவது தான் என்னுடைய ஒவ்வொரு நடவடிக்கையின் அடிப்படை தத்துவமாகும்”

ஆனால் விவசாயிகள், தொழிலாளர்கள் உள்ளிட்ட வாழ வழியற்று நிற்கதியில் கிடக்கும் கோடிக்கணக்கான மக்களுக்கு வெறுமனே வங்கிக்கணக்கை தொடங்கி என்ன பயன்? மோடி கும்பலால் பீற்றப்பட்ட ஆதாரின் யோக்கியதையை திரிபூன் பத்திரிக்கை நாரடித்துவிட்டது.

ஆஷா ஊழியர்களை மட்டுமே நம்பியிருக்கும் சுகாதார அமைப்பினால் மரணிக்கும் உத்திரப்பிரதேசத்தின் கருவுற்றப் பெண்கள், அற்பமான மென்பொருள் பிரச்சினைகளால் உதவித்தொகை கிடைக்காமல் அல்லலுறும் இராஜஸ்தான் தாய்மார்கள் என்று உள்ளூர் இந்தியாவில் விற்காத டிஜிட்டல் இந்தியா சரக்கை மேக் இன் இந்தியாவாக டாவோசில் விற்று என்ன பயன்?

“தீவிரவாதம் அபாயகரமானது. நல்ல தீவிரவாதிகள் கெட்ட தீவிரவாதிகள் என்ற வரையறையும் தான் மிகவும் அபாயகரமானது. படித்த இளைஞர்கள் அதற்கு பலியாகிறார்கள்”

இது காஷ்மீர் விவகாரங்களில் தலையிடும் பாகிஸ்தானுக்காக கூறப்பட்டது. பாகிஸ்தானைத் தாக்கும் தீவிரவாதிகள் கெட்டவர்கள் மற்றும் இந்தியாவைத் தாக்கும் தீவிரவாதிகள் நல்லவர்கள் என்பது பாகிஸ்தானுடைய கொள்கை என்று பொதுவாக விமர்சனம் வைக்கப்படுகிறது.

இந்தியாவின் இந்துத்துவ பயங்கரவாதிகளைப் பற்றி மூச்சே விடாமல் பாகிஸ்தானை மட்டும் கைக்காட்டி விடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளது இந்துத்துவ கும்பல். சான்றாக முசாபர் நகர் கலவர குற்றவாளிகளை விடுவிப்பதன் மூலம் தனக்கு வந்தால் ரத்தம், பாகிஸ்தானுக்கு மட்டும் தக்காளி சட்னி என்று மடைமாற்றுகிறார்கள்.

“30 ஆண்டுகளுக்குப் பிறகு எங்களுக்கு தனிப்பெரும்பான்மையை இந்திய மக்கள் கொடுத்துள்ளனர். எந்த ஒரு தனிப்பட்ட சமூகத்திற்கும் இல்லாமல் அனைவரையும் உள்ளடக்கிய மேம்பாட்டிற்காக நாங்கள் உறுதி பூண்டுள்ளோம். “அனைவருக்கும் ஆதரவு, அனைவருக்கும் மேம்பாடு” என்பதே எங்களது மோட்டோ”

தாத்ரியில் மாட்டுக்கறி வைத்திருந்ததாக கூறி முகமத் அக்லக்கை படுகொலை செய்த ரவின் சிசொடியாவிற்கு மூவர்ண கொடி போர்த்தி மரியாதையை செய்தது பா.ஜ.க கும்பல். சமீபத்தில் நடந்த குஜராத் சட்டமன்ற தேர்தலில் போது கூட இந்து-முஸ்லிம் பிரிவினையைத் தூண்டும் விதமாக பேச மோடி தவறவில்லை. ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக குற்றங்கள் நடக்கும் போதெலாம் சில்லிடும் தியானத்தில் ஆழ்ந்து விடுகிறார் மோடி.

இன்னும் எட்டு ஆண்டுகளில் அதாவது 2025-ல் இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தியை 5 டிரில்லியன் அமெரிக்க டாலராக உயர்த்த இலக்கு நிர்ணயித்திருப்பதாக மாநாட்டில் மோடி கூறினார். ஆனால் தாராளமயம் நடைமுறைப்படுத்தப்பட்ட இந்த 25 ஆண்டுகளில் இந்தியாவின் பணக்கார தனிநபர்களின் செல்வம் தான் உயர்ந்திருக்கிறதே ஒழிய ஏழைகளில் இருப்பிடம் இந்தியா என்று ஆக்ஸ்ஃபாம் அறிக்கையும் 2017 டிசம்பர் மாதம் வெளியான உலக ஏற்றத்தாழ்வு அறிக்கையும் கட்டியங் கூறுகின்றன.

மன்மோகன்சிங்கால் புகுத்தப்பட்டு 25 ஆண்டுகளுக்குப் பிறகு தாராளமய புண்ணியத்தால் வீங்கிய சேவைத்துறை வளர்ச்சியும் தற்போது தேக்கநிலைக்கு வந்திருக்கிறது. உண்மையில் நாட்டின் முதுகெலும்பான விவசாயத்துறையோ 30 விழுக்காட்டு பங்களிப்பிலிருந்து 15 விழுக்காடாக குறைந்துவிட்டது. உற்பத்தித்துறையிலும் எந்த வளர்ச்சியுமில்லை.

கூரை ஏறி கோழி புடிக்காதவன் வானம் ஏறி வைகுண்டம் போனக் கதையாக “அனைவருக்கும் ஆதரவு, அனைவருக்கும் மேம்பாடு” என்று சரடு விடுகிறார் மோடி.

மேலும் :

 

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க