Wednesday, September 27, 2023
முகப்புசமூகம்சாதி – மதம்ஆகமம் அவாளுக்குத்தான் - இந்துக்களுக்கில்லை ! வீடியோ

ஆகமம் அவாளுக்குத்தான் – இந்துக்களுக்கில்லை ! வீடியோ

-

அனைத்து சாதியினரும் அர்ச்சகராக முடியாதா? தீர்ப்பு கூறுவது என்ன? இனி நாம் செய்ய வேண்டியது என்ன? என்ற தலைப்பில் 02.12.2017 அன்று சென்னையில் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் சார்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. அந்த கருத்தரங்கில் தோழர் ராஜூ மற்றும் அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் ஆற்றிய உரையின் வீடியோ…

தோழர் ராஜு ஆற்றிய உரையின் சுருக்கம்:

கருவறைக்குள் நுழைய நமக்கு உரிமையில்லை என்று சொல்லும் போது நாம் கோபமோ, அவமானமோ அடையவில்லை. பெரியார் இதனைத்தான் கோபமாக சாடினார். பொதுவாக உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் பல ஆண்டுகள் இழுத்தடித்துத் தீர்ப்பு வரும். ஆனால் தீட்சிதர் வழக்கு மட்டும் வெகு விரைவாக விசாரிக்கப்பட்டது.

இவ்வழக்கில் கடந்த 2009 -ம் ஆண்டு, அம்மாணவர்களைத் தேடி ஒருங்கிணைத்து அந்த வழக்கில் ஈடுபடுத்தினோம். அதற்கு முன்னால் அம்மாணவர்கள் அனைத்து தலைவர்களையும் பார்த்தார்கள். நம்பினார்கள். இவ்வழக்கை பார்ப்பனர்கள் தங்களுக்கு ஏற்ற நீதிபதி வரும் வரை இழுத்தடித்தார்கள்.

இவ்வழக்கை ம.உ.பா.மை கையிலெடுத்த போது, இறுதி விசாரணைக்கு உச்சநீதிமன்றத்தில் பெரிய வக்கீல் பிடிப்பது சாதாரண விசயம் கிடையாது. திமுக, திக என யாரும் முன் வரவில்லை. உச்சநீதிமன்றத்தில் மதுரை சிவாச்சாரியார்கள் சார்பில் வாதாடும் பார்ப்பன வக்கீல் அடுத்து என்ன பொய் சொல்வான் என வாய்பார்த்து காத்திருக்க வேண்டும். அவன் சொன்ன பொய்யை உடைக்க முயற்சிக்க வேண்டும். ஆகமத்தில் அப்படி பார்ப்பனர்கள் தான் அர்ச்சகர்களாக வரவேண்டும் என்பது கிடையாது.

இங்கு நீதியை சீர்குலைத்த உச்சநீதிமன்றம், தற்போது ஹதியா வழக்கிலும் அடிப்படை மனித உரிமைகளில் கை வைத்திருக்கிறது. தனது இந்து மத சார்பை வெளிப்படுத்தியுள்ளது. ஆகவே நீதிமன்றத்தில் இதற்குத் தீர்வு கிடையாது. இதற்கு மக்களின் ஆதரவு இன்றி வெற்றி பெற வேறு வாய்ப்புகள் ஏதும் கிடையாது. சங்கரராமனை ‘போட்டவர்கள்’ தான் பார்ப்பனர்கள். அவர்கள் சிதம்பரத்தில் நந்தனை கொளுத்தினாரகள். அது நந்தனின் தோல்வியல்ல. அது நந்தனின் போராட்டம்.

அதனை ஆறுமுகசாமி தொடர்ந்து நடத்தினார். வழக்கில் வென்று வந்த ஆறுமுகசாமிக்கு நயவஞ்சக தீட்சிதர்கள் மரியாதை செய்வதாக வந்தனர். ஆறுமுகச்சாமி தீட்சிதர்களின் மரியாதையை புறக்கணித்தார். அதுதான் போராட்ட உணர்வு, சுயமரியாதை உணர்வு. ஆகவே அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆக வேண்டுமெனில், மக்களைத் திரட்டி போராட்டம் நடத்துவதுதான் ஒரே தீர்வு.

*****

அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் உரை – வீடியோ

மாணவர் பாலகுரு பேசும் போது:

“எங்களுக்கு படித்து முடித்த பின்னர் சான்றிதழ் வழங்காமல் இழுத்தடித்தனர். ம.உ.பா.மையத்தினரின் முயற்சியால்தான் அனுமதி கிடைத்தது. அர்ச்சகர் பாடசாலையில், அனைத்து சாதியினருக்கும் சம ஒதுக்கீடு கொடுக்கப்பட்டிருந்தது.

படித்து முடித்த நாங்கள் வேலைக்கு எங்கு செல்வது எனத் தெரியவில்லை. எங்களுடன் படித்த மாணவர்கள், பல இடங்களில் பல வேலைகளுக்குச் சென்றுள்ளனர். அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்களை மக்கள் ஏற்றுக் கொள்கின்றனர். ஆனால் பார்ப்பனர்கள் மட்டும் ஏற்றுக் கொள்வதில்லை.

எங்களுக்கு கோவில்களில் பணி வழங்குவதற்கு ஆகமத்தின் பெயரால் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். ஆனால் திருச்செந்தூர் முருகன் கோவிலில், ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு இரவு 1 மணிக்கு நடை திறப்பு செய்யப்படுகிறது. இது ஆகம விதிகளுக்கு எதிரானது. ஆகமப் படி 9 மணிக்கு நடை சாத்த வேண்டும். மக்கள் அதிகமாக வர வர, வருமானம் வரும் போது இவர்கள ஆகமத்தை கண்டுகொள்வதில்லை. ஆகவே பார்ப்பனர்களுக்கு ஆகமம் முக்கியமில்லை, வருமானம் தான் முக்கியம்.”

மாணவர் வெங்கடேசன் பேசியது :

“அர்ச்சகர் பயிற்சிக்கு மாணவர்கள் தேர்வு என்பது கடினமான ஒன்று. ஒரு சென்டருக்கு ஒரு நாளைக்கு 1000 பேர் என மூன்று நாட்களுக்கு சுமார் 3000 பேர் நேர்முகத் தேர்வுக்கு வந்தனர். அவர்களில் வெறும் 40 பேர் மட்டும் தான் தேர்வு செய்யப்பட்டனர். அப்படித் தேர்வு செய்யப்பட்டவர்கள் தான் இப்போது படித்து முடித்தவர்களும். இது போல தமிழகம் முழுவதும் 6 சென்டரில் தேர்வு நடைபெற்றது.

நாங்கள் அனைவரும் தகுதி அடிப்படையில்தான் சேர்ந்தோம். மற்ற அனைத்து வேலைகளுக்கும் தகுதி தான் முக்கியம் என்கிறார்கள். மற்ற வேலைகளில் தகுதி தேவை ஆனால் அர்ச்சகருக்கு மட்டும் சாதிதான் தேவையா ?

அன்று கோவில் கட்ட தலைப் பிள்ளையை வெட்டிப் பலிகொடுத்து புதைத்து கட்டுவார்கள். இன்று அப்படி நடக்க முடியுமா ? இங்கு யாரும் பழைய முறையில் தான் செய்வேன் என்று பேசுவதில்லை. பிராமணன், வெறும் கோவில் பூசாரி வேலையை மட்டும் செய்வதாக இருந்தால் சரி, பிழைத்துக் கொள்ளட்டும் என விட்டுவிடலாம். மற்ற எல்லா வேலைகளிலும் அவர்கள் தான் இருக்கிறார்கள். ஆகவே அவர்களுக்கு காசு வரும் இடம்தான் முக்கியம்.

எங்களுக்கு சட்டத்தின் படி நடவடிக்கை எடுத்தால் போதும். நீதிபதிகள் சட்டத்தின்படி செயல்பட்டால் எங்களுக்கு விடிவு கிடைக்கும். ஆனால் அப்படி நடப்பதில்லை. அவர்கள் யாருக்காகவோ பயப்படுகிறார்கள்.

எங்களுக்கு தொடக்கத்தில் இருந்து ஆதரவாக ம.உ.பா.மை. வழக்கறிஞர்கள் உதவி இருக்கிறார்கள். இன்றைய முதல்வர் எங்களுக்கு உதவியைச் செய்வாரா ? எங்களுக்கு யார் உதவுவார்கள். மக்கள் அனைவரும் எங்களுக்கு ஆதரவாக இருந்தால் தான் எங்களுக்கு விடிவு கிடைக்கும்.”

மாணவர்  திருமுருகன் பேசியது :

“2006 -ல் நாங்கள் அர்ச்சகர் பயிற்சி பெற்றோம். ஆகமத்தில் அப்படி இந்த சாதிதான் அர்ச்சகர் வேலை செய்யவேண்டும் என்று கூறுகிறது என்றால் ஆகம விதிப்படி வெளிநாட்டுக்குச் செல்லக் கூடாது. ஆனால் அமெரிக்காவில் சென்று கோவில்கட்டியிருகிறார்கள். அங்கு போய் பூஜை செய்கிறார்கள். அதற்கு அவர்கள் ஆகமம் பார்ப்பது இல்லை. அதற்குக் காரணம் பணம்தான். பெரியார் சொன்னபடி அனைவரும் சமம் என்ற வகையில் ஒரு நிலைமை வரும்வரைக்கும் நாம் போராடுவோம்.”

அரங்கநாதன் – மாணவர் சங்கத் தலைவர் பேசியது :

“கேரளாவில் அர்ச்சகர்களாக பிராமணரல்லாதவர்கள் 36 பேரை சேர்த்துள்ளார்கள். அது வரவேற்கத்தக்கது. கடந்த 2007- 2008 – பயிற்சி முடித்த மாணவர்கள் வேலையின்றி இருக்கிறாரகள். மதுரை ஆதி சிவாச்சாரியார்கள் உச்சநீதிமன்றத்தில் தடையாணை வாங்கியிருக்கிறார்கள்.

கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் பலரும், பல வேலைகளில் இருந்து பாதியிலேயே வெளியேறி வந்து கலந்து கொண்டனர். அர்ச்சகர் பயிற்சி படித்துக் கொண்டிருக்கும் போது அங்கு சமஸ்கிருதம், தமிழ் ஆசிரியர்கள் சொல்லிக் கொடுத்தனர்.

எங்களுக்கு சமஸ்கிருதம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்த ஐயரை மிரட்டி எங்களுக்கு சொல்லித்தரப் போகக்கூடாது என்று மிரட்டினார்கள். சேலம் அருகில் இராமகிருஸ்ண ஜீவா என்ற பிராமண அர்ச்சகர் நாங்கள் கேட்டுக் கொண்டதன் விளைவாக சொல்லிக்கொடுத்துக் கொண்டிருந்தார். ஒரே மாதத்தில் அப்பகுதியைச் சேர்ந்த பிராமணர் சங்கத் தலைவர், அடியாள் வைத்து அவரை அடித்தனர். அவர் தனது சொந்த ஊருக்குப் போய்விட்டார். மீண்டும் மாணவர்கள் அங்கு சென்று அவரை சமாதானப்படுத்தி அழைத்து வந்து பாதுகாப்பு கொடுத்தனர்.

அதுமட்டுமல்ல, சிலை செய்து தருபவர்களை மிரட்டி பயிற்சிப் பள்ளிக்கு தரவேண்டிய சிலையை தடுத்தனர். அதன் பின்னர் வழக்குப் போட்டு பரீட்சை தள்ளி வைக்கப்படுகிறது. அனைத்து அரசியல் கட்சித்தலைவர்களையும் சந்தித்தும் எந்த பிரயோஜனமும் இல்லை. ம.உ.பா.ம. தான் சங்கமாக திரட்டி போராட்டத்தை எடுத்தது.

போராட்டத்தின் போது பெரியார் சிலைக்கு மாலை போட்டதற்கு இந்து முன்னணி கும்பல் மிரட்டியது. மிரட்டல் குறித்து புகார் கொடுத்த அன்று மாலை டி.எஸ்.பி அழைக்கிறார் என்றார்கள். அவரை சந்திக்கச் சென்ற போது, இந்து முன்னணி ஆட்கள் கடுமையாக தாக்கினர். அப்படி இருந்தும் போராட்டத்தைக் கைவிடவில்லை. அதன் பின்னர் மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ளே அமர்ந்து போராட்டம் நடத்தப்பட்டது.

“அர்ச்சகருக்கு பல் சொத்தை இருக்கக் கூடாது, மீசை, தாடி கூடாது. ஆனால் அப்படியா பார்ப்பனர்கள் இருக்கிறார்கள். இதே பார்ப்பனர்கள்தான் யாகத்தில் காபியை சூடு செய்து குடிக்கிறான். இந்து அமைப்புகள் அனைத்தும் பிராமனர்களுக்கு மட்டும் ஆதரவாக இருக்கிறாரகள்.”

கோர்ட்டை நம்பினோம். தீர்ப்பு எதிராக வந்தது, நான் தீட்சையை களைத்துவிட்டேன். தற்போது பேசிய பத்திரிக்கையாளர் சட்டமன்றத்தின் மூலமாக தீர்க்க வேண்டும் என்று சொன்னார். ஆனால் அனைத்து ஓட்டுக் கட்சிகளிடமும் காலில் விழாத குறையாக நாங்கள் கேட்டுவிட்டோம். ஆனால் அதில் எந்த பிரயோஜனமும் இல்லை. கருவறைத் தீண்டாமைக்கு எதிராக மக்கள் ஒன்று திரண்டு போராடினால் தான் தீர்வு காண முடியும்.”

 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க