privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்நீதிமன்றமா இராணுவ முகாமா ? நீதிபதி அரிபரந்தாமன் (ஓய்வு) - தோழர் ராஜு உரை -...

நீதிமன்றமா இராணுவ முகாமா ? நீதிபதி அரிபரந்தாமன் (ஓய்வு) – தோழர் ராஜு உரை – வீடியோ

-

“ஜனநாயகத்துக்கு பேராபத்து” நாட்டு மக்களை எச்சரிக்கிறார்கள் உச்சநீதிமன்ற நீதிபதிகள் ! என்ற தலைப்பின் கீழ் சென்னையில் 21.01.2018 அன்று மக்கள் அதிகாரத்தின் சார்பில் அரங்கக்கூட்டம் நடைப்பெற்றது. இதில் வழக்கறிஞர்கள், ஜனநாயக சக்திகள், பொதுமக்கள் என திரளாக கலந்து கொண்டனர்.

இதன் முந்தைய பாகம் “ஜனநாயகத்திற்கு பேராபத்து” மக்கள் அதிகாரம் அரங்கக்கூட்டம் !

நிகழ்ச்சியில் வழக்கறிஞர் பாலன் ஆற்றிய உரையின் சுருக்கம்:

“நீதித்துறையிலும், நிர்வாக துறையிலும் பாசிசம் கோலோச்சுகிறது. பாசிசத்தால் பன்சாரே, கல்பூர்கி, தபோல்கர், கௌரி லங்கேஷ் கொல்லப்பட்டார்கள். நீதிபதிகள் பத்திரிக்கையாளர் சந்திப்பிற்கும், லோயா வழக்கிற்கும் சம்பந்தம் இருக்கிறதா? இருக்கிறது.

வழக்கறிஞர் பாலன்

2005, நவம்பர் 26, குஜராத்தில் சொராபுதின் சேக் என்பவர் IPS உயரதிகாரிகளால் கொல்லப்படுகிறார். அவரை கொலை செய்த அன்றே அவருடைய மனைவி கைது செய்யப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்படுகிறார். இது நிர்வாக துறையில் பாசிசத்தின் ஊடுருவல்.

குஜராத்தில் அமித்ஷா, மோடி உள்ளிட்டோர் மீது ஒரு பொதுநல வழக்கு போடப்படகிறது. நீதிபதி ஜெயின் பாட்டேல் முன் இந்த வழக்கு வருகிறது. அவர் சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிடுகிறார். உடனே அவரை இடமாற்றம் செய்கிறார்கள். இது தான் பாசிச தன்மை நீதித்துறையில் ஊடுருவல்.

குஜராத்திலிருந்து மகாராஷ்டிராவிற்கு வழக்கு மாற்றப்படுகிறது. அங்கு ‘உத்பட்’ என்ற நீதிபதி முன்னால் வழக்கு வருகிறது, அவர் அமித்ஷாவை வழக்கில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிடுகிறார். உடனே அவரும் இடமாற்றம் செய்யப்படுகிறார். அதற்பின் தான் லோயா வருகிறார். அவருக்கு பல வகையில் மிரட்டல் விடப்படுகிறது.

பணம் வாங்கி கொள், இல்லையென்றால் செத்துவிடு என்று போனில் குறுஞ்செய்திகள் வருகிறது. மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாக்கப்படுகிறார். தந்தையிடம் இந்த விசயங்கள் அனைத்தையும் வெளிப்படுத்துகிறார். நாக்பூருக்கு திருமணத்திற்கு சென்ற அவர் மர்மமான முறையில் கொல்லப்படுகிறார். அதில் பல சந்தேகங்கள் இருக்கின்றன.

அவர் செய்த குற்றம் என்ன? அவர் நேர்மையானவர் என்பது தான். அவர் இறந்த பிறகு கோசவி என்று ஒரு நீதிபதி அந்த வழக்கை விசாரிக்கிறார். இரண்டு நாளில் 10,000 பக்கங்களை கொண்ட சி.பி.ஐ ஆவணங்களை படித்து (!), வழக்கினை தள்ளுபடி செய்கிறார். அமித்ஷா குற்றமற்றவர் என்று நீக்கப்படுகிறார். இந்த வழக்கை எதிர்த்து ஒரு பொதுநல வழக்கு உச்சநீதிமன்றத்தில் போடப்படுகிறது. தலைமை நீதிபதியாக தமிழகத்தை சேர்ந்தவர் இருந்தார். அவர் அமித்ஷாவிற்கு சார்பாக தீர்ப்பு எழுதுகிறார். வெகுமதியாக கேரளாவின் கவர்னராகிறார். இது எல்லோருக்கும் தெரியும்.

லோயா மரணம் சந்தேகத்திற்கு உரியது என்று ஒரு பொது நல வழக்கு மும்பை நீதிமன்றத்தில், மும்பை வழக்கறிஞர்கள் போடுகிறார்கள். மும்பை நீதிமன்றம் இந்த வழக்கை எடுத்து கொள்கிறது. இந்த வழக்கு விசாரணையில் இருக்கும் போதே அதற்கு இணையான ஒரு வழக்கு உச்சநீதிமன்றத்தில் போடப்படுகிறது. தலைமை நீதிபதி மரபை மீறி 10 வது கோர்ட்க்கு வருகிறது. இந்த நான்கு நீதிபதிகள், தலைமை நீதிபதியை சந்திக்கிறார்கள். அதன் பிறகு தான் பத்திரிக்கையை சந்தித்து பேசுகிறார்கள். ஜனநாயகம் பேராபத்தில் இருக்கிறது என்கிறார்கள். மக்கள் முன்பு வைக்கிறார்கள்.

குஜராத்தில் ஹரேன் பாண்டியா? என்பவர் மோடி தான் குஜராத் படுகொலைக்கு காரணம் என்று கூறியதற்காக கொல்லப்படுகிறார். ஆர்.எஸ்.எஸ் -ஐ சேர்ந்த அவருடைய மனைவி மோடி தான் தன்னுடைய கணவரை கொன்றதாக கூறுகிறார். ஆனால் பல வருடங்களாகியும் நீதி கிடைக்கவில்லை.

இங்கு நடக்கும் நிகழ்வுகள் எதை காட்டுகிறது என்றால், இந்த நாட்டில் நீதி மறுக்கப்படுகிறது, வியாபாரமாக்கப்படுகிறது. நீதி தாமதமாக்கப்படுகிறது, பாசிசம் நெருங்குகிறது.” என தனது உரையை நிறைவு செய்தார்.

அவரைத் தொடர்ந்து ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி அரிபரந்தாமன் அவர்கள் ஆற்றிய உரையின் சுருக்கம்:

“நான்கு நீதிபதிகளும் நம்மை விவாதிக்க சொல்லியிருக்கிறார்கள் அதற்காக இந்த கூட்டம். நீதிமன்ற அவமதிப்பு வழக்கு வந்து விடுமோ என்று அஞ்சி தான் ஊடங்கள் இதை பற்றி பேச மறுக்கிறார்கள். அரங்கில் உள்ளவர்களுக்கு நீதிமன்றத்தின் மீது மயக்கமோ, காதலோ இருக்காது என்றே நினைக்கிறேன்.

மேலும் சமீபத்தில் செவிலியர்கள் போராட்டம், அரசு ஊழியர்கள் போராட்டம், போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம், மருத்துவர்கள் போராட்டம் என எல்லா போராட்டங்களிலும், நீதிமன்றம் நீங்கள் முதலாளிகளுடன் பேசி கொள்ளுங்கள் என்று ஒதுங்கி நிற்காமல், மக்களுக்கு எதிராக பேசியது. இது என்ன ஜனநாயகம்? மக்களுக்கு என்ன தொடர்பு இருக்கிறது.

தமிழ்நாட்டில் நீதிமன்றத்திற்கும், ஜனநாயகத்திற்கும் சம்பந்தமே இல்லை. ராணுவ முகாம் போல இருப்பது நீதிமன்றம் என்று எப்படி சொல்ல முடியும், ராணுவம் போகும் வரை, மக்கள் சுலபமாக வந்து போகும் வரை ஜனநாயக அமைப்பு என்று சொல்ல முடியாது. மேலும் வழக்கறிஞர்கள் மீதான நடவடிக்கைகள் கொடுமையானது.

மக்களுக்கு நீதிமன்றத்தின் மீது நம்பிக்கை இருக்கிறது. சி.பி.ஐ மீது நம்பிக்கை இல்லை. வருமான வரித்துறையின் மீது நம்பிக்கை இல்லை. ஏன்னென்றால் பிடிப்பட்ட பிறகு என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. இப்போது நீதிமன்றத்தின் மீதான நம்பிக்கையும் பொய்த்து வருகிறது.

நான்கு நீதிபதிகள் வெளியில் வந்து பேட்டியளித்தது ஒரு அசாதாரண நிகழ்ச்சி. அவர்கள் கடுமையான குற்றச்சாட்டுகளை கூறியிருக்கிறார்கள். அவர்கள் ஏழு பக்க கடித்ததை வெளியிட்டுயிருக்கிறார்கள். நீதிமன்றத்தில் நடக்கும் நிகழ்வுகளை மக்கள் மன்றத்தில் வைக்கிறோம். ஜனநாயகத்திற்கு பேராபத்து என்று கூறியிருக்கின்றனர்.

மோடி அரசு வந்த பிறகு நீதிபதிகள் நியமனம் என்பது முற்றிலுமாக முடங்கியிருக்கிறது. சட்ட நாள் தினத்தில், வருடந்தோறும் கொண்டாடப்படுகிறது, அதில் பேசிய பிரதம மந்திரி, நீதிமன்றம் அவர்கள் எல்லைக்குள் செயல்பட வேண்டும், பொதுநல வழக்கு என்ற பெயரில், ஆட்சி செய்ய விரும்புகிறார்கள் என்று வெளிப்படையாக சொல்கிறார்.

1975 -ல் இந்திரகாந்தி அம்மையார் அவசரகால நிலையை அறிவித்தார், அப்போது ‘மிசா’ சட்டத்தின் மூலம் லட்சக்கணக்கானவர்களை, எந்தவித விசாரணையுமின்றி சிறையில் வைத்தார்கள். அதன் பிறகு ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தது. அடிப்படை உரிமைகள் நிறுத்தி வைக்கப்பட்டன.

ஜெயபிரகாஷ் நாராயணன் மீது போட்ட வழக்கு கூட விசாரிக்க முடியாது என்றார்கள். இரண்டு நீதிபதிகள் பல ஆண்டுகள் பயத்தில் தான் அப்படி நடந்து கொண்டோம் என மன்னிப்பு கேட்டனர். அது போல 20 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய மக்கள் எங்கள் மீது குற்றம் சொல்ல கூடாது என்பதற்காகவே நாங்கள் இப்போது வெளியில் வந்து பேசுகிறோம் என நான்கு நீதிபதிகளும் கூறியிருக்கின்றனர்.

ஜெயலலிதா இறந்ததால் ஜெயலலிதாவிற்கு குமாரசாமி தீர்ப்பு, சசிகலாவிற்கு குன்ஹா தீர்ப்பு என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு சொல்லியிருக்கிறது. அதனால் தான் ஜெயலலிதா படம் எல்லா இடங்களிலும் தொங்கி கொண்டிருக்கிறது. இது ஒரு கேலிக்கூத்து.

ஜனநாயக வெளி என்பது குறைந்து விட்டது. பிரகாஷ் ராஜ் சொல்வதை போல, கொலையை கொண்டாடுகிறார்கள், கொண்டாடுபவர்கள் மோடியை பின்பற்றுகிறார்கள் என்றார். இது தான் மிகவும் ஆபத்தானது. ஜனநாயகம் நெறிக்கப்படுகிறது. இது குறித்த விவாதங்கள் தொடர்ந்து நடக்க வேண்டும்.” என தனது உரையில் கூறியமர்ந்தார்.

இறுதியில் தொகுப்பாக மக்கள் அதிகாரம், மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜூ பேசுகையில்; “தேர்தல் ஆணையம் நடுநிலையானது, மத்திய, மாநில தேர்தல் ஆணையம் எதுவாக இருந்தாலும், அதிகாரிகள் அனைவரும் தேர்தல் ஆணையத்தின் கட்டுபாட்டில் இருக்கிறார்கள், இனி நேர்மையாக தேர்தல் நடக்கும், என்றார்கள்.

இந்த தேர்தல் ஆணையத்தின் அதிகாரிகளாக இருப்பவர்கள் யார்? இவர்கள் தான் கடந்த நாட்களில் நம்மிடம் லஞ்சம் வாங்கிய ஆர்.டி.ஓ, கலெக்டர், மாநகராட்சி ஆணையர்கள். இவர்கள் தான் இப்போது தேர்தல் அதிகாரிகளாக பேட்ஜை மாட்டி கொண்டு நிற்கிறார்கள். ஒரு மாதத்திற்கு முன்பே பால் கூடை, காய்கறி கூடையை சோதிக்கும் இவர்கள், தேர்தல் அன்று பணம் கொடுப்பதை தெரிவிக்க போன் செய்தால் யாரும் எடுக்க மாட்டார்கள்.

தேர்தல் ஆணையம் என்பது தன்னளவில் நேர்மையாக தேர்தலை நடத்த முடியாமல் தோற்று விட்டது. அதுவே நிரூபித்துவிட்டது. யாரும் இதை மறுக்க முடியாது.

அடுத்தது ரிசர்வ் வங்கி; மோடி அரசாங்கம் யாருக்கும் தெரிவிக்காமலேயே இரவோடு இரவாக பணமதிப்பிழப்பு நடவடிக்கையை அறிவித்துவிட்டது என்றார்கள். நடுநிலையானது, தனியமைப்பு என்பதெல்லாம் பாதுகாக்க முடியாமல் காலாவதியாகிவிட்டது.

மற்ற இடங்களில் பிரச்சனையென்றால் நீதிமன்றத்திற்கு போகலாம், நீதிமன்றத்திலேயே பிரச்சனையென்றால் எங்கு போவது. நீதித்துறையே சிக்கலில் உள்ளது. பாபர் மசூதி இடிப்பு வழக்கு, ஆதார் வழக்கு போன்ற முக்கிய வழக்குகள் நீதிமன்றத்தில் வருகின்றன. எச். ராஜா போன்றோரை நாம் விமர்சிக்கிறோம். அவரை போன்றோரை நீதிபதிகளாக நியமித்து விட்டால், கொள்ளைபுறமாக எல்லாவற்றையும் சாதித்து விடலாம் என்று நினைக்கிறார்கள்.

நீதிமன்றத்திற்குள்ளேயே தீர்க்க முடியும் என்று நினைத்திருந்தால், நீதிமன்றத்திற்கு வெளியே நீதிபதிகள், எங்களுக்கு வேறு வழியே இல்லை என்று ஏன் கூறினார்கள். ஆகவே தனிப்பட்ட முறையில், நீதித்துறையால் ஜனநாயகத்தை காப்பாற்றவில்லை தோல்வியடைந்துவிட்டது.
மக்கள் போராட்டம் தான் வெற்றியை சாதிக்கும்.

மக்களுடைய ஜனநாயகம் என்பது, நீதிபதிகள் தேர்வும், தீர்ப்பும், நடவடிக்கையும், பெரும்பான்மை மக்களின் கண்கானிப்பிற்கு உட்பட்டதாக, அவர்களை விமர்சனம் செய்ய வாய்ப்புள்ளதாக மாற்றப்படும் போது தான் ஜனநாயகம் இந்த நீதித்துறையில் பாதுகாக்கப்படும். ஆனால் இந்த அமைப்பு முறையில் இது சாத்தியமில்லை.

மக்கள் தேர்ந்தெடுத்த பிரதிநிதிகள் நீதித்துறையில் இருக்கும் போது தான் உண்மையாக ஜனநாயகத்தை நிலைநாட்ட முடியும். அனிதா, உச்சநீதிமன்றம் வரை சென்று, வேறு வழியில்லை என்று நினைத்ததால் தான் தற்கொலை செய்தார். நான்கு நீதிபதிகளிடம் கடைசி நிமிடம் வரை போராடி விட்டு வேறு வழியில்லை என்பதால் தான் வெளியே வந்தார்கள்.

நடுநிலையாளர்கள், நீதித்துறையும், நிர்வாகத்துறையும் தனித்தனியாக செயல்பட வேண்டும் என ஆசைப்படுகிறார்கள். ஆனால் அது சாத்தியமா? என்றால் இல்லை. காவிரி பிரச்சனையில் நீதிமன்ற தீர்ப்பை அமுல்படுத்த முடியுமா? பத்மாவதி படத்தை இவர்கள் அனுமதியில்லாமல் வெளியிட முடியுமா? யார் துப்பாக்கி வைத்திருக்கிறார்களோ? அவர்கள் தான் தீர்மானிக்கிறார்கள்.

மத்திய அரசு பன்னாட்டு நிறுவனங்களுக்கான கொள்கைகையையும், இந்துவத்தையும் அமுல்படுத்த இந்த குறைந்தபட்ச ஜனநாயகமும் தடையாக இருக்கிறது. அதனால் தான் நீதித்துறை, பத்திரிக்கைத்துறை, கல்வித்துறை என எல்லாத்துறையையும் பாசிசமாக மாற்றுகிறார்கள். அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை நிலவுகிறது.

மார்க்கண்டேய கட்ஜூ கூறியதை போல ஒட்டுமொத்த கட்டமைப்பும் நெருக்கடியில் இருக்கிறது. இதை இனி சரி செய்ய முடியாது. புரட்சி தான் வரனும் என்றார். அது தான் தீர்வு.” என தனது உரையை நிறைவு செய்தார்.

நிகழ்வின் இறுதியாக மக்கள் அதிகாரத்தின், சென்னை மண்டல் ஒருங்கிணைப்பாளர், தோழர் வெற்றிவேல் செழியன் அவர்கள் நன்றியுறை ஆற்றினார்.

இதன் முந்தைய பாகத்திற்கு கீழே உள்ள சுட்டியை அழுத்தவும் :

தகவல் :
மக்கள் அதிகாரம்,
சென்னை மண்டலம், தொடர்புக்கு : 91768 01656,
E-mail: ppchennaimu@gmail.com 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க