Monday, September 28, 2020
முகப்பு மறுகாலனியாக்கம் தொழிலாளர்கள் வல்லரசு ஜப்பானில் ஊழியர்களைக் கொல்லும் வேலைச் சுமை !

வல்லரசு ஜப்பானில் ஊழியர்களைக் கொல்லும் வேலைச் சுமை !

-

யிரை கொடுத்து வேலை செய்வது என்று சொல்லிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். உண்மையிலேயே வேலைக்காகத் தங்கள் உயிரைப் பறிகொடுத்த பலர் ஜப்பானில் இருந்திருக்கிறார்கள். எந்த அளவுக்கு என்றால் பணியிடங்களில் ஏற்படும் மரணங்களைக் குறிப்பதற்கு தனியே `கரோஷி` என்று ஒரு வார்த்தையைக் கண்டுபிடிக்கும் அளவுக்கு.

ஜோயி டோக்னாங் என்பவர் ஜப்பானின் மத்தியப் பகுதியில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். ஜப்பானைப் பொருத்தவரை பணியாற்றுவது என்றால் காலை பத்து மணி முதல் ஆறு மணி வரை வேலை செய்வது அல்ல. உறக்கம் கலைவதற்கு முன்பே அதிகாலை எழுந்து அலுவலகத்துக்கோ தொழிற்சாலைக்கோ சென்று விட வேண்டும். உணவு இடைவேளை என்பது பெயரளவுக்குதான். ஏதோ அள்ளிப் போட்டுக் கொண்டு இருக்கைக்குத் திரும்பிவிட வேண்டும். ஏற்கெனவே குவிந்திருக்கும் வேலைகளை செய்து முடிப்பதற்குள் புதிய சுமைகளை ஏற்றிக்கொண்டே போவார்கள். ஒவ்வொன்றுக்கும் காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டிருக்கும். குடும்பம், வீடு குழந்தைகள் எல்லாவற்றையும் மறந்துவிட்டு 24 மணி நேரமும் வேலையைப் பற்றி மட்டுமே சிந்தித்து, வேலையை மட்டுமே செய்துகொண்டு வாழ்ந்தால்தான் சம்பளம் வரும். இல்லாவிட்டால் சம்பளம் பறிபோவதோடு ஏச்சு, பேச்சுகளுக்கு அவமானங்களுக்கு ஆளாக வேண்டியிருக்கும்.

இதற்கெல்லாம் பயந்துதான் ஜோயி ஓடியோடி உழைத்துக்கொண்டிருந்தார். அவருடைய மனைவியும் மகளும் பிலிப்பைன்ஸில் இருந்தனர். இன்னும் மூன்று மாதங்களில் உங்களுடன் இணைந்து விடுவேன், பிறகு நாம் எல்லோரும் ஒன்றாக, மகிழ்ச்சியாக வாழலாம் என்று அவர்களுக்கு வாக்குறுதி அளித்திருந்தார் ஜோயி. எனவே தற்காலிகமாக மனைவி, மகள் இருவரையும் நினைவுகளில் இருந்து அப்புறப்படுத்திவிட்டு வேலையில் கரைந்து போனார்.

ஜோயி தங்கியிருந்தது பலரும் ஒன்று சேர்ந்து வசிக்கும், குறைந்த வாடகைக் குடியிருப்பு ஒன்றில். அலுகலகத்திலிருந்து கிளம்பி தூக்கக் கலக்கத்தோடு சென்று படுக்கையில் விழுந்து புரண்டு படுப்பதற்குள் ஒலிக்கும் அலாரத்தை அணைத்துவிட்டு எழுந்து விறுவிறுவென்று வேலைக்கு விரைந்து சென்றாக வேண்டும். சிறைச்சாலை கைதிகளைப்போல ஒவ்வொரு நாளும் முந்தைய நாளைப் போலவே இருக்கும். எல்லாம் முடிவுக்கு வரப்போகிறது. இன்னும் மூன்று மாதங்கள் மட்டுமே, பிறகு ஜப்பானுக்கு குட்பை சொல்லிவிடலாம் என்று கனவு கண்டபடி உறங்கப்போனார்.
எழுந்திருக்கவேயில்லை ஒருநாள். காரணம் மாரடைப்பு. நித்தம் நித்தம் அனுபவித்த மன அழுத்தத்தின் காரணமாக இருதயம் செயலிழந்துவிட்டது. இது நடந்து ஏப்ரல் 2014-ம் ஆண்டில். ஜோயியின் வயது 27 மட்டுமே. ஒவ்வொரு ஆண்டும் ஜோயியைப் போல் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் ஜப்பானில் பணிச்சுமை காரணமாக இன்னமும் மாரடைப்பால் மரணம், சிலருக்கு மன அழுத்தம், சிலர் அமைதியாகத் தற்கொலை செய்துகொண்டனர்.

பணிச்சுமை தாளாமல் பெருகும் கரோஷி கொலைகளை ஜப்பான் அரசாங்கம் நன்கு உணர்ந்திருக்கிறது. அது மட்டுமல்ல, ஐந்து தொழிலாளர்களில் ஒருவர் தீராத மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறார், அவர் அநேகமாக இறந்து விடுவார் என்பதையும் அரசு அறிந்தே இருக்கிறது. கரோஷியை முன்வைத்து பல்வேறு ஆய்வுகள் புள்ளிவிவரங்களுடன் வெளிவருவதையும்கூட அவர்கள் கவனித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். எடுத்துக்காட்டுக்கு, டிசம்பர் 2015 முதல் ஜனவரி 2016 வரை நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்படி 22 சதவிகிதத்துக்கும் அதிகமாக தனியார் நிறுவனங்கள் மாதத்துக்கு 80 மணி நேரம்வரை ஓவர்டைம் செய்யுமாறு தங்கள் ஊழியர்களைக் கட்டாயப்படுத்துவது தெரிய வந்துள்ளது.

இப்படிப் பலியாகிறவர்கள் ஆலைத் தொழிலாளர்கள் மட்டுமல்ல. கல்லூரிப் படிப்பு முடித்துவிட்டு ஜப்பானின் டெலிகாம் கம்பெனி ஒன்றில் பணியாற்றச் சென்ற நோயாவின் உற்சாகம் சில தினங்களுக்குள் வடிந்துவிட்டது. முதலையின் வாயைப்போல் கம்ப்யூட்டர் திரை அவரை அப்படியே உள்ளிழுத்துக் கொண்டுவிட்டது. கண் சிமிட்டக்கூட நேரமில்லை. அடுத்து, அடுத்து என்று டெட்லைன்கள் வளர்ந்து கொண்டே சென்றன. இடையில் ஒருமுறை ஒரு துக்க நிகழ்வில் பங்கேற்பதற்காக வீட்டுக்கு வந்த நோயா உள்ளே நுழைந்ததும் நுழையாததுமாக படுக்கையில் போய் விழுந்துவிட்டார். “அம்மா தயவு செய்து என்னைத் தூங்கவிடு. நான் தூங்கவேண்டும். என்னை எழுப்பாதே, ப்ளீஸ்!”

இரண்டு ஆண்டுகளில் நோயா இறந்துவிட்டார். கம்ப்யூட்டர் வேலை, நல்ல சம்பளம், வசதியான வாழ்க்கை என்றும் தன் மகனைப் பற்றிய பெருமிதத்தில் மிதந்து கொண்டிருந்த அவர் அம்மா அதிர்ச்சியில் உறைந்து போய் விட்டார். தன் மகனின் அசலான பணி வாழ்க்கை எப்படியிருந்தது என்பது அதற்குப் பிறகுதான் அவருக்குத் தெரிய வந்தது. அறைக்குச் சென்று உறங்கக் கூட நேரமில்லாமல் பலமுறை நோயா தனது மேஜையிலேயே சரிந்து உறங்கியிருக்கிறார். மன அழுத்தத்தைக் குறைக்கப் பல்வேறு மாத்திரை மருந்துகளை உட்கொள்ள ஆரம்பித்திருக்கிறார். ஓய்வின்றி 37 மணி நேரம் வரை தொடர்ச்சியாகப் பல முறை பணியாற்றியிருக்கிறார். சரியான உறக்கம், சரியான சாப்பாடு, மன நிம்மதி எதுவும் இல்லை. மாத்திரைகள்தான் அவரைப் பிழைக்க வைத்திருந்தது. இறுதியில் அதே மாத்திரைகள் அவருடைய உயிரையும் பறித்துவிட்டன. ஜோயியைப் போலவே 27 வயது நோயா கரோஷிக்கு இரையாகிவிட்டார்.

ஆனா அதிக வேலைப்பளு என்னை கொன்றுடுகிறது? நீங்கள் மரணத்திற்கு பிறகு பதவி உயர்த்தப்படுவீர்கள்.

அடங்க மறுக்கும் பசியுடன் கரோஷி ஜப்பானைச் சுழற்றியடித்துக் கொண்டிருக்கிறது. 2015 கிறிஸ்துமஸ் தினத்தன்று மட்சுரி என்னும் 24 வயது பெண் மாடியிலிருந்து குதித்துத் தற்கொலை செய்து கொண்டார். மாதம் 100 மணி நேரத்துக்கு மேல் ஓவர்டைம் செய்யுமாறு அவர் பணியாற்றிவந்த விளம்பர நிறுவனம் கட்டாயப்படுத்தியதால் மட்சுரிக்கு அதைத் தவிர வேறு வழி தெரியவில்லை. சில மணி நேர உறக்கத்துக்காக இறுதிவரை மட்சுரி ஏங்கித் தவித்திருப்பது தெரியவருகிறது.

ஓவர்டைம் என்றும் பெயருக்குதானே ஒழிய, பெரும்பாலான நிறுவனங்கள் அதற்காக கூடுதல் ஊதியம் எதையும் அளிப்பதில்லை. ஆரம்பத்தில் ஒப்புக் கொண்ட சம்பளப் பணத்தை மட்டுமே அவை வழங்குகின்றன. ஆனால் ஒப்புக்கொண்ட பணி நேரத்தைவிட இருமடங்கு நேரம் வேலை செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கின்றன. ஊழியர்களிடமிருந்து முடிந்தவரை உழைப்பைக் கசக்கிப் பிழிந்துகொள்ள வேண்டும் என்னும் வெறியுடன் செயற்கையாக வேலை நெருக்கடியை அவ்வப்போது உருவாக்கி, அசாதாரணமாக காலக்கெடுவை விதித்து ஊழியர்களை மனஅழுத்தத்துக்கும் தற்கொலைக்கும் தள்ளிவிடுகின்றன. ஊழியர்களின் உடல், மனம் இரண்டும் பாதிப்படையும் என்பது தெரிந்திருந்தும், கரோஷி மரணங்கள் அதிகரித்து வருவதைக் கண்ணால் கண்ட பிறகும் இந்நிறுவனங்கள் தங்களைச் சிறிதும் மாற்றிக் கொள்ளத் தயாராகயில்லை.

காரணம், இலாபவெறி, இதற்கு ஜப்பான் அரசின் அங்கீகாரமும் உண்டு. ஒவ்வொருமுறை கரோஷி நிகழும் போதும் முணுமுணுப்புகளும் எப்போதேனும் எதிர்ப்புகளும் கிளம்பும் என்றாலும் இவற்றால் பெரிய பாதிப்பு ஏற்பட்டுவிடாது என்பதை நிறுவனங்கள் உணர்ந்திருக்கின்றன. ஆம், தொழிலாளர் நலன்சார் சட்டதிட்டங்கள் இருக்கத்தான் செய்கின்றன. வேலை நேரம், விடுமுறை, குறைந்தபட்ச ஊதியம் போன்ற அங்கீகரிக்கப்பட்ட விதிமுறைகள் அனைத்தும் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால் அவையெல்லாமே காகிதத்தில் மட்டுமே சிறைபட்டுக் கிடக்கின்றன.

ஜப்பானியத் தொழிலாளர்களின் பிரச்சினை என்பது உலகம் முழுவதிலுமுள்ள தொழிலாளி வர்க்கத்தின் பிரச்சினையும் கூடத்தான்.

எடுத்துக்காட்டுக்கு, சட்டப்படி 60 மணி நேரம் மட்டுமே ஒரு மாதம் ஓவர்டைம் செய்யலாம் என்றொரு சட்டவிதியை அரசு கொண்டுவந்தது. ஆனால், இதையும் நிறுவனங்கள் கண்டுகொள்ளவில்லை. `அதிகப் பணி` என்று காரணம் சொல்லி 100 மணி நேரம் பணியாற்றும்படி ஊழியர்கள் கட்டாயப்படுத்தப்படுகின்றனர். இத்தகைய விதிமீறல்களை ஒவ்வொரு முறையும் கண்டும் காணாமலும் இருந்துவிடுகிறது அரசு. அந்த வகையில், அதிகரிக்கும் கரோஷி கொலைகளுக்குக் காரணம் தனியார் நிறுவனங்கள் மட்டுமல்ல, ஜப்பான் அரசும் தான்.

இலாபம். இந்த ஒன்றுக்காகத்தான் ஜப்பானிய ஊழியர்கள் தொடர்ந்து கொல்லப்பட்டு வருகிறார்கள். இலாபத்தைப் பெருக்குவதற்காக எதையும் செய்யத் தயாராக இருக்கின்றனர், முதலாளிகள். தனியார்களைப் பாதுகாக்க எதையும் செய்ய (அல்லது செய்யாமல் இருக்க) தயாராக இருக்கிறது அரசு. அரசு என்பதே முதலாளித்துவத்தின் அடியாள் படையல்லவா?

ஜோயி, நோயா, மட்சுரி ஆகிய பெயர்கள் வேண்டுமானால் நமக்கு அந்நியமானவையாக இருக்கலாம். ஆனால் அவர்களை வெவ்வேறு பெயர்களில் நாம் தினம் தினம் நம் வாழ்வில் சந்தித்துக் கொண்டுதான் இருக்கிறோம். கரோஷி என்பது வேண்டுமானால் ஜப்பானியச் சொல்லாக இருக்கலாம். ஆனால் ஜப்பானில் நடக்கும் எல்லாமே மற்ற நாடுகளிலும் நடைபெற்றுக் கொண்டிருப்பவைதாம். தொழிலாளர்களின் உழைப்பை உறிஞ்சிக்கொள்வதிலும், அவர்களை சுரண்டி ஒடுக்குவதிலும் வளர்ந்த நாடு, வளரும் நாடு இரண்டுக்கும் இடையில் எந்த வேறுபாடும் இல்லை. அந்த வகையில் ஜப்பானியத் தொழிலாளர்களின் பிரச்சினை என்பது உலகம் முழுவதிலுமுள்ள தொழிலாளி வர்க்கத்தின் பிரச்சினையும் கூடத்தான்.

– மருதன்

புதிய தொழிலாளி, ஜனவரி 2018
New Democratic Labour Front I.T. Employees Wing

 

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

 1. ‘கரோஷி’ என்ற வார்த்தை வேண்டுமானால் புதிதே தவிர தொழிலாளர்களைக் கசக்கிப் பிழிவது என்பது இந்தியாவில் காலம் காலமாக நடப்பதுதான்! 1985-87 இல் பரீதாபாதில் ஒரு டிராக்டர் கம்பெனியில் நான் பணி புரிந்த போது மற்ற எல்லாரையும் விட என் மேல் கசக்கிப் பிழிதல் மிகக் கொடுமையாக இருந்தது (அசிஸ்டன்ட் மேனேஜர் என்ற பெத்தப் பெயர் இருந்தாலும்!)

  காரணங்கள்:
  தமிழ்நாட்டிலிருந்து புதிதாக வந்தவன்,
  ஹிந்தி ரொம்ப சுமாராகத் தெரிந்தவன்,
  தில்லியில் அவசர உதவிக்குக் கூட நண்பர்களோ உறவினரோ இல்லாதவன்,
  உள்ளே நாயடி அடித்தாலும் வெளியே காப்பாற்ற ஆளில்லாதவன்,
  இன்னும் கன்பர்மேஷனுக்காகக் காத்திருக்கும் ப்ரொபேஷன் காரன்,
  திருமணமாகாதவன்தானே கம்பெனிக்கு 24x 7 உழைக்கட்டுமே என்ற ஆணவம்,
  புது வேலையாயிற்றே கற்றுக்கொள்ளட்டும் என்று நேரம் கொடுக்காமல் போட்டுத் தாக்கியது,
  செய்யும் வேலையைப் புகழ்ந்தால் நாளை நம் தலையில் உட்கார்ந்து விடுவானோ என்ற இன்செக்யூரிட்டி,
  பொதுவாகவே சென்னை, கொல்கத்தா போன்ற நகரங்களில் இருந்து வருபவர்களைப் பட்டிக்காட்டான் போலப் பார்க்கும் தில்லியின் பொதுப் புத்தி,
  தொழிலாளர் யூனியன் இருந்தாலும் ஒரு எக்சிக்யூட்டிவ் அதில் சேரத் தயங்குவான் என்பது அவர்களுக்கு நன்கு தெரிந்திருந்தது ,
  தில்லியில் எப்போதுமே ஆதிக்கம் செலுத்தும் ஒரு வகுப்பினர் உள்ளே நிறைந்திருந்தது என்று பட்டியல் போட்டுக் கொண்டே போகலாம்! 1987 இல் எப்படியோ தப்பித் பிழைத்து ஒரு மத்திய பொதுத் துறை நிறுவனத்தில் சேர்ந்தேன். போன உயிர் மீண்டு வந்தது!

  சினிமா விரும்பி

 2. காலம் காலமாக ஜப்பானிய மக்கள் உலகில் வேறெங்கும் இல்லாதபடி அடிமை தனத்தை எதிர்க்கும் மனநிலையே இல்லாமல் பழக்க பட்டவர்கள். கடவுள்களாக சோகன்களையும் சாமுரைகளையும் வணங்கி அடிமையாகவே இருந்து பழக்க படுத்த பட்டவர்கள். ஜப்பானியர்கள் எறும்பு காலனி போன்றவர்கள். இன்றும் பாலியலில் மிக வக்கிர சிந்தை கொண்ட படங்களை எடுப்பது, சிறார் பாலியல் படங்களுக்கு மறைமுக ஆதரவு முதல் கொண்டு நரமாமிசம் தின்றவனை வெளியில் விட்டுள்ளது போல பல குற்றசாட்டுகளுக்கு உள்ளாகிய மக்கள்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க