privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசமூகம்அறிவியல்-தொழில்நுட்பம்அறிவியல் பார்வையில் ஹோமியோபதி - சித்தா - ஆயர்வேதம் - யுனானி

அறிவியல் பார்வையில் ஹோமியோபதி – சித்தா – ஆயர்வேதம் – யுனானி

-

லகம் எனது பார்வையில்….. என்ற வலைபக்கத்தில் அன்னா வெளியிட்டிருக்கும் கட்டுரை இது. வினவு தளத்திலும் சில அறிவியல் – மகளிர் தினக் கட்டுரைகளை அன்னா எழுதியுள்ளார்.  நவீன மருத்துவத்திற்கும் மாற்று மருத்துவத்திற்கும் உள்ள முரணை எளிய முறையில் விளக்குகிறார், அன்னா. அவருக்கு எமது நன்றி!
– வினவு

மருத்துவத்திற்கும் மாற்று மருத்துவத்திற்கும் இடையிலான வேறுபாடு

இது பண்புடன் எனும் இதழில் சில வருடங்களுக்கு முன் வெளியான என் கட்டுரை. அத்தளம் இப்போது வேலை செய்யாததால் இங்கு பதிகிறேன்.

ம‌ருத்துவம் / மருந்துகள் என்றால் என்ன‌? எவை குறிப்பிட்ட‌ நோய்க‌ளை அல்ல‌து நோய்க‌ளின் அறிகுறிக‌ளை இயன்றளவு தீமையின்றி போக்க‌வோ குறைக்க‌வோ செய்கின்ற‌ன‌வோ, அவ்வாறு செய்வ‌தற்கு ஆதார‌ங்க‌ளைக் கொண்டிருக்கின்ற‌ன‌வோ அவையே ம‌ருந்துக‌ளாக‌ அங்கீக‌ரிக்க‌ப்ப‌ட்டுள்ள‌ன‌ என‌லாமா? அப்ப‌டியாயின் மாற்று ம‌ருத்துவ‌ம் என்றால் என்ன‌? உண்மையாக‌ அங்கீக‌ரிக்க‌ப்ப‌ட்ட‌ ம‌ருத்துவ‌ முறைக‌ளுக்கு முற்றிலும் எதிர்மாறான‌வையா? மாற்று ம‌ருத்துவ‌ம் செய்ப‌வ‌ர்க‌ள் உறுதியாக‌க் கூறுவ‌து போன்று அம் ‘ம‌ருந்துக‌ள்’ வேலை செய்வ‌த‌ற்கு ஏதாவது ஆதார‌ங்க‌ள் உள்ள‌ன‌வா?

ஒரு ம‌ருந்து குறிப்பிட்ட‌ ஒரு நோயைக் குண‌ப்ப‌டுத்த‌ உத‌வ‌லாம். அதை அந்நோயால் பாதிக்க‌ப்ப‌டும் ம‌க்க‌ளுக்கு ம‌ருந்தாக‌க் கொடுக்க‌லாம் என‌ எவ்வாறு முடிவு செய்வ‌ர் என‌ப் பார்க்க‌லாமா? ஒரு உண்மையான உதாரணத்தைக் கொண்டு விளக்கினால் இலகுவாக இருக்கும் என நினைக்கிறேன். அதனால் இத‌ற்கு உதார‌ண‌மாக‌ என‌து துறையில் த‌ற்போது ப‌ரிசோத‌னையில் இருக்கும் உங்க‌ள் அனைவ‌ருக்கும் அநேகமாக‌த் தெரிந்த‌ ஒரு ம‌ருந்தை எடுத்துக் கொள்வோம்.

வ‌யாக்ரா! இது த‌ற்போது ஏன் ப‌ய‌ன் ப‌டுத்த‌ப்ப‌டுகிற‌து என்பதற்கான‌ ஒரு காரணம்‌ எல்லோருக்கும் தெரிந்திருக்கும். இடுப்புப் பகுதிக்குச் செல்லும் இர‌த்த‌ நாள‌ங்க‌ளை விரிவ‌டைய‌ச் செய்வ‌த‌ன் மூலம் ஆண்க‌ளின் இடுப்புப் ப‌குதிக்கு இர‌த்த‌ ஓட்ட‌த்தை அதிக‌ரிக்க‌ச் செய்வதே வயாக்ரா பயன்படுத்தும் ஆண்களில் வேலை செய்ய முக்கிய காரணம். இத‌ன் இர‌சாய‌ன‌ப் பெய‌ர் sildenafil citrate.

மேற்சொன்ன விடயத்தை நினைவில் வைத்துக் கொண்டு, அதற்கு மிக வித்தியாசமான ஒரு விடயத்தைப் பற்றி சுருக்கமாக கீழ்க்காணும் பத்தியில் பார்ப்போம். இரண்டிற்குமான தொடர்பு இதை வாசித்ததும் புலப்படும்.

குழ‌ந்தை க‌ருப்பையில் விருத்திய‌டையும் போது தாயிட‌மிருந்து தேவையான‌ போஷாக்கு, வாயுக்க‌ளை குழ‌ந்தைக்குக் கொண்டு செல்ல‌வும் குழ‌ந்தையிட‌மிருந்து க‌ழிவுக‌ளை தாய்க்கு அனுப்ப‌வும் உத‌வும் அங்க‌ம் சூல்வித்த‌க‌ம் (placenta). க‌ருத்த‌ரித்த‌ உட‌னேயே க‌ருவிலிருந்து உருவாகும் சூல்வித்த‌க‌ செல்க‌ள் தாயின் க‌ருப்பை அக‌ப்ப‌ட‌லத்தினூடாக தாயின் க‌ருப்பையிலிருக்கும் இர‌த்த‌ நாளங்க‌ளை ஊடுருவி, அவற்றை முற்றாக மாற்றி மிக‌வும் விரிவ‌டைய‌ச் செய்யும். இதன் மூல‌ம் தாயின் க‌ருப்பை ஊடாக‌ சூல்வித்த‌க‌த்திற்கு இர‌த்த‌ ஓட்ட‌ம் மிக‌வும் அதிக‌ரிக்கும்.

அதிக‌ரித்த‌ இர‌த்த‌ ஓட்ட‌த்திலிருந்து குழந்தைக்குத் தேவையான‌வ‌ற்றை உறிஞ்சி எடுக்க சூல் வித்த‌க‌த்திற்கு இல‌குவாக‌ இருக்கும். குழ‌ந்தையின் ந‌ல் விருத்திக்கு க‌ருப்பையில் க‌ருக்க‌ட்டிய‌ ஆர‌ம்ப‌த்தில் ந‌ட‌க்கும் இம்மாற்ற‌ம் மிக‌வும் இன்றிய‌மையாத‌து. கரு வளர்ச்சி தடைப்படுவதால் குழந்தை வளர்ச்சி குன்றிப் பிறத்தல் (fetal growth restriction), மற்றும் pre-eclampsia என்று சொல்லப்படும் முன்சூழ்வலிப்பு / குருதி நஞ்சூட்டுதல் உட்பட‌ கருக்காலத்தில் வரும் பலவகையான நோய்களில் இந்த சூல்வித்தகம், அதன் இரத்த நாளங்கள் எவையும் நன்றாக விருத்தியடைந்து இருப்பதில்லை. இந்நோய்க‌ளுக்குத் த‌ற்ச‌ம‌ய‌ம் ம‌ருந்துக‌ள் எதுவும் இல்லை. இந்நோய்கள் பிறந்த குழந்தைகளைப் பலவகையில் பாதிக்கின்றன. அத்துடன் இந்நோய்க‌ளால் தாய்க்கும் குழ‌ந்தைக்கும் க‌ருக்கால‌த்தில் ம‌ட்டும‌ல்ல‌ குழ‌ந்தை பிற‌ந்து வ‌ள‌ர்ந்து பல வருடங்களின் பின்பும் இருவ‌ருக்கும் இத‌ய‌ நோய்க‌ள், நீரிழிவு நோய் என்ப‌ன‌ வ‌ரும் வாய்ப்பு மிக‌ அதிக‌ம்.

மேற்சொன்ன இரு விடயங்களையும் வாசித்ததும் யாருக்காவ‌து ஒரு திறமான எண்ணம் தோன்றியதா? என்னுட‌ன் வேலை செய்யும் ஒரு ம‌ருத்துவ‌ அறிவிய‌லாள‌ருக்கு வ‌ந்த‌து. வயாக்ரா ஏற்றுக்கொள்ளக் கூடிய பக்க விளைவுகளை மட்டுமே கொண்ட‌ பாதுகாப்பான‌ ம‌ருந்து. அது ஆண்க‌ளில் இடுப்புப் ப‌குதிக்கு இர‌த்த‌ ஓட்ட‌த்தை அதிக‌ரிக்கிற‌து. அது தானே மேற்சொன்ன‌ நோய்க‌ளால் பாதிக்க‌ப்ப‌டும் பெண்க‌ளுக்கும் தேவை. க‌ருப்பை இர‌த்த‌ நாள‌ங்க‌ளை விருத்திய‌டைய‌ச் செய்து சூல்வித்த‌க‌த்தின் இர‌த்த‌ ஓட்ட‌த்தை அதிக‌ரிக்க‌ச் செய்தால், சூல்வித்த‌க‌ம் ந‌ன்றாக‌ விருத்தியாவதால் வ‌ள‌ர்ச்சி குன்றிய‌ குழ‌ந்தைக‌ளுக்கு இத‌ன் மூல‌ம் ப‌ல‌ன் கிடைக்க‌லாம் இல்லையா?

திறமான எண்ணம் வ‌ந்த‌து ச‌ரி, அத‌ற்காக‌ இத‌ற்கு ஒரு ஆதார‌மும் இல்லாமல், எவ்வளவு வயாக்ரா கொடுக்க வேண்டும், எவ்வளவு தடவை கொடுக்க வேண்டும், அதனால் வேறு ஏதாவது பாதிப்பான‌ பக்க விளைவுகள் வருமா என்றெல்லாம் தெரியாமல் இந்நோய்க‌ளால் பாதிக்க‌ப்ப‌டும் கர்ப்பிணிப் பெண்க‌ளுக்கு கொடுப்ப‌து ச‌ரியாகாது தானே. வயாக்ரா இரத்த நாளங்களை விருத்தியடையச் செய்வது முதலே ஆய்வுகூட அடிப்படைப் பரிசோதனைகளில் கண்டுபிடித்தாயிற்று. அத‌னால் அடுத்து க‌ரு வ‌ள‌ர்ச்சி குன்றிய‌ க‌ருக்க‌ளைச் சும‌க்கும் சுண்டெலிக‌ளுக்கு வ‌யாக்ரா கொடுத்துப் பார்த்தார்க‌ள். தாய்ச் சுண்டெலிக‌ளின் சூல்வித்த‌க‌ இர‌த்த‌ நாள‌ங்க‌ள் ந‌ன்றாக‌ விருத்தி அடைந்த‌து ம‌ட்டும‌ன்றி பிற‌ந்த‌ குட்டிச் சுண்டெலிக‌ளும் ந‌ல்ல‌ நிறையுட‌ன் பிற‌ந்த‌ன (1)‌. இதே மாதிரி எலிக‌ள், கினியாப் ப‌ன்றிக‌ளில் செய்த‌ ப‌ரிசோத‌னைக‌ளிலும் வ‌யாக்ரா சாத‌க‌மான‌ முடிவுக‌ளையே த‌ந்த‌து.

சோதனை விலங்குகளில் மருந்து வேலை செய்தால், மனிதரில் வேலை செய்வதற்கு வாய்ப்பு அதிகம் இருப்பினும், ஒரு ஆதாரங்களும் இல்லாமல் மனிதரில் வேலை செய்யும் என நம்புவது மடத்தனம். அதனால் இவ்வாய்வின் அடுத்த கட்டமாக‌ க‌ருக்கால‌த்தில் மிக‌வும் ஆர‌ம்ப‌த்திலேயே குழந்தையின் வ‌ள‌ர்ச்சி குன்றி இருப்ப‌தாக‌க்  க‌ண்ட‌றியப்பட்ட 10 பெண்க‌ளிட‌ம் (இச்சந்தர்ப்பங்களில் சாதார‌ண‌மாக‌ பிர‌ச‌வ‌த்தின் போதே 50 சதவீத அளவு குழ‌ந்தைக‌ள் இற‌ந்து விடும்) அனும‌தி பெற்று அவ‌ர்க‌ளுக்கு வ‌யாக்ரா கொடுத்தார்க‌ள். அவ்வாறு வயாக்ரா சிகிச்சை அளிக்கப்பட்ட 10 கர்ப்பிணிப் பெண்களில் 9 பேருக்கு குழந்தைகள் பிழைத்தன, மட்டுமன்றி வைத்தியசாலையிலிருந்தும் குறைந்த காலத்திலேயே விடுவிக்கப்பட்டும் விட்டனர். ஓரே ஒரு குழந்தை மட்டுமே இறந்து பிறந்தது (2).

இந்த‌ ஆதார‌ம் போதுமா? இல்லவே இல்லை. ஒரு நோயைக் குணப்படுத்த ஒரு மருந்து அங்கீக‌ரிக்க‌ப்ப‌ட‌ வேண்டுமெனில் இத‌ற்கும் மேலாக இன்னுமொன்று செய்ய வேண்டும். அது தான் double blinded randomised clinical trial. வேறெந்தக் காரணிகளின் தாக்கமும் அற்று வயாக்ரா கொடுத்ததன் விளைவால் மட்டுமே குழந்தைகள் நற்சுகத்துடன் பிறந்தார்கள் என்பதை உறுதிப்படுத்த இது அத்தியாவசியமானது. அதாவ‌து வ‌யாக்ரா உண்மையில் இப்பெண்க‌ளுக்கும் குழ‌ந்தைக‌ளுக்கும் உத‌வுமா என‌ப் பார்க்க‌ ஒன்றுக்கும் மேற்ப‌ட்ட‌ நாடுக‌ளில் பல்வேறு கட்டங்களில் ப‌ல‌ நூறு க‌ரு வ‌ளர்ச்சி குன்றி இருக்கும் க‌ர்ப்பிணிப் பெண்க‌ளை எடுத்து அவ‌ர்க‌ளின் அனும‌தியுட‌ன் சில‌ருக்கு வ‌யாக்ராவும் சில‌ருக்கு வ‌யாக்ரா மாதிரியே இருக்கும் சும்மா ஒரு மாத்திரையும் கொடுக்க‌ வேண்டும்.

இதில் மாத்திரை கொடுக்கும் ம‌ருத்துவ‌ருக்கோ எடுக்கும் பெண்ணுக்கோ அது ம‌ருந்தா அல்ல‌து சும்மா மாத்திரையா என்று தெரிந்திருக்க‌க் கூடாது – அது தான் double blinding. ஏனெனில் மருத்துவருக்குத் தெரிந்தால் அவரை அறியாமலே அவரின் செய்கைகளும் உணர்ச்சிகளும் மருந்து கொடுக்கும் போது மாறுபடலாம். சில மருத்துவர்களிடம் போனால் அவர் மருந்து ஒன்றும் கொடுக்காமலே உங்களுக்கு வருத்தம் கொஞ்சம் குறைந்தது மாதிரி இருக்கும் அல்லவா? அதே போல் மருந்து தான் எடுக்கிறேன் என உண்மையில் நினைத்து சீனிக் குலுசையைப் போட்டாலும் சிலருக்கு சில நோய்கள் மாறிவிடும்*.

அதோடு வ‌யாக்ரா ம‌ருந்து எடுக்கும் குழுவில் நோயின் வீரிய‌ம் அதிக‌ம் இருக்கும் பெண்க‌ளும் சும்மா மாத்திரை எடுக்கும் குழுவில் நோயின் வீரிய‌ம் குறைந்த‌ பெண்க‌ளும் கூட‌ இருக்க‌க் கூடாது. இர‌ண்டு குழுக்க‌ளில் கிட்ட‌த்த‌ட்ட‌ எல்லா வித‌த்திலும் ச‌ம‌த்துவ‌மான‌ பெண்க‌ள் இருக்க‌ வேண்டும் – அது தான் randamisation. ஒரு நோயின் வீரியம் குறைவதற்கு ஒரு குறிப்பிட்ட மருந்து கொடுப்பவரினதும் நோயாளியினதும் மனநிலை / காட்டும் உணர்ச்சிகள், நோயின் வீரியம், நோயாளியின் வயது, வாழ்க்கை நிலை என்று எந்தக் காரணிகளும் அன்று அந்த மருந்து மட்டுமே காரணமாகுமா என அறிவதற்கு இவ்வாறான கட்டுப்பாடுகள் இன்றியமையாதது.

இந்த பரிசோதனையிலும் உண்மையில் வயாக்ரா கரு வளார்ச்சி குன்றிய குழந்தைகளின் வளர்ச்சியை ஊக்குவிக்கின்றது எனக் கண்டால், அதன் பின் வயாக்ரா கருக்காலத்தில் இந்நோயால் பாதிக்கப்படும் பெண்களுக்கு மருந்தாக ஆதாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்படும். தற்போது ஜரோப்பாவிலும் நியூசிலாந்திலும் இந்த double blinded randomised clinical trial செய்வதற்கான ஒழுங்குகள் நடந்து கொண்டிருக்கின்றன.

இவ்வளவு பாடுபடுவதற்கு முக்கிய காரணம் உலகில் எங்கோ ஓரிடத்தில் இவ்வாறான நோய்களால் ஒவ்வொரு நிமிடமும் ஒரு கர்ப்பிணிப் பெண் இறக்கிறாள். இந்த வகையான ஒவ்வொரு ஆராய்ச்சியின் இலக்குமே இந்த இறப்பு விகிதத்தைத் குறைப்பதும் இதனால் தாயினது சேயினதும் வாழ்க்கைத் தரத்தை நோயின்றி உயர்த்துவதுமே.

வ‌ழ‌க்க‌மான‌ ம‌ருத்துவ‌த்தில் ப‌ய‌ன்ப‌டுத்த‌ப்ப‌டும் ம‌ருந்துக‌ள் எவ்வாறு உட‌லில் வேலை செய்கின்ற‌ன‌? உட‌லில் என்ன‌ மாற்ற‌த்தைக் கொண்டு வ‌ருகின்ற‌ன‌? அவ‌ற்றால் ஏற்ப‌டும் ப‌க்க‌ விளைவுக‌ள் என்ன‌? ப‌க்க‌ விளைவுக‌ளை விட‌ அவ‌ற்றால் ஏற்ப‌டும் ந‌ன்மைக‌ள் அதிக‌மான‌வையா? அம்ம‌ருந்துக‌ள் உப‌யோகிப்ப‌தால் எதேனும் நீண்ட‌கால‌ தாக்க‌ங்க‌ள் உள்ள‌ன‌வா? என்ப‌தெல்லாம் அறிவிய‌ல் ஆய்வுக‌ளின் மூல‌ம் க‌ண்ட‌றிந்து ஆவணப்படுத்தப்படும். அதோடு தொட‌ர்ந்து அவ‌ற்றின் உப‌யோக‌ம், விளைவுக‌ளை பார்வையிட்டுக்கொண்டே இருப்ப‌ர்.

இனிக் கட்டுரையின் முதலில் கேட்டிருந்த கேள்விக்கு வருவோம். மாற்று ம‌ருத்துவ‌ம் செய்ப‌வ‌ர்க‌ள் உறுதியாக‌க் கூறுவ‌து போன்று அம் ‘ம‌ருந்துக‌ள்’ வேலை செய்வ‌த‌ற்கு என்ன‌வாவ‌து ஆதார‌ங்க‌ள் உள்ள‌ன‌வா? என்று. எதுவுமே இல்லை என்பதே அதற்கான பதிலாகும். அநேகமான மாற்று மருத்துவ முறைகளில் மேற்சொன்ன‌ வகையான ஆய்வுகள் எதுவுமே நடைபெறவில்லை.

ஆய்வுகள் நடந்த பலவற்றில் நோயின் வீரியத்தைக் குறைக்கும் தன்மையில் கொடுத்த மருந்துக்கும் சும்மா கொடுக்கப்பட்ட மருந்திற்கும் இடையில் எந்த வித்தியாசமும் இருக்கவில்லை. பல சமயம் இந்த மாற்று மருத்துவ முறைகளைச் செய்பவர்கள் இந்த மாதிரியான ஆய்விற்குத் தமது மருந்துகளை உட்படுத்த விரும்புவதுமில்லை. உலகில் எத்தனையோ வகையான மாற்று மருத்துவங்கள் உண்டு. ஆனால் இந்திய/இலங்கைச் சமூகத்தில் அதிகம் உபயோகத்தில் இருப்பவை ஆயுர்வேதம், யோகா, உனானி, சித்த வைத்தியம், ஹோமியோபதி. சுருக்கமாக AYUSH (Ayurveda, Yoga, Unani, Siddha, Homeopathy).

இக்கட்டுரைக்கு ஆயுர்வேதத்தையும் ஹோமியோபதியையும் உதாரணமாக எடுப்போம்.

முக்கியமாக ஆயுர்வேதத்தின் அடிப்படையான வதா, பிதா, கப்பா தோஸாக்கள் இருப்பதற்கே எந்தவித ஆதாரங்களும் இல்லை. ஆயுர்வேதத்தில் இருக்கும் சில மருந்துகள் சில குறிப்பிட்ட நோய்களுக்கு நிவாரணமாகுமென ஆதாரங்கள் உண்டு. ஆனால் பலவற்றிற்கு இல்லை. அதோடு வழக்கமான மருந்துகளிற்கு இருக்கும் சட்ட திட்டங்களுக்கேற்ப‌ இவ்வாயுர்வேத மருந்துகள் மதிப்பிடப்படுவதில்லை.

வெளிநாடுகளிற்கு இவை உணவுக் கூடுதல்களாகவே ஏற்றுமதி செய்யப்படுகின்றன. அதனால் வெளிநாடுகளில் மருந்துகளிற்கு இருக்கும் கடுமையான ஆய்வுகளுக்கு உட்படுத்தப்படுவதில்லை. பல ஆயுர்வேத மருந்துகளில் ஆபத்தான அளவுகளில் செம்பு, ஆர்சனிக் போன்ற இரசாயன மூலகங்கள் இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.

ஹோமியோபதிக்கு எந்தவித ஆதாரமுமே இல்லை. இன்னும் சொல்லப்போனால் ஹோமியோபதி மருந்துகளுக்குள் எதுவுமே இல்லை. அவர்கள் நோயைப் போக்கும் கூலகத்தை நீரில் பல்லாயிரம் தடவை நீர்க்கச் செய்து (ஜதாக்கி) (ஏனெனில் நீருக்கு ஞாபக சக்தி உண்டென்பது அவர்களின் ‘நம்பிக்கை’) அதன் பின் அந்நீரை மாத்திரையாக்குவார்கள். அம்மருந்தை எடுப்பதற்கும் நீங்கள் ஒரு சீனி மாத்திரையை எடுப்பதற்கும் எந்தவித வித்தியாசமும் இல்லை. அதனால் ஹோமியோபதி மருந்துகள் பாவிப்பதால் உங்களுக்கு பெரிதாக ஒரு தீங்கும் வராது.

ஆனால் உண்மையான மருந்துக்குப் பதிலாக அதைப் பாவித்தீர்களானால், அந்நோய் குணமடையாமல் அவதிப்படுவீர்கள். ஹோமியோபதி சிகிச்சையாளர்கள் தமது சிகிச்சை முறை உண்மையில் வேலைசெய்கிறது என விஞ்ஞான ரீதியில் ஆதாரபூர்வமாகக் காட்டினால் 10,000 பவுண்டுகள் பரிசாகத் தருவதாக Trick or Treatment என்ற புத்தகத்தின் எழுத்தாளார்கள் சவால் விட்டுள்ளனர். இதுவரைக்கும் யாரும் வெற்றி பெறவில்லை.

இம்மாதிரியான‌ மாற்று “ம‌ருத்துவ” முறைகள் மக்களைக் கவர்வதற்கு முக்கிய‌மாக நான்கு கார‌ண‌ங்க‌ளைக் கூற‌லாம்.

முதலாவது காரணம் :

இம்முறைக‌ள் எல்லாம் இய‌ற்கையானது / இரசாயனங்கள் ஏதும் அற்றது என‌ இம்முறைக‌ளைச் செய்ப‌வ‌ர்க‌ள் கூறுவ‌து. இக்கூற்று மிக‌வும் கேலிக்குரிய‌து. ஏனெனில் நீங்க‌ள் அருந்தும் த‌ண்ணீர் கூட‌ ஒரு இர‌சாய‌ன‌ப் பொருள் தான். அத‌ன் இர‌சாய‌ன‌க் குறியீடு H2O. த‌ண்ணீர் இரு ஜ‌த‌ர‌ச‌ன் (ஹைட்ரஜன்) அணுக்க‌ளையும் ஒரு ஒக்சிய‌ன் (ஆக்சிஜன்) அணுவையும் கொண்ட‌து. அநேகமான மாற்று ‘மருத்துவங்களில்’ உபயோகிக்கப்படும் மூலிகைகளும் இரசாயனக் கூட்டுகளே.

அதும‌ட்டும‌ல்ல‌ எம‌து உட‌லே ஒரு இர‌சாய‌ன‌த் தொழிற்சாலையே. ஒரு கூறு இய‌ற்கையான‌து என்றால் அது ந‌ம‌க்கு ந‌ன்மையான‌தாக‌வே இருக்க‌ வேண்டும் என்ற‌ ந‌ம்பிக்கை கூட‌ மிக‌த் த‌வ‌றான‌தே. பாம்பின் ந‌ஞ்சு கூட‌ இய‌ற்கையான‌தே. அத‌ற்காக‌ ந‌ஞ்சு குடித்தால் உட‌லுக்கு ந‌ன்மை அளிக்கும் என‌ யாராவ‌து சொல்வார்க‌ளா? எத்த‌னையோ புழ‌க்க‌த்தில் இருக்கும் ம‌ருந்துக‌ள் ப‌ல‌ மூலிகைக‌ளிலிருந்தே முத‌லில் த‌யாரிக்க‌ப்ப‌ட்ட‌ன‌.

மூலிகைக‌ளில் ஆயிர‌க்க‌ண‌க்கான‌ இர‌சாய‌ன‌க் கூட்டுக‌ள் உள்ள‌ன‌. அதில் எந்த‌க் கூட்டு ஒரு குறிப்பிட்ட‌ நோய்க்கு நிவார‌ண‌மாக‌லாம் என‌ ப‌ரிசோதித்து, பின் அதைத் த‌னிமைப்ப‌டுத்தியே ம‌ருந்துக‌ள் த‌யாரிக்க‌ப்ப‌டுகின்ற‌ன‌. அத‌னால் ம‌ருந்துக‌ள் வீரிய‌ம் கூடிய‌வையாக‌வும் ஆப‌த்துக் குறைந்த‌வையாக‌வும் உள்ள‌ன‌.

இர‌ண்டாவ‌து கார‌ண‌ம் :

இம்முறைக‌ள் ப‌ண்டைய‌ கால‌ந்தொட்டு எம்ச‌மூக‌த்தில் உப‌யோகிக்க‌ப்ப‌டுகிற‌து. ஒரு முறை ஆயிர‌க்க‌ண‌க்கான‌ ஆண்டுக‌ளாக‌ப் பின்ப‌ற்ற‌ப்ப‌ட்டு வ‌ருகிற‌து என்த‌ற்காக‌ அம்முறை ச‌ரியான‌தாக‌வோ ந‌ன்மையான‌தாக‌வோ இருக்க‌ வேண்டிய‌ அவ‌சிய‌மில்லை. எமது உட‌ல் எவ்வாறு வேலை செய்கிற‌து என்று தேவையான‌ அறிவு இல்லாத‌ கால‌த்தில் உருவான‌ முறைக‌ளை உண்மையில் ந‌ன்மை செய்கிற‌தா என‌ முழுமையாக‌ ஆராயாம‌ல் ப‌ய‌ன்ப‌டுத்துவது பாத‌கமான‌ விளைவுக‌ளையே த‌ரும்.

மூன்றாவ‌து கார‌ணம் :

தாம் முழு ம‌னித‌ உட‌லையும் பார்த்து ம‌னித‌ரின் வாழ்க்கை முறையையும் கேட்டே ம‌ருத்துவ‌ம் அளிப்ப‌தாக‌ மாற்று “ம‌ருத்துவ‌ர்க‌ள்” சொல்வ‌து. இது கூட‌ கேலிக்குரிய‌தே. ஏனெனில் அதைத் தான் வ‌ழ‌க்கமான‌ ம‌ருத்துவ‌ர்க‌ளும் செய்கிறார்க‌ள்.

நான்காவ‌து கார‌ண‌ம் :

இம்மாற்று ‘ம‌ருத்துவ‌த்தில்’ ப‌க்க‌ விளைவுக‌ள் இல்லை என்று ம‌க்க‌ள் ந‌ம்புவ‌து. இந்ந‌ம்பிக்கை கூட‌ மிக‌வும் பிழையான‌தே. எல்லா ம‌ருந்துக‌ளுக்கும் ப‌க்க‌ விளைவுக‌ள் நிச்ச‌ய‌ம் உண்டு. வ‌ழ‌க்க‌மான‌ ம‌ருத்துவ‌ர்க‌ள் எம்ம‌ருந்துக‌ள் தீமைக‌ளை விட‌ மிக‌ அதிக‌ம் ந‌ன்மை கொடுக்கின்ற‌ன‌வோ அவற்றைப் ப‌ய‌ன் ப‌டுத்துகின்ற‌ன‌ர்.

மிக‌ முக்கிய‌மாக‌ ம‌ருந்துக‌ளால் வ‌ரும் ந‌ன்மைக‌ள், தீமைக‌ள், நீண்ட‌ கால‌ விளைவுக‌ள் எல்லாவ‌ற்றிற்கும் இய‌ன்ற‌ள‌வு ஆதார‌ங்க‌ளைத் தொட‌ர்ந்து ஆவணப்ப‌டுத்திக் கொண்டிருப்ப‌ர். அவ்வாறான ஆராய்ச்சிகளால் பல வருடங்களுக்குப் பின் ஒரு மருந்து நன்மையை விடத் தீமையே செய்கிறது எனக் கண்டால், அதன் பின் அம்மருந்து உபயோகப்படுத்துவது தடை செய்யப்படும். ஆனால் இம்மாற்று ம‌ருத்துவ‌த்தால் வ‌ரும் ப‌க்க‌ விளைவுக‌ளை யாரும் ஆவணப்ப‌டுத்துவ‌தில்லை.

இச்சிகிச்சை எல்லாவற்றிற்கும் அநேகமானோர் ஆதாரமாகக் கொடுப்பது பல மூன்றாம் மனிதர்கள் கொடுத்த வாக்குமூலங்களையே. தனி மனிதர்களின் வாக்குமூலம் மிகப் பிழையானதானதாகவும் ஒருதலைப்பட்சமானதாகவுமே அநேகமாக‌ இருக்கும். அதற்காகவே தற்சார்பற்ற முடிவு என்ன என்று காண்பதற்காகவே இந்த randominsed double blinded trials அவசியமாகின்றது. அதோடு இந்த மாற்று மருத்துவம் செய்யும் அநேகமானோருக்கு சரியான மருத்துவப் பயிற்சியே இல்லை. பிறகு எவ்வாறு என்ன நோய், எப்படி மருத்துவம் செய்வது எனத் தெரியும்?

“மருந்துகள் என்றால் மேலைத்தேய நாடுகளில் உருவாக்கப்பட்டவை. மாற்று ‘மருந்துகள்’ எல்லாம் கீழைத்தேய நாடுகளில் தோன்றியவை. அதனால் தான் இவ்வளவு எதிர்ப்பு” என்று எம் நாடுகளில் நினைப்பவர்கள் பலர். மருந்துகள் என்றால் தற்சார்பற்ற, ஆதாரபூர்வமாக, இயன்றளவு பாதுகாப்பான முறையில் குறிப்பிட்ட நோய்களைக் குணமாக்குபவை அல்லது அந்நோயின் வீரியத்தைக் கட்டுப்படுத்துபவை.

சரியான அடிப்படை ஆய்வுகளின் முடிவுகளின் ஊடாக அவற்றால் வரும் தீய பக்க விளைவுகளை விட நன்மைகள் குறிப்பிட்டளவு அதிகம் என முடிவு செய்வதால் அவை மருந்துகளாக அங்கீகரிக்கப்படுகின்றன. அவற்றின் ஆரம்பங்கள் எந்த தேசத்தில் இருந்தாலும் பிரச்சினையில்லை. எத்தனையோ மருந்துகள் கீழைத்தேய நாடுகளில் பயன்படுத்திய மூலிகைகளில் இருந்தே உருவாக்கப்பட்டவை. அம்மூலிகைகளில் உள்ள பல்லாயிரக்கணக்கான மூலகங்களில் அக்குறிப்பிட்ட நோய்க்கு நிவாரணியான குறிப்பிட்ட மூலகத்தைத் தனிப்படுத்தி மாத்திரையாக்குவதே மருந்தாகிறது. நோயைக் குணப்படுத்தத் தேவையான இரசாயனக் கூறுகள் மட்டுமே இருப்பதால் மூலிகையாக எடுப்பதை விட மருந்தாக எடுப்பது பாதுகாப்பானதும் விரைவில் குணப்படுத்தக் கூடியதாகவும் இருக்கும். அவ்வளவே.

உண்மையான மருத்துவம் மாற்று மருத்துவத்தை விட எல்லா விதத்திலும் உயர்ந்ததென பல ஆய்வுகள் காட்டி விட்டன. ஏனெனில் அவை எத்தனையோ அறிவியல் ஆராய்ச்சிகள் மூலமான ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்ட சிகிச்சைமுறையாகும். எப்போ மாற்று மருத்து முறைகள் நோய்களைக் குணப்படுத்தப் பயனுள்ளவை என ஆதாரங்கள் கிடைக்கிறதோ அன்றே அவை மாற்று மருத்துவத்திலிருந்து உண்மை மருத்துவ முறையாக அங்கீகரிக்கப்பட்டுவிடும். இருப்பது ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்ட மருத்துவமும் போலிகளுமே. போலிகளை மாற்று ‘மருத்துவம்’ எனச் சொல்வது எந்தவிதத்திலும் நியாயமில்லை என்பதோடு அது மக்களுக்கு ஒரு பிழையான புரிதலையும் கொடுக்கிறது.

எந்தவித ஆதாரங்களுமின்றியே இம்மாதிரியான மாற்றுமருத்துவங்களை விளம்பரப்படுத்துவோர் பணம் நிறையக் கொண்ட பிரபல ஆட்களே. ஜரோப்பாவில் இதில் முதன்மையானவர் இளவரசர் சார்ல்ஸ். இம்மாற்று மருத்துவ முறைகளை விளம்பரப்படுத்தும் எவரும் தமக்கென வரும் போது, முதலில் இந்த மருத்துவத்தை நாடுவதே இல்லை.

இவர்கள் எல்லோருக்கும் ஏதேனும் நோய் வரின் மிகச்சிறந்த மருத்துவர்களிடம் எவ்வளவு பணம் செலவழித்தும் போக இவர்களுக்கு வசதி உண்டு. இந்த விளம்பரங்களால் உண்மையில் பாதிப்படைவது பொது மக்களே. தயவு செய்து இனி எதாவது மாற்று மருத்துவமுறையை ஊக்குவிப்பர்களிடம், அம்மருந்து எமது உடலில் என்ன மாற்றத்தைச் செய்கிறது என்பதற்கான ஆதாரங்களைக் கேளுங்கள்.

இந்திய அரசாங்கம் அண்மையில் இந்த AYUSH மருத்துவ முறைகளுக்கு அளித்த 1,000 கோடிகளுக்கும் மேலான பணத்தை வைத்து சரியான தற்சார்பற்ற ஆய்வுகளை மேற்கொண்டு இம்முறைகளுக்கு உண்மையில் எதாவது ஆதரங்கள் உண்டா எனக் கண்டறிந்தால் மிக நன்று.

————————————————————————————————————————
படங்கள் கூகிளின் உதவியுடன் எடுக்கப்பட்டு பின் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளன.

*கேரளாவில் பிறந்து இலங்கையில் கூட பல வருடங்கள் வசித்த பகுத்தறிவுவாதி ஆபிரகாம் கோவூர். அவர் படித்தது கல்கத்தா பல்கலைக் கழகத்தில். இவ்வொரு முறையும் அவர்கள் பல்கலைக் கழகத்திலிருந்து வீடு திரும்பும் போது அவரின் ஊர் மக்கள் தமக்கு கங்கை நதியிலிருந்து ‘புனித’ நீர் எடுத்து வரச் சொல்வார்களாம்.

கோவூர் கங்கை நதிக்குச் சென்று பார்த்து, அங்கிருந்த மிகவும் மாசுபட்ட நீரை எடுத்துக் கொண்டு போகப் பிடிக்காமல் வெறெங்கோ இருந்து மிகவும் சுத்தமான நீர் எடுத்து இரு போத்தல்களில் இட்டு, அதுவே கங்கை நதியின் நீர் எனக் கொண்டு சென்று தமது ஊர் மக்களுக்குக் கொடுத்தாராம்.

அந்த நீர் பெற்ற மக்கள் பலர் கோவூரிற்கு அந்த நீர் எப்படித் தமது பல நோய்களைத் தீர்க்க உதவின என்றும் கங்கை நீரே இப்போ வருத்தங்களைக் குணப்படுத்துவதால் மருத்துவரிடமே போக வேண்டிய அவசியமில்லை என்றார்களாம் (3). இதற்குப் பெயர் தான் placebo effect.

1. Stanley JL, et al., Sildenafil citrate rescues fetal growth in the catechol-O-methyl transferase knockout mouse model. Hypertension (2012); 59 (5): 1021-1028.
2. von Dadelszen P, et al., Sildenafil citrate therapy for severe early-onset intrauterine growth restriction. BJOG (2011); 118(5): 624-628.
3. source: THE MIRACLE OF GANGA WATER by the late Dr Abraham Kovoor

மாற்று மருத்துவத்தைப் பற்றிய விபரமான தகவல்களுக்கு :

நன்றி : annatheanalyst

  1. ஹோமியோபதி யுனானி பற்றி தெரியவில்லை, ஆனால் பொதுவாக இந்தியாவில் ‘ஆயுர்வேத’ தயாரிப்புக்கள் என பெரிய காஸ்மெடிக்/பார்மா கார்பரேசன்கள் மற்றும் உள்ளூர் கேடி ராம்தேவ் பதஞ்சளி வகையறாக்கள் மூட்டைபூச்சி மிசின் கணக்கான உரல் உலக்கை படத்துடன் ஐஞ்சாயிரம் பத்தாயிரம் வருசம் பழைய என அடித்து விடும் தயாரிப்புகள் நிச்சயம் போலியே, ஆனால் இலங்கைஇலிருந்து தருவிக்கப்பட்ட லிங்க் எனப்படும் சிறு நிறுவனத்தின் சித்தலெப களிம்பு, ஜலதோச பானம் மற்றும் சில எண்ணெய்களை பாவித்திருக்கிறேன். நிச்சயமாக அவை வேலை செய்கின்றன என என்னால் கூறமுடியும், எந்த அளவுக்கென்றால் தனியே ‘மேற்கத்தைய பாணி’ தயாரிப்புகளை விட சிறப்பாக. அதனால் ஆயுர்வேத மருந்து வேலை செய்வதாகவே எண்ணுகிறேன்.

  2. பணி நிமித்தம் தற்போது இலங்கையில் இருப்பதால் அந்த தொழிற்சாலைக்கு ஒரு வாடி போய் வர எண்ணி உள்ளேன், அப்போது தெரியும் எந்தளவு ஆயுர்வேதம் அங்கு பிரயோகிக்க படுகிறது என.

  3. கட்டுரை அறிவியல் பூர்வமாக உள்ளது.. ஆயுர்,சித்தா,ஹோமியோ முறைகளில் நேரடியாக பயன் அடைந்தவர்கள் பல கோடி நோயாளிகள் உண்டு. அந்த வகையில் எனக்கும் ஹோமியோ மூலம் அனுபவம் உண்டு. நவீன மருத்துவத்தின் மூலம் தோல்வி கண்ட நோய்களும், நோயாளிகளும் உண்டு.நவீன மருத்துவ ஆய்வு முறைக்கு ஆயுர்,சித்த,ஹோமியோ முழுவதும் உட்ப்படுத்தப்படவில்லை என்பது உண்மை.நவீன ஆய்வை செய்ய வேண்டியது அரசும் அரசுசார் நிறுவனங்களும் தானே? எப்படி தனிப்பட்ட மாற்று மருத்துவர்களை பந்தயத்திற்க்கு இழுக்க முடியும்? மேலும் அனைத்திலும் போலிகள் உண்டு அதுபோல மாற்றுமருத்துவத்திலும்,நவீன மருத்துவத்திலும் போலிகள் உண்டு.
    நவீன மருத்துவ ஆய்வு முறைகளை மாற்று மருத்துவத்திலும் உட்ப்படுத்துவதில் தவறில்லை. அனைத்துக்கும் மேலாக மாற்று மருத்துவம் நடைமுறையில் பல நோய்களை தீர்த்துள்ளது என்பது வரலாறு… கட்டுரை நவீனமருத்துவ பார்வையில் மட்டுமே சார்பாக உள்ளது.மாற்று மருத்துவத்தை நவீனப்படுத்த இந்த கட்டுரை உதவுமா?

  4. நவீன மருத்துவ முறையில் பல ஆராய்ச்சிகள் நடை பெறுகின்றன.இன்று சாதாரணமாக தலைவலி என்று சொன்னாலே x_Ray,CT scan,MRI என்று வரிசையாக பல பரிசோதனை முறைகள் உள்ளன.இந்த வளர்ச்சியால் பல நன்மைகள் இருந்தாலும் தீமைகளும் உள்ளன.முன்பு வழக்கில் இருந்த குடும்ப மருத்துவர் அல்லது நோயாளியை நன்கு அறிந்தவர்கள் நோயின் தன்மையை எளிதில் தெரிந்து கொள்ள முடிந்தது.அனைத்தும் வணிக மயமாக்கப்பட்ட இன்றைய சூழலில் பெரும்பாலும் இது சாத்தியமில்லை.

    • நோயாளியை பரிசோதனை செய்து நோயின் தன்மையை அறிகுறிகள் மூலம் தெரிந்து கொள்வது ஒரு சவாலான வேலை.இயந்திரங்கள் மூலம் அறியப்படும் தகவல்களோடு ஒருவரின் வாழ்க்கை முறை,உணவுப் பழக்கம்,மனநிலை,சுற்றுச்சூழல் அனைத்து கருத்தில் கொண்டுதான் சிகிச்சை அளிக்க வேண்டும்.ஆனால் இவை அனைத்தும் இன்று ஒரு சடங்காகி விட்டன.ஆய்வு முடிவுகளை கொண்டு ஏற்கனவே தயாரிக்கப்பட்ட சிகிச்சை முறைகளின் அடிப்படையில் நோயாளிக்கு சேவை வழங்கப்படுகிறது.
      இன்றைய மருத்துவரின் பணி கருத்தரங்குகளில் கலந்து கொண்டு அங்கு கற்றுக்கொண்ட புதிய தகவல்கள் மற்றும்,மருத்துவ பிரதிநிதிகளின் அறிவுறுத்தலின் படி மருந்துகளை வழங்குகின்றனர்.
      உண்மையாகவே இன்றைய நவீன மருத்துவம் மக்கள் நலனில் அக்கறை கொண்டிருக்குமானால் நீரிழிவு,இதய நோய்கள் போன்றவை காணாமல் போயிருக்க வேண்டும்.
      வயதானவர்கள் சர்க்கரை எனக்கும் பல முறை அதிகமாகி இருக்கிறது,சில தினங்களுக்கு நான் கசப்பும்,துவர்ப்பும் நிறைந்த உணவுகளை உண்டு குணப்படுத்தி இருக்கிறேன்,என்று கூற நான் கேட்டுள்ளேன்.
      ஆனால் நவீன மருத்துவம் சர்க்கரை நோய் ஒரு முறை வந்தால் அதை கட்டுக்குள் மட்டுமே வைக்க முடியும் என்று கூறுகிறது.
      இந்த கூற்றை முற்றிலும் தவறு என்று நாம் நிராகரிக்க முடியாது,ஏனென்றால் இன்றைய உணவுகள் பூச்சிக்கொல்லி மருந்துகளாலும், உரத்தாலும் வளர்கின்றன.மலட்டுத்தன்மை அடைந்த மண்ணில் விளையும் பயிர் நமக்கு பல உடல் உபாதைகள் கொடுக்கின்ற இன்றைய இன்றைய சூழலில் பாரம்பரிய மருத்துவ முறையில் நோய்களை குணப்படுத்தி இயலாது.
      இன்றைய நவீன மருத்துவம் சர்க்கரை நிறைந்த உணவுகள்,மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகள் மற்றும் பணி சுமையால் ஏற்படும் மன அழுத்தம் போன்றவற்றோடு கை கோர்த்து கொண்டிருப்பதால் அதில் நன்மைகள் பெரிதாக இல்லை.
      உணவு முறையும்,சுற்றுச்சூழல் மாசு ஆகியவற்றால் பாதிப்படைந்த நிலையில் மாற்று மருத்துவம் சாதிக்க கூடியது என்றும் இல்லை.
      குறைந்த தீமை செய்யக் கூடியது எது என்ற அடிப்படையில் மட்டுமே தற்போது தேர்வு செய்ய இயலும்.
      உணவே மருந்து,மருந்தே உணவு என்ற அடிப்படையில் தரமான உணவை தரும் விவசாயத்தை மீட்டெடுத்தால் மட்டுமே நாம் ஆரோக்கியத்தை பெற முடியும்.

  5. இது ஒரு பக்க சார்பான கட்டுரையாகவே எனக்கு படுகிறது. பல ஆயிரம் வருடங்கள் பாவனையில்இருந்து வந்தவையே மூலிகை மருத்துவங்கள். இவற்றை ஆராய்ந்த ஜெர்மன் மருத்துவர்கள் கடந்த நூற்றாண்டில் கண்டு பிடித்தவைதான் மாத்திரைகள். அதில் வளர்த்தது தான் இன்றைய மேற்கத்தைய மருதத்துவம். அனால் இன்று அவை பெரும் வியாபார நிறுவனங்களின் லாப நோக்கோடு தொடர்பு பட்டுள்ளமையால் மக்களுக்கான மருத்துவமாக அமையாமல் உள்ளன. அரசுகளையே விலைக்குவாங்ககூடியவையாக அவை இன்று உள்ளன. அவை தமது லாபத்துக்கு எதையும் செய்ய தயங்கதவை.

    மருந்துகளை உற்பத்தி செய்யும்போது கையாளும் நடைமுறைகள் பெரும் செலவு மிக்கவை. அவற்றை செய்ய முடியாததனால் மாற்று மருத்துவம் குறைபாடுடையது என்று சொல்வது ஏற்புடையதல்ல. உண்மையில் அவற்றை லாப நோக்கமற்ற ஒரு அரசு நிறுவனமே நடத்த தகுதியானது. நமது அரசு மக்கள் நலம் கருதும் அரசாக இருந்தல் எல்லாவிதமான மருத்துவத்தையும் இம்முறையில் செம்மை படுத்தலாம்.

    இந்த ஒரு நிலையை மட்டும் வைத்து மாற்றுமருத்துவத்தை குறை சொல்வது பொருந்தாது. அமெரிக்காவில் சென்ற நூற்றாண்டின் ஆரம்பத்தில் புற்று நோயை குணப்படுத்திய மாற்றுமருத்துவர்கள் இருந்தர்கள். வியாபார நோக்கத்தோடு இருந்த மருந்து உற்பத்தி நிறுவனகள் இவ்வகை மருத்துவர்களை எவ்வித பணமும் வாங்காது சேவை செய்தவர்களையே அரசு மூலமாகவே ஒழித்து கட்டியது. அவ்வகையான கொடுமைக்கு ஆதரவு தரும் செயலாகவே இதையும் நான் பார்க்கிறேன்.

    ஆயிரக்கணாக்கான வருடங்களாக செய்யப்பட்டுவரும் மாற்றுமருத்துவத்துக்கு புத்துயிர் ஊட்டி அவற்ருள் நன்மை தருபவை எவை என கண்டறிந்து அவற்றை இன்றைய விஞ்ஞான அறிவுக்கு உகந்த வகையில் செழுமை படுத்துவது ஒரு நல்ல அரசு செய்யவேண்டிய வேலை.

  6. இந்தியாவில் விற்பனையாகும் antibiotics ல் 70% போலியானவை – பிரிட்டிஷ் பத்திரிகை தகவல் வெளியீடு

    உங்க சரக்கை கொண்டு வந்து எங்கள் தலையில் கொட்ட இப்படியொரு ஏற்பாடா? நடத்துங்க….அமெரிக்காக்காரன் கொண்டு வந்து கொட்டுகிற குப்பை பத்தாது நீங்களும் கொண்டு வந்து கொட்டுங்க…

    இந்தியாவில் மக்களுக்கு ஆண்டிபயாடிக்குகள் தேவையே இல்லை… எங்கள் உணவில் கலந்திருக்கும் “மஞ்சள்” விட அப்படி என்ன ஆண்டிபயாடிக்குகள் பெரிய சர்வரோக நிவாரணியா?

    • மஞ்சள் அதிகம் விளைவிக்க கூடிய ஈரோடு மாவட்டத்தில்,விவசாயி சாக்கடை நீரை,பயன்படுத்த வேண்டிய அவல நிலை உள்ளது.இப்படி வளர்க்கப்பட்ட மஞ்சளுக்கு என்ன மாதிரி நோயெதிர்ப்பு சக்தி இருக்கும் என்பதை சற்று சிந்தித்துப் பாருங்கள்.

  7. கட்டுரை இன்று நடைமுறையில் உள்ள ஒரு ஆய்வு முறையை வைக்கிறது.நல்லது. குறிப்பிட்ட வயாகரா ஆண்களின் வீரியத்துக்கு பயன்படும் என்று அறிந்தது ஏற்கனவே இருதயம் தொடர்பான பயன்படுத்தலின் விளைவாகவே அன்றி முறையாக,வயாகராவின் தலையிலிருந்து கால் வரையிலான பயன்பாடு குறித்த அறிவிலிருந்து, அன்று.மகப்பேறு மருத்துவத்தில் அதன் புதிய பயன்பாடு ஒரு உடல்செயலியல் யூகம்.இதற்கு ஒரு முன்னிபந்தனை உடல்செயலியல் அறிவியலின் வளர்ச்சி மற்றும் மருத்துவ வேதியியல் வளர்ச்சி.நல்லது,நான்இப்போது ஹோமியோபதிக்கு வருகிறேன்.நாங்கள் அடிப்படை நூலாக பயன்படுத்தும் ஆர்கனான் என்று அதன் படைப்பாளர் ஹானிமன் அவர்களால் ஆறுமுறை மறுபுத்தாக்கம் செய்யப்பட நூலில் அவர் குறிப்பிடுவது எந்த ஒரு பொருளும் குணப்படுத்தும் மருந்தாக வேண்டும் என்றால் நோய் எனும் விளைவை உடலில் ஏற்படுத்தவேண்டும்.நோய் என்பது அறிகுறிகளைக்கொண்டது.எந்த அறிகுறிகளை ஒரு மருந்துப்பொருள் விளைவிக்கிறதோ அதை ஒத்த அறிகுறிகளை குணப்படுத்தும்.நல்லது,இதற்காக அவர் ஒரு மருந்துப்பொருள் நல்ல உடலில் என்ன விளைவுகளை, தலை முதல் கால் வரை, சிந்தனை உட்பட ஏற்படுத்துகிறது என ஆராய்ந்தார்.பதினெட்டாம் நூற்றாண்டில் செருமானிய தேசத்தில் இருந்த உயர் மருத்துவகல்வியும்.பன்முக மொழி அறிவும் கொண்ட அவர் மருந்து பொருட்களை தான் உட்கொண்டும்,தனது சீரிய மேற்பார்வையில் மருத்துவ அறிவுள்ள ஆர்வலருக்கும் கொடுத்து பரிசீலித்தார்.விளைவுகளை மேற்சொன்ன தலை முதல் கால் எனும் முறையில்தொகுத்தார்.இதுவே ஹோமியோபதி மெடீரியா மெடிகா ஆகும்.அவர் அறிந்து பின்பற்றிய ஆங்கில தத்துவ ஞானி பிரான்சிஸ் பேகனின் எல்லாவற்றயும் பரிசோதனை செய் என்பதை மனதில் கொண்டார்.அவரின் ஆய்வு முடிவுகளை நவீன மருத்துவ அறிவியல் வளர்ச்சியுடன் பொருத்திக்கொள்ள முடியும்.எனவே,அதன் நிறைய நுட்பமான பன்முக பண்புகளை தவிர்த்துவிட்டு சொன்னால் ஹோமியோபதி ஒரு பரிசோதனை அறிவியலாகும்.

  8. “Similia similibus curentur”
    This is the law on which homoeopathy based on…

    The medicine which cures the diseased person will produce the similar symptoms in a healthy human being…

    I think no one need to worry about the placebo effect and the scientific explanation…

    Here we can give a practical proving…

    Who all are not believing can take SULPHUR 1M (homoeopathic medicine)

    Then there is no wonder that if you dont have enough fingers to scratch on…

    • Madam,

      I guess you have missed the point here. You have made two claims on your post.

      1. Like cures like is a law

      2. The medicine which cures disease will cause symptoms in a healthy human being.

      I’m curious madam. Except Hanhemann’s assertions, has this been tested and proven to be true in all cases. That is to say, will like cures like in all cases? And has the second point been researched too? For example, if a patient is suffering from cholera what would the medicine being prescribed to him/her in homeopathy? And what effect would it cause in a healthy person?

      • SIR,
        let me clear, we homoeopaths never treats the patient based on diagnosis. its the symptoms, we always look into… and YES all the medicines in the materia media has been proven in many individuals, and still they are proving.
        we don’t give medicine for cholera. we give medicine for the nature of diarrhoea the person having.

        each and every person is different, not everyone having the similar kind of symptoms even the diagnosis is same.

        this is called individualiation in homoeopathy

        • Madam,

          //we don’t give medicine for cholera. we give medicine for the nature of diarrhoea the person having.//

          So what you are saying is, you dont treat the parasite but the symptoms caused by the parasite. Is that correct? Do any of homeopathic medicines actually treat the bacterium? What medicines you provide in treatment of cholera have antibiotic properties? Have you actually looked into this?

          //not everyone having the similar kind of symptoms //

          Thats news to me and the entire field of epidemiology. Infectious diseases especially have a specific cause (virus, bacteria or parasite) and a set of symptoms. Cholera, for example, will always cause fluid loss via diarrhea. Hemorrhagic fevers will always cause hemorrhages. Dengue for example, will always have a characteristic rash. Thats the nature of the diseases. So would you still like to say the symptoms will not be similar in every affected individual? If so, could you please elaborate on what you mean by that? Because honestly, im stumped.

          • sir for an example, fever with thirst is common, but the patient is suffering from high fever and having a dry tongue but not having thirst means its an uncommon symptoms… this is what we always look into. the uncommon, specific, characteristic symptoms.these symptoms makes the patient unique… i.e called as individuality…not like allopathy, homoeopathic CASE TAKING is an ART…

            and nowadays people without stress is countable, we equally give importance to the mind symptoms too… if you get any chance try to read the materia medica.

            • I have read through the homeopathic texts including Hahnemann’s original writings including the Materia Medica Pura. I am not a professional homeopath so i have not read the medical textbooks but yes, i have read the works.

              I would like to point out that your answer hasnt answered one of my questions. I asked you a very specific set of them. Lets take Cholera for example, caused by the bacteria, Vibrio cholerae. You have said you, as an homeopath, treat the patient individually based on the uncommon symptoms i.e. individuality. But that doesnt answer my basic question.

              ” Do any of homeopathic medicines actually treat the bacterium? What medicines you provide in treatment of cholera have antibiotic properties? Have you actually looked into this?”

              Do any of the medicines you provide in cholera treatment actually fight the vibrio cholerae bacteria? Has the research been done on them? Please answer this question.

              • sir, i am repeatedly saying, we dont look into the bacterias and viruses. and this antibiotic concept you know, its completely an error. when we give anti biotics that medicine kills even the good bacterias,, we homoeopaths never encourage that kind of treatment. and the action of our medicine is completely different, we dont need to take anti biotics to kill the bacterias homoeopathic medicines will enhance the total immune system.

                • Apologies for the delay in responding. Work kept me busy for the past few days.

                  I will get to your point on antibiotics later but lets begin with your point on how Homeopathic medicine works. You have claimed a different mechanism of action for homeopathy. For now, lets ignore the fact that enhancing the immune system is also done in modern medicine, not just providing anti-bacetrial or antiviral drugs. Lets also ignore for now that the loss of body resources is part of treatment of a disease. Lets, for now, stick to how you said homeopathy treats a disease.

                  Since you have claimed that homeopathic medicines enhance the total immune system, i assume research has been done on this and it is proven. Could you please share research on how homeopathic medicine does this? Going back to the cholera example, how does the medicine given to the patient enhance their immune system and fights off the bacteria? Does it enhance the production of macrophages? Does it cause a controlled cytokine storm to rid the body of germs? Does it produce more neutrophils?Does it greatly speed up multiplication of helper T-cells? Or is it many/all of the above? Could you share the details, if its not too much to ask? Oh and one more quick question. Could homeopathy be used to cure the same disease in animals? For example, rabies?

                  Going on to antibiotics, you have antibiotics completely wrong. Antibiotics do not kill all bacteria contrary to popular belief. There are different classes of antibiotics that have different mechanisms of action, and they have bacteria that they are effective against. There are some antibiotics that do not even kill bacteria. Just hinders their growth. Some antibiotics are used to treat only specific diseases. Again, they are just as varied and complex as the bacteria. So no, your claim that antibiotics kill good bacteria is categorically wrong.

              • the sphere of action of sulphur is mainly on skin, and its given for itching (not only, but also). while proving this medicine will produce the similar itching in a healthy individual.
                (proving is an another vast topic)

              • We are looking for the uncommon symptoms to rule out the specific disease and give appropriate treatment,but you are saying in homeopathy we look for the uncommon symptoms,based on that we don’t make any diagnosis,but we will give Individual treatment.
                This only proves that homeopathy needs to grow up in the research field, or atleast accept the fact,like the disease causing organisms.
                This will definitely helps to understand how the medicine works.
                But I agree with you in one point,that is antibiotics,lowers the natural immune system of our body.

                • //This only proves that homeopathy needs to grow up in the research field, or atleast accept the fact,like the disease causing organisms//

                  the fact is its growing,,, but its already grown enough to treat the sufferes,, and for sure it will grow furthur….

                  //atleast accept the fact,like the disease causing organisms//

                  i never denied that… homoeopathy is different,, please dont stick into the allopathic view of treatment…

                  and please don’t compare any systems of treatment with homoeo,,,

                  each and every system is having their own scope and limitation… we have to accept that.

                • //We are looking for the uncommon symptoms to rule out the specific disease and give appropriate treatment,but you are saying in homeopathy we look for the uncommon symptoms,based on that we don’t make any diagnosis,but we will give Individual treatment//

                  mam, i never told that we don’t make diagnosis…
                  i said that the treatment is not based on diagnosis,,,

                  please try to understand the concept of homoeopathy…

                  • Human body is same every where in this world.Anatomy ,(structure of the body) and it’s functions, (physiology ))are similar.Modern medicine has evolved with the knowledge of science and also embraces the ideas of medicine practised in various parts of the world.
                    Ginseng from Chinese medicine,malaria vaccine are such examples.
                    So finding some methodology to explain about homeopathy Will only help to grow.
                    Well,if you think whatever achievement made is enough,then nothing more to discuss.
                    Anyway it was really wonderful of you to share your knowledge.

  9. In the name of clinical investigations… laboratory reports… tests … etc.. the system you are “praising” exploit people’s money… and their weakness…
    “Maatru maruththuvam enbadhu indha surandalukuku maatraana maruthuvam”

    Instead of “anna the analyst” keep it as “anna the pessimist” that suits more…

    Being prejudiced and having fixed ideas about something which you dont know clearly is completely called as stupidity…

    Have to learn more before talking something delusional….

    • நான் ஏற்கனவே முன்முடிவுகள் எடுத்து அதிலிருந்து மாறுபட மாட்டேன் என எதை வைத்து சொல்கிறீர்கள்? என் கருத்துகள் முட்டாள்தனமானவை என்று சொவதற்கு முன், நான் சொன்ன கருத்துகள் ஏன் பிழை என ஆதாரங்களுடன் சொல்லுங்களேன்?

      மாற்று மருத்துவம் சுரண்டல்களுக்கு மாற்றான மருத்துவம் என எதை வைத்துச் சொல்கிறீர்கள்? மாற்று மருத்துவம் ஒன்றும் எங்கேயும் இலவசமாகக் கிடைக்கவில்லை. World-wide revenues for alternative medicine also run into several hundreds of billions of dollars annually.

      https://www.statista.com/statistics/203972/alternative-medicine-revenue-growth/

  10. மொழிபெயர்ப்பு மிகத்தரமற்றது. உதாரணமாக ” வதா, பிதா, கப்பா தோஸாக்கள்”. வாத(ம்), பித்த(ம்), கப(ம்)ஆகிய தோஷங்கள் – இவை இப்படிக் கொலைசெய்யப்பட்டுள்ளன. கருத்துகளும் அவ்வாறே என எண்ணுகிறேன். ஏதாவது உணவுக்கடையில் வதா, தோஸா இருக்கிறதா என்று கேட்கலாம்.

  11. ஹோமியோபதி மருந்துகள் வேலை செய்வதற்கான ஆதாரங்கள் இல்லை என்று சொல்லிக் கொண்டே இருங்கள்..

    எந்த ஒரு ஹோமியோபதி மருத்துவ இதழ்களையாவது நீங்கள் படித்தது உண்டா? அதில் குணப்படுத்தப்பட்ட நோய்களைப் பற்றிப் படித்தது உண்டா??

    250 வருடங்களாக ஹோமியோபதி மருந்துகள் புழக்கத்தில் உள்ளன. எப்படி ஒரு மருத்துவம் வேலையே செய்யாமல், வெறும் நம்பிக்கை சார்ந்து இத்தனை வருடம் இருக்க முடியும்?

    ஒரு வயது குழந்தைக்கு என்ன நம்பிக்கை இருக்க முடியும்? ஆனால் அந்தக் குழந்தைக்கு ஹோமியோபதி மருந்துகளால் குணம் கிடைக்கிறது.

    அல்லோபதி மருந்துகள் நிவாரணம் கொடுத்தால் அது குணம். மற்ற மருந்துகள் கொடுத்தால் அது placebo effect. அப்படித்தானே???

    ஒரு மருந்து அல்லது மருத்துவமுறை மக்களுக்கு பயன் கொடுத்தால் அதில் உள்ள அறிவியலை ஆராய வேண்டும்.
    அதை விடுத்து, “இது தான் அறிவியல்;இதற்குள் வராவிட்டால் அது அறிவியல் இல்லை.” என்று சொல்வது அறிவியலுக்கே ஆபத்தானது.
    ஏனென்றால் அறிவியல் என்பது விரிவடைந்து கொண்டே செல்லும்.

    நீங்கள் ஹோமியோபதியை குறை கூறிக் கொண்டே இருங்கள். நாங்கள் குணப்படுத்திக் கொண்டே இருக்கிறோம்.
    We don’t want to focus on speculations and theories of diseases and medicines. We focus on treating patients.

    • நம்பிக்கை மட்டுமே சார்ந்து எத்தனையோ விடயங்கள் ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு சமூகத்தில் நிலைத்து நிற்கின்றனவே? சாதி, மாதம், சில் பாரம்பரிய வழிகள் எல்லாம் அதற்குள் அடங்கும்.

      ஹோமியோபதி மருந்துகள் தொடர்பான‌ பல ஆய்வுகள் பலவற்றைப் படித்துள்ளேன். பொத்தாம் பொதுவாக உனக்கு ஒன்றுமே தெரியாது. நீ சொல்வதெல்லாம் பிழை என்பதற்கு முன் நான் சொன்ன கருத்துகள், கொடுத்த ஆதாரங்களில் எது பிழை, ஏன் பிழை எனச் சொல்லுங்களேன்?

  12. மருந்துகளின் தரத்தில் குறையிருந்தால் என்ன செய்வது?
    பாராசிட்டமால் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட மருந்துதான். இருப்பினும் அதே மாத்திரை கரைவதற்கு அதிக நேரம் எடுத்துக்கொள்ளும் குறைபாட்டுடன் உற்பத்தி செய்யப்பட்டால் நோய் குணமாகுமா?
    மேலும் பல மருந்துகளை வீரியம் குறையாமல் வைத்திருக்க குளிர் பதனப்பெட்டிகள் தேவைப்படுகின்றன. வெப்பநிலை அதிகம் உள்ள நாடுகளில் இந்த மருந்துகள் வேலை செய்யாமல் போவதற்கு சாத்தியக்கூறுகள் அதிகம். மக்கள் இம்மருந்துகளுக்கு செலவழிக்கும் பணம் கணக்கிலடங்காதது.
    ஏன் மருந்து ஆராய்ச்சியாளர்களும் உற்பத்தியாளர்களும் அரசும் இயல்பான தட்ப வெப்பநிலைகளில் வேலை செய்யும் மருந்துகளை உற்பத்தி செய்யக்கூடாது?

    • பாராசிட்டமால் அனைவராலும் ஏற்றுக்கொள்ள பட்ட மருந்து என்று கூறி விட முடியாது,திணிக்கப்பட்ட மருந்து என்று வேண்டுமானால் கூறலாம்.காய்ச்சல்,தலைவலி,சளி,உடல்வலி என்று அனைத்திற்கும் சர்வர் நிவாரணியாக கூறப்படும் விக்ஸ் ஆக்ஷன்500, தற்போது தடை செய்யப்பட்டுள்ளது.டோலோ650 போன்ற தடைசெய்யப்பட வேண்டியவை.
      பக்க விளைவுகள் அதிகம் தரக்கூடிய இம்மருந்துகளுக்கு பதில்,வீட்டு மருத்துவ குறிப்புகள் மூலம் குணப்படுத்த முடியும்.அதை சரியான முறையில் மக்களுக்கு தெரிவிப்பதுதான் இக்கட்டுரையின் நோக்கம் என்று நினைக்கிறேன்.
      சளிக்கு மாத்திரை சாப்பிடவில்லை என்றால் குணமாக 7 நாட்கள் ஆகும், மாத்திரை சாப்பிட்டால் ஒரே வாரத்தில் குணமாகி விடும்; இந்த ரீதியில் தான் மருத்துவ உலகம் இருக்கிறது.
      அனைத்து மருத்துவ முறைகளிலும் நன்மைகளும் சில குறைகளும் இருக்கின்றன. துறை சார்ந்தவர்கள் மட்டுமின்றி தங்கள் சொந்த வாழ்க்கை அனுபவம் மூலமாக கருத்துகளை பதிவிடுவதன் மூலம் பல தகவல்களை பெறலாம்.
      உதாரணமாக சிக்கன் குனியா நோயை பற்றி சித்த மருத்துவ குறிப்புகள் கூறுவது என்ன,அதற்கான ஆய்வுகள் போன்றவற்றை தமிழ் மொழியில் மேற்கொள்ளவேண்டும்.அந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கூறும் விவரங்களின் அடிப்படையில் இவற்றை செய்ய முடியும்.
      மக்கள் நலன் மீது உண்மையான அக்கறை கொண்ட மனிதர்களால் மட்டுமே இது சாத்தியம் என்று நினைக்கிறேன்.

  13. டெங்கு,சிக்குன்குனியாவிற்கு மருந்தில்லாமல் அறிவியல்பூர்வ அலோபதி அல்லாடிநின்றபோது மக்களின் உயிரை காத்தது சித்தா என்பதை உள்நோக்கத்தோடு மறந்துபோன கட்டுரையாளர் நூற்றாண்டுகளை கடந்த இந்திய மருத்துவமுறைகளை அறிவியல்பூர்வமற்றது அதாவது போலி என நிறுவ முயற்சிக்கிறார்.அவரது முயற்சி வெற்றிபெறாத ஒன்றென மிக விரைவில் உணர்ந்து கொள்வார்.

    • Sir

      There is no direct proof that siddha medicine saved people’s lives during that viral epidemic.
      If the government or siddha organizations conducted a randomized double blinded controlled study- to explain more- have few hundreds of people with actual viral disease and divide ‘randomly’ into 2 halves, then give the siddha medicine to one group, placebo to the other group and then prove the medicine group had significantly more cure rate than the other group, its acceptable. The modern medicine has such evidences for EVERY medicine . Hope this helps

    • Sir

      The truth is, these traditional medicines are not founded for antibacterial or antiviral specifics. These microorganisms were found to exist only after the invention of the microscope and that didn’t happen until the 20th century.
      I am not saying they are good or bad. There is no direct proof scientifically for their claims!!
      Hope that helps.

  14. ‘ஹோமியோபதிக்கு எந்தவித ஆதாரமுமே இல்லை. இன்னும் சொல்லப்போனால் ஹோமியோபதி மருந்துகளுக்குள் எதுவுமே இல்லை’

    ‘ஆனால் உண்மையான மருந்துக்குப் பதிலாக அதைப் பாவித்தீர்களானால், அந்நோய் குணமடையாமல் அவதிப்படுவீர்கள்.’

    கட்டுரையாளருக்கும் கட்டுரையை வெளியிட்டவருக்கும் இவையிரண்டும் முரண்பாடாகத் தெரியவில்லையா

  15. மேட்கண்டவர் கூறியிருப்பது ஓரளவு சரிதான். கட்டுரை பட்டி டிங்கரிங் செய்யப்பட வேண்டியுள்ளது. நிறைமதி 16 இல் கூறியதும் சரி.

    சற்று ஆராய்ந்து பார்த்ததில்,
    ஹோமியோபதியில் மருந்துகள் 10:1 என்ற வீதத்தில் அடுக்க்கேற்ற ஐதாக்கம் செய்யபடுவது, இறுதியில் மூல மருந்தின் ஒரு மூலகூறாவது எஞ்சி இருந்தால் அதிசயம். அதனால் ஹோமியோபதி தீர்வு தந்தால் அது நிச்சயமாக பருகுபவரின் நம்பிக்கை மூலம் ஏற்பட்ட பிளேசிபோ விளைவாகவே இருக்க வேண்டும், பிளேசிபோ எவ்வாறு செயல்படுகிறது என இதுவரை அறிவியல் உறுதியாக விளக்காவிடினும் (நோயாளியின் எதிர்பார்ப்பே உடலில் மருந்துகள் செய்யும் இரசாயனமாற்றங்களை தூண்டி விடுகிறது என விளக்கம் உண்டு) பிளேசிபோ விளைவு இருப்பது உறுதி படுத்தபட்ட ஒன்று. மேலும் பொதுவாக ஹோமியோபதி டாக்டர்கள் நோயாளியோடு உரையாடுவது மிக மிக அதிகம், சாதாரண ஆஸ்பத்திரிகளில் ஏதோ பஞ்சர் ஓட்ட வந்த சைக்கிள் போல நடத்தபடுவதற்கு எதிர்மாறான இது நோயாளியிடம் மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்தி பிளேசிபோவை இன்னும் கூட்டுகிறது.

    ஆகையால் ‘ஹோமியோபதிக்கு எந்தவித ஆதாரமுமே இல்லை’ என்று சொல்வதை விட ஹோமியோபதி செயல்படும் முறைக்கு இவர்கள் அளிக்கும் விளக்கமே நகைப்புகுரியது என சொல்லியிருக்கலாம், அதாங்க தண்ணிக்கு மெமரி அப்படி தண்ணிக்கு மெமரி இருந்தால் பாக்டரி தண்ணி கக்கூஸ் தண்ணி கடல் தண்ணி என சுற்றி சுழலும் அதுக்கு ஏகப்பட்ட இராசாயனகளின் இனிய நினைவுகள் இருக்க கூடும், அவை நோயாளியை நிச்சயம் சிரிக்க வைக்காது.

    காய்ச்சலை வேண்டுமானால் சர்க்கரைநீரும் நம்பிக்கையும் குணப்படுத்தலாம், கேன்சர் கட்டிக்கு முறையான வைத்தியமே தேவை.

  16. ஹோமியோ மருந்துகள் Nano தொழில்நுட்பம் முறையில் வேலை செய்வதாக மும்பையில் ஒருவர் ஆராய்ச்சி கட்டுரை வெளியிட்டதாக நினைவு.

  17. நவீன மருத்துவத்தால் சரிசெய்ய முடியாத எனது மகனின் பிரச்சனையை ஹோமியோவில்தான் சரி செய்தார்கள்(முழுமைக தீரவில்லையென்றாலும் திரும்பவும்..எப்பவாவது தொந்தரவு வரும்போது மருந்து எடுத்தால் சரியாகிறது)ஹோமியோ..நம்பிக்கை மருத்துவம் என்றால் குழந்தைகளுக்கு வேலை செய்யாதே ?

  18. நம்ம தோழர்கள் நிறையபேர் ஹோமியோ மருந்து எடுத்துக்கொள்கிறார்கள்.அவர்களை கேட்டாலே தெறியும் ஹோமியோ மருந்து வேலை செய்கிறதா இல்லையா என்று.நம்பிக்கை அடிப்படையில் வேவலை செய்கிறது என்றால்,அவர்களின் குழந்தைகளுக்கு பொருந்தாதல்லவா?அதையும் விசாரித்துப் பாருங்கள்.

Leave a Reply to sivakumar பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க