Monday, February 24, 2020
முகப்பு மறுகாலனியாக்கம் கல்வி குரூப் 4 தேர்வு : 5 வருசமா எடுத்த புக்கை கீழ வைக்கல - வேலயும்...

குரூப் 4 தேர்வு : 5 வருசமா எடுத்த புக்கை கீழ வைக்கல – வேலயும் கிடைக்கல !

-

மிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் இளநிலை உதவியாளர், தட்டச்சர், நில அளவையர், விஏஓ ஆகிய பணியிடங்களுக்கான ஒருங்கிணைந்த குரூப் 4 தேர்வு கடந்த பிப்ரவரி 11 ஞாயிறு அன்று நடந்தது. தமிழக அரசின் 9351 காலி பணியிடங்களுக்கு, இதுவரை இல்லாத அளவுக்கு 21 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர். வேலையின்மை, அதிகரித்து வரும் பொருளாதாரச் சிக்கல்கள், நம்பிக்கையளிக்காத கல்வி நிறுவனங்கள்…… இந்தச் சூழ்நிலையில் இந்தத் தேர்வுக்கு வரும் மக்களைச் சந்திக்கத் திட்டமிட்டோம். ஒரு வகை மாதிரிக்காக காஞ்சிபுரத்திற்கு சென்றோம். இந்த சந்திப்பு தேர்வுக்கு முந்தைய நாட்களில் நடைபெற்றது.

காஞ்சிபுரம் நகரில் மட்டும் பல்லாயிரக்கணக்கானோர் தமிழ்நாடு முழுவதும் பல மாவட்டங்களிலிருந்து வந்து தங்கி படித்து வந்தனர். 10-ம் வகுப்பு மட்டுமே தகுதி கேட்டிருந்தாலும், சந்தித்த மாணவர்கள் அனைவரும் முதுநிலை பட்டதாரிகளாகவும், இளநிலை, பொறியியல் பட்டதாரிகளாகவே இருந்தனர்.

காஞ்சிபுரத்தில் இருக்கும் பல கோயில்களில் மாணவர்கள் டிஎன்பிஎஸ்சிக்கு படிப்புத் தவம் இருக்கிறார்கள்.  அதில் ஒரு கோவிலுக்கு மட்டும் சென்றோம். சந்தித்தவர்களில் பலர் மூன்றாண்டுகளில் தொடர்ச்சியாக, நான்கிற்கும் மேற்பட்ட தேர்வுகள் எழுதியுள்ளனர். பயிற்சிக் கட்டணமாக சில பல ஆயிரங்களை செலவு செய்துள்ளனர். நீட் தேர்வுக்கு நிகராக இன்னுமொரு கொள்ளையை மாநில அரசு வேலைவாய்ப்பு என்ற பெயரில் அரசும், தனியார் நிறுவனங்களும் மேற்கொள்கின்றன. அந்த கொடுமையை தேர்வுக்கு செல்லும் மாணவர்கள் கூறுகிறார்கள்.

அவர்களுக்குத்தான் எத்தனை எத்தனை கனவுகள்! ஆனால் அவை கனவுகள் மட்டுமே என்பதை வாழ்க்கை அழுந்திச் சொல்கிறது. எத்தனை தேர்வு எழுதினாலும் வேலை கிடைக்கவில்லை. சரி கிடைக்கவில்லை அரசு வேலை வேண்டாமென தனியார் நிறுவனங்களுக்கோ, தனியார் பள்ளிகளுக்கோ சென்றால் குறைந்த பட்ச சம்பளம் இல்லை. வீட்டில், சமூகத்தில் மதிப்பு, மரியாதை இல்லை.

என்ன செய்வது? காண முடியாத அந்த மாய மானைத் தேடி இந்த இளைஞர்கள் ஓடிக்கொண்டே இருக்கிறார்கள்.

கேளுங்கள்! :

தாமரைச் செல்வன். பி.இ., சேலம் கொல்லம்பட்டி.

பி.இ. மெக்கானிக்கல் இன்ஜினியரிங் 2015-ல முடிச்சேன். கவர்மெண்ட் வேலையினா, லைப்ல பின்னாடி , நல்லா இருக்கலாம். அப்பா, அம்மாவை கடைசி காலத்துல வைச்சி காப்பாத்தலாம். வேலையில இருந்தாதான், பொண்ணுக் கொடுக்கறாங்க. கம்பெனி வேலைக்குப் போனா, 5 ஆயிரம், 6 ஆயிரம்தான் கொடுக்கறேன்றான், அதுவும் நிரந்தரமில்ல. எப்பத் தூக்குவான்னு தெரியாது.

நோக்கியா கம்பெனி இன்னா பண்ணான்…? சாத்திட்டுப்புட்டான். கவர்மெண்ட் வேலையினா, எடப்பாடியோ, கவர்னரோ, எவன் ஆண்டாலும் மாசம் ஆன சம்பளம் வந்துடும். இதுக்குத்தான், டிஎன்பிசி மூணு வருசம் படிக்கிறோம். ஐந்து வருசமா படிக்கிறவன்கூட இருக்கான்.

ஒன்றரை வருசமா, காஞ்சிபுரத்துல தங்கி படிக்கிறேன். நாங்க நாலு பேரு அறை எடுத்து தங்கிருக்கிறோம். அறை வாடகையே மாசம் இரண்டாயிரத்து ஐநூறு. நாங்களே சமைச்சி சாப்பிடறோம். மளிகை சாமானே ஐயாயிரம் ஆகுது. செலவ நாலு பேரும் பிரிச்சிக்கிறோம். இதில்லாம டீ செலவு, செல் ரீஜார்ஜ், படிக்க வாங்கிற புக்கு, ஜெராக்சுனு மாசம் குறைஞ்சது ஆயிரம் ஆகுது. குரூப் ஒண்ணு, குரூப் ஃபோர் குரூப் டூ னு ஒன்றரை வருசத்துல மூணு எக்ஸாமு எழுதிட்டேன். இதற்கான, பயிற்சிக் கட்டணமா இதுவரைக்கும் இருபாதாயிரம் ஆகியிருக்கு. எங்கண்ணன்தான் உதவியா இருக்காரு. நாங்க நாலு பேரு. விவசாயம்தான் பொழப்பு.

அண்ணனுக்கு இப்பதான் டிஎன்பிசி எழுதி வேலை கிடைச்சது. அதனால, என்னையும் படிடா, படிடானு சொல்றாரு. இரண்டு வருஷம் ஆறு எக்ஸாம் எழுதி…கடைசியில… பாஸ்பாண்ணாரு. இ்ப்ப, அக்ரி டிபார்மெண்டுல இருக்காரு. நாங்க எஸ்சி. எங்களுக்கே இப்ப கட்ஆப் 200 க்கு 181 ஆயிடுச்சி, நா போன எக்ஸாமுல 164 தான் எடுத்தேன். இந்த வாட்டி எப்படியும் பாஸ் பண்ணனும். வாரத்துக்கு ஏழு நாளும் படிக்கறேன். காலைல 6 மணிக்கு புக்க தொறந்தா, நைட்டு 11 மணிக்குத்தான் புக்க மூடுவேன். குறுக்கல எப்பனா, டீ குடிக்கறது, மதியத்துல கோயில்ல போடுற… அன்னதானத்த சாப்பிடறதுன்னு போய்ட்டிருக்கு.

கோமதி .பி.சி.ஏ.

காஞ்சிப்புரம் சங்கரா காலேஜ்ல 2016-ல முடிச்சேன். சொந்த ஊரு காஞ்சிப்புரந்தான். அப்பா பட்டு நெசவு. கஷ்டப்பட்டுத்தான் படிக்கவச்சாரு. நான் படிச்ச காலேஜ்ல கேம்பஸ் இண்டர்வியு நடத்தி, மெட்ராஸ்ல இருக்குற கம்பெனிக்கு எடுத்தாங்க. சம்பளம், நான் தினமும் பஸ்ல போய்ட்டு வர்றதுக்குக்கூட பத்தல. கேட்டா, இன்ஜினியரிங் முடிச்சவங்க, நிலைமையே அதுதானுட்டாங்க…. எங்கப்பா, எங்கேயும் வேலைக்கு போகவேண்டாம்… வீட்டுலயே பட்டுதறிக்கு உதவியா இருன்னுட்டாரு….. ஆனா, என்னால இருக்க முடியல.

ட்ரை பண்ணலாமேன்னு இந்த வருசமதான் பண்றேன். வார கடைசி, ரெண்டு நாள் கோச்சிங் கிளாஸ் 3 மாசத்துக்கு 6,000 பீஸ் கட்டியிருக்கேன். மெட்டீரியல் கொடுத்துடுவாங்க… நிறைய ஜெராக்ஸ் எடுக்கணும் அது…வேற செலவு. வாரம் 5 நாளும் கோயில்லதான் படிப்பேன்… ஷேர் ஆட்டோவுல இங்க, வந்துபோற செலவுன்னு மாசம் 500 ஆயிடுது. நம்பிக்கையோட படிக்கிறேன். ஆனா, இங்க படிக்க வர்றவங்கள பாத்தா கொஞ்சம் பயமாத்தான் இருக்கு. எல்லாம், 4-5, வருசமா படிக்கிறதா சொல்றாங்க……அவங்க, பி.இ. , எம்.எஸ்.ஸி., எம்.எட் எல்லாம் படிச்சிருக்காங்க.

சரண்யா எம்.எஸ்ஸி., பி.எட்.,

2015 காஞ்சிபுரம் பச்சையப்பாஸ்ல முடிச்சேன். பனப்பாக்கத்துல கட்டிகொடுத்தாங்க. மாமியார் வீட்ல விவசாயம். எங்க வீட்டுக்காரு எம்பிஏ முடிச்சிட்டு சரியான வேலை இல்லைன்னு, விவசாயத்துல இறங்கிட்டாரு. நான் மண்ணுல வேலை செய்றேன், சோத்து செலவ பாத்துக்குறேன். குழந்தைங்க படிப்பு செலவுக்கு நீ பாத்துக்கனுட்டாரு. டீச்சருக்கான எக்ஸாமும் எழுதிட்டேன். ரிசல்ட் வந்துடுச்சி, ஆனா போஸ்டிங் எப்பனு தெரியல. அதுலயும் இன்னொரு எக்ஸாம் இருக்காம். இது வேலைக்கு ஆகாதுன்னு டிஎன்பிசி எழுதறேன். இப்ப திரும்பவும், என் போறாத நேரம். ஏழாவது கிளாஸ் புக்க படிக்கிறேன் இங்க படிச்சாத்தான் படிக்க முடியுது. வீட்ல படிக்க உட்கார்ந்ததுமே, வீட்டோட கஷ்டந்தான் கண்முன்ன வருது! கவர்மண்டுல சம்பளம் பத்தல-ன்னு சொல்லி போராட்டம் பண்ணிட்டு, வேலைக்கு மறுபடியும் போய்டலாம். ஆனா பிரைவேட்டுல அப்படி சொல்லவும் முடியாது.

எழில், எம்.பி.ஏ.(கட்டம்போட்ட சட்டை)

நான் காஞ்சிபுரம்தான். எம்பிஏ, மெட்ராஸ் யுனிவர்சிட்டில 2012-ல முடிச்சேன். எவன் வேல கொடுக்கிறேங்குறான்?  இப்ப, ஒன்றரை வருசமா, குரூப்2, குரூப்1- ன்னு மூணு எக்ஸாமு எழுதிட்டேன். இதுவரைக்கும் 20,000 காலியாடுச்சி, எதுலயும் பாஸ் பண்ண முடியல.

அதனாலதான், இப்ப குரூப் 4 எழுதலாமுனு முடிவு பண்ணிட்டேன். எப்படியாவது உள்ளே, நுழைஞ்சிட்டா, மறுபடியும், மறுபடியும் பரீட்சை எழுதி மேலே போய்டலாம். கவர்மெண்ட்ல ஒரு அதிகாரியா ஆகிடணும். அப்படியே, பாசாயிட்டாலும் வேலையில போய் உட்கார , ஒரு வருஷம் இழுக்கடிக்கிறான். ரிசல்ட்வர… ஆறு மாசம், சான்றிதழ் சரிபார்ப்பு னு 3 மாசம், டிபார்மெண்ட்ல இருந்து லெட்டர் வர்றதுக்கு 3 மாசம், இப்படி காத்துக்கிட்டுத்தான் இருக்கணும். இருந்தாலும் இது கவர்மெண்ட் வேலை. அதனாலத்தான் பல்லை கடிச்சிக்கினு படிக்கிறேன்.

மோனிகா, பி.எஸ்ஸி., டி.டெட்.,

எனக்கு அப்பா கிடையாது. அம்மா மட்டும்தான். விவசாயம் பாத்துக்கினு என்னை படிக்க வைச்சாங்க….. இதுவரைக்கும் டீச்சருக்கான எக்ஸாமுத்தான் எழுதியிருக்கேன். அம்மா கஷ்டப்படறதால, தாய் மாமா எனக்கு பொறுப்பான வேலை வாங்கி குடுத்திடனும்னு, என்ன டிஎன்பிசி எழுதச் சொல்லிட்டாரு.

மாமா பசங்க போலீசுக்கு எழுதி வேலை வாங்கிட்டாங்க….. அதனால என்னையும் எப்படியாவது கவர்மெண்ட் வேலை வாங்க வைச்சிடணும்னு கோச்சிங் கிளாஸெல்லாம் விசாரிச்சி, சேர்த்துவிட்டாரு….. பிரைவேட் ஸ்கூலுக்கு ட்ரை பண்ணேன். ரொம்ப கம்மியான சம்பளத்துக்கு கூப்பிடுறாங்க…… கேட்டா, இப்பத்தானே முடிச்சி வந்திருக்கே…. டிரெயினிங்கா நினைச்சிக்க… விருப்பமிருந்தா… செய் , இல்லனா நிறையபேர் இருக்காங்க…. ன்னு சொல்றாங்க…. அங்க போய் கம்மி சம்பளத்துக்கு செய்றதுக்கு…. இத மாதிரி எழுதி, பாசாயிட்டா நிரந்தரமான சம்பளம். கோச்சிங் சென்டருக்கு 5,000 ரூபாய் கட்டியிருக்கேன். போக்கு வரத்து செலவுன்னு மாசம் 1,000 ஆகுது.

சசிகலா, எம்.எஸ்.ஸி.

2016-ல சென்னை குயின் மேரீஸ்ல முடிச்சேன்… சொந்த ஊரு காஞ்சிப்புரந்தான். அப்பா பட்டு நெசவு. பிரைவேட் கம்பெனிக்கு வேலைக்குப் போனேன். ரொம்பவும் கம்மி சம்பளம். படிப்புக்கு சம்மந்தமில்லாத வேலை. மனசுக்கு பிடிக்கல…. அம்மாக்கிட்ட சொல்லிட்டேன். வீட்ல எந்த வேலைக்கும் போகவேணானுட்டாங்க….. ஆனா….. பக்கத்துல இருக்கிறவங்க….. படிச்சிட்டு சும்மாவ …. இருக்க்க….. னு கேள்வி.. டார்ச்சரா இருக்கு. …அத அனுபவிச்சாத்தான் தெரியும்.

கம்மி சம்பளன்றதக்கூட பொறுத்துப்போனாலும், வேலை, டைமிங் ரொம்ப மோசம். 12 மணிநேரம் வேலை செய்யணும்றான்…. நம்ம சொந்த வேலையக் கூட நம்ம செய்துக்க முடியாது. தூங்கறது, வேலைக்கு போறதுன்னு … ஓய்வே இல்ல… பயமாயிடுச்சி….. அப்படியே கஷ்டப்பட்டாலும் என்ன வேலையினு கேட்றவங்கக் கிட்ட சொன்னா, மதிப்பாவே பார்க்கல….. .கிடைக்குதோ இல்லையோ…. கவர்மெண்ட் வேலைக்கு டிரை பண்ணுவோம்னு வந்திட்டேன்…..

இதுவரைக்கும் 4 எக்ஸாம் அட்டர்ன் பண்ணிட்டேன். எங்க தப்பு பண்றேனே தெரியல…. எதுவும் பாஸ் பண்ணல. இந்த எக்ஸாமாவது பாசாயிடனும்னு தூங்கமா, படிக்கிறேன். கட்டிக்கிட்டு போற எடத்துல கவர்மெண்ட் வேலையினாதான்… வெளியில அனுப்புவாங்களாம்…. இல்லான வீட்டோட கிடக்கணும். சவரனும் ரொம்ப கேட்கமாட்டாங்க.

மதன்ராஜ், பி.லிட். (தமிழ்), திருவாரூர்.

கொல்லுமாங்குடி பக்கத்துல முகூந்தனூர் தான் என் கிராமம். பி.லிட் தமிழ் படிச்சிருக்கேன். இரண்டு வருசமா டிஎன்பிசிக்கு வி.எ.ஒ. , குரூப் 4 , குரூப் 2 மூணு எக்ஸாம் எழுதியிருக்கேன். நான் எஸ்சி. இதுவரைக்கும் 154, 164 ன்னு கட் ஆஃப் எடுத்துருக்கேன் அதை தாண்ட முடியல. இரண்டு வருஷத்துல எஸ்சி, கட்ஆப், 154-ல யிருந்து 180 ஆக எகிறிடுச்சி. ஆயிரம், ரெண்டாயிரம் வேகன்சிக்கு பத்துலட்சம், இருபதுலட்சம் அப்ளிகேசன் வருது. இதால, கட்ஆப் பத்து பத்தா ஏறிக்கினே இருக்கு…. இனிமே 200க்கு 200 எடுத்தாலும் வேலை கிடைக்குமானு தெரியல.

அப்பா விவசாயி. கூலி வேலைத்தான் செய்றாரு. நான் முதல் தலைமுறை படிக்கிறேன். 10 ஆவதுல இருந்து பரீட்சை, பரீட்சைனு படிச்சிக்கினுருக்கேன். இன்னும் புக்க கீழ வைக்கல….. வேலைத்தான் எப்ப கிடைக்கும்னு தெரியல. பணம் தண்ணியா செலவு ஆகுது. பயிற்சி கட்டணமுனு பதினேட்டாயிரம் செலவு பண்ணிருக்கேன். அதில்லாம, தங்கற, சாப்பிடுற செலவு னு மாசம் 3 ஆயிரமுனு கணக்குப்போட்டுங்கங்க…….இரண்டு வருசமாயிடுச்சி.

சரவணக்குமார், எம்.எஸ்ஸி, பயோடெக்.

திருச்சியில 2011-ல முடிச்சேன். எனக்கு சயின்ஸ்டிஸ்ட் ஆகணும்னு ரொம்ப ஆசை. அதனாலத்தான் பயோ சயின்ஸ் எடுத்தேன். வேலை இல்லை….. இப்ப குரூப் 4-க்கு விழுந்து, விழுந்து இரண்டறை வருசமாப் படிக்கறேன். 5 வருசமா 6 எக்ஸாம் எழுதிட்டேன். குரூப் 4, குரூப் 2, போஸ்டல் எக்ஸாம், எஸ்.எஸ்.சி னு சென்ட்ரல் கவர்மெண்ட் எக்ஸாமுனு ஒண்ணு விடல. எல்லாம் 10 மார்க்குள்ளே கட்ஆப்ல போயிடுச்சி, 180-க்கு 170, 158-க்கு 145னு இ்ப்படினு நெருக்கமா போனேன்…. ஆனா உள்ளத்தான் போக முடியல.

எக்ஸாம் பீசுன்னு 50,000 ஆயிரம் முழுங்கிடுச்சி. எங்க சொந்த ஊரு தேனி மாவட்டம். அப்பா விவசாயம். நெல்லு, கம்பு, தென்னை-ன்னு விவசாயத்துல வர்றதெல்லாம் எனக்கே செலவுப் பண்ணி ஓய்ஞ்சிட்டாரு. எப்படியும் கவர்மெண்ட்ல ஒரு அதிகாரியாக்கியிடணும்னு அவருக்கு ஆசை. ஆனா, படிச்சா மட்டும் பத்தல.

ஃபெயிலானா….கோச்சிங் சென்டர்ல சொல்றான்…, டைம் அனலைஸ் இல்ல… கொஸ்டீன் அனலைஸ் இல்ல, எக்ஸாமு பதட்டத்துலயே படிச்ச பார்முலா எல்லாம் மறந்துடுறீங்க, எத டிக் அடிக்கறதுன்னு தெரியாத, கண்டத டிக் அடிக்கிறீங்கனு… சொல்றான். இதுக்காடா பணம் கொடுக்கறோம்னு கேட்க தோணுது. ஆனா அங்க, கேட்க முடியல.

ரேம், டிப்ளமோ இன் மெக்கானிக்கல்,

2013-ல முடிச்சேன். காஞ்சிபுரம் பக்கத்ததுல விஷாரம்தான் என் ஊரு.

எங்கப்பா சொல்றாரு தமிழ்நாட்டுல எங்கேங்கேயோ இருந்தெல்லாம் காஞ்சிபுரத்துக்கு வந்து தங்கி, இங்க கோயில்ல உட்கார்ந்து படிக்கிறாங்க…. பாஸ் பண்றாங்க…… நீ ஏன்டா… காஞ்சிபுரத்துல இருந்துக்கீனே ஊர சுத்துறனு, இங்க தொறத்தி விட்டாரு. நானும் எழுதி எழுதிப் பாக்கறேன். ரிசல்டுல நம்ம பேரு வரல. இதுவரைக்கும் பதிமுனாயிரம் கொடுத்திருக்காரு. செலவு ஆணாதுதான் மிச்சம்.

எங்க அம்மா, நான் வேலைக்கு போற மாதிரி சோறுக் கட்டிக் கொடுக்கிறாங்க. நானும் டெய்லி இங்க படிச்சிட்டுப்போறேன். பஸ்பேர் 300, டீ செலவு 200, மெட்டீரீயல் ஜெராக்ஸ் எடுக்கறதுன்னு மாசம் 1000 ஆகுது. கோச்சிங் கிளாசுக்கு பணம் கட்டுனாலும், சனி – ஞாயிறுத்தான் கிளாசு. மத்த நாள்ல நாங்களே படிச்சிக்கணும். கவர்மெண்ட் லீவுன்னா அன்னிக்கு ஸ்பெஷல் கிளாசு. இப்டி ஒவ்வொரு எக்ஸாமுக்கும் 6 மாசம் கோச்சிங் கொடுக்குறாங்க. ஆளுக்கு ஏத்த மாதிரி 5,000ல யிருந்து 8,000 வரைக்கும் பீஸ் வாங்குறாங்க.

இங்க எந்த மண்டபமும் ப்ரீயா இல்ல. 500, 600 பேரை சேர்த்து, மைக்க வைச்சி கிளாசு எடுக்கறாங்க. வேலை செய்யற வி.எ.ஒ, ரிடையர் ஆன டீச்சரு, டிஎன்பிசியில வேலைக்கு சேர்ந்த அதிகாரிங்களை வைச்சி கிளாஸ் எடுக்கிறாங்க.  சனி, ஞாயிறுக் கிளாசுக்கு பாண்டிச்சேரி, திண்டிவனத்திலிருந்தெல்லாம் வந்து தங்கி படிச்சிட்டுபோறவங்கல்லாம் இருக்காங்க. குஜராத் சத்திரம், செட்டியார் சத்திரம்-னு பல சத்திரத்துல நைட்டு 50 ரூபா கொடுத்துட்டு, தங்கி படிப்பாங்க.

– படம், நேர்காணல் : வினவு செய்தியாளர்.

 

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

    • அய்யர்வாள்..கேக்கறார்ள்ள….பதில் சொல்லூங்கோ..?
      கோவில்னா…தேவநாதன்,நித்தியானந்தன்,ஆசராம் பாபு,சங்கராச்சாரி போன்ற பெரியவா புழங்கற இடம்! ….சின்ன பசங்க அங்க போகலாமா..? அதுவும் படிக்க, பொம்பள பசங்க …தனியா …அங்க போறது அபச்சாரம் இல்லையா? …பார்த்துகோங்கோ….மெமரிகார்ட் ஏதாவது… மிஸ்ஸானா …ஆவா… பொறுப்பு இல்ல..!

  1. //இரண்டு வருஷத்துல எஸ்சி, கட்ஆப், 154-ல யிருந்து 180 ஆக எகிறிடுச்சி//

    இதில் முதல் தலைமுறையினர், மற்ற தலைமுறையினர் என்று பிரித்தால் நன்றாக இருக்கும்.

  2. கம்யூனிஸ்ட்கள் ஸ்டெர்லைட் ஆலையை முடக்கியது போல் அரசாங்கத்தையும் முடிக்கினால் இந்த மாதிரியான அப்பாவிகளும் வேலையில்லாமல் திரியலாமே… கம்யூனிஸ்ட்கள் அடுத்த சதி இதுவாக தான் இருக்கும்…

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க