உயர்கல்வித் துறையின் லட்சணம் இவ்வாறு இருப்பதற்கு யார் காரணம்?
”கொள்ளை வேந்தர் கணபதியின் சொத்துக்களை பறிமுதல் செய்!
கூட்டுக் களவானிகளான அதிகாரிகள்-அமைச்சர்களையும் சிறையிலடை!
கிரிமினல் மாஃபியாக்களிடமிருந்து கல்வித்துறையை மீட்டு
பெற்றோர்கள்- பேராசிரியர்கள்- மாணவர்களே நடத்துவோம்! “
என்கிற முழக்கத்தை முன்வைத்து புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி மற்றும் மக்கள் கலை இலக்கியக் கழகம் சார்பில் 13.02.2018 அன்று மதுரை தெற்குவாசலில் உள்ள பள்ளிவாசல் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தை பு.மா.இ.மு-வைச் சேர்ந்த தோழர் இரவி தலைமை ஏற்று நடத்தினார்.
அவர் தனது தலைமையுரையில், பேராசிரியர் நியமனத்தில் ரூ.30 லட்சத்திலிருந்து 60 இலட்சம் வரை இலஞ்சம் பெற்றதன் அடிப்படையில் பாரதியார் பல்கலையின் துணைவேந்தர் கைது செய்யப்பட்டிருக்கிறார். ஆளும் கட்சிக்கும் கணபதிக்கும் ஏற்பட்ட முரண்பாட்டின் காரணமாகத்தான் இந்த ஊழல் முறைகேடு வெளியே வந்துள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்துப் பல்கலைக் கழகங்களிலும் இதுதான் நிலைமை. கடந்தாண்டு அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஊழல் முறைகேடு வெளிவந்தது. கிட்டத்தட்ட ஐயாயிரத்திற்கும் மேலான பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்களை முறைகேடாக நியமித்து ரூபாய் பத்தாயிரம் கோடிக்கும் மேல் சுருட்டியவர் இராமசாமி செட்டியார்.
நியாயப்படி அரசு, செட்டியாரையும் இலஞ்சம் கொடுத்து பணியில் சேர்ந்த பேராசிரியர்களையும் கைது செய்திருக்க வேண்டும். ஆனால் செய்யவில்லை. மாறாக மற்ற கல்லூரிகளில் நடக்கவிருந்த பேராசிரியர் நியமனங்களை நிறுத்தி வைத்து இந்த ஊழல் ஆசிரியர்களை பணியில் சேர்த்தனர். இப்படி கேடுகெட்ட ஆசிரியர்களைப் பணியில் சேர்த்தால் இவர்களிடம் படிக்கும் மாணவர்களின் எதிர்காலம் எப்படிப்பட்டதாக இருக்கும் என்பதைக் கற்பனை செய்து பாருங்கள்.
இதற்கு எதிராக நேர்மையான பேராசிரியர்கள், பாதிக்கப்படும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களை ஒருங்கிணைக்க வேண்டிய அவசியத்தையும் உணர்த்தி தனது தலைமை உரையை நிறைவு செய்தார்.
அடுத்ததாக மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மதுரை மாவட்ட அமைப்பாளர் தோழர் இராமலிங்கம் ஆற்றிய கண்டன உரையில் பேருந்துக் கட்டணத்தை உயர்த்திவிட்டு உழைக்கக் கூடிய மக்கள் மிகப்பெரிய பாதிப்புக்கு உள்ளாக்கியிருக்கிறது அரசு. அதற்கெதிரான போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கையில் இப்படி ஒரு பிரச்சினை தலை தூக்கியிருக்கிறது.
தற்போது புதியதாக மதுரை மீனாட்சிக்கு ஆபத்து எனப் புதிய பிரச்சினையைக் கிளப்பியிருக்கிறார்கள் இந்துத்துவவாதிகள். மீனாட்சி மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியாவுக்கே இந்த இந்துத்துவ பாசிஸ்டுகளாலதான் ஆபத்து.
மற்ற நகரங்கள விட மதுரையில்தான் பேருந்து கட்டணம் அதிகம். ஏழு கிலோ மீட்டர் போவதற்கு இருபது ரூபாய் கொடுக்க வேண்டியிருக்கு.
இந்த சூழ்நிலையில்தான் துணைவேந்தர் பிரச்சினை. மக்களுக்கு இது பெரும் அதிர்ச்சியாக இருக்கிறது. பல்வேறு சுமைகளுக்கு இடையிலதான் மாணவர்கள் படிக்கிறார்கள். இந்த சூழலில் கல்வித்தரம் எப்படி இருக்க வேண்டும்? ஆசிரியர்கள் எப்படிப்பட்டவர்களாக இருக்க வேண்டும்? கணபதி போன்ற ஆட்களை நாம் விட்டு வைக்கலாமா? மாணவர்களிடம் சுயநலமும் காரியவாதமும் மேலோங்கி இருப்பதற்கு காரணமே இவர்கள்தான்.
ஒரு அம்மாவிடம் செயினைப் பறித்து தரதரவென்று இழுத்துச்செல்லும் இளைஞனின் மனநிலை எப்படி குரூரமாக மாறியிருக்கிறது என்பதை நினைத்துப் பார்த்தாலே நமக்கு உள்ளம் கூசுகிறது. இது போன்ற சம்பவங்கள் இனி தொடர்ச்சியாக நடக்கும் அபாயம் உள்ளது. செயினைப் பறித்த இளைஞனைப் பிடித்தால் பொதுமக்கள் என்ன செய்வார்களோ அதே போலத்தான் இந்த இலஞ்ச ஊழல் பேர்வழிகளை நடுத்தெருவில் கட்டிவைத்து தோலுறிக்க வேண்டும் என்று தனது கண்டனத்தை பதிவு செய்தார்.
மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் பொதுச் செயலாளர் பேராசிரியர். இரா.முரளி அவர்கள் தனது கண்டன உரையில், கடந்த பத்தாண்டுகளாக தமிழகத்தை கொஞ்சம் கொஞ்சமாக பீடித்துக் கொண்டிருந்த ஒரு நோய் தற்போது முற்றிலுமாக பரவியிருக்கிறது. படிக்க நினைக்கும் அனைவரும் பணம் கொடுக்காமல் படிக்க முடியாது என்கிற மனநிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.
படித்து ஆசிரியராக வேண்டுமென்றால் அதன் விலைப்பட்டியல் ஏற்கனவே போடப்பட்டிருக்கும். நான் மதுரை கல்லூரியில் ஐந்தாண்டுகள் முதல்வராக இருந்தவன். எங்கே போனாலும் வெட்கப்படாமல் இதைக் கூறுவேன். ஒரு சீட்டு வேணும்னா என் ரூமில் வந்து நிக்கனும். அங்கு அதிகாரத்தின் உச்சக் கட்டத்தில் உட்கார்ந்திருப்போம். அப்போது சொல்லுவார்கள் பத்தாயிரம் இருபதாயிரம் கொடுக்கிறேன் பி.காம் சீட் கொடு என்று.
இன்று ஆசியாவிலேயே மிகப்பெரிய திட்டமிட்ட ஊழல் என்றால் அது உயர்கல்வித் துறையில் தமிழகத்தில் நடந்த ஊழல்தான். காசு கொடுக்கலைனா வேலை எப்படிக் கிடைக்கும் என்று மக்களையே பேச வச்சுட்டாங்க. சொத்தை வித்து நாற்பது ஐம்பது இலட்சம் கொடுத்துவிட்டுத்தான் பேராசிரியர்களாக இருக்கிறார்கள். இதை யாரிடமும் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.
நான் கல்லூரியில் பணியாற்றிய காலத்தில் அப்போதிருந்த கல்வி அமைச்சர் எல்லாக் கல்லூரி முதல்வர்களையும் கூப்பிட்டு ‘ஒரு பேராசிரியருக்கு ஏழு இலட்ச ரூபாய் கொடுத்திருங்க மீதி எவ்வளவுனாலும் நீங்க வித்துருங்க” என்று கூறினார். நான் கோபமாகி ”உங்களுக்கு வெட்கமில்லையா?”னு கேட்டேன் ”இதுக்குப் போயி எதுக்கய்யா வெட்கப்படனும்?. இது கட்சி வளர்ச்சி நிதி. நானா எடுத்திட்டுப் போகப் போறேன். எனக்கு அரை சதவீதம் தான் கிடைக்கும்” என்று கூறினார்.
கடந்த இரண்டாண்டுகளாக நிம்மதி இல்லாத வாழ்நிலை. கமலும் ரஜினியும் சிஸ்டம் சரியில்லைனு சொல்லுறாங்க. உண்மையிலே சிஸ்டம்னா என்ன? அது எப்படி சரியில்லாமப் போச்சுனு தெரியுமான்னு தெரியல. அமெரிக்கன் கல்லூரி, மதுரைக் கல்லூரி, மன்னர் கல்லூரி, சரசுவதி நாராயணன் கல்லூரி என அனைத்துக் கல்லூரியிலும் பேராசிரியர் பதவிக்கு இலஞ்சம் வாங்கப்படுகிறது. இதை அவர்களால் மறுக்க முடியுமா? இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கும் மக்கள் என்ன செய்ய முடியும்? இவர்களை மக்கள் விரட்டி விரட்டி அடிக்கிற வரைக்கும் போராட்டம் பண்ண வேண்டியிருக்கு.
இன்று ஆளுநர் புரோகித் தமிழகத்தையே சுத்தி வந்து “ஸ்வச் பாரத்”- திற்கு வேலை செய்கிறார். ஆனால் அவர் அதிகாரத்தின் கீழ் இருக்கும் துணைவேந்தர் ஊழலை கவனிக்க மறுக்கிறார். அவர்தான் பல்கலை வேந்தர். தூத்துக்குடியில் குழந்தைகள் உட்பட விவசாயிகள், பொதுமக்கள் என ஆயிரம் பேருக்கு மேல் கைது செய்கிறார்கள். எத்தனை பேரைத்தான் இவர்களால் கைது செய்ய முடியும்?
எத்தனை கோடி ரூபாய் உயர்கல்வித் துறையில் அதிமுக அரசு ஊழல் செய்து குவித்துள்ளது என்பதை ஆய்வு செய்ய வேண்டியுள்ளது. அதே நேரத்தில் சில பத்துபேர் நடத்தும் இந்தப் போராட்டத்தை பல ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்கும் போராட்டமாக மாற்ற வேண்டும் என்று கூறி தனது கண்டனத்தைப் பதிவு செய்தார்.
அடுத்து பேசிய மதுரை காமராசர் பல்கலைக்கழக ஆசிரியர் பேரவையின் முன்னாள் தலைவர் பேராசிரியர். அ. சீனிவாசன் அவர்கள் தனது கண்டன உரையில், மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் முப்பதாண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்றவன். அந்தப் பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணைவேந்தராக இருந்த கல்யாணி மதிவாணனின் ஊழலை எதிர்த்துக் கேட்டதற்காக ஒரு பேராசிரியரை அடித்து அவரது கையை முறித்தார்கள். ஊழலை எதிர்த்தால் கை முறிக்கப்படும் என்கிறார்கள் ஊழல்வாதிகள்.
இதுவரை துணைவேந்தர் பதவிகள் சாதிரீதியாகவும் அரசியல்ரீதியாகவும் வலுவான பணக்காரர்கள்தான் நியமிக்கப் பட்டிருக்கிறார்கள். தற்போது கணபதி மாட்டிக் கொண்டார். அவரை நியமித்தவர்கள் யார்? அவரை இந்தப் பதவிக்கு பரிந்துரை செய்தொர்கள் யார்?. தற்போது நிர்வாகக் குழுவில் இருக்கும் மூன்று பேரில் ஒருவர் தானே அவரைப் பரிந்துரைத்திருப்பார். பணம் கொடுத்துத்தான் பதவியில் சேர்ந்தேன் அதனால்தான் பணம் வாங்கினேன் என்கிறார் கணபதி. அப்படியானால் நேர்மையானவர்கள் இப்பதவிக்கு வர முடியாது என்பதே உண்மை.
இதனால் பாதிப்பு யாருக்கு என்பதைப் பார்ப்பதுதான் முக்கியம். ஒன்றுமே தெரியாத ஒரு மாணவன் கல்வி கற்க வந்தால் அவனுக்கு கற்றுக் கொடுக்கும் ஆசிரியர் எப்படிப்பட்டவராக இருக்க வேண்டும். ஆனால் இலஞ்சம் கொடுத்து பதவியில் சேர்ந்த ஆசிரியரின் தரம் எப்படி இருக்கும் என்பது நமக்குத் தெரியும். மாணவர்களுக்கு பாடம் நடத்த இவர்களுக்கு அருகதை இருக்கிறதா?
நம்முடைய வரிப் பணத்தில் தான் பல்கலைக் கழகங்கள் நடைபெறுகின்றன. ஆனால் நமது சந்ததியினருக்கு தரமான கல்வி தரும் தகுதி இவர்களுக்கு இல்லை. மக்களாகிய நாம் இவற்றையெல்லாம் பார்த்துக்கொண்டு பேசாமல் இருந்தால் நம்முடைய எதிர்கால சந்ததியினரின் வாழ்க்கை பாழாகிவிடும் என்பதில் எள் முனை அளவுகூட சந்தேகம் இல்லை என்று பேசினார்
அடுத்து மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாவட்டச் செயலர் தோழர் லயனல் அந்தோணி ராஜ் பேசினார். கோவை பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கணபதி மட்டும் தான் ஏதோ லஞ்சம், ஊழல் செய்து பிடிபட்டுவிட்டார் என்று இல்லை. தமிழ் நாட்டில் உள்ள அனைத்துப் பல்கலைக் கழகங்களின் துணை வேந்தர்களும் கணபதியைப் போன்றவர்கள் தான்.
கோடிகோடியாக லஞ்சம் கொடுத்துப் பதவிக்கு வந்தார்கள். இப்போது கொடுத்ததை வசூல் செய்கிறார்கள். அவர்களுக்கு உயர்கல்வியைப் பற்றியோ தரத்தைப் பற்றியோ நாட்டின் எதிர்காலத்தைப் பற்றியோ எந்தக் கவலையும் கிடையாது. போட்ட பணத்தை பல மடங்கு லாபத்துடன் எப்படி சம்பாதிப்பது என்பதுதான் அவர்களது ஒரே நோக்கம்.
இந்த நிலை எதனால் வந்தது? பல்கலைக் கழகத் துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் பல்கலை வேந்தராகிய ஆளுநரிடமும் உயர்கல்வித்துறை அமைச்சகத்திடமும் இருக்கிறது. இவர்கள்தான் லஞ்சம் வாங்கிக்கொண்டு தகுதி இல்லாத நபர்களை நியமிக்கின்றனர். தகுதி இல்லாதவர்கள் மட்டும் இல்லை. அவர்கள் கிரிமினல் பேர்வழிகளாகவும் இருக்கிறார்கள்.
ஏற்கனவே அமைச்சர்களும் அதிகாரிகளும் அப்படிப்பட்டவர்களாகத்தான் இருக்கிறார்கள். எனவே இனம் இனத்தோடு சேர்கிறது. மதுரைக் காமராசர் பல்கலைக் கழகத் துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ள பி.பி. செல்லத்துரை துணைவேந்தர் பொறுப்புக்கு உரிய தகுதி இல்லாதவர். எப்படி நியமிக்கப்பட்டார்? எப்படி பதவியில் நீடிக்கிறார்? அவரது நியமனத்தை எதிர்த்து நான் உயர்நீதி மன்றத்திலே வழக்குப் போட்டுள்ளேன். ஆனால் அவர் பதவியில் இருப்பது மட்டுமல்லாமல் பல லட்சம் லஞ்சம் பெற்றுக்கொண்டு அவரைப் போன்ற கிரிமினல்களை உயர் பதவிகளில் நியமிக்கிறார்.வழக்கு நீதிமன்றத்திலே தூங்கிக்கொண்டிருக்கிறது.
இன்றைக்கு இதேபோல முறைகேடாக நியமிக்கப்பட்டுள்ள தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் துணை வேந்தர் பாஸ்கரனை எதிர்த்துப் போராட்டம் நடக்கிறது. கணபதி மீது மட்டும் நடவடிக்கை பாய்ந்தது எதனால்? ஆளுநர் புரோகித்துக்கு மற்ற பல்கலைக் கழகங்களின் நிலைமை தெரியாதா? வாங்கிய கொள்ளையில் உரிய பங்கு போய்ச் சேரவில்லை என்பது தான் பிரச்சினை என்று சொல்லப்படுகிறது.
மேலும் சசிகலாவிடம் லஞ்சம் கொடுத்து பதவியைப் பெற்றவர்களை மட்டும் குறிவைத்து நடவடிக்கை பாய்கிறது என்றும் சொல்லப்படுகிறது. ஆளுநர் புரோகித் சாட்டையைச் சுழற்றுகிறார் என்றெல்லாம் சிலர் சொல்லுகிறார்கள். ஆனால் உண்மை அதுவல்ல. பங்கு போகாததுதான்.
அதற்கு மேல் அது ஒரு கண்துடைப்பு நாடகமே. தமிழ் நாட்டின் அனைத்துக் கனிம வளங்களும் கொள்ளையடிக்கப்பட்டு பங்கு போய்க்கொண்டிருந்த நிலையில் கிரானைட் பி.ஆர்.பி.மீது தனிப்பட்ட காரணங்களால் ஜெயலலிதா நடவடிக்கை எடுத்ததுபோலத்தான் இதுவும். பஸ் கட்டண உயர்வு போன்ற பல பிரச்சினைகளில் இருந்து மக்களைத் திசைதிருப்பும் முயற்சிதான் இது.
கணபதி மீது நடவடிக்கை எடுத்துள்ள ஊழல் தடுப்பு கண்காணிப்புத் துறை அவரிடம் லஞ்சம் வாங்கிய அமைச்சர்கள், அதிகாரிகள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? கவர்னரும் ஏன் மவுனம் காக்கிறார்?
உயர்கல்வித்துறையின் இந்த சீரழிவிற்குக் காரணம் எது? கல்வி தனியார் மயம் ஆக்கப்பட்டு, வியாபாரம் ஆனதுதான். தனியார் வசம் கல்வியை ஒப்படைப்பதுதான் மத்திய மாநில அரசுகளின் நோக்கம். பல்லாயிரம் கோடி புரளும் இந்தத் துறையில் பல அரசியல் தலைவர்கள், அதிகாரிகள், கார்ப்பரேட்டுகள் முதலீடு செய்துள்ளனர். காசு உள்ளவனுக்கு மட்டும் தான் கல்வி என்பது இன்று பா.ஜ.க. ஆட்சியில் எழுதப்பட்ட விதியாகிவிட்டது.
இந்த நிலையை யார் மாற்றுவார்கள்? மக்கள்தான் இந்த நிலையை மாற்ற வேண்டும். தகுதியற்ற இந்தக் கொள்ளையர்களை விரட்டிவிட்டு மக்கள் அனைத்துக் கல்வி நிலையங்களையும் கைப்பற்றி தாங்களே நடத்த வேண்டும்.
பு.மா.இ.மு. தோழர் சேகரன் நன்றி சொல்ல ஆர்ப்பாட்டம் முடிந்தது.
தகவல்:
புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி
மதுரை.