Thursday, June 20, 2024
முகப்புபோலி ஜனநாயகம்போலீசுதிருச்சி : போலீசின் ரவுடித்தனத்திற்கு எதிராக போராட்டம் !

திருச்சி : போலீசின் ரவுடித்தனத்திற்கு எதிராக போராட்டம் !

-

திருச்சி : லஞ்சம் – வழிபறி -ரவுடித்தனம் போலீசின் ராஜ்யத்திற்கெதிராக தட்டிக்கேட்ட பெண்கள் – இளைஞர்கள்!

டந்த சில மாதங்களாக தமிழகம் முழுவதும் காவல்துறை, வாகன சோதனை நடத்தி, ஸ்பாட்ஃபைன் போடுவது நடந்து வருகிறது. திருச்சியில் “ஜல்லிக்கட்டு எதிர்ப்பு புகழ்” கமிஷனர் அமல்ராஜ் உத்தரவின் பேரில், இது நடக்கிறது.

உத்தரவிட்ட மூன்றே நாளில் 36,000 வழக்குகள். 36 லட்சம் வசூல் சாதனை. வருடப்பிறப்பு, பொங்கல் நாளிலும் வசூல்வேட்டை. புத்தாண்டு தினத்தன்று, விடிய, விடிய இரு சக்கர வாகன ஓட்டிகளை மறித்து, வாழ்த்து சொல்லி, இனிப்பு வழங்கிய காவல்துறை, விடிந்ததும் வழக்கம் போல ஹெல்மெட் வழக்குகளை போட்டு வசூல் வேட்டையைத் தொடர்ந்துள்ளது.

கொடுத்த இனிப்புகளுக்கும் சேர்த்தே வசூல் செய்திருப்பார்கள் போல. “காவலர்களுக்கு சம்பளமே இந்த வசூல் மூலம்தான்” என்கிறார் ஒரு காவல் ஆய்வாளர். “8 மணி நேரத்தில் 4 மணி நேரம் இந்த வேலை தான்” என ஒரு SI-யே புலம்பும் அளவுக்கு வசூல் வேட்டை தொடர்கிறது.

ஏற்கனவே பஸ் கட்டண உயர்வு, கேஸ், பெட்ரோல் விலை உயர்வு என பல்வேறு சோதனைகளில் சிக்கி வாழ வழியற்று விழி பிதுங்கும் மக்களை ‘வாகன சோதனை’ என்ற பேரில் வழிப்பறி செய்கிறது போலீசு. திருச்சி மாநகர் எல்லைக்குள் 14 காவல் நிலையங்கள். ஒவ்வொரு காவல் நிலைய எல்லையிலும் 4, 5 இடங்களில் வசூல். ஒரு இடத்தில் 100 கேஸ் கட்டாயம். எனவே ஒரு நாள் வசூல் திருச்சி மாநகரில் மட்டும் 7 லட்சம். மாத வசூல் 2 கோடியே 10 லட்சம். புறநகர் காவல் நிலையங்கள் தனி. தமிழ்நாடு முழுவதும் கணக்கு போட்டுப் பாருங்கள். இந்த வசூல் வேட்டை வழிப்பறிக் கொள்ளைதான் என்பது தெளிவாகப் புரியும்.

இளைஞர்களை தாக்கிய எஸ்.ஐ. கோபால்

திருச்சி உய்யகொண்டான் திருமலை பகுதியில் ஒரு செக்போஸ்ட் உள்ளது. சுற்று வட்டார விவசாயிகள் காந்தி மார்க்கெட்டுக்கும், இளைஞர்கள் கூலி வேலைகளுக்கும் இந்த செக்போஸ்ட்-ஐ கடந்து செல்லும் போதெல்லாம், அவர்களிடம் வசூல்வேட்டை நடத்தியுள்ளது போலீசு.

கடந்த 11.02.2018 இரவு செக்போஸ்ட்டில் பணியில் இருந்த எஸ்.ஐ. கோபால் உய்யகொண்டான் பகுதியைச் சேர்ந்த 2 பட்டதாரி மாணவர்கள், அனைத்து ஆவணங்களைக் காட்டியும், 500 ரூபாய் வாங்கிக் கொண்டு, 100 ரூபாய்க்கு ரசீது கொடுத்துள்ளார். இதைக் கேட்டதற்காக, கன்னத்தில் அறைந்தும், 10 காவலர்களுடன் சேர்ந்து லத்தியால் அடித்தும், உதைத்தும், நடு ரோட்டில் வைத்து கொடூரமாக தாக்கியுள்ளனர். அடி தாங்காத 2 இளைஞர்களும் அருகாமை தெருவிற்கு ஓடியுள்ளனர். விரட்டி சென்று அடித்து, இழுத்து வந்து செக்போஸ்ட்டில் வைத்து மீண்டும் அடித்து, உதைத்துள்ளனர்.

இதனைக் கேள்விப்பட்டு வந்த அந்த இளைஞர்களின் பெற்றோர்கள், சுற்று வட்டார பகுதி மக்கள் காவலர்களின் தாக்குதலை கண்டித்தனர். மீண்டும் பாதிக்கப்பட்டவருக்கு ஆதரவாக பொதுமக்கள் இளைஞர்கள் சாலை மறியல் செய்தனர். ஏற்கனவே பலமுறை இந்த செக்போஸ்ட்போலீசால் பாதிக்கப்பட்ட ஆத்திரத்தில் இருந்த சோழிங்கநல்லூர், செங்கற் சோலை மற்றும் மேலத்தெரு, கோப்பு, சோமரசம் பேட்டையை சேர்ந்த விவசாயிகள், இளைஞர்கள் இச்செய்தியறிந்து வாகனங்களில் 300 -க்கும் மேற்பட்டோர் குவிந்தனர். “தங்களின் உழைத்த பணத்தை இந்த காவல்துறைக்கு லஞ்சமாக ஏன் கொடுக்க வேண்டும், என கேள்வி எழுப்பினர். காவல்துறையினருக்கெதிராக இரவு8.30 மணி துவங்கி நள்ளிரவு 12 மணிவரை மாபெரும் மறியல் போராட்டமாக நீடித்தது.

  • லஞ்சம் – வழிபறி- தாக்குதல் என குற்றச்செயல்களில் ஈடுபட்ட எஸ்.ஐ.கோபாலை பணி நீக்கம் செய்!
  • இரண்டு மாணவர்களையும் விடுதலை செய்!
  • அவர்களின் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை ரத்து செய்!
  • பாலுவாங்ககூட போகமுடியல இந்த செக்போஸ்ட் டை அப்புறப்படுத்து! ….என கோரினர்.


தன் அதிகாரம் கேள்விக்குள்ளாக்கப்படுவதையறிந்த ஏசி பெரியய்யா பெட்டிசன் கொடுங்கள் நடவடிக்கை எடுக்கிறேன் என நைசியமாக பேசி முன்னின்ற சில இளைஞர்களிடம் கையெழுத்து கடிதம் பெற்ற மறுகணமே கலைந்துசெல்லு! ஓடு என திமிருடன் மறியலில் ஈடுபட்ட பெண்கள், இளைஞர்கள் மீது காட்டுமிராண்டித்தனமாக தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.

தடியடியால் 10 -ஆம் வகுப்பு மாணவியின் கால் ரணமாகி பள்ளி செல்லமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். பல பெண்கள், இளைஞர்கள் பாதிக்கப்பட்டனர். ஆத்திம் தீராத காவல்துறை அருகாமை கிராம இளைஞர்களை தேடிப்பிடித்து இரண்டு வேன்களில் கடத்திச் சென்று வழி நெடுக “எங்களை எதிர்க்க இவ்வளவு துணிச்சல் எப்படிடா வந்தது?” என கேட்டு கேட்டு வண்டியில் அடித்துள்ளனர்.

கடும் தாக்குதலுக்கு உள்ளான நிரோசன்

இறுதியாக உறையூர் காவல் நிலையத்தில் அவர்களை சட்டவிரோதமாக இரவு முழுவதும் அடைத்துவைத்ததுடன் கேமராக்களை அனைத்து விட்டு சீருடையில் இல்லாத காவலர்களும் இணைந்து, இரண்டு இரண்டு பேராக இழுத்துச்சென்று கொடுரமாகதாக்கியதில் 10 -க்கு மேற்பட்டவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

தேவேந்திரன் வயது(34) என்பவரது கால் மூட்டு நொறுக்கப்பட்டுள்ளது. பூட்ஸ் காலால் எட்டி உதைத்து மிதிக்கப்பட்டதில் கல்லூரி. மாணவர் நீரேஷ் கண், காது, பாதிக்கப்பட்ட வேதனையுடனேயே கல்லூரி தேர்வை எழுதியுள்ளார். பொது மக்கள், பெண்கள் மீது போலீசு நடத்திய தாக்குதலை, தனது செல்போனில் படம் பிடித்த இளைஞரை மிக கடுமையாக இடுப்பு மீது ஏறி மிதித்துள்ளனர்.

மறுநாள் காலை இரக்கமற்ற காக்கி மிருகங்கள் பாதிக்கப்பட்டவர்களிடமே “மருத்துவமனைக்கு செல்ல மாட்டேன்” எந்த பிரச்சனைக்கும் என எழுதி வாங்கி கொண்டு விரட்டியடித்துள்ளனர். (சிகிச்சைக்கு சென்றால் தாங்கள் சிக்கி விட நேரிடும் என்பதால்.) இச்செய்தியறிந்து மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்த தோழர்கள் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.

எஸ்.ஐ. கோபால் ஏற்கனவே இது போன்று பொதுமக்கள் மீது காட்டுமிராண்டித்தனமான தாக்குதலைத் தொடுத்திருக்கிறார். கடந்த 2017-ம் ஆண்டு அக்டோபர் மாதம் ஒரு இளைஞனை ஹெல்மெட் கொண்டு தாக்கியிருக்கிறார். தன்னை ஐயா எனக் கூப்பிடாமல் சார் என்று கூப்பிட்ட குற்றத்திற்காக சமீபத்தில் திருச்சியில் ஒரு இசுலாமியரைக் கடுமையாக தாக்கியிருக்கிறார். கோபாலின் இந்தக் குற்றங்கள் அனைத்திலும் அவரது மேலதிகாரிகள், மனித உரிமை ஆணையம், அரசு அதிகாரிகள் என அனைவரும் கோபாலுக்கு ஆதரவாக இருந்துள்ளனர்.

கால் உடைந்த நிலையில் “இது போலீசு கேசு சேர்க்கமுடியாது என மருத்துவ சிகிச்சையின்றி விரட்டப்பட்டு, வேதனைப்பட்ட இளைஞர் தேவேந்திரனுக்கு வழக்கறிஞர்கள் முன்னிலையில் மருத்துவ சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உடைந்த காலுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஏற்கனவே போலீசு மீது கொதிப்புடன் இருந்த நூற்றுக்கும் அதிகமான பெண்கள், இளைஞர்கள் மக்கள் அதிகாரம் அமைப்புடன் இணைந்து ஊர்வலமாக சென்று ஆட்சியர் அலுவலக வாசலிலேயே முழக்கமிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தும் மக்கள் அதிகாரம் தோழர்கள்

ஆர்ப்பாட்டத்தில் பேசிய பெண்களில் சிலர் “போலீசுக்கு மக்களின் உயிர் மேல் என்னடா இவ்வளவு அக்கறை? ஆக்சிடண்ட்ல செத்தத விட நீ அடிச்சுக் கொன்ன ஆளுங்க தான் அதிகம். வரண்டபயலுக மாதிரி சந்துக்கு சந்து மறஞ்சு நின்னு ஏன் பிடிக்கிற? டீ வாங்கக் கூட போக முடியல. அன்றாடம் இவனுங்களுக்கு அழுக வேண்டியதாயிருக்கு, போலீசு மேல இருந்த கொஞ்ச நஞ்ச மரியாதயும் இப்ப இல்ல, இனி எங்க ஏரியாக்குள்ள போலிசே வரக்கூடாது” என்று பேசினர்.

போலீசால் கால் உடைக்கப்பட்ட தேவேந்திரன்

கால் முறிக்கப்பட்ட இளைஞரின் தாய் “என் மவன் என்ன தப்பு செஞ்சான். கள்ளக்கடத்தல் பண்ணானா?, இல்ல உன் பொண்டாட்டி புள்ளங்கள கையப்புடிச்சி இழுத்தானா? எதுக்கு இப்புடி மிருகத்தனமா அடிச்சிருக்க?” என்று பேசினார்.

இறுதியாக ‘SI கோபால் உள்ளிட்ட போலீசாரை பணிநீக்கம் செய்ய வேண்டும்! உய்யகொண்டான் திருமலை செக்போஸ்ட்டை அகற்ற வேண்டும்: நீதிபதி தலைமையில் நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட இளைஞர்கள், பொதுமக்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சையும், இழப்பீடும் வழங்க வேண்டும்!

திருச்சி முழுவதும் ‘வாகன சோதனை’ என்ற பேரில் போலீசு நடத்தும் வழிப்பறிக் கொள்ளையை தடுத்து நிறுத்த வேண்டும்! என கோரிய மனுவை, திருச்சி மாவட்ட ஆட்சியரின் (பொ) உதவியாளர் வெளியே வந்து மனுவை பெற்றுக்கொண்டு நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார். இதனைதொடர்ந்து மாவட்ட முதன்மை நீதிபதியிடமும் மனு கொடுக்கப்பட்டுள்ளது.’

அரசும், ஆளும்வர்க்கமும் மக்களை வதைக்க-அதிகாரம் செலுத்த கட்டியமைத்த போலீசின் ராஜ்யத்திற்கெதிராக கெஞ்சுவது, புலம்புவதால் பயனில்லை, மக்கள் அதிகார கமிட்டிகளைகட்டுவதே மக்களுக்கு பாதுகாப்பு! என்பதை உணர்த்தியுள்ளது இந்த மக்கள் போராட்டம்!

( படங்களைப்  பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் அதிகாரம்,
திருச்சி.

 

  1. காவல் துறை தொடர்பான அனைத்து சட்டங்களும் பொது மக்களுக்கு தெரியும் போது
    இப்படி அராஜகமாக நடந்து கொள்ள காவல் துறையினர் அஞ்சுவார்கள்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க