பொதுமக்கள் நிதியைச் சூறையாடித் தின்று விட்டு பாஜகவின் தயவால் தப்பி ஓடிய நவீன கொள்ளையர்களின் பட்டியல் லலித் மோடி, விஜய் மல்லையா, நீரவ் மோடி என நீண்டு வருகிறது. இந்த மைனர்களைத் தொடர்ந்து பொதுத்துறை வங்கி அதிகாரிகளை கையில் போட்டுக் கொண்டு ரூ.3695 கோடி முறைகேடு செய்து தற்போது சிக்கியிருக்கிறார் விக்ரம் கோத்தாரி.
யார் இந்த விக்ரம் கோத்தாரி ? விக்ரம் கோத்தாரியின் தார்மீக அறத்தைக் காக்கும் பொருட்டு அவரை ரோட்டோமேக் பேனா நிறுவனத்தின் நிறுவனர் என்றே ஊடகங்கள் அறிமுகப்படுத்துகின்றன. பிரபல குட்கா வஸ்துவான ”பான்பராக்” நிறுவனத்தின் நிறுவனர்களில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. பான்பராக் நிறுவனத்தை தமது சகோதரர் தீபக் கோத்தாரியோடு சேர்ந்து தொடங்கிய விக்ரம், 1990களின் பிற்பாதியில் சொத்துகளைப் பிரிக்கும் போது ரோட்டோமேக் நிறுவனத்தைக் கையில் எடுத்துக் கொண்டார்
அதிகாரத்தில் இருப்பவர்களை கைக்குள் போட்டுக் கொண்டு குறுகிய காலத்திலேயே பல்வேறு தொழில்நிறுவனங்களை உருவாக்கினார் விக்ரம் கோத்தாரி. ரோட்டோமேக் ஏற்றுமதியகம், கோத்தாரி உணவு மற்றும் வாசனைப் பொருட்கள் நிறுவனம், க்ரவுன் ஆல்பா எழுதும் உபகரணங்கள், மோகன் எஃகு நிறுவனம், ஆர்,.எஃப்.எல். உட்கட்டமைப்பு நிறுவனம், ரேவ் எண்டெர்டெயின்மெண்ட் மற்றும் பல்வேறு ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கும் தலைவராக இருக்கிறார் கோத்தாரி.
தற்போது சிக்கியிருக்கும் பான்பராக் நிறுவனர் விக்ரம் கோத்தாரி, ஏற்கனவே கடந்த 2017-ம் ஆண்டு பரோடா வங்கியால், வேண்டிமென்றே கடனைத் திரும்பச் செலுத்தாதவர் என அறிவிக்கப்பட்டவர். அலகாபாத் வங்கி, பேங்க் ஆஃப் இந்தியா, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, யூனியன் வங்கி உள்ளிட்ட அனைத்து பொதுத்துறை வங்கிகளிலும் முறைகேடுகள் செய்து, கடன் வழங்குவதற்கான விதிமுறைகளைத் தளர்த்தி கடன் பெற்று வாராக்கடன்களைக் குவித்துள்ளார்.
நீரவ் மோடி விவகாரத்தில் நடைபெற்ற ரூ. 11,500 கோடி மோசடி அம்பலமானதன் தொடர்ச்சியாக விக்ரம் கோத்தாரி அலஹாபாத் மற்றும் யூனியன் வங்கியிலிருந்து முறையே ரூ. 352 கோடி மற்றும் ரூ. 485 கோடி கடன் பெற்று திருப்பி செலுத்தாத மோசடி அம்பலமானது. அதனைத் தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், விக்ரம் கோத்தாரி 7 பொதுத்துறை வங்கிகளை கபளீகரம் செய்து மொத்தம் 3,695 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளார் என சிபிஐ குற்றம்சாட்டியது.
விக்ரம் கோத்தாரிக்கு கடன் வழங்கிய வங்கிகள் மற்றும் கடன் விவரம்:
- பரோடா வங்கி – ரூ. 456.53 கோடி
- பாங்க் ஆஃப் இந்தியா – ரூ. 754.77 கோடி
- மஹாராஸ்டிரா வங்கி – ரூ. 49.82 கோடி
- அலஹாபாத் வங்கி – ரூ. 330.68 கோடி
- ஓரியண்டல் வணிக வங்கி – ரூ. 97.47 கோடி
- இந்தியன் ஓவர்சீஸ் வங்கி – ரூ. 771.07 கோடி
- யூனியன் வங்கி – ரூ. 458.95 கோடி
இந்தக் கடன்களின் கூட்டுத்தொகை ரூ. 2919.29 கோடி/ அதன் வட்டி மற்றும் வங்கிக் கட்டணங்கள் அனைத்தையும் சேர்த்து இந்தக் கடன் தொகை ரூ.3695 கோடியாகும்.
இந்த பிராடு பக்கிரியார் கடந்த வாஜ்பாய் ஆட்சியிலிருந்து பாஜகவுடன் நெருங்கிய உறவு பாராட்டி வருகிறார் என்பதற்கு, கடந்த வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில் இந்திய அரசின் ”இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பின்” சிறந்த ஏற்றுமதியாளர் விருதைப் பெற்றிருப்பதே சாட்சி.
சுவிஸ் வங்கியின் கருப்புப் பணத்தை மீட்டுத்தருவேன் என சவுண்டு விட்ட மோடி, இந்திய பெருமுதலாளிகள், பொதுத்துறை வங்கியிலிருந்து அடிக்கும் பகல் கொள்ளை குறித்து தவறியும் வாய்திறக்காதது ஒன்றும் புரிந்து கொள்ள முடியாதது அல்ல.
மேலும் படிக்க: