Thursday, June 20, 2024
முகப்புசெய்திஐ.டி. பெண் ஊழியர்கள் தாக்கப்படுவதற்கு யார் பொறுப்பு?

ஐ.டி. பெண் ஊழியர்கள் தாக்கப்படுவதற்கு யார் பொறுப்பு?

-

சென்னையில் 13/2/2018 அன்று அதிகாலை 2 மணிக்கு வேலை முடித்து வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்த தகவல் தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்த பெண் ஊழியர் அடையாளம் தெரியாத நபர்களால் கொடூரமான முறையில் தாக்கப்பட்டு, அவரது உடைமைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.

தாழம்பூர் – பெரும்பாக்கம் பிரதான சாலையில், அரசன்கழனி என்ற வீடுகளற்ற, மின் விளக்குகள் இல்லாத பகுதியில் வந்த போது அவர் தாக்கப்பட்டுள்ளார். சாலை ஓரத்தில் இரத்த வெள்ளத்தில் கிடந்த இவரை காலையில் வெகு நேரம் கழித்து அந்த வழியாக வாகனத்தில் சென்றவர்கள் பார்த்து மீட்டுள்ளனர்.

தகவல் தொழில்நுட்பத் துறையில் பணிபுரியும் பெண் ஊழியர்கள் பணி முடிந்து இரவு நேரங்களில் வீடு திரும்பும் போது தாக்கப்படுவதும், பாலியல் வல்லுறவுக்கு ஆளாவதும் தொடர் கதையாகத் தொடர்கிறது.

நம் நாட்டுத் தொழிற்துறைச் சட்டங்களின் படி பெண் ஊழியர்கள் இரவு நேரங்களில் பணிபுரிய அனுமதிக்கப்படுவதில்லை. இதில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்பட்டு கடந்த 2005 -ம் ஆண்டு சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டது. அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த வாடிக்கையாளர்களுக்கு (client), பணத்தை மிச்சப்படுத்த அவர்களது நேரத்தில் இங்கே நமது நாட்டில் குறைந்த கூலிக்கு வேலை செய்யும் ஊழியர்கள் தேவை என்ற காரணத்திற்காகவே இந்தத் திருத்தம் கொண்டுவரப்பட்டது.

அதன்படி இத்துறையில் இரவு 8 மணிக்கு மேல் பெண் ஊழியர்கள் பணிபுரிய அனுமதிக்கப்பட்டனர். அதேசமயம் அவர்களது பாதுகாப்பை உத்தரவாதப்படுத்த வேண்டியது நிறுவனத்தின் கடமை என்ற நிபந்தனையின் அடிப்படையிலேயே இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பெண் ஊழியர்கள் இரவு நேரங்களில் பணிபுரிய நேரிடும் போது. நிறுவனேமே அவர்களை வீடு வரை பாதுகாப்பாக கொண்டுவிட பொறுப்பேற்க வேண்டும். இதற்கென வாகன வசதி (cab) ஏற்பாடு செய்து தர வேண்டும், அவர்களுடன் ஒரு பாதுகாவலரையும் (security) அனுப்ப வேண்டும்.

ஆனால் பெரும்பாலான தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் இதனை நடைமுறைப் படுத்துவதில்லை. கேப் ஏற்பாடு செய்து தருவதை அவர்கள் ஊழியர்களுக்கு வழங்கும் சலுகையாக கருதுகிறார்கள். அதனால் தான் செலவுகளைக் குறைத்தல் (cost cutting) என்ற பெயரில் மற்ற சலுகைகளை நீக்குவதைப் போல இதையும் நீக்கி பெண் ஊழியர்களின் பாதுகாப்பைப் புறக்கணிக்கின்றனர். அப்படியே கேப் வசதிகளை ஏற்படுத்தித் தந்தாலும் அதனை உடனடியாக வரவழைக்காமல் காலம் தாழ்த்துவது. வீட்டிற்குக் கொண்டு வந்து விடாமல் போர்டிங் பாயின்ட் (boarding point) என்று ஏதாவது ஒரு இடத்தில் இறக்கிவிட்டுச் சென்று விடுகின்றனர். அங்கிருந்து ஊழியர்கள் தங்களது சொந்த வாகனத்தில் வீடு திரும்ப வேண்டியிருக்கிறது.

இரவு நேரங்களில் பணிபுரியும் பெண் ஊழியர்களின் பாதுகாப்பிற்கு அந்தந்த நிறுவனங்களே பொறுப்பு என்ற அடிப்படையில், இவ்வாறு கேப் வசதி ஏற்படுத்தித் தராத சில நிறுவனங்களுக்கு நமது சங்கம் சார்பில் நாம் கடிதம் அனுப்பியுள்ளோம். இதனைச் செய்து தர மறுக்கும் நிறுவனங்கள் மீது தொழிலாளர் துறையில் குறிப்பாணை தாக்கல் செய்யலாம்

நேற்றைக்கு நடந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர் நாவலூரில் உள்ள நியூ குளோபல் என்ற அமெரிக்க நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். அதிகாலை 2 மணி ஷிப்டில் வேலை செய்தாலும், நிறுவனம் கேப் வசதி ஏற்படுத்தித் தராத காரணத்தால் தனது இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பியபோதுதான் இதுபோன்று தாக்கப்பட்டுள்ளார்.

இந்த ஊழியர் தாக்கப்பட்ட செய்தி ஓரிரு நாளிதழ்களில் வந்தது, அத்துடன் ஊடகங்கள் தங்களது கடமையை முடித்துக் கொண்டன. போலீசும் இருக்கும் ஆயிரம் வழக்குகளில் இதையும் ஒன்றாகத் தூக்கியெறிந்துவிட்டு அடுத்த வேலையைப் பார்க்கப் போய்விடும். தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களோ இன்னும் சிறிது காலத்திற்கு வாகன வசதி செய்து கொடுத்துவிட்டு, பின்னர் மீண்டும் செலவுக் குறைப்பு என பழையபடி புறக்கணிப்பார்கள். சில ஆண்டுகளுக்கு முன்னர் டி.சி.எஸ். ஊழியர் உமா மகேஸ்வரி படுகொலை செய்யப்பட்ட போதும் இதுபோன்றுதான் நடந்தது.

பல ஆண்டுகள் தனது உழைப்பைக் கொட்டிக் கொடுக்கும் ஊழியரை ஓரிரு நிமிடங்களில் வேலையைவிட்டுத் தூக்கியெறியும், லாபத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டு செயல்படும், ஊழியர்களின் உரிமையைக் கழிவறைக் காகிதமாகக் கருதும், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் பெண் ஊழியர்களுக்கு உரிய பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டுமானால் ஊழியர்களாகிய நாம் தான் ஒற்றுமையுடன், அதற்காகத் தொடர்ந்து கண்காணித்துப் போராட வேண்டியிருக்கிறது.

நன்றி : நியூ டெமாக்ரேட்

NDLF – IT Union

செய்தி ஆதாரம்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க