Friday, February 7, 2025
முகப்புசெய்திஇந்தியாஇந்திய அரசின் காசநோய் ஒழிக்கும் திட்டம் ஒரு கட்டுக்கதை !

இந்திய அரசின் காசநோய் ஒழிக்கும் திட்டம் ஒரு கட்டுக்கதை !

-

ந்தியாவின் மிகப்பெரிய மற்றும் கடுமையான சுகாதாரச் சிக்கல்களில் ஒன்று காசநோய். உலக சுகாதார அமைப்பு, இந்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தின் படி ஆண்டுதோறும் 28 இலட்சம் இந்தியர்கள் காசநோயினால் பாதிக்கப்படுகிறார்கள். காசநோயோடு எயிட்ஸ் நோயும் சேர்ந்து 87 ஆயிரம் பேர் பாதிக்கப்படுகிறார்கள்.

சமீப காலங்களில் காசநோயின் கூடாரமாக இந்தியா மாறி வருகிறது. உடல்நலம், வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதாரத்தை சீர்குலைப்பது மட்டுமல்ல ஆண்டுதோறும் 4,80,000 மனித உயிர்களை இது பலி கொள்கிறது. அதே போல இந்தியாவில் பன்மருந்து எதிர்ப்புத் தன்மை (Multiple Drug Resistance) பிரச்சினையால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை மட்டுமே 1,47,000.

காசநோய் கட்டுப்பாட்டிற்கு இதுவரை தேசிய மூலோபாய திட்டமிடல் 2012-2017 (National Strategic Plan 2012-2017) வழிகாட்டி வந்தது. ஆனால் பணப்பற்றாக்குறையால் இத்திட்டம் எதிர்பார்த்தபடி செயல்படவில்லை என்று 2015-ம் ஆண்டில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வு கூறுகிறது.

காசநோயினால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கான முழுமையான சிகிச்சைக்கும் நோயின் பிடியிலிருந்து அவர்கள் மீள்வதற்கும் சமூக மற்றும் பொருளாதார ரீதியிலான ஆதரவு கரம் தேவைப்படுவதாக பல்வேறு ஆய்வுகளும் கள அனுபவங்களும் கூறியிருக்கின்றன. போதிய ஊட்டச்சத்து கிடைக்காமலிருக்கும் கிராமப்புற ஏழை மக்கள் மற்றும் நகர்ப்புற நெரிசலில் வாழும் உள்நாட்டு அகதிகளே காசநோய்க்கு எளிதில் பலியாகும் வர்க்கத்தினராக உள்ளனர்.

இரவு பகல் பாராமலும் விடுமுறையற்றும் அகதிகள் உழைக்கின்றனர். நகரத்தின் [பொது] மருத்துவக் கட்டமைப்பைப் பற்றி தெரியாமலும் குடும்பம் மற்றும் ஏனைய சமூக ரீதியான ஆதரவற்ற நிலையிலும் [பொது] மருத்துவம் இவர்களுக்கு எட்டாக்கனியாகவே இருக்கிறது. விளைவாக தனியார் மருத்துவமனைகளிடம் கைப்பணத்தை நிறைய செலவிடினும் காசநோய் அவர்களை தொடர்ச்சியாக பாதிக்கத்தான் செய்கிறது.

உடல்நிலை மோசமாக பாதிக்கப்பட்டு வேலை செய்யவே முடியாதவரை அவர்கள் பெரும்பாலும் உழைக்கிறார்கள். கடைசியில் வேறுவழியில்லாமல் தங்களது கிராமங்களுக்கு திரும்பி நாட்டு மருத்துவத்தையோ அல்லது தனியார் மருத்துவத்தையோ நாடுகின்றனர். ஆனால் தனியார் மருத்துவமோ ஏழை கிராமங்களின் பொருளாதாரச் சூழலுக்கு தகுதியற்றதாக இருக்கிறது. அருகாமை பொது மருத்துவமும் அவர்களுக்கு கிடைப்பதில்லை அப்படியே கிடைத்தாலும் சேவை தரமற்றதாக இருக்கிறது. ஒரு கட்டத்தில் சிகிச்சைக்கான செலவு எகிறி விடுவதால் தொழிலாளர்கள் ஒன்று சிகிச்சையை கைவிடுகிறார்கள் அல்லது கடன் வாங்குகிறார்கள்.

கிராமப்புற ஏழை மக்கள் மற்றும் நகர்ப்புற நெரிசலில் வாழும் உள்நாட்டு அகதிகளே காசநோய்க்கு எளிதில் பலியாகும் வர்க்கத்தினராக உள்ளனர்

இச்சூழ்நிலையையும் இதற்கான முதன்மையான காரணங்களையும் மைய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் ஆமோதித்தது மட்டுமல்லாமல் 2017-லிருந்து 2025-ம் ஆண்டு வரை ஒரு எட்டு ஆண்டுக்கான திட்டமொன்றையும் வகுத்தது. காசநோயினால் புதிதாக பாதிக்கப்படுவோரை ஐந்து மடங்காக அதாவது இலட்சத்திற்கு 47 ஆக (212-லிருந்து) குறைக்கவும் மரணங்களை பத்து மடங்ககாக அதாவது இலட்சத்திற்கு 3 ஆக (32-லிருந்து) குறைக்கவும் இலக்கு நிர்ணயித்தது.

பேராவலுடைய திட்டமாக இது இருந்தாலும் அடைய முடியாததல்ல. நடப்புத் திட்டத்தில் உள்ள நன்மை தீமைகளைத் தெளிவாக வரையறை செய்வதன் மூலம் முதன்மையானத் திட்டங்களை இது வரையறுக்கிறது. முதல் மூன்றாண்டுகளுக்கு திருத்தப்பட்ட திட்டத்தை செயற்படுத்தத் தேவைப்படும் தொகை 16,649 கோடி ரூபாய் (ஆண்டுக்கு 5,500 கோடி ரூபாய்). மருந்து எதிர்ப்புத்தன்மை ஆய்வு உள்ளிட்ட தனியார்த்துறை ஆய்வக சேவைகளுக்கும் செலவிடும்படி இத்திட்டம் விரிவாக்கப்பட்டுள்ளது. காச நோயாளிகளின் பொருளாதார நிலைக்கு கைக்கொடுப்பதன் மூலம் முடிவாக சுகாதார மற்றும் மேலாண்மை கட்டமைப்பை ஏட்டளவில் இது உறுதிப்படுத்துகிறது. ஆனால் எதார்த்தத்தில் பற்றாக்குறையான நிதி இத்திட்டத்தின் வெற்றிக்கு பேராபத்தாக இருக்கிறது.

நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான அமெரிக்க மையங்கள் சார்பில் காச நோய்க் குறித்த உண்மை அறியும் திட்டத்திற்காக எச்.ஐ.வி/எயிட்சு தொடர்பான முன்னாள் ஐ.நா. தூதரும் எய்ட்சு இல்லா உலகம் (AIDS-free World) என்ற சர்வதேச தொண்டு நிறுவனத்தின் இணை இயக்குனருமான ஸ்டீபன் லூயிஸ் 2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்தியாவிற்கு வந்தார். முன்னாள் ஐ.நா. தூதர் என்ற முறையில் உலகெங்கிலும் நோய்க்கட்டுப்பாட்டு அமைப்புகளை மதிப்பீடு செய்தல், கவனித்தல் மற்றும் பகுப்பாய்வு செய்தல் உள்ளிட்ட அனுபவங்களுடன் வந்திருந்தார். உயர் அதிகாரிகள், காச நோயாளிகள் மற்றும் நோயிலிருந்து தப்பிப்பிழைத்தவர்கள் என அனைவரையும் அவர் சந்தித்தார்.

காசநோயை 2025-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் ஒழித்துக்கட்டுவது என்ற அரசின் புதிய குறிக்கோளை ஒரு “உற்சாகமூட்டும் புராணக்கதை” என்று ஒருக்கட்டுரையில் லூயிஸ் குறிப்பிட்டுள்ளார். நோயைத் தீர்ப்பதில் எவ்வித அவசரமும் காட்டாமலிருப்பது குறித்தும் சுகாதாரத்திற்காக மொத்த உள் நாட்டு உற்பத்தியில் வெறும் 1 விழுக்காடு ஒதுக்கியிருப்பது குறித்தும் கவலையையும் தெரிவித்தார். இக்குறைந்த ஒதுக்கீடு நம்முடைய பொது நல மருத்துவ கட்டமைப்பை பலவீனப்படுத்தியிருப்பதால் காசநோயை ஒழிப்பதற்கு இது தகுதியற்றதாகிவிட்டது.

புரத உணவு தேவைக்கு அரசாங்கம் கொடுப்பதாக திட்டமிட்டுள்ள ரூ 500 தொகையானது காசநோயாளிகளுக்கு சரிவிகித உணவை வழங்க போதாது.

நோய்த்தடுப்பிலும் மேலும் மக்களுக்கு அது பரவாமல் கட்டுப்படுத்துவதிலும் இந்திய அரசின் இயலாமையைப் பறைசாற்ற காசநோய் உள்ளிட்ட தொற்றுநோய்களைத் (communicable diseases) தடுப்பதற்கு ஒதுக்கப்பட்டிருக்கும் நிதியாதாரம் ஒன்றே போதும். இந்தியாவின் பிரமாண்டமான காசநோய் பிரச்சினை மற்றும் அதைக் கட்டுப்படுத்த வடிவமைக்கப்பட்ட சிறப்பான திட்டம், வாய்மொழி வாக்குறுதி மற்றும் இலக்கை அடைவதற்கு அதிக நிதி ஒதுக்கீடு தேவை என்பதை ஒப்புக்கொண்டது என்று ஒருபுறமிருந்தாலும் 2018-ம் ஆண்டின் வரவு செலவு திட்டம் அது பொய் என்பதை நிரூபித்தது.

காசநோய் மூலோபாய திட்டத்தை நடைமுறைபடுத்துவதற்கு மட்டுமே 5,500 கோடி ரூபாய் திட்டமிடப்பட்டிருந்த நிலையில் ஒட்டுமொத்த தொற்றுநோய்களையும் கட்டுப்படுத்த வெறும் 1,928 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருக்கிறது. காசநோயாளிகளின் புரத உணவு தேவைக்கு மாதம் 500 ரூபாய் கொடுப்பதற்காக ஒதுக்கப்பட்ட 500 கோடி ரூபாய் தனியாக தருவார்களா அல்லது இந்த நிதியிலேயே செர்க்கப்பட்டிருக்கிறதா என்று தெரியவில்லை. ஒருவேளை தனியே கொடுத்தாலும் காசநோயாளிகளுக்கு சரிவிகித உணவை வழங்க இத்தொகை போதாது. இதன் மூலம் இப்புறக்கணிப்பு இலட்சக்கணக்கான மரணங்களுக்கு கூடுமானவரை பங்களிக்கும். கூடுதலான நிதியை ஒதுக்குவதன் மூலம் இச்சூழ்நிலையை இந்த அரசு கண்டிப்பாக மாற்ற வேண்டும். ஆனால் அரசு அதை செய்ய விரும்பவில்லை என்பது தான் எதார்த்தம்.

– நன்றி: தி வயர் – By Underfunding Its Own TB Control Plan, Centre Shoots Itself in the Lung

 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க