Thursday, December 3, 2020
முகப்பு செய்தி தமிழ்நாடு போலீசு ரவுடித்தனத்தை முறியடிப்போம் ! மார்ச் 02 திருச்சி ஆர்ப்பாட்டம்

போலீசு ரவுடித்தனத்தை முறியடிப்போம் ! மார்ச் 02 திருச்சி ஆர்ப்பாட்டம்

-

திருச்சி: சந்துக்கு சந்து வாகன சோதனை என லஞ்சம் – வழிப்பறி – ரவுடித்தனம்
போலீசின் ராஜ்ஜியத்திற்கெதிராக அணிதிரள்வோம்!

கண்டன ஆர்ப்பாட்டம்

02-03-2018 வெள்ளி மாலை 5.30 மணி
இடம் : இரட்டைவாய்க்கால், உய்யக்கொண்டான் திருச்சி.

வாகன சோதனை என்ற போலீசின் அத்துமீறலால் தமிழகம் முழுவதும் உள்ள பொதுமக்கள் சொல்லிமாளாத் துயரத்திற்கு ஆளாகின்றனர். ஹெல்மட், சீட்பெல்ட் என்ற போலீசின் இந்த வழிப்பறிக்கொள்ளைக்கு பணத்தை மட்டுமல்ல, தங்கள் உயிரையே பலர் பறிகொடுத்துள்ளனர். மக்களின் உயிரைப் பாதுகாப்பதற்காக என்று கூறிய இந்த உத்தரவுதான் பல உயிர்களைக் காவு வாங்கிவருகிறது. தமிழகத்தின் பல பகுதிகளிலும் இதற்கெதிரான மக்கள் போராட்டங்கள் நடந்துவிட்டன. ஆனால், இலக்கு வைத்து சாராயம் விற்பது போல ஒவ்வொரு காவல்நிலையத்திலும் தினசரி இத்தனை வழக்கு என்று இலக்கு வைத்து செய்யும் வசூல்தான் முன்னேறியுள்ளது. போலீசின் ஒடுக்குமுறை வடிவம்தான் புதிய புதிய உச்சத்தைத் தொடுகிறது.

11.02.2018 அன்று இரவு திருச்சி-உய்யகொண்டான் திருமலை செக்போஸ்ட்டில் பணியில் இருந்த SI கோபால் என்ற ரவுடி 500 ரூபாவை பிடுங்கிக்கொண்டு 100 ரூபாய்க்கு ரசீது கொடுத்தான். இதை எதிர்த்துக்கேட்ட மாணவர்களை நடு ரோட்டில் வைத்து கொடூரமாக தாக்கினான். இதைப்பார்த்த சுற்று வட்டார கிராமப் பொதுமக்கள், இளைஞர்கள் திரண்டு சாலை மறியல் செய்தனர். அங்கு வந்த உயரதிகாரி ஏ.சி பெரியய்யா வழிப்பறி கொள்ளையன் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. மாறாக, எதிர்த்துக்கேட்கும் அளவுக்கு மக்களுக்கு திமிர் வந்து விட்டதாக உணர்ந்தார். மக்களுக்கு பாடம் புகட்டுவதற்காக அதிரடிப்படிடையை இறக்கி வெறிநாய் கூட்டத்தைக் போல மக்களைக் குதறினார். 10-ம் வகுப்பு மாணவியின் காலை ரணமாக்கியதுடன், 10 இளைஞர்களைப் பிடித்துச்சென்று உறையூர் காவல் நிலையத்தில் வைத்து அங்கிருந்த கண்காணிப்பு காமிராக்களை அணைத்துவிட்டு “எங்களை எதிர்க்க இவ்வளவு துணிச்சல் எப்படிடா வந்தது?” எனக் கேட்டு அடித்து துவைத்தனர். தேவேந்திரன் என்ற இளைஞரின் கால் மூட்டு நொறுக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. பத்துக்கும் மேற்பட்டவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

எஸ்.ஐ. கோபாலும், உறையூர் காவல்துறையும் இப்படி நடந்து கொண்டது முதல் முறையல்ல. இதே கோபால்தான் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஒரு இளைஞனை ஹெல்மெட்டால் தாக்கி மண்டையை உடைத்துள்ளார்.  தன்னை அய்யா என்று அழைக்காததால் தென்னூரைச் சேர்ந்த அம்ருதீன் என்பவரைக் கடுமையாக தாக்கி அவமானப்படுத்தியிருக்கிறார். அவர் பல துறைகளுக்கும் புகார் அனுப்பியும், வெளிநாட்டில் இருந்து கொண்டு இதற்கெதிரான வழக்குகளில் நேரில் வந்து ஆஜராகியும் எந்த நடவடிக்கையுமில்லை. இப்படி, மனித உரிமை மீறலில் ஈடுபடும் SI கோபாலின் குற்றங்கள் பற்றிய ஆதாரங்கள் பல இருந்தும் இதுவரை  தண்டிக்கப்படவில்லை. மேலதிகாரிகள், மனித உரிமை ஆணையம், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் என அனைவரும் ரவுடி கோபாலை பாதுகாக்கின்றனர். 11.02.18 இரவு சம்பவத்திற்கு நடவடிக்கை எடுக்கக் கோரி மக்கள் அதிகாரம் தலைமையில் திரண்ட  சோழிங்கநல்லூர், செங்கதிர் சோலை, மேலத்தெரு, கோப்பு, சோமரசம் பேட்டையை சேர்ந்த பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடமும், மாவட்ட நீதிமன்றத்திலும்            (தேதி) புகார் கொடுத்தும் இன்று வரை நியாயம் கிடைக்கவில்லை. SI கோபாலை மட்டும் காவல் கட்டுப்பாட்டு அறையில் ஓய்வாக உட்கார வைத்து சம்பளம் கொடுக்கிறார்களாம். இது அவருக்கு வழக்கப்பட்டுள்ள மாபெரும் தண்டணையாம்(!?).

இதிலிருந்து நாம் என்ன முடிவுக்கு வருவது? மக்கள் விரோதிகளை எப்படி தண்டிப்பது? நியாயம் கேட்கும் மக்களைத் தாக்க நள்ளிரவிலும் காவல்துறை அதிகாரிகள், கலெக்டர் ஆஃபீஸ் அதிகாரிகள், அதிரடிப்படை அனைத்தும் அதிரடியாய் களமிறங்குவர். ஆனால், நியாயம் கேட்டு முறையிட்டால் எந்த அதிகாரிக்கும் நடவடிக்கை எடுக்க நேரம் இருக்காது.  பாதிக்கப்பட்ட மக்கள் தங்களுக்கு எப்போதாவது கிடைக்கும் அன்றாட பிழைப்பையும் விட்டுவிட்டு அரசியல்வாதி, அதிகாரி, நீதிமன்றம் என்று நடையாய் நடந்து, தவமாய் தவமிருந்து கெஞ்ச வேண்டும். மக்களை துன்புறுத்திய காவல்துறை அதிகாரிகளோ ஏ.சி அறையில் உல்லாசமாக ஓய்வெடுத்துக்கொண்டு மக்களின் வரிப்பணத்திலேயே சம்பளம் வாங்கி சொகுசாக குடும்பம் நடத்திக்கொண்டு எகத்தாளமாக வாழ்வார்கள். இதுதான் மக்களாட்சி என்று உபதேசிப்பார்கள் தொலைக்காட்சி விவாத வித்வான்கள்.  இதை மீறி மக்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்காகவும், உரிமைக்காகவும் போராடினால் அவர்கள் வன்முறையாளர்கள், சட்டத்தை மதிக்காதவர்கள், சமூக விரோத சக்திகள், தேசவிரோதிகள். இந்த ‘நியாயத்திற்கு’ நாம் கட்டுப்பட்டுதான் ஆக வேண்டுமா?

கோபால் போன்ற குரூரமான போலீசு அதிகாரிகள் தான் அரசுக்கு தேவைப்படுகிறார்கள். அதனால் தான், திருப்பூரில் டாஸ்மாக் கடைக்கு எதிராக போராடிய சாமளாபுரம் பெண்ணை கண்ணத்தில் அறைந்த ADSP பாண்டியராஜனுக்கு பதவி உயர்வு வழங்கப்படுகிறது. இப்படிப்பட்ட அதிகாரிகளைக் கொண்டு தான் தமிழகம் முழுவதும், அன்றாடம் உழைத்துப் பிழைக்கும் மக்களின் பணத்தை வழிப்பறி செய்கிறது அரசு. மாநகரில் 14 காவல் நிலையங்கள். ஒரு காவல் நிலையத்திற்கு 4, 5 இடம், ஒரு இடத்தில் 100 கேஸ் கட்டாயம் என மாநகரில் ஒரு நாளுக்கு 7 லட்சம், மாதம் 2 கோடியே 10 லட்சம் வசூல். புறநகர் காவல் நிலையங்கள் தனி. தமிழ்நாடு முழுவதும் கணக்கு போட்டால் தமிழக போலீசின் திருட்டுத்தனத்தை புரிந்துகொள்ள முடியும்.

கிரிமினல்மயமான போலீசுத்துறை!

சிவகங்கை சிறுமி பாலியல் வன்கொடுமை, கரூர் வாகன சோதனையில் கடத்தல் பணத்தை கைப்பற்றி பதுக்கிக் கொண்டது, RK நகரில் 144 தடையுத்தரவு பிறப்பித்து போலீசே பணவிநியோகம் செய்து ஜெயாவுக்கு எடுபிடி வேலை செய்தது, சென்னை முன்னாள் போலீசு கமிசனர் ஜார்ஜ், சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி.யான டி.கே ராஜேந்திரன் இருவரும் லஞ்சம் வாங்கிக் கொண்டு தடை செய்யப்பட்ட கஞ்சா, குட்கா விற்பனைக்கு அனுமதி கொடுத்தது என காறித்துப்பும் அளவிற்கு எத்தனை கிரிமினல் நடவடிக்கைகள்? கீழ்நிலை போலீசு முதல் உயரதிகாரிகள் வரை லஞ்சம், ஊழல், பொய் வழக்கு, கந்துவட்டி, கட்டப்பஞ்சாயத்து, திருட்டு, லாக்கப் படுகொலை, வழிப்பறி, போதை பொருள் விற்பனை, பாலியல் வன்கொடுமை என்று போலீசுத்துறையே கிரிமினல்களின் கூடாரமாக உள்ளது. இது மட்டுமா?

பேருந்து கட்டணம், பெட்ரோல், டீசல் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு, கேஸ் மானியம் ரத்து, ரேசன் பொருள் பற்றாக்குறை, இயற்கைவளக் கொள்ளை என மக்களின் வாழ்வுரிமை பறிக்கப்பட்டு உயிர் வாழ்வதே பெரும் சவாலாக மாறியுள்ளது. இதை சகித்துக் கொள்ளாமல் தங்கள் உரிமைக்காக வீதிக்கு வந்து போராடும் விவசாயிகள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் மீது காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை நடத்துகின்றது எடப்பாடி போலீசு.

நாம் என்ன செய்வது?

கிரிமினல் போலீசின் அக்கிரமங்களையும், அராஜகத்தையும் சகித்துக் கொண்டு கடந்து செல்வதா?  “காக்கி சீருடையும், எவனும் நம்மை எதிர்த்து கேள்வி கேட்க முடியாது என்ற அதிகார போதையும் தான்” போலீசின் ரவுடித்தனத்திற்கு காரணம். சென்ற வாரம், மார்க்சிஸ்ட் கட்சி தொண்டர்களின் பேரணியில் ASP செல்வ நாகரத்தினம் தலைமையிலான போலீசு விறகுக் கட்டைகளைக் கொண்டு கண்மூடித்தனமாக தாக்கியதில் குழந்தைகள், பெண்கள், தொண்டர்கள் படுகாயமடைந்தனர். சுதாரித்துக் கொண்ட தொண்டர்கள் போலீசை திருப்பித் தாக்கியதால் தலைதெறிக்க ஓடியது அரசின் கூலிப்படை. SI கோபால், ASP செல்வ நாகரத்தினம் போன்ற காக்கி ரவுடிகளை களையெடுப்பதற்கான மக்கள் போராட்டம், மக்கள் விரோதமாகி, தோற்றுப்போன இந்த அரசுக் கட்டமைப்பையே தூக்கியெறியும் போராட்டமாக மாறட்டும்.

இவண்
மக்கள் அதிகாரம்,
திருச்சி – 94454 75157

 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க