Saturday, July 13, 2024
முகப்புகட்சிகள்பா.ஜ.கமகஇக அதிரடி - சென்னை பாஜக அலுவலகம் முற்றுகை ! கோல்வால்கருக்கு செருப்படி !

மகஇக அதிரடி – சென்னை பாஜக அலுவலகம் முற்றுகை ! கோல்வால்கருக்கு செருப்படி !

-

திரிபுராவில் பாட்டாளி வர்க்க ஆசான் தோழர் லெனின் சிலையை உடைத்து வெறியாட்டம் போட்டது பாஜக கும்பல். அதைத்தொடர்ந்து பாஜக -வின் எச்சை ராஜா தமிழகத்திலும் பெரியாரின் சிலை அகற்றப்படும் என பார்ப்பனக் கொழுப்பு வழிந்தோட பேசியுள்ளார். இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் பல்வேறு அமைப்புகளும் தங்களது கண்டனத்தை பதிவு செய்யும் வகையில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

குறிப்பாக ஆர்.எஸ்.எஸ். -ன் ‘குருஜி’ என அழைக்கப்படும் அதன் இரண்டாவது அகில இந்தியத் தலைவர் “கோல்வால்கர்” படத்தை எரித்தும் செருப்பால் அடித்தும் நேற்றே மக்கள் கலை இலக்கியக் கழகத்தினர் சென்னையில் தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர். அதைத் தொடர்ந்து இன்று (07.03.2018) பாஜக -வின் அலுவலகத்தை முற்றுகையிட்டு புரட்சிகர அமைப்புகள் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர். இந்த நிகழ்வினை புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் தலைவர் தோழர் முகுந்தன் தலைமையேற்று நடத்தினார்.

இப்போராட்டத்தில் மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, பெண்கள் விடுதலை முன்னணி ஆகிய அமைப்புத் தோழர்கள், மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள் மற்றும் கைக்குழந்தைகளுடன் தாய்மார்கள் என நூற்றுக்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர்.

ஆரம்பத்தில் உங்களது கண்டனங்களை பதிவு செய்யும் வகையில் போராட்டத்திற்கு இடம் ஒதுக்கித் தருகிறோம் என நைச்சியமாகப் பேசியது போலீசு. ஒருபக்கம் இவ்வாறு பேசிக்கொண்டே ஆர்ப்பாட்டத்திற்கு தயாராகிக் கொண்டிருந்தவர்களை வலுக்கட்டாயமாக கைது செய்யச் சொல்லி  உத்தரவிட்டார் காவல்துறை அதிகாரி AC செல்வம்.

அதைத் தொடர்ந்து அங்கேயே முழக்கமிட்டு தங்களது போராட்டத்தை தொடங்கினர் தோழர்கள். போராட்டத்தில் பங்கு பெற்றவர்களை பெண்கள் கைக்குழந்தைகள் என்றும் பாராது குண்டுக்கட்டாக தூக்கிவீசியது . போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் வலுக்கட்டாயமாக வாகனங்களில் ஏற்றி அப்புறப்படுத்தியது போலீசு.

ஆன போதும் கோல்வால்கர் மற்றும் எச்ச ராஜாவின் படங்களை எரித்தும், செருப்பால் அடித்தும் இது பெரியார் மண் என்று முழங்கினர் தோழர்கள்.

ஆர்ப்பாட்டத்திற்கு தலைமையேற்ற தோழர் முகுந்தன் பத்திரிக்கையாளர்களிடம் கூறுகையில்: “தோழர் லெனின் பற்றியும் பெரியார் பற்றியும் பேச எச்.ராஜா -விற்கு எந்த அருகதையும் கிடையாது. லெனின் இந்த நாட்டு தலைவரா? என அவர் கேட்டுள்ளார் உலகப் பாட்டாளிகள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்கள் அனைவரின் தலைவர் தோழர் லெனின். அவரது சிலையை உடைத்து அதைக் கொண்டாடுவதும், தமிழக மக்களின் சுயமரியாதைக்காகவும் பெண்கள், ஒடுக்கப்பட்ட மக்கள் அனைவரின் விடுதலைக்காகவும் போராடிய தந்தை பெரியாரின் சிலையை அப்புறப்படுத்த வேண்டும் என சொல்வதும்ஆர்.எஸ்.எஸ். கும்பலின் பாசிச மனோபாவத்தைத் தான் காட்டுகிறது. இதனை மக்கள் ஒருபோதும் ஏற்க முடியாது” எனக் கூறினார்.

தற்போது எச்.ராஜா முகநூலில் தவறாக கருத்து வெளியிடப்பட்டுள்ளது. நான் அவ்வாறு சொல்லவில்லை எனக் கூறிய பின்னர் ஏன் போராட வேண்டும் என ஒரு ‘பத்திரிக்கையாளர்’ கேட்டதற்கு “பாஜக கும்பலின் வேலையே இதுதான் ஒருவர் கொழுப்பெடுத்து பேசுவார் மற்றொருவர் அது அவருடைய கருத்து எனக் கூறுவார், இதையே இவர்கள் நாடுமுழுவதும் செய்து வருபவர்கள்; கூசாமல் பொய் பேசுபவர்கள். ஆண்டாள் விவகாரத்தில் வைரமுத்து தனது கருத்திற்கு வருத்தம் தெரிவித்த பின்னரும் கூட ஆண்டாள் சன்னிதியில் வந்து மன்னிப்பு கேட்கவேண்டும் என திமிறாக கூறியது பார்ப்பனக் கும்பல். ஆக வைரமுத்துவிற்கு ஒரு நீதி பார்ப்பனக் கொழுப்பெடுத்த எச்.ராஜாவுக்கு ஒரு நீதியா?” என கேட்டார்.

போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் தொலைக்காட்சிகளில் கூறுகையில் இது பெரியாரின் மண் என்பதை நிரூபிப்போம் ! என்றும் அகற்றப்பட்ட தோழர் லெனின் சிலையை அங்கு மீண்டும் நிறுவ வேண்டும் என்றும் கூறினர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
பெண்கள் விடுதலை முன்னணி.
தமிழ்நாடு.

 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க