லஞ்சம் – வழிப்பறி – ரவுடித்தனம்! போலீசு ராஜ்ஜியத்திற்கெதிராக அணிதிரள்வோம்! திருச்சியில் மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம்!
போலீசு ராஜ்ஜியத்திற்கெதிரான கண்டன ஆர்ப்பாட்டம் 07.03.2018 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் நடைபெற்றது. முதல் நிகழ்வாக பறையிசைக்கப்பட்டு, காவல்துறையை அம்பலப்படுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.ஆர்ப்பாட்டத்தில் பொதுமக்கள், தோழர்கள் என நூற்றைம்பதற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
தலைமை உரை பேசிய மக்கள் அதிகாரம் மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் செழியன், “போலீசு எங்கு பார்த்தாலும் வாகன சோதனை என்ற பெயரில் லஞ்சம், ஊழல், வழிப்பறியில் ஈடுபடுகிறது. இதை தட்டிக்கேட்ட உய்யகொண்டான் பகுதி இளைஞர்களை வெறித்தனமாக தாக்கியுள்ளனர். தேவேந்திரன் என்ற இளைஞர் பாதிக்கப்பட்டுள்ளார். இதற்கு காரணமான SI கோபால் உள்ளிட்ட உறையூர் காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
தமிழக விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த ம.ப சின்னதுரை, “தமிழகம் முழுவதும் காவல்துறை செய்யும் வசூல் எடப்பாடிக்கு செல்கிறது. டாஸ்மாக் கடை வேணாம் என்று இளைஞர்கள் போராடினால் டாஸ்மாக் கடைக்கு காவல் நிற்கிறது ‘காவல்துறை’. சாலையில் நின்று அடிக்கிறதுக்கு சட்டம் இருக்கா? உய்யகொண்டான் பகுதி சுடுகாட்டுக்கு ரோட்டுல போக முடியுமா? ரோடு அவ்வளவு சேதம் அடைந்துள்ளது. இது போலீசுக்கு தெரியாதா? இன்று காவல்துறை மாநாடு நடக்கிறது. மாநாட்டில் வாகன சோதனை என்ற பெயரில் நடக்கும் வழிப்பறியை தடுத்து நிறுத்த ஆவண செய்ய வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்” என்றார்.
பாதிக்கப்பட்ட பகுதி மக்கள்
கீதா, “மக்கள் நாங்க எல்லாம் கேனையா? கஷ்டபடுறோம்யா நாங்க. 100 ரூபா, 50 ரூபாக்கு கஷ்டப்படுறோம். வயிறு எரிஞ்சு சொல்றோம் நாங்க. எங்க வீட்ல எல்லாம் குடிக்கிறாங்கன்னு சொல்றீங்க. குடிய உருவாக்கிறதே நீங்க தான்யா. ஒயின்ஷாப்ல சின்னப் பசங்க்ளா போய் குடிக்கிறாங்க, ஆஸ்பத்திரிக்கு போறாங்க. ஆஸ்பத்திரிகாரன் உங்களுக்கு லஞ்சம் கொடுத்தானா? கேட்கிறோம். ஹெல்மெட்டுங்கிற பேர்ல காசு வாங்குறீங்க. எல்லாத்தையும் வசூலிச்சு சாப்பிடுறீங்க.
அப்ப இல்லாத நாங்க என்ன செய்யுறது? ரேசன் கடைய குளோஸ் பன்றங்கீங்க. சீமெண்னைய குளோஸ் பன்றங்கீங்க. எல்லாத்தையும் முடிச்சுருங்க. இனிமே, எங்கள ஒரேயடியா கொன்னுருங்க. கொன்னுட்டிங்கனா பிரச்சனை இல்லாம இருப்பீங்க. இருக்கப்பட்ட கவர்மெண்ட் போலீசும், இருக்கப்பட்ட கலெக்டரும் நீங்க மட்டும் இருப்பீங்கயா… போலீச முத ஒழிக்கனும். முத எங்க ஏரியாக்குள்ள வராதீங்கயா… பிச்சக்கார பயலுகளா, எங்க ஏரியாக்குள்ள வராதீங்க.
கஷ்டப்படுற எங்கட்ட வாங்கித் திங்காதிங்க. பாதிக்கப்பட்டது எங்க அண்ணன் தான்யா. பாருங்க அவங்க குடும்பத்த இரண்டு மாசமா வீட்டுல கிடக்கிறாங்க கால உடச்சிட்டு. எங்க அப்பா கிடையாதுயா. அப்பா இல்லாத அவனுக்கு எப்படியா நல்லது கெட்டது செய்வோம். ஆயா வேலைக்கு போக மாட்டா? அவளுக்கு யாரு நல்லது கெட்டது செய்வா? அவன் வேலைக்கு போனாதான் சோறு. இனி யாரு சோறு போடுவா? சோறு திங்க உன் கால்ல வந்து விழனுமா? எங்க வயித்தெறிச்சல் உங்கள சும்மா விடாது. எங்களுக்கு மட்டும் சொல்லல. எங்கள மாதிரி வெளிய வந்து பேச முடியாதவங்க எவ்வளவோ பேர் இருக்காங்க…” என்று முடித்துக் கொண்டார்.
இதே போல அப்பகுதியைச் சேர்ந்த வனிதா என்பவரும் போலீசுக்கு எதிரான தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். அவர் பேசிக்கொண்டிருக்கும் போதே குறுக்கிட்ட எஸ். ஐ. இப்ராஹிம், தனிப்பட்ட முறையில் திட்டக்கூடாது என்றார். தோழர் வாஞ்சிநாதன், போலீஸ் ஸ்டேசனில் நீங்கள் நடந்துகொள்வதற்கு எதிர்வினை தான் இது என்றும், மேலும் அனுமதி பெற்று நடந்து கொண்டிருக்கும் ஆர்ப்பாட்டத்தில் குறுக்கிடுவதே தவறு என்றும் மைக்கில் அறிவித்தவுடன் பின்வாங்கிக் கொண்டார் எஸ்.ஐ. இப்ராஹிம்.
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மைய செயற்குழு உறுப்பினர் தோழர் தண்டபாணி, “எஸ்.ஐ. கோபால் மீது 3 வழக்குகள் பதிவாகியுள்ளன. இனி உன்னை குண்டாசில் தான் போட வேண்டும். திருப்பூரில் டாஸ்மாக்குக்கு எதிராக போராடிய பெண்ணை அடித்தவனுக்கு ஒரே மாதத்தில் பதவி உயர்வு. மதுரை மாவட்ட மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத் தலைவர் நல்லகாமனை அவமானப்படுத்தியதற்காக எஸ்.பி. பிரேம்குமாருக்கு ஒரு வருடம் சிறை தண்டனை வாங்கித் தரப்பட்டது. மேலும், சிவகாசி ஜெயலெட்சுமி முதல் பல்வேறு சம்பவங்களின் மூலம் போலீசின் உண்மை முகத்தை அம்பலப்படுத்தி பேசினார்.
போலீசு என்றாலே வழக்கு, சிறை, சித்ரவதை தான். போலீசின் மாநாட்டில் பயங்கரவாதமும், மதவாதமும் நாட்டின் முக்கிய பிரச்சினை என்கிறான். எது பயங்கரவாதம்? நாட்டில் விவசாயிகள் கொத்து கொத்தாக சாவதற்கு யார் காரணம்? தண்ணீர் இல்லை என்று போராடினால் கூட போலீசு தான் வந்து நிற்கிறது. நேர்மையாக செயல்பட்டதற்காக டிஎஸ்பி விஷ்ணு பிரியா, அவர் தோழியான கீழக்கரை டிஎஸ்பி என அனைவரும் மிரட்டப்பட்டு ஓரங்கட்டப்படுகிறார்கள்.
போலீசுத்துறையில் ஆண் போலீசால் பெண் போலீசார் எதிர்கொள்ளும் பாலியல் பிரச்சினைகள், போலீசார் நிம்மதியாக குடும்பத்துடன் வாழ முடியாத நிலை என போலீசுத்துறையின் நெருக்கடியையும், நெடுவாசல், கதிராமங்கலம் என அனைத்திலும் போலீசு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக நிற்பதையும், போலீசை எதிர்கொள்ள வேண்டுமானால் மக்கள் அதிகாரம், மக்கள் உரிமை பாதுகாப்பு மைய தோழர்களை அணுகுங்கள். எமது வழக்கறிஞர்கள் சார்பில் இலவசமாக வழக்கு நடத்துகிறோம்” என்றார்.
சி.பி.ஐ மாவட்ட செயலர் தோழர் திராவிட மணி பேசுகையில்; “எஸ்.ஐ. கோபால், மெண்டல் போல் தெரியாமல் செஞ்சிட்டான் என்கிறார்கள். மெண்டலை ஏன் வேலைக்கு வைத்துள்ளீர்கள். வீட்டுக்கு அனுப்ப வேண்டியது தானே? இவனை போல் சில்வர் ஸ்டாலின் என்று ஒருத்தன் இருந்தான். இப்ப இருக்கிற இடமே தெரியல. காவல்துறையில் இது போன்ற வல்லுறுகள் அதிகம். சந்தர்ப்பம் கிடைத்தால் இப்படி தான் நடந்துகொள்கிறார்கள். காவல்துறை மீது நாங்கள் எங்கள் வெறுப்பை காட்டவில்லை. போலீஸ்டேசன் போனாலே பலவிதமான தொல்லைகள். மக்களின் கண்ணீருக்கு பதில் சொல்ல முடியுமா காவல்துறை அதிகாரிகள்? காவல்துறையில் எல்லோரும் அயோக்கியனாக தான் இருக்கிறான். காவல்துறையை தோலுரித்துக் காட்டும் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அழைத்ததற்கு நன்றி” என முடித்தார்.
வி.சி.க திருச்சி மாவட்ட நெறியாளர் தோழர் குணவேந்தன், “எனக்கு பல நெருக்கமான ஆய்வாளர்கள் உண்டு. நண்பர்களாக இருந்தாலும் காக்கிச்சட்டைப் போட்டால் ஒரு மிதப்பு. காலனிய காலத்து அடியாள்தனம் இது. எங்ககிட்டேயே சட்டம் பேசுறியா? எதிர்த்து பேசுறீயா? என்பார்கள். போலீசு பற்றி நாள் கணக்கில் பேசலாம். எதைக் கேட்டாலும் மேலிடத்து உத்தரவு என்பார்கள். யார் மேலிடம் என்று கேட்டால் அவர்களுக்கு தெரியாது.
மிக மோசமாக மனித உரிமை மீறலில் ஈடுபடுகிறார்கள். நாங்கள் பேசுவதை பதிவு செய்கிறாயே, மணல் கொள்ளை, கள்ளச்சாராயம் விற்பது தெரியாதா? பணம் வாங்க தான் தெரியும். போலீசு அடித்தால் திருப்பி அடிக்கக் கூடிய நிலை வருமானால், போலீசு தன்னை திருத்திக் கொள்வார்கள் அல்லது திருத்தப்படுவார்கள்.” என முடித்தார்.
மக்கள் அதிகாரம் தோழர் ராஜா, “இங்கு பேசிய பகுதி பெண்கள் காவல்துறை பயன்படுத்தும் வார்த்தைகளில் ஒன்றிரண்டை சொன்னதற்கு முகம் சுழிக்கிறது காவல்துறை. காவல்துறையின் வார்த்தைகளை நேரடியாக அனுபவித்தவர்கள் நாங்கள். ஒழுக்கத்தை கற்றுக் கொடுக்க வேண்டிய காவல்துறையின் நடவடிக்கை நேர்மையாக இருக்கிறதா? குற்றம் செய்த கோபாலை உள்ளே வைத்துக் கொண்டு எங்களை பேசாதே என்கிறீர்கள்.
ஒருத்தர் இரண்டு பேர் அல்ல. சம்பவத்தில் அடிவாங்கியது நூற்றுக்கும் மேற்பட்டோர். அப்படி பாதிக்கப்பட்ட மக்கள் இன்று போலீசின் அராஜகத்தை எதிர்த்து நிற்கிறார்கள். யாரை அடித்தாலும் கேட்கக் கூடாது, எழுந்து நிற்கக்கூடாது. காவல்துறையின் Block List-ல் இருந்த பல அடித்தட்டு மக்கள் வாழக்கூடிய பகுதிகளை விடுவித்தது நாங்கள். காவல்துறை என்ன செய்தது? மொத்த மக்களையும் கிரிமினல் போல சித்தரித்து கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிக்கிறது. அரசின் திட்டங்களுக்கு அடியாள்படையாக செயல்படுகிறது.
கதிராமங்கலம், நெடுவாசல் என போராடும் மக்களை; நம்மை நொறுக்கியது போல கை கால்களை உடைத்து நொறுக்குகிறார்கள். போராடும் மக்கள் மீது பொய் வழக்கு போட்டு சித்ரவதை செய்கிறார்கள். இந்த காக்கிச்சட்டைகள் சட்டப்பூர்வ சமூக விரோத ரவுடிப்படையாக வளர்க்கப்படுகிறது.
இது எஸ்.ஐ கோபாலுக்கு எதிரான போராட்டமல்ல. நாளை கோபாலுக்கு என்கவுண்டர் ஸ்பெசலிஸ்ட் என்று பட்டம் கொடுக்கலாம். எனென்றால் சைக்கோக்கள் தான் காவல்துறைக்கு தேவை. எஸ்.ஐ. காதர் பாட்சாவின் நிலை கோபாலுக்கு உருவாகும். நீ செய்யும் நடவடிக்கையை உன் அதிகாரிகள் மன்னிப்பார்கள், எங்கள் மக்கள் மன்னிக்கமாட்டார்கள். நீங்கள் நடவடிக்கை எடுக்காவிட்டால் இத்தகைய காவலர்களுக்கு மக்களே தண்டனை வழங்குவார்கள்’’ என்றார்.
சிறப்புரைற்றிய மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் வாஞ்சிநாதன், “சீருடை அணிந்த வழிப்பறி கும்பலுக்கு எதிராக மிகுந்த எழுச்சியோடு ஆர்ப்பாட்டத்தை நடத்தும் மக்கள் அதிகாரம் தோழர்களே, பாதிக்கப்பட்ட பகுதி பொதுமக்களே, போலீசை எதிர்க்க ஒரு தகுதி வேண்டும். அந்த தகுதி புரட்சிகர அமைப்புகளுக்கு தான் என்ற அடிப்படையில் மக்கள் அதிகாரம் இந்த ஆர்ப்பாட்டத்தை ஒருங்கிணைத்திருக்கிறது. இந்த இடத்தை பார்த்தால் நாட்டில் எந்தளவு கருத்துரிமை இருக்கிறது? அரசியல் சட்டத்தை காவல்துறை எந்தளவு மதிக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடியும்.
இது தான் சட்டத்தின் ஆட்சியினுடைய லட்சணம். கோபால் என்ற தனிநபர் பிரச்சினை அல்ல. கோபாலுக்கு பின்னால் உள்ள காவல்துறை அதற்கு பின்னால் உள்ள அரசு அதிகாரம், நீதிமன்றம் என இந்த கட்டமைப்பு தான் பிரச்சினை. கோபாலுக்கு ஆரம்பத்திலேயே சில விசயங்களை சொல்ல வேண்டும். பின்னால், வழக்கறிஞர் அலுவலகம், தோழர் செழியன், பாதிக்கப்பட்ட மக்கள் வீடு என வந்து இந்த பிரச்சினையை கொஞ்சம் முடித்து விடுங்க சார் என்று கெஞ்ச வேண்டி வரும். ‘சினிமா ஹீரோக்கள்’ போல செயல்பட்ட தஞ்சாவூர் ஆய்வாளர் சேதுமணி மாதவன், எஸ்.பி. பிரேம் குமார், வெள்ளதுரை ஆகியவர்களின் சம்பவத்தின் மூலம் எந்த காவல்துறையும் அவர்களுக்கு உதவாததுடன், சொந்த காவல்துறையினராலேயே லூசு என்று திட்டி தீர்க்கப்பட்டு, சட்டத்தின் மூலம் தண்டனை வாங்கிக் கொடுக்கப்பட்டதையும் விளக்கி, மக்கள் ஆதரவுடன் இதே நிலையை SI கோபாலுக்கு மக்கள் உரிமை பாதுகாப்பு மையமும், மக்கள் அதிகாரமும் ஏற்படுத்தும்…
வாகனத்தில் செல்லும் அனைவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டுமென்ற நீதிபதி கிருபாகரனின் முட்டாள்தனமான உத்தரவு அதற்கெதிரான, வழக்கறிஞர்கள் போராட்டம் நீதித்துறைக்கெதிரான போராட்டமாக மாறி வழக்கறிஞர் தொழில் செய்யத்தடை விதிக்கப்பட்டு அது உடைக்கப்பட்டு, தற்போது மீண்டும் பணியாற்றி வருவதை கூறினார்.
ஹெல்மெட், டாஸ்மாக் என அனைத்திலும் நிறுவனங்களிடம் போலீசு உயரதிகாரிகள் காசு வாங்குவது, சட்டத்தை அமுல்படுத்துவதாக கீழ்நிலை போலீசு சம்பாதிப்பதை சுட்டிக்காட்டினார். மணல் கொள்ளை, கிரானைட் என எந்த கொள்ளையாக இருந்தாலும் எல்லா கொள்ளையிலும் போலீசுக்கு பங்கிருக்கிறது. போலீசுக்கும் ரவுடிக்கும் தொடர்பில்லாமல் எதாவது குற்றம் நடந்திருக்கிறதா? சட்டத்தை மதிக்க சொல்லும் காவல்துறை எங்காவது சட்டத்தை மதிக்கிறார்களா? சட்டத்தை மதிக்காத ஒரே துறை காவல்துறை தான்.
போலீசு ஈடுபடாத குற்றம் எதாவது உண்டா? வழிப்பறி, பாலியல் குற்றம், கொலை, கொள்ளை, கடத்தல், கீழிருந்து மேல் வரை சிவகாசி ஜெயலெட்சுமி முதல் சிவகங்கை சிறுமி பாலியல் குற்றம் வரை அத்தனையும் குற்றம். அதே போல போலீசு சம்பந்தப்படாத ஊழல் உண்டா? (குட்கா ஊழல் பற்றி விளக்கினார்). குட்கா ஊழலில் ஈடுபட்ட போலீசு அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை? போலீசு ஈடுபடாத குற்றங்களே இல்லை. எல்லா துறைகளையும் எடுத்துக்கொண்டால் காவல்துறை தான் அதிகமான ஊழலில் ஈடுபடுகிறார்கள்.
போலீசு மீதான அச்சத்தை உடைக்காமல் போலீசை ஒன்றும் செய்ய முடியாது. ஒரு நாள் திருப்பி அடிச்சா என்ன? பகுதி இளைஞர்கள் திருப்பி அடிங்க இரண்டு பேர் மேல கேசு. நம் மீது கேசு போட்டால் கேசு நடத்த நாங்கள் இருக்கிறோம் இலவசமாக நடத்த. அவனுக்கு தண்டனை கிடைத்தால் என்ன ஆகும்? வேலை போகும். அதோடு அவன் குடும்பம் தெருவில் போகும். அப்படி இளைஞர்கள் தயாராகாமல் இப்பிரச்சினையை தீர்க்க முடியாது.
ஹெல்மெட் போட்டால் நமக்கு பாதுகாப்பு என்று அரசு சொல்கிறது. டாஸ்மாக் கடை அரசு தானே நடத்துகிறது. மக்கள் உயிர் மேல் நேசம் இருந்தால் டாஸ்மாக் கடை நடத்த முடியுமா? கேலி கூத்தாக இல்லையா? நீரவ் மோடி, விஜய் மல்லையா பல ஆயிரம் கோடிகளை கொள்ளையடித்துவிட்டு ஓடிவிட்டார்கள். பிடிக்க முடிந்ததா?
ஒரத்தநாட்டு விவசாயி டிராக்டர் கடன் இரண்டு லட்சம் கட்டவில்லையென அடித்து கொலை செய்கிறாய். மக்கள் சொத்தை கொள்ளையடித்த பி.ஆர்.பி, வைகுண்டராஜன் மீது என்ன நடவடிக்கை? அதிமுக-வில் எவன் கொள்ளையடிக்கவில்லை. எவன் சொத்தையாவது பறிமுதல் செய்ய முடியுமா? எந்த கட்சி அரசியல்வாதிகள், அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் சொத்து விவரத்தை மட்டும் எடுத்தால் போதும். எவன் யோக்கியன் என்று தெரிந்துவிடும், எடுக்க தயாரா? காவல்துறை மீது எத்தனை வழக்குகள் என்பதை வெளியிடு… உன் யோக்கியதை தெரியும். இப்படிப்பட்ட குற்ற கும்பல்கள் தான் காவல்துறை.
சட்டத்தின் மேல், அதிகாரிகள் மேல் யாருக்கும் நம்பிக்கையில்லை. ஓட்டுக்கட்சிகள் மேல் நம்பிக்கையில்லை. கோர்ட் மேல் நம்பிக்கையில்லை. நீதிபதிகள் எல்லோரும் திருடனாக இருக்கிறார்கள். பத்திரிக்கைகளை எல்லாம் பெரிய பெரிய பணக்காரன் வைத்துள்ளான். எல்லா போன பிறகு மக்கள் இன்று வீதிகளில் இறங்கி போராடுகிறார்கள். அவர்களை தடுக்கிற ஒரே சக்தியாக காவல்துறை, காக்கிச்சட்டை அடியாள் கூட்டம் தான் உள்ளது.
உய்யகொண்டான் பகுதியில் போலீசு தேவையில்லை. பெண்கள்-இளைஞர்களைக் கொண்ட பாதுகாப்புக் குழுக்களை நாங்களே உருவாக்குகிறோம். பிரச்சினை வந்தால், தவறு செய்தால் நாங்களே தீர்த்துக் கொள்கிறோம். எதற்கு போலீசு, கோர்ட்க்கு போக வேண்டும்? இந்த அதிகாரத்தை ஏற்கும் வரை இப்பிரச்சினையை நாம் தீர்க்க முடியாது. என்ன நடந்தாலும் எங்களிடம் தானே வர வேண்டுமென நினைக்கிறார்கள் அவர்கள். உன் அதிகாரத்தை நாங்கள் ஏற்க மாட்டோம் என்ற அடிப்படையில் ஒவ்வொரு பகுதியிலும் பாதுகாப்புக் குழுக்களை நாம் உருவாக்குவோம். அதிகாரத்தை நாம் கையில் எடுப்போம் அது தான் நிரந்தரத்தீர்வு…” எனக்கூறி முடித்தார்.
ஆர்ப்பாட்டத்தின் இடையிடையே ம.க.இ.க கலைக்குழுவின் புரட்சிகர பாடல்கள் மக்களை உணர்வூட்டின.
அப்போது, பேசிய தோழர் கோவன், “ஹெல்மெட் அணிவதில் எங்களுக்கு மாற்றுக் கருத்தில்லை. ஆனால், உங்கள் அக்கறையின் மேல் தான் எங்களுக்கு சந்தேகமாக உள்ளது. ஏனென்றால், எங்கள் மக்கள் பல காரணங்களால் தினம் தினம் செத்து மடிகிறார்கள், நிம்மதியிழக்கிறார்கள் குறிப்பாக டாஸ்மாக். அதை செய்யக்கூடிய அரசுக்கு ஏவல் வேலை செய்கிறீர்கள். அந்த வகையில், எங்களை கொல்வது என்ற அரசின் கொள்கைக்கு உடன்படுகிறீர்கள்.
அதில் உடன்படக்கூடிய உங்களை எப்படி நம்ப முடியும்? அதனால் உங்கள் நோக்கம் எங்களை காப்பாற்றுவதல்ல. கொள்ளைடிப்பது தான் உங்கள் கொள்கை. உங்களுக்கு நியாயம் பேச துளியும் அருகதையில்லை. பெரியார் அணை பிரச்சினையா – கேரளா, காவிரி பிரச்சினையா – கர்நாடகா, நீட்டு, மாட்டு பிரச்சினையா – மோடி, மீத்தேன் பிரச்சினையா – தமிழக அரசு, மோடி அரசு எதிரி. ஆனால் இதில் எல்லாத்திலேயும் போலீசு தான் நிரந்தர எதிரி. நீங்கள் காக்கிச் சட்டை போட்டுள்ள வரை நீங்களும் நாங்களும் தான் எதிரி. முடிவு செய்யுங்கள், உங்கள் காக்கிச் சட்டையை தூக்கியெறியுங்கள் அல்லது இந்த மோசமான காரியத்தை செய்ய முடியாது என உயரதிகாரிகளுக்கு எதிராக போராடுங்கள். குறைந்தபட்சம் உங்கள் சங்கத்திற்காகவாவது போராடுங்கள்.
அதிகாரம் இருப்பதனால் எதையும் செய்யலாம் என திரிபுராவில் எங்கள் தோழர் லெனின் சிலையை உடைத்து காவி கும்பல் ஆட்டம் போடுகிறது. காவி என்றால் அராஜகம், ஜனநாயக விரோதம், சர்வாதிகாரம். இதே வேலையை தான் போலீசு செய்கிறது. அதிகாரம் இருப்பதால் தோழர் லெனின் சிலையை உடைத்ததை போல் இங்கு இளைஞர்களின் காலை உடைத்துள்ளீர்கள். அவர்களுக்கும், உங்களுக்கும் என்ன வித்தியாசம்?
அதனால், உங்கள் அதிகாரத்தை நாங்கள் ஏற்க மாட்டோம். லெனின் சிலையை, இளைஞர்களை – பொதுமக்களை பாதுகாக்க வேண்டுமானால் இனி மக்கள் அதிகாரம் தான். அதற்கான துவக்கமாக தான் இந்தக்கூட்டம் என்றார்.”
“போலீசுக்கு மக்களோட உசுரு மேல அக்கற”, “ஏழை மக்கள பாதுகாக்க போலீஸ் இருக்குதா” என்ற பாடல்கள் போலீசை அம்பலப்படுத்தியதுடன், மக்களுக்கு விரோதமான போலீசு துறைக்கு எதிராக போராட வேண்டுமென்ற அறைகூவலாகியது!
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
தகவல் :
மக்கள் அதிகாரம்,
திருச்சி, தொடர்புக்கு : 94454 75157.