Friday, May 7, 2021
முகப்பு செய்தி இந்தியா விவசாயிகள் கடன் தள்ளுபடியை விமர்சிக்கும் அரை வேக்காடுகள் !

விவசாயிகள் கடன் தள்ளுபடியை விமர்சிக்கும் அரை வேக்காடுகள் !

-

மும்பை மாநகரைச் சூழ்ந்துள்ள விவசாயிகள் பேரணியின் முக்கியமான கோரிக்கைகளில் ஒன்று கடன் தள்ளுபடி. விரைவில் உத்திரபிரதேசத்திலும் இதே போன்ற விவசாயிகள் பேரணி ஒன்றை ஏற்பாடு செய்யவுள்ளதாக அம்மாநில இடதுசாரி விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன.

இந்நிலையில் மெத்தப் படித்த அறிவுத்துறை அரைகுறைகள் சமூகவலைத்தளங்களிலும் ஊடகங்களிலும் விவசாயிகளின் கடன் தள்ளுபடி கோரிக்கையை விமரிசித்து வருகின்றனர். பேரணியில் கலந்து கொண்ட விவசாயிகளை மாவோயிஸ்டுகள் என முத்திரை குத்துவதோடு இவர்கள் கடன் வாங்குவதே திருப்பிச் செலுத்தாமல் ஏமாற்றுவதற்காகத் தான் என்பன போன்ற கருத்துக்களை முன் வைக்கின்றனர்.

உண்மை என்ன?

கடந்த ஜனவரி பத்தாம் தேதி மத்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட புள்ளிவிவரங்களின் படி, 2016 -ம் நிதியாண்டில் 48,800 கோடியாக இருந்த விவசாயத் துறையின் வாராக் கடன், 2017 -ம் ஆண்டில் 23 சதவீதம் உயர்ந்து 60,200 கோடியாக உள்ளது. அதற்கு முந்தைய நான்காண்டுகளில் விவசாயத் துறையின் வாராக் கடன் 24,000 கோடியாக இருந்துள்ளது.

வங்கித் துறை அளிக்கும் கடன்கள் இரண்டு விதமாக வகைப்படுத்தப்படுகின்றது. பிரதான துறைகள் (priority Sector) மற்றும் பிரதானமற்ற துறைகள் (Non-Priority Sector) என்கிற இந்த வகைப்பாட்டில் விவசாயம் பிரதான துறையாக பட்டியலிடப்பட்டுள்ளது. கார்ப்பரேட் துறைகள் பிரதானமற்ற துறைகளென வகைப்படுத்தப்படுகின்றன. இவ்வாறு பெயரிட்டிருப்பதெல்லாம் வெறும் கண் துடைப்பிற்காகத் தான் என்பதை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களே அம்பலப்படுத்துகின்றன.

வங்கித்துறையில் உள்ள ஒட்டுமொத்த கடன்களின் மதிப்பு 36,72,400 கோடி. இதில் “பிரதான” துறைகளுக்கு வழங்கப்பட்ட கடனின் மதிப்பு 9,92,400 கோடி; “பிரதானமற்ற” துறைகளுக்கு வழங்கப்பட்ட கடனின் மதிப்பு 26,80,000 கோடி. “பிரதான” துறைகளுக்கு வழங்ப்பட்ட கடனில் விவசாயத் துறையின் வாராக்கடன் 6 சதவீதம் (சுமார் 59 ஆயிரம் கோடி); இதே “பிரதானமற்ற” துறைகளுக்கு வழங்கப்பட்ட கடனில் சுமார் 20.83 சதவீதம் (அதாவது 5 லட்சத்து 58 ஆயிரம் கோடி) வாராக்கடன்.

ஆக, முதலாளிகளும் பெரும் கார்ப்பரேட் முதலைகளும் தரகு வர்க்கத்தினரும் வங்கிக் கடன்களின் வடிவில் பொதுப் பணத்தை சூறையாடி வருகின்றனர் என்பதே எதார்த்தமான உண்மை. சிபில் (CIBIL – Credit Information Bureau India Limited) வெளியிட்டுள்ள விவரங்களின் படி, வேண்டுமென்றே கடனைத் திருப்பிச் செலுத்தாத (Wilful defaulters) நிறுவனங்களின் எண்ணிக்கை சுமார் 5,275. இவர்கள் மக்களின் நெற்றியில் அடித்துள்ள பட்டை நாமத்தின் மதிப்பு மட்டும் 56,521 கோடி. சிபில் வெளியிட்டுள்ள இந்தப் பட்டியலும் முழுமையானதல்ல; ஏனெனில், வேண்டுமென்றே கடனைத் திருப்பிச் செலுத்தாதவர்களின் பட்டியலை முழுமையாக வெளியிட ரிசர்வ் மறுத்து வருகின்றது.

கடந்த 2015 செப்டெம்பர் 30 -ம் தேதி பாராளுமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு ரிசர்வ் வங்கி தரப்பில் இருந்து தாக்கல் செய்யப்பட்ட பதிலில் மொத்தம் 7,265 பேர் (முதலாளிகள் மற்றும் பெரும் கார்ப்பரேட்டுகள்) வேண்டுமென்றே கடனைத் திருப்பிச் செலுத்தாதவர்கள் என்கிற பட்டியல் இடம் பெற்றது. இதில் வெறும் 1,624 பேரின் மீது மட்டுமே சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்றத்திற்கு அளித்த பதிலில் ரிசர்வ் வங்கி குறிப்பிட்டிருந்தது.

ஒருபுறம் பெரும் கார்ப்பரேட்டுகளுக்கு பொதுத் துறை வங்கிகள் அள்ளிக் கொடுக்கும் கடன்களின் சதவீதம் உயர்ந்து கொண்டே செல்லும் நிலையில் விவசாயத் துறையைப் பொருத்தவரை 2016 -ம் ஆண்டு 15.13 சதவீதமாக இருந்த கடன் வளர்ச்சி சதவீதம் 2017 -ம் ஆண்டில் 12.4 சதவீதமாக குறைந்துள்ளது. இதே காலகட்டத்தில் விவசாயத் துறையின் வாராக்கடன் முந்தைய ஆண்டை விட 11,400 கோடி அதிகரித்திருப்பதற்கு மிக முக்கியமான காரணம் பணமதிப்பழிப்பு நடவடிக்கையும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட பொருளாதார மந்த நிலையுமே ஆகும்.

ஏற்றத்தாழ்வான பருவமழை போன்ற இயற்கையான காரணங்கள் ஒருபுறம் விவசாயத் துறையை நெருக்குகின்றதென்றால், விளைபொருளுக்கு விலை நிர்ணயம் செய்யும் உரிமை மறுப்பு, வங்கிகளின் கடன் மறுப்பு, விவசாயத் துறையை கபளீகரம் செய்யும் கார்ப்பரேட் துறை மற்றும் ஒப்பந்த விவசாய முறை என சகல திசைகளிலும் விவசாயி நெட்டித் தள்ளப்படுகிறான். இதன் விளைவாகவே சமீபத்திய ஆண்டுகளில் விவசாயிகள் தற்கொலை அதிகரித்து வருகின்றது.

சகல திசைகளிலும் நெருக்கடியைச் சந்தித்த போதும் வாங்கிய கடனை நேர்மையாகத் திருப்பிச் செலுத்த முனைந்து போராடிச் சாகும் விவசாயிகளின் நியாயமான கோரிக்கையை கொச்சையாகப் பார்க்கும் அறிவுத் துறையினர், கார்ப்பரேட்டுகள் நடத்தும் திட்டமிட்ட வங்கிக் கொள்ளைகளைக் கண்டு கொள்ள மறுக்கின்றனர்.

மும்பையில் ஏற்பட்டுள்ளது போன்ற எழுச்சி நாடெங்கும் நடை பெறும் போது தான் விவசாயிகள் தங்களுக்கான நியாயத்தை வென்றெடுப்பார்கள்.

மேலும் :

  1. என்ன ஆயிற்று இந்த 20.83 சதவீதம் (அதாவது 5 லட்சத்து 58 ஆயிரம் கோடி) ? மணிகண்டன் போன்ற முதலாளித்துவ அடியாட்கள் BMW மற்றும் ஐபோன் வாங்க இந்த பணத்தை மங்கலம் பாடிட்டாங்க்லா? முந்தைய பதிவில் அவர் இந்த அரசு அவர் போன்றவர்கலுக்கு இவைகளை எல்லாம் வாங்க வாய்ப்புகளை உருவாக்கி தந்து இருக்கிறது என்றாரே மணிகண்டன்!

    //வங்கித்துறையில் உள்ள ஒட்டுமொத்த கடன்களின் மதிப்பு 36,72,400 கோடி. இதில் “பிரதான” துறைகளுக்கு வழங்கப்பட்ட கடனின் மதிப்பு 9,92,400 கோடி; “பிரதானமற்ற” துறைகளுக்கு வழங்கப்பட்ட கடனின் மதிப்பு 26,80,000 கோடி. “பிரதான” துறைகளுக்கு வழங்ப்பட்ட கடனில் விவசாயத் துறையின் வாராக்கடன் 6 சதவீதம் (சுமார் 59 ஆயிரம் கோடி); இதே “பிரதானமற்ற” துறைகளுக்கு வழங்கப்பட்ட கடனில் சுமார் 20.83 சதவீதம் (அதாவது 5 லட்சத்து 58 ஆயிரம் கோடி) வாராக்கடன்.//

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க