Sunday, September 20, 2020
முகப்பு கட்சிகள் பா.ஜ.க திரிபுராவில் பாஜக காலிகள் வெறியாட்டத்தைக் கண்டித்து புதுவை - மதுரை ஆர்ப்பாட்டம் !

திரிபுராவில் பாஜக காலிகள் வெறியாட்டத்தைக் கண்டித்து புதுவை – மதுரை ஆர்ப்பாட்டம் !

-

திரிபுராவில் பாட்டாளி வர்க்க ஆசான் லெனின் சிலை உடைப்பு ! பா.ஜ.க காலிகள் வெறியாட்டம் !

ந்தியாவின் வடகிழக்கு மாநிலமான திரிபுராவில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் பெற்ற வெற்றியைத் தொடர்ந்து, பதவி ஏற்பதற்கு முன்னதாகவே, அதாவது தேர்தலில் வெற்றி பெற்ற 48 மணிநேரத்திற்குள்ளாகவே பாட்டாளி வர்க்க பேராசான் மாமேதை லெனின் சிலையை உடைத்து பாஜக காலிகள் வெறியாட்டம் போட்டுள்ளனர். சிலையை உடைக்கும் போது பாரத் மாதா கீ ஜே! என்று கோசமிட்டுள்ளனர்.

இதைத் தொடர்ந்து இந்து மதவெறியைத் தூண்டி, எப்படியாவது தமிழகத்தில் நேரடியாக காலூன்றி விட வேண்டும் என பல மதவெறிக் கூச்சல்களைக் கிளப்பி வருகின்ற ஹெச். ராஜா, இந்த விசயத்திலும், தனது பேஸ்புக் பக்கத்தில், திரிபுராவில் லெனின் சிலை இடிக்கப்பட்டதை ஆதரித்ததோடு, இந்தியாவிற்கும் லெனினுக்கும் என்ன தொடர்பு என்று கேட்டு, லெனின் சிலையைப் போலவே தமிழகத்தில் பெரியார் சிலையும் உடைக்கப்படும் என பார்ப்பனத் திமிருடன் கொக்கரித்துள்ளான். இதைத் தொடர்ந்து, திருப்பத்தூர் பகுதியில் பெரியார் சிலையைச் சேதப்படுத்தியுள்ளனர் பாஜக மதவெறியர்கள்.

ஹெச்.ராஜாவின் இந்தப் பதிவிற்கு எதிர்ப்பு தெரிவித்தும், பெரியார் சிலை சேதப்படுத்தியதைக் கண்டித்தும், தமிழகத்தின் பல்வேறு அரசியல் ஓட்டுக் கட்சிகளும் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்து வருவதோடு, ஆர்ப்பாட்டம், சாலை மறியல், உருவ பொம்மை எரிப்பு, முற்றுகை என பல வடிவங்களில் மாநிலம் தழுவிய அளவில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

புதுச்சேரியில் செயல்படும், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி சார்பில், 07.03.2018 அன்று  மக்கள் கூடும் முக்கிய சந்திப்பான வில்லியனூர் கோட்டைமேடு சந்திப்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

ஆர்ப்பாட்டத்திற்கு, புதுச்சேரி புஜதொமு இணைச்செயலாளர் தோழர். மகேந்திரன் தலைமை தாங்கினார். புதுச்சேரி, புமாஇமு. அமைப்பாளர் தோழர். மோகன், புதுச்சேரி மக்கள் அதிகாரம் அமைப்பின் மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர். கலை மற்றும், புதுச்சேரி புஜதொமு. பொருளாளர் தோழர். செல்லக்கண்ணு ஆகியோர் கண்டனவுரையாற்றினர். நிகழ்ச்சியில், வட்டாரக் கலைக்குழு தோழர்கள் புரட்சிகர பாடல்களைப் பாடினர்.

தோழர் தோழர் தனது தலைமையுரையில், “பாஜக காலிகள், ரவுடிகள் போல வெறியாட்டம் போட்டதற்குக் காரணம் அவர்களது சித்தாந்தம் தான். இவர்கள் ஜெர்மனியின் கொடுங்கோலன் மக்களைக் கொத்து கொத்தாக கொன்று குவித்த நாஜி ஹிட்லரின் இந்திய வாரிசுகள். ஜெர்மனி மீது ஹிட்லர் படையெடுத்த போது, மக்களைக் காக்கும் பொருட்டு, தோழர் ஸ்டாலின் பின் வாங்கினார். அதன் காரணமாக தான் ஆக்கிரமித்த உக்ரைனில் அமைக்கப்பட்ட தோழர். லெனின் சிலையை உடைத்தது நாஜி வெறி ஹிட்லரின் கும்பல். அடுத்த ஒரே ஆண்டுக்குள் ஹிட்லரின் படையை ஓட ஓட விரட்டியது ஆசான் ஸ்டாலின் தலைமையிலான மக்கள் ராணுவம் என்பது தனிக்கதை! இதைத்தான் இன்று திரிபுராவில் நடத்திக் காட்டியுள்ளது பாஜக காலிப்படை. எனவே, நாம் போராட வேண்டியது கண்ணுக்குத் தெரியும் காவி கும்பலை மட்டுமல்ல அவர்களது சித்தாந்தத்தை. அதற்கு பாட்டாளி வர்க்கமாய் ஒன்றிணைவதே ஒரே வழி” என்றார்.

புமாஇமு அமைப்பாளர் தோழர் மோகன், தனது உரையில், “பாஜக ஒரு கட்சியல்ல. அது ஒரு மதவெறிக் கும்பல். அதன் சித்தாந்தமே உழைக்கும் மக்களாக ஆகப் பெரும்பான்மையாக இருக்கும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களை தங்களது அடிமைகளாக மாற்றி அவர்களை முன்னேற விடாமல் தடுப்பது தான். அதைத் தான் மோடி தனது கொள்கையாகக் கொண்டு அன்றாடம் செய்து வருகிறார். நீட் தேர்வு அதற்கான சமீபத்திய உதாரணம். உழைக்கும் மக்களின் பிரிவிலிருந்து யாரும் உயர்கல்வி கற்கக் கூடாது, மருத்துவராகக் கூடாது என்பதை செயல்படுத்தக் கொண்டு வந்தது தான் நீட் தேர்வு. அதற்காக அவர் சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் பொய் என்பதை, பட்டியலிட்டுப் பேசினார். எனவே, நீட் என்பதைச் சாக்காக வைத்து நமது அடுத்த தலைமுறையை தற்குறியாக, கூலி அடிமைகளாக மாற்றி, முதலாளிகளுக்கு படையல் படைக்கப் போகிறார்கள். இந்து மதத்தின் பெயரால் அதைச் செய்யப் பார்க்கிறார்கள். இவைகளை எல்லாம தட்டிக் கேட்கச் சொன்னவர்கள், போராடக் கற்றுக் கொடுத்தவர்கள் தான் மாமேதை லெனினும், தந்தை பெரியாரும், அண்ணல் அம்பேத்கரும்.

இதனால் தான் ஆர்.எஸ்.எஸ். பாஜக காலிகள் இந்த தலைவர்களின் சிலைகளை குறிவைத்து தாக்குகிறார்கள். எனவே, நாம் பாதுகாக்க வேண்டியது, வழிநடக்க வேண்டியது சிலைகளை மட்டுமல்ல. அந்தத் தலைவர்களின் சித்தாந்தங்களை. அதற்கு எதிராக வரும் பார்ப்பன மதவெறிக் கூட்டத்தை, எச்ச ராஜாக்களை வீதியில் எதிர்கொண்டு அடித்து உதைத்து விரட்டுவது தான் நமக்கான வேலை” என்றார்.

மக்கள் அதிகாரத்தின் தோழர் கலை பேசும் போது, நாட்டின் பல்வேறு மாநிலங்களின் ஆட்சியைப் பிடித்துள்ள பாஜக, மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்கவில்லை. மாறாக, நீட், பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி வங்கி திவால், சாகர்மாலா, பாரத்மாலா போன்ற நடவடிக்கைகளால் பிரச்சினைகள் தீவிரமாகிக் கொண்டே வருகிறது. இவைகள் எல்லாமே, இந்த கட்டமைப்பின் தோல்வியைக் காட்டுகிறது. அந்தத் தோல்வியை மறைக்கவே, மதவெறிக் கூச்சல்கள், சிலை இடிப்புகள் நடத்தி மக்களை திசை திருப்புகிறது மதவெறிக் கும்பல். எனவே, இவர்களை எதிர்கொள்ள அனைத்து தரப்பு உழைக்கும் மக்களும் ஒன்று திரள்வதும், மக்களுக்கு எதிரியாக மாறிப் போன இந்த அரசுக் கட்டமைப்பை அடித்து நொறுக்குவதும் தான் உடனடி வேலையாக செய்ய வேண்டும்” என்றார்.

இறுதியாகப் பேசிய, புஜதொமு பொருளாளர் தோழர் செல்லக்கண்ணு, “ஆசான் லெனினுக்கும், இந்தியாவிற்கும் என்ன சம்மந்தம் என்று கேட்கிறார் வரலாறு தெரியாத எச்ச ராஜா. யாரெல்லாம் சமூகத்தில் அடிமைப்பட்டுக் கிடக்கிறார்களோ அவர்களுக்கெல்லாம் மிக நெருங்கிய தொடர்புடையவர் ஆசான் லெனின். தொழிலாளி வர்க்கம் முதலாளித்துவத்திடம் அடிமைப்பட்டுக் கிடந்த போது, அழுக்குச் சட்டைகள் ஆள முடியும் என்று சொல்லி, தொழிலாளிகள் தங்களது வர்க்க பலத்தை உணரச் செய்தவர்.

முதலாளி தன்னால் தான் சமூகத்தில் மக்கள் வாழ்கிறார்கள் என்று இறுமாப்புடன் இருந்த போது, தொழிலாளியின் வரலாற்றுப் பாத்திரத்தை உணர்த்தி, தொழிலாளி என்ற திமிருடன் இருக்கக் கற்றுக் கொடுத்தவர் தான் ஆசான் லெனின். நாட்டை தலைகீழாக மாற்றுவதாகச் சொன்ன மோடியால் எதையும் செய்ய முடியவில்லை. அவ்வளவு ஏன்? இதே பகுதியில் ஊதிய உயர்வு கேட்டுப் போராடி வரும் வேல்பிஸ்கட்ஸ் தொழிலாளர்களுக்கு உங்களது மதமோ, கட்சியோ என்ன செய்தது? வெறும் 500/- ரூபாய் மட்டும் தான் உயர்வு தர முடியும் என்று திமிராகச் சொன்ன முதலாளி மீது நடவடிக்கை ஏதும் இல்லை. ஆனால், தொழிலாளிகளின் உள்ளிருப்புப் போராட்டத்திற்குப் பிறகு தான் முதலாளியே அசைகின்றான்.

எனவே, கூலி அடிமைமுறையை ஒழிக்க வர்க்கமாய் இணைந்து போராடக் கற்றுக் கொடுத்த ஆசான் லெனின் தான் தொழிலாளி வர்க்கத்தின் தலைவர். நமது நாட்டில் அந்த வர்க்க இணைவுக்குத் தடையாக உள்ள சாதிகளையும், அதைத் தாங்கி நிற்கும் இந்து மதத்தையும் ஒழிக்க வேண்டும் என்று கற்றுக் கொடுத்தவர்கள் தான் பெரியாரும் அம்பேத்கரும். எனவே, இவர்கள் தொழிலாளி வர்க்கத்திற்கு சிலையாக நிற்கவில்லை. சிந்தனையாக நிற்கிறார்கள். சிலையை உடைத்து விடலாம். சிந்தனையை யாராலும் உடைக்க முடியாது. அந்த சிந்தனையை உயர்த்திப் பிடித்து ஆசான் லெனின் வழியில் புரட்சியை சாதிப்போம்.” என்றார்.

கூட்டத்தில் வட்டாரக் கலைக்குழுத் தோழர்களின் பாடல்கள், இந்து மதவெறியர்களின் அரசியலை அம்பலப்படுத்தியதோடு, அவர்களது கார்ப்பரேட் சேவையையும், அம்பலப்படுத்தும் வகையில் அமைந்தது.

தகவல் :
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
புதுச்சேரி, தொடர்புக்கு : 95977 89801.

*****

திரிபுரா சிபிஎம் தொண்டர்கள் மீது RSS-BJP  கும்பல் கொலை வெறி தாக்குதல் நடத்துவதை எதிர்த்தும், உலகம் முழுவதும் கொண்டாடப்படும் ரசிய புரட்சியின் தலைவரான லெனின் சிலையை தகர்த்து வெறியாட்டம் போடுவதை கண்டித்தும் “RSS-BJP    கும்பலை நாட்டை விட்டே விரட்டியடிப்போம்”  என்கின்ற முழக்கத்துடன் மதுரை நகரின் பல பகுதிகளிலும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன.

AC   அசோகன் தலைமையிலான காவல்துறை அனுமதி பெறாமல் போராட்டம் நடத்தக்கூடாது வேண்டுமானால் 5 பேர் மட்டும் மாலை அணிவிக்கலாம், ஊடகங்களுக்கு பேட்டி கொடுக்க கூடாது என்று மிரட்டி பேசினர். அதை ஏற்க மறுத்த தோழர்கள் மாவட்ட நீதிமன்றத்திலிருந்து வழக்கறிஞர்களை  திரட்டி பேரணியாக சென்று மாலை அணிவிக்க முழக்கமிட்டவாறு வரும்போது மகஇக, பு.ம.இ.மு மற்றும் தோழமை அமைப்பு தோழர்களும் பேரணியில் இணைந்து கொண்டனர். இது சாலை சென்று கொண்டிருந்த மக்களின் கவனத்தை ஈர்த்து கவனிக்க வைத்தது.

வழக்கறிஞர்கள் தோழர்கள் என அனைவரும் மாலை அணிவித்த பின் ஊடகங்களிடம் தோழர் வாஞ்சிநாதன் பேசும் போது….  “பார்ப்பன பொறுக்கி எச்.ராஜா தமிழகத்தில் பெரியார் சிலையை உடைப்போம் என பேசியதை இந்த அடிமை எடப்பாடி அரசு வேடிக்கை பார்க்கிறது. இதற்கு பேசாமல் அதிமுக என்கின்ற பெயரை மாற்றி அடிமை திமுக என கட்சி பெயரை வைத்துக்கொள்ளலாம்” மேலும் “பெரியார் பிறந்த மண்ணில் சமூக நீதியையும் சமத்துவத்தையும் அழிக்க நினைக்கும் இந்த நச்சு பாம்பு எச்ச‌.ராஜா, BJP-RSS  கும்பலை நாட்டை விட்டே அடித்து விரட்ட வேண்டும். இந்த வேலையை அனைத்து ஜனநாயகவாதிகளும் இணைந்து செய்ய வேண்டும்”  என வலியுறுத்தி பேசினார்.

மேலும் “கோவை பாஜக அலுவலகத்தில் குண்டு வீசியது, சென்னை திருவெல்லிகேணியில் 15 பார்ப்பனர்களின் பூனூல் அறுப்பு என்று பாஜக வை சேர்ந்த கிரிமினல் கும்பல்களே செய்துவிட்டு பிரச்சினையை திசை திருப்பி விடலாம் என நினைக்கிறது” என்று அம்பலப்படுத்தி வழக்கறிஞர்கள் தோழர்கள் ஆகியோர் பேசினர்.

பேசிவிட்டு களைந்து செல்ல முற்படும்போது உங்கள் எல்லாரையும் கைது செய்வோம் என காவல்துறை மிரட்ட அதற்கு தோழர்கள் அப்படியென்றால் நாங்கள் சாலை மறியல் செய்வோம் என்றும், மேலும் தொடர்ச்சியாக் சமூகத்தின் அமைதியை கெடுக்கும் வண்ணம் மதக்கலவரத்தை தூண்டும் விதமாக பேசி வரும் எச்.ராஜாவை கைது செய்ய தயாரா என்ற கேட்டவுடன் ஏசி அசோகன் கும்பலுக்கு முகம் இறுகிப் போய் பின்வாங்கியது. இது மக்களிடையே போலிசின் கையாலாக தனத்தை அம்பலப்படுத்துதும் விதமாக அமைந்தது. பின்பு தோழர்கள் வழக்கறிஞர்கள் அனைவரும் களைந்து சென்றனர்.

தகவல் :
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்,
மதுரை.

 

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

  1. உண்மையில் பாட்டாளிகள்தான் லெனினுக்கு வருத்தப்படவேண்டும்.. பெரியாரோ அம்பேத்கரரோ ஆளும் வர்கத்தின் ஒரு பகுதிதான் …அவர்கள் ஆளும் வர்கத்தின் சில விஷயங்களுக்காக சீர்திருத்தத்தை கூறியவர்கள் மட்டுமே…. அவர்கள் சிலையை உடைப்பது என்பது ஆளும் வர்கத்தின் ஒரு பகுதியை உடைப்பது ஒப்பாகும்… அதை ஒருபோதும் இந்திய ஆளும் வர்கம் அனுமதிக்காது ….ஆனால் லெனின் சிலை என்பது ஆளும் வர்கத்தின் நேர் எதிர் சிலை ….அது உடைந்தால் உங்களைபோன்றவர்த்தவிர வேறு யாரும் கோபப்படமுடியாது ….லெனின் பிரச்னையுடன் பெரியார் அம்பேத்காரை H ராஜா முடிச்சி போடுவது அவர் அறியாமையை காட்டுகிறது ..

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க