Sunday, September 25, 2022
முகப்பு செய்தி ஓலா - ஊபர் டாக்சி ஓட்டுனர் போராட்டத்தை ஆதரிப்போம் !

ஓலா – ஊபர் டாக்சி ஓட்டுனர் போராட்டத்தை ஆதரிப்போம் !

-

லா மற்றும் ஊபர் டாக்சி ஓட்டுனர்கள், நேற்று (19.03.2018) இந்தியா முழுவதும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஊபர் மற்றும் ஓலா நிறுவனங்கள் தொடர்ச்சியாக தங்களது வருவாயைக் குறைத்து ஏமாற்றி வருவதைக் கண்டித்து இப்போராட்டம் நடைபெற்றது. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்தியா முழுவதும் பல்வேறு கால் – டாக்சி நிறுவனங்கள் செயல்பட்டு வந்தன. தமிழகத்தில் பாரதி, ஃபாஸ்ட் ட்ராக், பிரண்ட்ஸ் ட்ராக்,மில்லியன் டாட்ஸ் போன்ற கால்டாக்சிகள் செயல்பட்டு வந்தன.

கடந்த சில ஆண்டுகளில் ‘ஓலா’ மற்றும் ‘ஊபர்’ கால் பன்னாட்டு கார்ப்பரேட் டாக்சி நிறுவனங்கள், ஆண்டிராய்டு செயலியைக் கொண்டு கால் டாக்சி பதிவு செய்யும் முறையை அறிமுகப்படுத்தி சந்தையில் நுழைந்தன. அதோடு அச்சமயத்தில் இயங்கிக் கொண்டிருந்த பிற கால்டாக்சி சேவை நிறுவனங்களின் கட்டணத்தை விட மிகக்குறைவான கட்டணத்தை வம்படியாக அறிமுகப்படுத்தின.

குறைந்த கட்டணம், ஆண்டிராய்ட் செயலி மூலம் டாக்சி இருக்கும் இடத்தைத் தெரிந்து கொள்ளும் வசதி மற்றும் பல்வேறு ஆரம்பகால சலுகைகள் போன்றவற்றால் ஈர்க்கப்பட்ட வாடிக்கையாளர்கள், உள்நாட்டு கால்-டாக்சி சேவை நிறுவனங்களை விட்டுவிட்டு ஓலா, ஊபர் போன்ற கால் டாக்சியை நாடினர்.

அதே சமயம் பிற கால்-டாக்சி சேவைகளில் தங்களது வாகனத்தை இணைத்திருந்த கால்-டாக்சி ஓட்டுனர்களுக்கு அதிகமான வருவாயையும், ஊக்கத் தொகையையும் அளிப்பதாக உறுதி கூறி தமது நிறுவனத்தோடு படிப்படியாக இணைத்தன. மேலும் புதிதாக பலரையும் வங்கிக்கடன் பெற்று வாகனத்தை வாங்கி சவாரிக்கு விடுமாறும், அதன் மூலம் மாதம் சுமார் ரூ.1,50,000 வரை சம்பாதிக்க முடியும் எனக் கூறி ஆசை காட்டின.

வாடிக்கையாளர்களையும், ஓட்டுனர்களையும் தமது பக்கம் இழுத்ததன் மூலம், மூன்றாண்டுகளுக்கு முன்னரே இவ்விரண்டு நிறுவனங்களும். இந்தியாவில் இயங்கிக் கொண்டிருந்த பிற கால்டாக்சி சேவைகளை மொத்தமாக முடக்கி விட்டன.

இந்நிலையில், இந்நிறுவனத்தின் பங்குகளின் விலை அதிகரித்தது. பல சர்வதேச நிதிமூலதன நிறுவனங்கள் ஊபர் மற்றும் ஓலா நிறுவனங்களில் தங்கள் முதலீடுகளைப் போட்டன. இவ்விரு கார்ப்பரேட் நிறுவனங்களும் தங்களுக்கிடையிலான கழுத்தறுப்புப் போட்டியில் இறங்கியுள்ளன.

நிதி மூலதன நிறுவனங்களுக்கு இலாபத்தை அள்ளித் தர வேண்டிய அவசியம் ஒருபுறம், வாடிக்கையாளர்களை தங்கள் பக்கம் தக்கவைத்துக் கொள்ள குறைந்த கட்டண சேவை வழங்கப்போகவேண்டிய சூழல் இன்னொருபுறம். இதற்கு பலி கொடுக்கப்பட்டவர்கள்தான் ஊபர், ஓலா கால் டாக்சி ஓட்டுனர்கள்.

தங்களது நிறுவனத்திற்கான கால்-டாக்சி ஓட்டுநர்களை ஈர்க்க, ஓட்டுநர்கள் / கால்-டாக்சி உரிமையாளர்களுக்கு, வண்டி ஓடும் ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் ரூ.10 கொடுத்துவந்த நிறுவனங்கள், போட்டியின் காரணமாக அதனை படிப்படியாகக் குறைத்து மும்பை, டில்லி, புனே போன்ற நகரங்களில் கட்டணத்தை கி.மீ.க்கு ரூ.6 -ஆக குறைத்தன.

குறிப்பிட்ட தூரத்திற்கு மேல் சவாரி செய்திருந்தால் அளிக்கப்படும் ஊக்கத்தொகையையும் படிப்படியாக குறைத்து வந்தன. இதனால் சுமார் 5 முதல் 7 இலட்சம் வரை கடன் வாங்கி கார்களை ஓட்டிக்கொண்டிருந்த ஓட்டுனர்களும், வாகன உரிமையாளர்களும் வாங்கிய கடனைத் திரும்ப செலுத்த முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

அதே சமயத்தில் மோடி அரசால் நாள்தோறும் அதிகரித்துக் கொண்டே போகும் பெட்ரோல், டீசல் விலை வண்டி ஓட்டுனர்களின் கையை மேலும் கடித்தது.

இவ்வளவு பிரச்சினைகள் போக, இவ்விரு நிறுவனங்கள் புரியும் மற்றொரு அறம் மிஞ்சிய செயலைப் பற்றி கூறுகின்றனர் ஓட்டுனர்கள். ஒரு வாடிக்கையாளர் அருகில் தனது சவாரியை செயலி மூலம் பதிவு செய்யும் போது, அருகில் உள்ள டாக்சியை அந்தச் செயலி காட்டும். அதனை அவர் தொடர்பு கொண்டு தமது தேவையை பதிவு செய்வார்.

ஊபர் மற்று ஓலா நிறுவனங்கள் நியாயப்படி நடக்க வேண்டுமானால், எந்த டாக்சி வாடிக்கையாளருக்கு அருகில் உள்ளதோ, அதனையே வாடிக்கையாளருக்கு அந்தச் செயலியில் காட்ட வேண்டும். ஆனால் அவ்வாறு செய்யாமல், ஊபர் மற்றும் ஓலாவின் சொந்த டாக்சிகளுக்கு முன்னுரிமை கொடுத்துவிட்டு, தங்களது டாக்சிகளை அந்த செயலியில் காட்டுவதில்லை எனக் குற்றம் சாட்டுகின்றனர், தற்போது வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருக்கும் ஓட்டுனர்கள்.

சந்தையில் நுழைந்த உடன் களத்தில் இருக்கும் சிறு நிறுவனங்கள் மற்றும் போட்டியாளர்களை தமது பணபலத்தால் காலி செய்துவிட்டன ஊபர் மற்றும் ஓலா நிறுவனங்கள். இலாப வேட்கையின் காரணமாக தற்போது ஓட்டுனர்களின் அடிமடியின் கைவைத்திருக்கின்றன.
இவ்விரு நிறுவனங்களும் போட்டியின் காரணமாக இவை இரண்டும் கால்டாக்சி சேவையில் ஏகபோகமாக ஆதிக்கம் செய்கின்றன.

அன்று இந்நிறுவனங்கள் கூறிய ரூ. 1.5 இலட்சம் மாத வருமானம் என்ற பொய்யை நம்பி இவர்களை நாடிய வாகன ஓட்டுனர்கள்/ உரிமையாளர்கள் இன்று கதறுவதைப் போல, நாளை கால் டாக்சி கட்டணத்தை தமது இஸ்டப்படி இந்நிறுவனங்கள் உயர்த்தும்போது வாடிக்கையாளர்களும் கதறும் சூழல் உண்டாகும். தற்போதே கிராக்கி அதிகம் உள்ள நேரங்கள், கிழமைகள் இந்நிறுவனங்கள் வாடகை கட்டணத்தை சில மடந்து அதிகம் வைத்தே வசூலிக்கின்றன. ஆரம்பத்தில் குறைந்த கட்டணம் என்ற வலையில் சிக்கும் வாடிக்கையாளர்கள் பிறகு இவைதான் கதி என அவசர நேரங்களில் அதிக கட்டணம் கொடுத்து பயணிக்கின்றனர்.

ஒரு நாள் பணிநேரத்தில் 15 டிரிப்புகள் முடித்தால்தான் ஊக்கத் தொகை கிடைக்கும், அதில் ஒன்று  குறைந்தால் கூட கிடைக்காது. அப்போது கிடைக்கும் தொகை எரிபொருளுக்கு மட்டுமே போதுமானது. அதனால்தான் இந்த நிறுவன டாக்சி ஓட்டுனர்கள் எப்பபோதும் வேகத்துடனமும், அவரசத்துடனும் பணியாற்றும் நெருக்கடி இருக்கின்றன. உலகம் முழுவதும் இந்நிறுவனங்களின் ஓட்டுநர்கள் கடந்த சில ஆண்டுகளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். அதற்கு மாறாக இந்நிறுவனங்கள் இரண்டும் அந்தந்த நாடுகளின் அரசு ஆதரவோடு அடக்குமுறை செய்கின்றன.

இதற்கு மிகச்சிறந்த உதாரணம் அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் இருக்கும், ஆஸ்டின் மற்றும் சான் ஆண்டனியோ நகரங்கள். இவ்விரு நகரங்களும், சில கட்டுப்பாடுகளை அங்கு ஏகபோகமாகக் கோலோச்சிக் கொண்டிருந்த ஊபர் மற்றும் லிஃப்ட் நிறுவனங்களின் கால்டாக்சி சேவை மீது கொண்டுவந்தன. இதற்கு எதிராக இவ்விரு நிறுவனங்களும் அந்நகரங்களில் இருந்து தமது சேவையை நிறுத்திக் கொள்ள்ப் போவதாக அறிவித்தன. உடனடியாக சான் ஆண்டானியோ நகரம் இவ்விரு நிறுவனங்களிடம் சரணடைந்தது.

ஆனால் ஆஸ்டின் நகரம் தமது கட்டுப்பாட்டு சட்டத்தில் உறுதியாக இருந்ததை அடுத்து அடுத்த இரண்டு நாளில் இந்நிறுவனங்கள் தங்களது சேவைகளை ஒட்டு மொத்தமாக நிறுத்தின. இதனால் இந்நிறுவனங்களுக்கு கால்டாக்சி வாடகைக்கு விட்டவர்கள், கால்டாக்சி ஓட்டுனர்கள் என அனைவரும் கடுமையான வருவாய் இழப்பை எதிர்கொண்டனர். கடனைத் திருப்பி செலுத்த முடியாத நிலையில் தவித்தனர். இவர்களுக்குக் கடன் கொடுத்த வங்கிகள் மிகப்பெரும் பொருளாதார சிக்கலில் மாட்டிக் கொண்டனர்.

இந்நிகழ்வில் லிஃப்ட் மற்றும் ஊஃபர் நிறுவனங்களுக்கு பெரிய இழப்புகள் எதுவும் இல்லை. ஏனெனில் அவர்களுக்கு இழப்பதற்கான பொருள் எதுவும் அவர்களது உடமையாக இல்லை. அவை அனைத்தும் டாக்சி ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்களின் உடமையாகவே இருந்தன. கார்ப்பரேட்டு முதலைப் பண்ணையான அமெரிக்காவிற்கே இதுதான் கதி என்றால் கார்ப்பரேட் முதலைகளின் வேட்டைக்காடான நமது நாட்டின் நிலைமை? அதோகதிதான்..

அப்படி ஒரு சூழலில் இந்தியாவில் இருக்கும் ஏகாதிபத்திய அடிமை ஓட்டுக் கட்சிகள் எதுவும் இந்நிறுவனங்களின் மீது எவ்வித கட்டுப்பாடுகளையும் கொண்டுவராது.

ஊபர் மற்றும் ஓலா ஓட்டுனர்களின் உரிமைப் போராட்டத்திற்கு ஆதரவளிப்பதும் அவர்களைத் தொடர்ந்து புறக்கணித்து வரும் ஊபர், ஓலா நிறுவனங்களுக்கு எதிராக வாடிக்கையாளர்களும் குரல் கொடுப்பதும்தான் நாம் எதிர்கொண்டு நிற்கும் அபாயத்தில் இருந்து நம்மைக் காக்கும்

மேலும் :

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க