காவிரி : அவர்கள் தொடர்பு எல்லைக்கு அப்பால் இருக்கிறார்கள் !

13
92

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான உச்சநீதிமன்றத்தின் கெடு நேற்றே (29.03.2018) முடிந்தது. பாராளுமன்றத்தில் எதிர்ப்பு தெரிவிப்பதாக நாடகம் நடத்தும் அதிமுக அரசு, தற்போது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு போடப் போவதாக செய்தி வெளியிட்டிருக்கிறது.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு போடவேண்டுமென்றால் அது மோடி அரசு மீது மட்டுமல்ல, நீதிமன்றத்தின் மீதேயும் போட வேண்டியிருக்கும். ஏனெனில் கடந்த ஆண்டுகளில் காவிரி குறித்து உச்சநீதிமன்றம் அளித்த இடைக்கால தீர்ப்புக்களோ, உத்தரவுகளோ கூட இங்கே அமல்படுத்தப்பட்டதில்லை. அதை தமிழகத்தை ஆண்ட அரசுகளும் கேள்வி கேட்டதில்லை.

இந்திய அரசும், காங்கிரசு – பா.ஜ.க முதலான தேசியக் கட்சிகளும், நீதித்துறையும் சேர்ந்து தமிழகத்திற்கு துரோகம் இழைத்திருக்கும் போது அதே வளையத்திற்குள் போய் பேசுவதால் தீர்வு கிடைத்து விடுமா? கடந்த காலங்களிலேயே சட்டப் போராட்டம் நடத்திய தமிழக அரசிற்கு எந்த தீர்வும் வழங்கப்படாத நிலையில் இனி மேல் வழக்குப் போட்டு என்ன ஆகிவிடப் போகிறது? தமிழக அரங்கில் நடக்கும் போராட்டம் ஒன்றே அரசையோ, நீதிமன்றத்தையோ பணியவைக்குமே அன்றி மூத்த வழக்கறிஞர்களை வைத்து அவமதிப்பு வழக்குப் போட்டால் சில பல கோடிகள் கட்டணமாக நட்டமாகுமே அன்றி வேறு பலன் இல்லை.

மோடி அரசு காலால் இட்டதை தலையால் செய்யும் எடப்பாடி – ஓபிஎஸ் அரசாங்கம் காவிரி பிரச்சினையில் நடத்தும் நாடகம் கூட குருமூர்த்தி வகையறாக்கள் எழுதும் வசனப்படிதான். அதனால்தான் மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை செல்லமாகக் கண்டித்து அ.தி.மு.க-வினர் தமிழகம் முழுவதும் உண்ணாவிரதம் இருக்கப் போகிறார்களாம். தமிழக்த்தில் அதிமுகவினர் நடத்தும் உண்ணாவிரதக் காட்சிகள் ஆதித்யா சானலோடு போட்டி போடும் காமடி சானலாகும். அரசு என்ற முறையில் அரசியல் ரீதியாக அழுத்தமோ எதிர்ப்போ தெரிவிக்காமல் இப்படி அழுகுணி ஆட்டம் போடும் அதிமுகவினர் சுருட்டும் வாய்ப்புள்ள கடைசி காலத்தில் இப்படி ஒரு முட்டுச் சந்து காவிரியால் வரவேண்டுமா என்றே கவலைப்படுகின்றனர்.

தி.மு.கவோ அனைத்துக் கட்சிகளோடு இணைந்து போராட்டம் நடத்த வேண்டும் என்று கூறியிருக்கிறது. தீர்மானமும் போட்டிருக்கிறது. சட்டமன்றத்தில் வெளியேறி சாலையில் ஓரிரு நிமிடங்கள் அமர்ந்து போராட்டம் நடத்தும் மு.க.ஸ்டாலின் உடனேயே போலீஸ் வந்து கைதாகச் சொன்னால் கைதாகி விடுகிறார். இத்தகைய அடையாளப் போராட்டங்களை தனியாக செய்தாலோ, இல்லை பல கட்சிகளை கூட்டாக சேர்ந்து செய்தாலோ என்ன நடந்து விடும்? மத்திய அரசை கேள்வி கேட்கின்ற, முடக்குகின்ற போராட்டங்களை விடுத்து தி.மு.கவும் வெளியே நிலவும் தமிழக மக்களின் எதிர்ப்புணர்விற்கு ஏதாவது செய்தாகவ வேண்டுமே என்று  கவலைப்படுகிறதே ஒழிய வாழ்வா, சாவா என்ற பார்வையோ, போராட்டமோ அறிவிப்போ இல்லை.

ஆங்கில ஊடகங்கள் வெளியிட்ட செய்தியின் படி தி.மு.க-வினர் மெரினா ஜல்லிக்கட்டுப் போராட்டம் போல தமிழகம் முழுவதும் தொடர் போராட்டம் நடத்த திட்டமிட்டிருக்கின்றனராம். மெரினாவில் போராடுவதற்கு தடை உள்ளதே என்று கேட்ட போது, அதனால் என்ன தி.மு.க தலைமை நிலையமான அறிவாலயத்தில் அமர்ந்தால் யார் என்ன  செய்ய முடியும் என ஒரு தி.மு.க தலைவர் கூறியதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேடு செய்தி வெளியிட்டிருக்கிறது. மோதிப் பார்க்க வேண்டிய இடத்தில், நேரத்தில் ஒதுங்கிப் போவதாக இருக்கிறது இந்த அறிவாலயத்தில் அமரும் ஆலோசனை!

காவிரிப் பிரச்சினையைப் பொறுத்த வரை தமிழக மக்களின் எதிர்த்தரப்பாக பா.ஜ.க, காங்கிரசு, அ.தி.மு.க மூன்று கட்சிகளும் ஓரணியில் நிற்கின்றன. தி.மு.க அந்த அணியில் இல்லை என்றாலும் அதை உரத்துச் சொல்ல வேண்டும் என்பதை “உடன் பிறப்புக்கள்” உணர வேண்டும். ஏனெனில் மோடி அரசின் நேரடி நடவடிக்கைகள் அனைத்தும் தமிழகத்தின் வாழ்வாதாரத்திற்கு சாவு மணி அடிக்கும் நேரத்தில் தி.மு.க விரும்பும் ஓட்டுக் கட்சி அரசியலுக்கே கூட அவர்கள் பா.ஜ.க-வை போர்க்குணமிக்க முறையில் எதிர்த்தாக வேண்டும். அதனால் மெரினாவில் தமிழக மக்கள் அணிதிரண்டு போராடுவார்கள், அதற்கு தி.மு.க உடன் நிற்கும் என்று அறிவிப்பதை விடுத்து அண்ணா அறிவாலயத்தில் ஒதுங்கினால் அது போராட்டமா திண்டாட்டமா என்பதை உடன் பிறப்புக்களே முடிவு செய்யட்டும்.

பா.ஜ.க-வைப் பொறுத்த வரை அவர்களுக்கு இங்கே ஒரு வார்டு கவுன்சிலருக்குரிய வாக்குகள் இல்லை என்றாலும், ஊடகங்களால் நோட்டாவை விட குறைவாக வாக்கு வாங்கும் கட்சியாக அறிவிக்கப்ட்டாலும் அனைத்து ஊடகங்களிலும் இவர்களே நிலைய வித்வான்களாக இருந்து கொடுமைகளை ஊதி வருகின்றனர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படுவதற்கு கெடு முடிந்த பிறகு தமிழக பாஜக தலைவர்கள் தொடர்பு எல்லைக்கு அப்பால் இருப்பதாக ஊடகங்கள் கூறுகின்றன. செல்போனை அணைத்து விட்டு அறைக்குள் முடங்கியிருக்கின்றனராம். ஏற்கனவே இவர்கள் மீது தமிழக மக்கள் கடும் வெறுப்பில் இருக்கும் போது காவிரி துரோகத்திற்காக இத்தனை நாள் போட்ட நாடகத்தை கூட தற்போதும் தொடர முடியவில்லை என்று அந்த வித்வான்கள் யோசிக்கின்றார்கள்.

இதில் ரவுடி வித்வானான எச். ராஜா மட்டும் வெளிப்படையாக கர்நாடக தேர்தலில் பா.ஜ.க வென்றால் மட்டுமே காவரி நீர் இங்கு வரும் என்று பகிரங்கமாக பேசியிருக்கிறார். இன்னும், நீட் பிரச்சினையில் உச்சநீதிமன்றத்தின் உத்திரவை ஏற்காத தமிழகம் காவிரியில் மட்டும் உச்சநீதிமன்றத்தின் உத்திரவை அமல்படுத்தக் கோருவது ஏன் என்றும் ’மடக்கி’யிருக்கிறார். இந்த திமிர்தான் பா.ஜ.கவின் இயல்பான முகம்.

நீட் பிரச்சினையிலோ இல்லை காவிரி பிரச்சினையிலோ தமிழகம் தனது உரிமைகளைத்தான் கோருகிறது. அநீதியாக தனக்கு அதிக பங்கு தரவேண்டும் என்று கோரவில்லை. காவிரி நடுவர் மன்றம் அளித்த இறுதி தீர்ப்பைவிட குறைவாகவே காவிரி நீர் பங்கை ஒதுக்கி உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தாலும், இறுதியில் மேலாண்மை வாரியத்தை அமைத்தாவது எங்களது குறைந்த பட்ச பங்கை தாருங்கள் என்றுதான் தமிழகம் கேட்கிறது. இதை எள்ளி நகையாடுவதற்கு எச்.ராஜாவிற்கு நிறைய பார்ப்பனக் கொழுப்பு இருக்க வேண்டும். ராஜாவைத் தவிர மற்றவர்கள் தொலைக்காட்சி விவாதத்தைக் கூட தவிர்க்கிறார்களாம். என்ன செய்ய? கெடு முடிந்த பிறகு மத்திய அரசு வாரியம் அமைக்கும் என்ற அந்தப் பொய்யை இனி அடித்துக் கூற முடியாதே!

தமிழக மக்களைப் பொறுத்த வரை இது வாழ்வா சாவா போராட்டம்! போராடுவோம்!

சந்தா