Monday, August 15, 2022
முகப்பு போலி ஜனநாயகம் நீதிமன்றம் காவிரி இறுதித் தீர்ப்பு: ஒருமைப்பாட்டைப் பிளக்கவிருக்கும் கோடரி!

காவிரி இறுதித் தீர்ப்பு: ஒருமைப்பாட்டைப் பிளக்கவிருக்கும் கோடரி!

-

“உச்ச நீதிமன்றத்தின் இறுதித்தீர்ப்பு தமிழகத்தின் தண்ணீர் அளவைக் குறைத்து விட்டது, மேலாண்மை வாரியம் குறித்து நேர்படக் கூறவில்லை, பற்றாக்குறை காலத்தில் தண்ணீர்ப் பகிர்வு குறித்து மவுனம் சாதிக்கிறது” – என்பன போன்ற விசயங்களெல்லாம் தீர்ப்பில் நமக்குப் பளிச்சென்று தெரிகின்ற அநீதிகள்.

இந்தியாவின் நதிநீர் வழக்குகளிலேயே இவ்வளவு அநீதியான தீர்ப்பு வந்ததில்லை என்பது ஒருபுறமிருக்க, இத்தீர்ப்பு மற்ற மாநிலங்களின் நதிநீர் சிக்கல்கள் மீது தோற்றுவிக்கக் கூடிய விளைவைப் பார்ப்போம்.

“மாநிலங்களுக்கு இடையிலான தண்ணீர்த் தாவாக்கள் சட்டம், 1956”-ன்படி, தீர்ப்பாயங்கள்தான் நதிநீர்ச் சிக்கல்களில் தீர்ப்பளிக்கும் இறுதி அதிகாரம் கொண்டவை. தீர்ப்பாயத்தின் முடிவின் மீது மேல்முறையீடு வந்தபோது, உச்ச நீதிமன்றம் அதனை மீண்டும் தீர்ப்பாயத்தின் பரிசீலனைக்கு விட்டிருக்க வேண்டும். காவிரி மேல்முறையீட்டினை உச்ச நீதிமன்றம் விசாரித்தது மட்டுமின்றி, இடைக்காலமாக பல தீர்ப்புகளை வழங்கியது. இப்போது தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பையே மாற்றியிருக்கிறது. இதனை முன்மாதிரியாகக் கொண்டு ஏற்கெனவே தீர்ப்பாயத்தினால் தீர்க்கப்பட்ட ஆற்றுநீர் தாவாக்களில் சம்மந்தப்பட்ட மாநிலங்களெல்லாம் அந்த தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீட்டுக்கு வரும். இனி தீர்ப்பாயங்களே பொருளற்றவையாகிவிடும்.

தமிழகத்தின் “பாரம்பரிய உரிமை” என்பதைப் புறக்கணித்து,  “நியாயமான பங்கீடு” என்ற அடிப்படையில் கர்நாடகத்திற்கு சலுகை வழங்கியிருக்கும் இந்த தீர்ப்பு, பல ஆற்றுநீர் தாவாக்களில் எதிரொலிக்கும். சுரங்கங்களையும் கனிம வளங்களையும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு கூறு போட்டு விற்று வருகிறது பாஜக-வின் சட்டிஸ்கர் அரசு. மகாநதியின் மேல்பகுதியில் இருக்கும் சட்டிஸ்கர், கீழ்ப் பகுதியில் ஒரிசாவின் சமவெளிப்பகுதி விவசாயத்துக்குப் போகும் நீரை, தனது மாநிலத்தின் கார்ப்பரேட் கனிம நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்குத் திருப்புகிறது. தனது விவசாயிகளைப் பாதிப்பதாகச் சொல்லி ஒரிசா இதனை எதிர்க்கிறது. சட்டிஸ்கர் மட்டுமல்ல, பல்வேறு ஆறுகளில் “மேல் பயன்பாட்டு உரிமை” கொண்ட மாநிலங்களான ம.பி, ஜார்கண்ட், இமாச்சல் பிரதேசம், சிக்கிம் போன்ற பல மாநிலங்களும் “புதிய பயனாளி“ என்ற முறையில் கர்நாடகத்துக்கு, காவிரித் தீர்ப்பு வழங்கியிருக்கும் இந்த சலுகையைத் தங்களுக்கும் வழங்கக் கோரும்.

ஆற்று நீர் பங்கீட்டில் நிலத்தடி நீரையும் சேர்த்திருக்கிறது இத்தீர்ப்பு. இந்த அநீதி, இந்தியாவில் மட்டுமல்ல, உலகில் வேறு எங்கும் நடந்ததில்லை. காவிரித் தீர்ப்பில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த தவறான முன்னுதாரணத்தைக் காட்டி, பல மாநிலங்களும் புதிதாக தமக்குள் சச்சரவைத் தொடங்கும். இது மட்டுமல்ல. ஆற்று நீர் பகிர்வில் நிலத்தடி நீரை சேர்த்ததன் மூலம் வரைமுறையற்ற நிலத்தடி நீர் கொள்ளைக்கு மறைமுகமாக உரிமம் வழங்கியிருக்கிறது இத்தீர்ப்பு. இத்தீர்ப்பினை அடிப்படையாகக் கொண்டு கார்ப்பரேட் நிறுவனங்களின் நிலத்தடி நீர்க் கொள்ளைக்கு மாநில அரசுகள் பச்சைக்கொடி காட்டும். சூழலியல் பேரழிவுதான் இதன் விளைவாக இருக்கும்.

கர்நாடகத்தின் மொத்த குடிநீர்த் தேவையில் பாதி பெங்களூருவுக்குப் போகிறது. பெங்களூரு பயன்படுத்தும் குடிதண்ணீரில் பாதி வீணடிக்கப்படுகிறது. மீதியில் பெரும்பகுதி மேட்டுக்குடியினரின் ஆடம்பரக் களியாட்டத்துக்குப் போகிறது. பெங்களூரு வெளியேற்றும் சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் தமிழகத்திற்கு காவிரி நீராக அனுப்பப் படுகிறது. இது தொடர்பாக கர்நாடக அரசின் ஆவணங்களை வைத்தே தமிழக அரசு கர்நாடகத்தின் மீது தொடுத்துள்ள வழக்கும் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. “நியாயமான பங்கீடு” என்ற கோட்பாட்டின் அடிப்படையில் பெங்களூருவுக்கு தண்ணீரை ஒதுக்கியிருக்கும் இந்த தீர்ப்பு,  மேற்கண்ட “அநியாயங்கள்” பற்றி மூச்சு விடவில்லை. நாடு முழுவதும் நகரமயமாக்கம் மென்மேலும் அதிகரித்து வருகின்ற சூழலில், நகர்ப்புற மேட்டுக்குடி வர்க்கத்தின் தேவையை முன்னிறுத்தி, எல்லா மாநிலங்களும் “நியாயமான” பங்கீட்டினைக் கோருவதற்கான அடிப்படையை “பெங்களூரு முன்னுதாரணம்” உருவாக்கியிருக்கிறது.

தண்ணீரைக் குடிக்கும் பெங்களூரு தீம் பார்க்குகள்

ஒரு ஆற்றின் படுகைக்கு வெளியில் இருக்கும் இடங்களுக்கு அந்த ஆற்றிலிருந்து நீர் ஒதுக்குவதை சர்வதேச விதிகள் ஏற்பதில்லை. ஆனால்  பெங்களூரு நகரின் 65 விழுக்காட்டுப் பகுதி காவிரிப்படுகைக்கு வெளியில் இருந்த போதிலும், அதற்கு நீர் ஒதுக்கியிருப்பதனால், பிற மாநிலங்களும் இதே வழியைப் பின்பற்றி, தத்தம் மாநிலத்தில் படுகைக்கு வெளியில் இருக்கும் நகரங்களின் நீர்த்தேவையும் கணக்கில் சேர்த்து புதிய புதிய நீர்த்தகராறுகளை உருவாக்குவதற்கான வழியை இத்தீர்ப்பு திறந்து விட்டிருக்கிறது.

ஆறுகளை “நாட்டின் பொதுச்சொத்துகள்” என்று குறிப்பிட்டிருப்பதன் மூலம், அரசமைப்பு சட்டப்படி, மாநிலங்களின் உரிமையாக உள்ள ஆறுகளை மத்திய அரசின் அதிகாரத்துக்கு கடத்தும் பணியை இத்தீர்ப்பு செய்திருக்கிறது. மாநிலங்களை பிரித்தாள்வதற்கும், ஆதிக்கம் செய்வதற்குமான ஆயுதமாக நதிநீர்ச் சிக்கல்களை இந்திய அரசு ஏற்கனவே பயன்படுத்தி வருகிறது. ஒற்றைத் தீர்ப்பாயம் என்ற அமைப்பின் மூலம் தேசிய இனங்கள் மற்றும் மாநிலங்கள் மீதான தனது அதிகாரத்தை நிலைநாட்டிக் கொள்வதற்கும் மோடி அரசு முயற்சிக்கிறது. டில்லியின் சர்வாதிகாரத்துக்கு கொல்லைப்புறக் கதவைத் திறந்து விட்டிருக்கிறது இத்தீர்ப்பு.

ஆறுகளை மாநிலப் பட்டியலிலிருந்து மத்தியப் பட்டியலுக்கு கடத்துவதன் மூலம் தண்ணீர் தனியார்மயக் கொள்கையை நாடு தழுவிய அளவில் திணிப்பதற்கான வாய்ப்பையும் இத்தீர்ப்பு ஏற்படுத்தித் தருகிறது. ஆற்று நீர் சிக்கல்களில் மாநில அரசுகள் குறுகிய பார்வையுடன் நடந்து கொள்வதாகவும், மத்திய அரசு நடுநிலையுடன் நடந்து கொள்ளும் என்றும் ஒரு மயக்கம் மக்களிடம் திட்டமிட்டே உருவாக்கப்பட்டிருக்கிறது. மாநிலங்களின் அதிகாரத்திலிருந்து ஆறுகள் பிடுங்கப்பட்டவுடனேயே தண்ணீரைத் தனியார்மயமாக்கும் நடவடிக்கைகளை டில்லி தீவிரப்படுத்தும். எந்த மாநிலத்தை சேர்ந்த விவசாயி ஆனாலும் “காசு கொடுத்தால்தான் பாசனத்தண்ணீர்” என்ற விதியின் அடிப்படையில் நாடு முழுவதும் “சமத்துவத்தை” நிலைநாட்டும் முயற்சி தொடங்கும். “சமத்துவம்” நிலைநாட்டப்பட்டுவிடும்.

தமிழக விவசாயிகளின் நெஞ்சின் மீது இறங்கியிருக்கும் இறுதித்தீர்ப்பு என்ற இந்தக் கோடரி, இந்தியா முழுவதும் ஆற்று நீர்த் தகராறுகளைத் தீவிரப்படுத்தும். சொல்லிக் கொள்ளப்படும் இந்திய ஒருமைப்பாட்டையும் பிளக்கத் தொடங்கும்.

புதிய ஜனநாயகம் – ஏப்ரல், 2018

  1. உச்ச நீதி மன்றத்தின் இந்த தீர்ப்பு கட்ட பஞ்சாயத்தைவிட மிக கேவலமானது. இந்த தீர்ப்பை எழுதுவதற்கு எந்த வித சட்டங்களும் குறைந்த அளவுக்கு கூட அறிவு பூர்வமாக பயன்படுத்தபட வில்லை…பெங்களூர் தேவைக்கான குடிநீர் கர்நாடகாவின் பங்கில் இருந்து தான் கொடுக்கபடவேண்டும் என்ற எளிய நியாயம் கூட பூணுல் நீதி பதிகளுக்கு தெரியாமல் இல்லை…இருபினும் அப்படி அநியாயமான தீர்ப்பு எழுதபட்ட மூல முதல் காரணம்… பெங்களுரில் இருக்கும் கார்பரேட் முதலைகளான விப்ரோ மற்றும் இன்போசிஸ் போன்றவர்களே ! காவேரி படுகை விவசாயம் சார்ந்த நிலபிரபுத்துவ சமுகத்தை அழித்து அதில் இருந்து துளிர்க்கும் இந்திய தரகு முதலாளித்துவம் இன்னும் இன்னும் நெடுவாசல் , மீத்தேன் என்று தன் கோர முகத்தை காவேரிபடுக்கைக்கு காட்டிக்கொண்டு தான் இருக்கும்…. அதற்கு இந்திய நீதி மன்றங்கள் மட்டும் அல்ல இந்திய பன்றி தொழுவமான பாராளுமன்றமும் விளக்கு பிடிக்கும்…

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க