Thursday, May 8, 2025
முகப்புதலைப்புச் செய்திபோலீசு ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வருவோம் - மக்கள் அதிகாரம்!

போலீசு ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வருவோம் – மக்கள் அதிகாரம்!

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் இரண்டு நாட்களாக மக்கள் மீது போலீசு நடத்திய துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து மக்கள் அதிகாரத்தின் பத்திரிகை செய்தி

-

மக்கள் அதிகாரம்
தஞ்சை மண்டலம்
எண் :1, அண்ணா நகர், சிவாஜிநகர் வழி, தஞ்சை -1

தேதி: 23.05.2018

பத்திரிக்கை செய்தி

தமிழக வரலாற்றில் இதுவரை இல்லாத பச்சைப் படுகொலையை  அரங்கேற்றியிருக்கிறது எடப்பாடி அரசு. இரத்தவெறி அடங்காத காவல்துறை இன்றும் துப்பாக்கி சூட்டை நடத்தி மேலும் ஒருவரை கொன்று வெறியாட்டம் போட்டுள்ளது. கடந்த 25 ஆண்டுகளாக தூத்துக்குடி மக்களின் உயிரோடு விளையாடி வரும் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி  நடந்த போராட்டங்கள் எதற்கும் செவிசாய்க்காமல் நாசகார ஆலையின் விரிவாக்கத்திற்கு துணைபோவதால் மக்கள் வேறு வழியின்றி போராட்டத்தைத் துவங்கினர்.

22-ம் தேதி ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கூடி ஆலையை மூட வலியுறுத்துவது என்பது மட்டுமே மக்களின் திட்டம். ஆலைக்கு ஆதரவான எல்லா நடவடிக்கைகளையும் மாவட்ட நிர்வாகம் எடுத்தது. போராட்டத்தை பிளவு படுத்தும் சதியிலும் இறங்கியது. 144 தடை உத்தரவு போட்டு முடக்க நினைத்த எண்ணம் ஈடேறவில்லை. வாழ்வா சாவா போராட்டத்தில் தூத்துக்குடியே திரண்டது. 22-ம் தேதி பகல் 12 மணிவரை அமைதியாக நடந்த ஊர்வலத்தை தடியடியால் கலைக்க முடியாத நிலையில் காட்டுமிராண்டித் தனமாக சுட்டுத்தள்ளியது.

மாவட்ட ஆட்சியர் தலைமறைவாகி மொத்த அதிகாரமும் கொலைகாரக் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. எடப்பாடி அரசு திட்டமிட்டு நடத்திய பச்சைப் படுகொலை இது. அமைதியாகப் போராடிய மக்கள் மீது பயங்கரவாதத்தை ஏவிவிட்டு மக்கள் வன்முறையில் இறங்கியதால்தான் தவிர்க்க முடியாமல் துப்பாக்கி சூடு என மாய்மாலம் செய்கிறது. இந்த படுகொலையை மக்கள் அதிகாரம் மிக வன்மையாக கண்டிக்கிறது.

எல்லா  விதிமுறைகளையும் காற்றில் பறக்கவிட்டு ராஜபக்சேவின் இனவெறி ராணுவம் போல் செயல்பட்டுள்ளது காவல்துறை. லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம், உடல்நலம் இவற்றை விட  ஸ்டெர்லைட் முதலாளியின் லாபம்தான் முக்கியம் எனச் செயல்படும் எடப்பாடி அரசு முற்றிலும் மக்கள் விரோத அரசாக சீர்குலைந்துவிட்டது. சற்றும் குற்ற உணர்ச்சியின்றி எகத்தாளமாக படுகொலையை நியாயப்படுத்துகின்றனர் அமைச்சர்கள்.

நியூட்ரினோ உள்ளிட்டு தமிழகத்தை நாசமாக்கும் மோடி அரசின் திட்டங்களை பட்டுக்கம்பளம் விரித்து வரவேற்று தமிழக மக்களுக்கு துரோகமிழைகிறது எடப்பாடி அரசு. அதிமுக பாஜக கூட்டணியின் துரோகத்தை முறியடிக்காமல் வாழ்க்கை இல்லை. காவல்துறைதான் தமிழக மக்களின் வாழ்க்கைக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல். எடப்பாடி அரசின் போலீஸ் ஆட்சிக்கு முடிவு கட்டியே தீரவேண்டும். அனைத்து மக்களும் ஓரணியில் திரளவேண்டும்.

  • எடப்பாடி அரசு உடனே ஸ்டெர்லைட் ஆலையை மூடவேண்டும்!
  • படுகொலை நிகழ்த்திய டிஜிபி உள்ளிட்ட அதிகாரிகள் கொலை வழக்கில் கைது செய்யப்பட வேண்டும்.
  • மக்களின் மீது போடப்பட்ட பொய் வழக்குகள் கைவிடப்பட்டு, சிறையிலிருப்போர் விடுதலை செய்யப்படவேண்டும்
  • பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உரிய நட்ட ஈடு வழங்கப்பட வேண்டும்
  • போலீஸ் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்.

இப்படிக்கு

க.காளியப்பன்