மக்கள் அதிகாரம் அமைப்பை முடக்கும் நோக்கத்தோடு அதன் உறுப்பினர்கள் மற்றும் முன்னணியாளர்கள் மீது தமிழக போலீசால் பல்வேறு பொய் வழக்குகள் போடப்பட்டு வருகின்றன. மக்கள் அதிகாரம் தோழர்கள் 6 பேர் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், கடந்த 11.06.2018 அன்று, மதுரையைச் சேர்ந்த மக்கள் அதிகாரம் தோழர்கள் சதீஷ், முருகேசன் ஆகிய இருவரையும் குற்ற எண் 299/18-ன் கீழ் சிப்காட் போலீசு வழக்கு பதிவு செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் காவலில் வைத்தது. அதே நாளில் மாலை 4.30 மணியளவில், குற்ற எண் 320 மற்றும் 321-ன் கீழ் அவர்கள் சிப்காட் போலீசால் சிறைக்குள்ளேயே கைது செய்யப்பட்டனர்.
மறுநாள் (12.06.2018), மொத்தம் 7 குற்ற எண்களின் கீழ் அவர்களைக் கைது செய்து சிறையிலேயே கைதுக்கான குறிப்பாணைகளை வழங்கியது போலீசு. இந்த கைது குறிப்பாணைகளுக்கான முதல் தகவலறிக்கைகளை போலீசு இணையதளத்தில் இன்னமும் வெளியிடப்படவில்லை.
இந்த முதல் தகவலறிக்கைகள், வேறு சில தோழர்களையும் குற்றங்களோடு இணைக்கும் வகையில் தயாரிக்கப்படலாம் என்ற சந்தேகம் எழுகிறது. இவற்றில் கும்பல் வன்முறை நடவடிக்கைகள், கலவரம் விளைவித்தல் போன்ற இட்டுக்கட்டப்பட்ட குற்றச்சாட்டுகள் இடம் பெறலாம் என்றும் சந்தேகம் எழுகிறது.
இந்தக் கைதுகள் மூலமும், மிரட்டல் மூலமும் மக்கள் அதிகாரத்தையோ, மக்களின் போராட்டங்களையோ ஒரு போதும் ஒடுக்கிவிட முடியாது.
தகவல்:
மக்கள் அதிகாரம்