privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புதலைப்புச் செய்திலாரி தொழிலை அழிக்கும் மோடி அரசு - நேர்காணல்

லாரி தொழிலை அழிக்கும் மோடி அரசு – நேர்காணல்

டோல் கேட்டில் தொடங்கி டீசல் விலை வரை தொடரும் கொள்ளை. லாரி வேலை நிறுத்தம் ஏன்? விவரிக்கிறார் தமிழ்நாடு டிப்பர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ரவிச்சந்திரன்.

-

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து நாடு முழுவதும் அகில இந்திய சரக்கு போக்குவரத்து வாகன உரிமையாளர்கள் சங்கம் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்ததையடுத்து லாரி உரிமையாளர்கள் 18-06-2018 முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நாடு முழுவதும் சுமார் 75 லட்சம் சரக்கு போக்குவரத்து லாரிகள் உள்ளன. தமிழகத்தில் மட்டும் சுமார் 5 லட்சம் லாரிகள் உள்ளன. 15 லட்சம் தொழிலாளர்கள் இருக்கின்றனர். இந்தியாவில் தரைவழிப் போக்குவரத்து துறையும் வேலைவாய்ப்பிலும் பொருளாதாரத்திலும் குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கிறது.   சேவை என்ற அடிப்படையிலும் பொதுமக்களின் அன்றாட தேவையான காய்கறிகள், பழங்கள், அரிசி உள்ளிட்ட உணவு பொருட்கள் மற்றும் காஸ், பெட்ரோல் உள்ளிட்ட பொருட்கள் இந்த லாரிகள் மூலம்தான் நாடு முழுவதும் கொண்டு செல்லப்படுகின்றன.

இந்நிலையில், சமீபகாலமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடுமையாக உயர்ந்து கொண்டிருப்பதால் லாரி வாடகை தொழில் பாதிக்கப்பட்டுள்ளதாக லாரி உரிமையாளர்கள் கடந்த பிப்ரவரி மாதம் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்பொழுது கோரிக்கை நிறைவேற்றப்படும் என அரசுதரப்பில் கொடுக்கப்பட்ட வெற்று வாக்குறுதியை நம்பி போராட்டத்தைக் கைவிட்டனர். இன்று வரை மத்திய மாநில அரசுகள் இவர்களது கோரிக்கைகளைக் கண்டுகொள்ளவில்லை.

திரு ரவிச்சந்திரன் (கோப்புப் படம்)

அதனையொட்டி, பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும், சுங்கச்சாவடியில் அதிக கட்டணம் வசூலிப்பதை கண்டித்தும் நேற்று (18.6.2018) முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் நடத்தப்போவதாக ”அகில இந்திய சரக்கு போக்குவரத்து வாகன உரிமையாளர்கள் சங்கத்தினர்” அறிவித்தனர். இதற்கு தமிழகம், கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநில லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் ஆதரவு தெரிவித்துள்ளனர். தமிழகத்தில், அகில இந்திய தரைவழி போக்குவரத்து வாகன உரிமையாளர்கள் சங்கம், தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் உள்ளிட்ட சங்கங்கள் இந்த வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்டிருக்கின்றன. இதனால் தமிழகத்தில் சுமார் 3 லட்சம் லாரிகள் ஓடாது என்று தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து, தமிழ்நாடு டிப்பர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ரவிச்சந்திரன், வினவு இணையதளத்துக்கு தொலைபேசி மூலம்  தெரிவித்தவை:

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்த போதும் எண்ணெய் நிறுவனங்களின் லாபம் குறைந்து விடக்கூடாது என்பதற்காக மோடி தலைமையிலான மத்திய அரசு, தினந்தோறும் விலை நிர்ணயம் செய்யும் முறையை கடந்தாண்டு ஜுன் 16 முதல் அமல்படுத்தியது. அதன் பிறகு தங்கள் விருப்பம் போல எண்ணை நிறுவனங்கள் விலையை உயர்த்தி வந்தன. அன்று ஒரு லிட்டர் டீசலின் விலை ரூ.58.32 எனவும், பெட்ரோல் விலை ரூ.68.13 எனவும் இருந்தது. ஓராண்டுக்குப் பிறகு கடந்த சனியன்று (16.06.2018) டீசல் விலை ரூ.71.25, பெட்ரோல் விலை ரூ.78.18 என உயர்த்தப் பட்டுள்ளது. சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் பேரலுக்கு 147 டாலராக விலை உயர்ந்த போதும்கூட டீசலுக்கு ரூ.64.50 ஆகவே இருந்தது. தற்போது கச்சா எண்ணெய் பேரலுக்கு 65.74 டாலராக குறைந்துள்ளது. ஆனாலும் டீசல் விலை ரூ.71.25 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் விளைவு தரைவழி போக்குவரத்து வாகன உரிமையாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

மோடி ஆட்சி பொறுப்பேற்ற இந்த 4 ஆண்டுகளில் எண்ணெய் விலை மளமளவென்று ஏறி உள்ளது. காங்கிரஸ் ஆட்சியின்போது ஆறு மாதத்திற்கு ஒரு முறையோ அல்லது மூன்று மாதத்திற்கு ஒரு முறையோ அல்லது 15 நாளுக்கு ஒருமுறைதான் விலையேற்றம் இருந்தது. அதில் பெரிய பாதிப்புகள் இல்லை. லாரியை பொறுத்தவரை வாடகை ஒப்பந்தம் மூலம் நடைபெறுகிறது. எந்த மாநிலங்களுக்கு சரக்கு கொண்டு செல்கிறோம். எவ்வளவு தூரம்,  சென்று-வரும் நாட்கள் இதனை எல்லாம் கணக்கில் கொண்டுதான் வாடகை ஒப்பந்தம் செய்வோம்.

உதாரணமாக டெல்லி சென்று வர ஆறு-ஏழு நாட்கள் வரை ஆகும். இந்த நாட்களை கணக்கில் கொண்டுதான் நாங்கள் ஒப்பந்தம் போடுவோம். இன்றைக்கு இருக்கக்கூடிய சூழலில் தினந்தோறும் விலை ஏற்றம் செய்தால் நாங்கள் எப்படி ஒப்பந்தம் போடுவது என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும். தினந்தோறும் விலையேற்றத்தின் காரணமாக ஒப்பந்தம் போடுவதற்கு பயமாக இருக்கிறது. காரணம் டீசல் விலையேற்றத்தின் காரணமாக எங்களுக்கு பெருமளவில் இழப்பு ஏற்படுகிறது அதாவது, நாங்கள் ஒரு விலை பேசி பணம் பெற்று விடுகிறோம். விலையேற்றத்தால் எங்களுடைய பணத்திலிருந்துதான் நாங்கள் டீசல் போட வேண்டிய அவல நிலை ஏற்படுகிறது.

எங்களுடைய வருவாயில் பெரும் அளவு டீசலுக்கு நாங்கள் செலவிட வேண்டியதாகின்றது. ஓட்டுனர் மற்றும் கிளீனருக்கு சம்பளம் கொடுக்க முடியவில்லை. மீதமிருக்கும் தொகையை கொண்டு நாங்கள் லாரிகளுக்கு வட்டி கட்டுவதை பார்ப்பதா? அல்லது குடும்பத்தை பார்ப்பதா? குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதா? என்று தெரியவில்லை. ஏற்கனவே லாரி தொழில் நலிவடைந்து வருகிறது. முக்கியமாக சொல்ல வேண்டும் என்றால், இத்தொழிலுக்கு 30 முதல் 40 சதவீதம் வரை ஊழியர்கள் பற்றாக்குறை அதிகரித்து வரும் இச்சூழலில் இது போன்ற விலை ஏற்றம் எங்களை திக்குமுக்காடச் செய்கிறது.

இரண்டாவது கோரிக்கையாக, பெட்ரோல் டீசலை ஜிஎஸ்டி வரிக்குள் கொண்டு வரவேண்டும்.  ஓரே இந்தியா ஒரே நாடு ஒரே வரி என்றெல்லாம் பேசிக் கொள்ளும் மத்திய அரசு, மற்ற அனைத்துப் பொருட்களையும் ஜிஎஸ்டி வரிக்குள் கொண்டு வரும்போது பெட்ரோல் டீசலை மட்டும் ஏன் கொண்டு வர மறுக்கிறது? அவ்வாறு கொண்டு வந்தால் தங்கள் லாபத்தை இழக்க நேரிடும் என்று அஞ்சுகிறது.  ஏற்கனவே உற்பத்தி வரியாக மத்திய அரசு 34 சதவீதமும்,  மாநில அரசு 18 சதவீதமும் பிடுங்கிக் கொழுக்கிறது.

பெட்ரோல் டீசலை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வர வேண்டியதாக இருந்தால் பெட்ரோல் விலை 30 ரூபாயும் டீசல் விலை 20 ரூபாயும் குறையும் என்பதால் அவ்வாறு செய்வதற்கு தயாராக இல்லை. இது முழுக்க முழுக்க எண்ணெய் நிறுவனங்களின் லாபத்திற்காக மத்திய அரசு செயல்பட்டு வருகிறது என்பது அப்பட்டமாகத் தெரிகிறது

மூன்றாவதாக, இந்தியா முழுவதும் 354 சங்கச் சாவடிகள் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இருபது சதவீதம் முதல் முப்பது சதவீதம் வரை கட்டணத்தை உயர்த்தி கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறது. மேலும் ஒவ்வொரு சுங்கச் சாவடியையும் கடந்து செல்ல அரைமணி நேரம் ஆகிறது. இதனால் எரிபொருள் வீணாகிறது. இதைப்பற்றி அரசு கண்டுகொள்வதில்லை. எரிபொருள் சிக்கனம் என்று விளம்பரம் செய்வதெல்லாம் வெறும் ஏமாற்று வேலையே என்றுதான் தோன்றுகிறது.

சுங்க கட்டணம் வசூலிப்பதில் காட்டும் ஆர்வம் முறையாக சாலைகளை பராமரிப்பதில் காட்டுவதில்லை. இதனால் ஆண்டுதோறும் விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அதுகுறித்து கொஞ்சமும் கவலை கொள்வதில்லை.

சுங்கச் சாவடியில் காத்திருக்கும் வாகனங்கள்

அதேபோல் இந்தியா முழுவதும் பல்வேறு சுங்க சாவடிகளின் டெண்டர் முடிந்த பிறகும் அவர்கள் அடாவடியாக கட்டணங்களை வசூலிக்கிறார்கள். உதாரணமாக தமிழகத்தை பொருத்தவரை செங்கல்பட்டு, போரூர் உள்ளிட்ட சுங்க சாவடியின் டெண்டர் முடிவடைந்து விட்டது. ஆனால் இன்னும் வசூலித்துக் கொண்டிருக்கிறார்கள். அதேபோல சுங்க சாவடியில் வாகனங்கள் 3 நிமிடங்களுக்கு மேல் நின்றால் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்ற விதி இருக்கிறது. அந்த விதியை சுங்கச்சாவடிகள் கடைபிடிப்பதே இல்லை. இதைப் போன்று பல சுங்கச்சாவடிகள் சட்டவிரோதமாக செயல்பட்டு வருகின்றன. எனவேதான் சுங்கச்சாவடிகளை ரத்து செய்ய வேண்டும். சாலை பராமரிப்பு உள்ளிட்ட செலவுகளுக்கு அரசே ஆண்டுக்கு ஒருமுறை குறிப்பிட்ட தொகையை கட்டணமாக நிர்ணயிக்க வேண்டும்.

தற்போது இன்சூரன்ஸ் நிறுவனங்களின் அடாவடி என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆண்டு ஒன்றுக்கு 40 ஆயிரம் முதல் புதிய மாடல் வண்டிகளுக்கு 90 ஆயிரம் வரை இன்சூரன்ஸ் கட்டணம் வசூலிக்கிறார்கள். ஆனால் விபத்து ஏற்பட்டால் பத்து லட்சத்துக்கான தொகையை மட்டும்தான் தருகிறார்கள். அதற்கு மேல் இருக்கும் பட்சத்தில் வாகன உரிமையாளர்கள் தான் பாதிக்கபட்ட நபர்களுக்கு கொடுக்க வேண்டும் என்கிறார்கள். கார்ப்பரேட் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் கொள்ளை லாபம் சம்பாதிக்க அரசும் அவர்களுக்கு துணை நிற்கிறது. ஏற்கனவே பல்வேறு சிரமங்களை நாங்கள் அனுபவித்து வரும் நிலையில் இது போன்ற புதிய புதிய பிரச்சனைகள் எங்களை அபாய நிலைக்கு தள்ளி வருகிறது.

இத்தொழிலை நம்பி லட்சக்கனக்கானோர் மறைமுகமாக வேலை வாய்ப்பை பெறுகின்றனர். குறிப்பாக வாகனங்களுக்கு பாடி கட்டும் தொழிலாளர்கள் லட்சக்கணக்கானவர்கள் இதனை நம்பித்தான் இருக்கிறார்கள். தொழிலில் ஏற்பட்ட நெருக்கடியின் காரணமாக திருச்செங்கோடு, நாமக்கல், ஈரோடு, சங்ககிரி போன்ற இடங்களில் அதிக அளவில் பாடி பில்டிங் தொழில் மூடப்பட்டு வேறு தொழிலுக்கு மாறிவிட்டார்கள். முக்கிய காரணம் இப்போதெல்லாம் வண்டி தயாரிக்கும் பெரிய நிறுவனங்களான ஈச்சர், வால்வோ, அசோக் லேலாண்ட், பாரத் ஆகிய நிறுவனங்களே பாடிகட்டி வெளியே அனுப்புகிறது.

இவ்வாறு தொடர்ச்சியாக தரைவழி போக்குவரத்திற்கான கட்டுப்பாடுகள், நெருக்கடிகள்தான் எங்களை போராட்டத்தை நோக்கித் தள்ளியுள்ளன. ”அழுத பிள்ளை தான் பால் குடிக்கும்” என்பார்கள். அதுதான் எங்கள் நிலை. எங்கள் கோரிக்கையை நிறைவேற்றும் வரை இந்தப் போராட்டம் தொடரும் என்றார்.

-வினவு செய்தியாளர்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க