முகப்புசெய்திதமிழ்நாடுபுதிய தலைமை நீதிபதி தஹில்ரமணிக்கு தமிழ்நாட்டைப் பற்றி தெரியுமா ?

புதிய தலைமை நீதிபதி தஹில்ரமணிக்கு தமிழ்நாட்டைப் பற்றி தெரியுமா ?

திருவள்ளுவர், தியாகராஜர், சர். சி.வி.ராமன், ராதாகிருஷ்ணன், ராஜாஜி, வெங்கட்ராமன், அப்துல் கலாம் போன்றவர்கள்தான் தமிழகத்தில் பாரம்பரியத்திற்கு அடையாளம் என்கிறார் புதிய தலைமை நீதிபதி தஹில்ரமணி! ஏன் ?

-

தஹல்ரமணி பதவியேற்பு

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக கமலேஷ் தஹில்ரமணி பதவியேற்றிருக்கிறார். சரி இதில் என்ன செய்தி என்கிறீர்களா? தமிழகத்திற்கு வரும் இந்த நீதிபதிக்கு தமிழகத்தை பற்றி என்ன தெரியும்? முதலில் அவரது சுய அறிமுக குறிப்புகளை பார்ப்போம். பிறந்த வருடம் 1958. மும்பை மற்றும் கோவா பார் கவுன்சிலில் பதிவு செய்த வருடம் 1982. கீழமை நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றியவர், தந்தையுடன் சேர்ந்து பல கிரிமினல் மற்றும் சிவில் வழக்குகளில் பணியாற்றியிருக்கிறார். மராட்டிய அரசு தரப்பு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டு பல வருடங்கள் பணியாற்றியுள்ளார்.

கூடுதல் அரசு வழக்கறிஞராக 1990-ம் ஆண்டில் நியமிக்கப்பட்டார். மும்பை உயர்நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞராக 1997-ம் ஆண்டு நியமிக்கப்பட்டார். கடந்த 2001-ம் ஆண்டில் மும்பை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமனம் பெற்றவர், பின்னர் அங்கே பொறுப்பு தலைமை நீதிபதியாக பணி உயர்த்தப்பட்டார். இந்திரா பானர்ஜிக்கு பிறகு சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பணியேற்கும் இரண்டாவது பெண் என்ற பெருமையையும் தஹில்ரமணி பெற்றுள்ளார். இவரை மோடி அரசுக்கு பிடித்தமான உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான கொலீஜியம் தெரிவு செய்து சென்னைக்கு அனுப்பியிருக்கிறது.

கவர்னர் மாளிகையில் பொறுப்பேற்றவர் மாலையில் உயர்நீதிமன்றத்திற்கு வந்து பார்வையிட்டார். நேற்று 13.08.2018 அன்று நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். மற்ற வழக்கறிஞர்கள் பாராட்டிற்கு பதில் அளித்து அவர் பேசியது என்ன?

கலாச்சாரம், மொழியில் தமிழகம் தனிச் சிறப்புடன் திகழ்வதாக கூறியவர், இப்படிப்பட்ட பாரம்பரிய பெருமையுடைய உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக பதவியேற்றதில் பெருமையடைவதாக கூறினார்.

இதெல்லாம் பொதுவில் வடக்கிருந்து வருபவர்கள் பேசும் டெம்பிளேட் உரைதான். அடுத்ததாக மேற்கண்ட தமிழக பெருமை – பாரம்பரியத்திற்கு சில சான்றோர்களைக் குறிப்பிடுகிறார்.

அவர்கள் யார்? “ திருவள்ளுவர், தியாகராஜர், சர். சி.வி.ராமன், ராதாகிருஷ்ணன், ராஜாஜி, வெங்கட்ராமன், அப்துல் கலாம் போன்ற சிறப்பு மிக்கவர்களை தமிழகம் தந்துள்ளதாக கூறிப்பிடுகிறார்.

இந்த பட்டியலைப் பாருங்கள்! திருவள்ளுவர் வேறு வழியின்றி பட்டியிலில் இடம் பெற்றுள்ளார். மனுநீதி வழி கீதைக்கும், மக்கள் வழி குறளுக்கும் உள்ள வேறுபாடு கூட அவர் அறிந்திருக்க மாட்டார். தியாகராஜர் என்று அவர் குறிப்பிடுவது அனேகமாக திருவையாறு தியாகய்யராகவே இருக்க வேண்டும். பிறகு அறிவியலுக்கு சர். சி.வி.ராமன். ராதாகிருஷ்ணன் இந்துத் தத்துவத்தை இந்திய தத்துவமாக புத்தகங்கள் பல எழுதியவர். ராஜாஜியோ குலக்கல்வி முதல் இந்தி திணிப்பு வரை புயலாக வேலை பார்த்த ஆச்சார பார்ப்பனர். வெங்கட்ராமனோ காங்கிரசில் செல்வாக்குடன் திகழ்ந்த மற்றுமொரு ஆச்சாரா பார்ப்பனர். பிறகு கீதை வாசித்து, வீணை இசைத்து வாழ்ந்து மறைந்த ‘நல்ல முசுலீமான’ அப்துல் கலாம்!

ஆக நமது புதிய தலைமை நீதிபதியின் பெருமை மிகு தமிழகப் பட்டியலே அவரது உள்ளக்கிடக்கையையும், தமிழகத்தைப் பற்றி அவர் அறிந்த விதத்தையும் எடுப்பாகக் காட்டிவிடுகிறது.

மேற்கண்டவர்களில் கட்சி சார்பு பார்ப்பனர்களெல்லாம் இருப்பதால் இந்த பட்டியல் அரசியலுக்கு அப்பாற்பட்டது என்று சொல்ல முடியாது. பாரதியார், உ.வே.சு.ஐயர் போன்றோரெல்லாம் இந்தப் பட்டியிலில் வரக் கூடியவர்கள்தான். ஆனால் திராவிட இயக்கம், பெரியார் போன்றோர் ஏன் வரவில்லை? மகாராஷ்டிரத்தைச் சேர்ந்தவர் என்பதால் அம்பேத்காரைத் தெரியாமல் இருக்க முடியாது. அம்பேத்கரும் பெரியாரும் சந்தித்திருக்கிறார்கள் என்ற அளவில் கூட பெரியாரைத் தெரியவில்லை! அல்லது தெரிந்ததாகக் காட்டிக் கொள்ளவில்லை. இன்னும் கீழத்தஞ்சையில் பண்ணை ஆதிக்கத்திற்கு எதிராக நிலமற்ற விவசாயிகளை அணிதிரட்டிய பொதுவுடமை இயக்கம், செக்கிழுத்த வ.வு.சி, பார்ப்பனியம் மறுத்த வள்ளலார், வைகுண்டநாதர் என்று எவரையும் தெரியாது.

இல்லை சட்டம் என்று பார்த்தால் கூட இந்தியாவிலேயே சாதி மறுப்பு மணங்களை அங்கீகரிக்கும் சுயமரியாதை திருமணச் சட்டம், அனைத்து சாதி அர்ச்சகர் சட்டம் போன்றவற்றின் வரலாறுகளும் கூட நிச்சயம் தெரிந்திருக்காது.

இன்னும் தமிழகத்தின் மதச்சார்பின்மையைக் குறிக்கும் சங்க கால வரலாறு முதல் திராவிட இயக்க காலம் வரைக்கும் பார்ப்பனிய ஆதிக்கத்திற்கு எதிராக தொடர்வதே தமிழகம் என்ற வரலாறும் தெரியாது.

இதற்கு மேல் தமிழகத்தின் புவியியல், சாதிய கட்டுமானம், அரசியல் கட்சிகள் வரலாறு, இலக்கியம், பண்பாடு, தலித் மக்களின் பிரச்சினை, பெண்களது பிரச்சினை, இப்படி எதுவும் தெரியாமல் ஒரு நீதிபதி இங்கே வந்து தலைமை நீதிபதியாக தமிழக மக்களின் வழக்குகளுக்கு தீர்ப்பளிக்கப் போகிறார்! பிறகு அவருக்கு தமிழும் தெரியாது. இந்தியும், ஆங்கிலமும், மராட்டியமும் அறிந்த ஒருவரோடு தமிழக மக்கள் யாரும் தமிழில் பேசவும் முடியாது.

வடக்கிருந்து ஒருவர் இங்கே வருகிறார் என்றால் அவர்களுக்கு மதராசிக்காரர்கள் இட்லி-தோசை-சாம்பார் சாப்பிடுவார்கள், புகழ்பெற்ற கோவில்கள் உள்ளன, சேலை கட்டுவார்கள், பஞ்சரத்ன கீர்த்தனை விழா, மயிலப்பூர், திருவல்லிக்கேணி, தஞ்சாவூர் கோவில்கள் மற்றும் தமிழகத்தைப் பற்றி அறிந்தவர்கள் துக்ளக் சோ, குருமூர்த்தி, சுகாசினி மணிரத்தினம், கமல்ஹாசன், சுமன் சி ராமன், பானு கோம்ஸ்…….. இதுதான் இவர்கள் அறிந்த தமிழகம்.

சென்னையில் தடுக்கி விழுந்தால் மாட்டுக்கறி உணவுக் கடைகள் ஆயிரக்கணக்கில் இருந்த போதும், இல்லை மதுரை போன்ற இதர தமிழகத்தில் ஆட்டுக்கறியே சிறப்பு உணவாக இருக்கும் போதும் இவர்கள் இன்னும் இட்லி தோசையையோ இல்லை சோ, குருமூர்த்தி வகையறாக்களையோதான் தமிழகத்தின் அடையாளமாய் கொண்டாடுகிறார்கள் என்றால் என்ன சொல்ல?

இந்த அரசமைப்பு, நீதியமைப்பு மக்களுக்கானதாக இல்லை என்பதை இதிலிருந்தும் உறுதி செய்து கொள்ளலாம். தமிழகத்தில் பல்வேறு உரிமைகளுக்காகவும், அரசுகளின் கொள்கைகளை எதிர்த்தும் போராடும் மக்களை இந்த புதிய தலைமை நீதிபதி எப்படி பார்ப்பார் என்பதை இதற்கு மேலும் விளக்க வேண்டுமா என்ன?

 

  1. வருங்காலம்மும் போராட்ட மயமாகத்தான் இருக்கும் என்பதற்கு உயர்நீதிமன்ற தலைமை பற்றிய இந்த மதிப்பீடே ‘கட்டியம்’ கூறுகிறது.

  2. தமிழ் நாட்டில் இருந்து வெளியே போய் பல சாதனைகளை செய்து புகழ் அடைபவர்களில் பெரும்பாலானோர் பிராமணர்களே. ஆகையால் அவர்களை வைத்து தான் உலகம் தமிழ்நாட்டை மதிப்பிடுகிறது. இதில் என்ன தவறு இருக்கிறது? இங்கு சமச்சீர் கல்வி மாதிரியான அரைகுறை திட்டங்களை வைத்துக்கொண்டு இஷ்டத்துக்கு மார்க் அள்ளி போட்டு கொண்டு அத்தனை பித்தலாட்டங்களையும் கல்வித்துறையில் நடத்திக் கொண்டிருந்தால் இப்படித்தான் நடக்கும். சமூக நீதி என்னும் பெயரில் தமிழ்நாட்டு மக்களை குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டவும் கிணற்றுத் தவளைகளாக இருக்கவும் செய்தது திராவிட கட்சிகளின் சாதனை.

  3. Mr Periyasamy,In this digital age ,you dared to say that all those people who went abroad and attained fame are only Brahmins.I pity you for your ignorance.Much water has flown under the bridge.Wake up and see the reality.I think you are stuck up somewhere .Or you are not for social justice and students from villages coming up in life.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க