Tuesday, October 15, 2024
முகப்புஉலகம்ஆசியாநேபாளத்தில் திருடப்படும் புத்தர் சிலைகள் - படக்கட்டுரை

நேபாளத்தில் திருடப்படும் புத்தர் சிலைகள் – படக்கட்டுரை

இந்தியா போலவே நேபாளிலும் கடவுளர்கள் களவாடப்படுகின்றனர். கடந்த 30 ஆண்டுகளில் மட்டும் பல்லாயிரக்கணக்கான தொல்பொருட்கள் கொள்ளையர்களால் திருடப்பட்டுள்ளன. அல்ஜசிராவின் புகைப்படக் கட்டுரை

-

நேபாளம், முஸ்டாங்கைச் சேர்ந்த வறண்ட மற்றும் தனித்த மலைத்தொடர்கள் வெளி உலகின் பார்வையிலிருந்து தொலைதூரத்தில் உள்ளன.  இமயமலையின் மிக உயரமான இப்பகுதிக்கு செல்ல கடினமான வண்டிகள் மட்டுமே செல்லக்கூடிய கரடுமுரடான பாதை மட்டுமே உள்ளது.  ஆனால் யாரையும் எளிதில் வரவேற்காத கடுமையான இப்பகுதி அரிய கலைப்பொருட்களை கொள்ளையர்கள் திருடுவதிலிருந்து தடுக்கப் படுவதில்லை.

உலகளாவிய கலைப்பொருட்கள் சந்தையில் இமயமலையில் உள்ள தெய்வங்களின் சிலைகள் பல கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பு கொண்டவை. ஆனால் நேபாள மக்களைப் பொறுத்த வரையில் உயிருள்ளதாக கருதப்படும் அந்த தெய்வங்கள் அவர்களது சமூகத்திடமிருந்து களவாடப்படுகின்றன.

நேபாளத்தில், 1980–ம் ஆண்டிலிருந்து பல்லாயிரக்கணக்கான தொல்பொருட்கள் கொள்ளையர்களால் களவாடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கணக்கிடுகின்றனர். அவற்றில் சில கலைப்பொருட்கள் சட்டரீதியாக விற்கப்பட்டிருந்தாலும் பெரும்பாலானவை கொள்ளையடிக்கப்பட்டு ஆண்டுக்கு 56 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான நிழற்சந்தையில் விற்கப்படுகின்றன.

நேபாளிலுள்ள லோ மந்தாங்கில்(Lo Manthang) உள்ள பண்டைய மடாலயத்தில் புத்த பிக்குகள் வழிபாட்டு சடங்கை நடத்துகின்றனர். 14 -ஆம் நூற்றாண்டு முதல் இந்த இமயமலைப்பகுதியில் திபெத்திய புத்த மதச்சடங்குகள் மாறாமல் அப்படியே கடைபிடிக்கப்பட்டு வருகின்றது. எனினும், சமீபத்திய சிலைத் திருட்டுகள் அவர்களது பண்டைய வாழ்க்கை முறை மற்றும் சமயச் சடங்குகளுக்கு அச்சுறுத்தலாக உள்ளன.

முஸ்டாங்கில் உள்ள நாமைகல்(Namygal) மடாலயத்தைச் சேர்ந்த செப்பு தாது கோபுரம் (copper stupa) ஒன்றில் மறைக்கப்பட்டிருக்கும் நேர்த்தியாக வடிக்கப்பட்ட கடவுளர் சிலைகளை காட்டுகிறார் துறவி ஒருவர். இவ்வகையிலான அரிய சிலைகள் திருடர்களால் தீவிரமாகத் தேடப்பட்டு வருவதால் அவற்றை பாதுகாப்பாக வைத்திருப்பதற்கான கட்டாயச்சூழல் மடாலயத்திற்கு ஏற்பட்டுள்ளது.

முஸ்டாங்கில் குன்றொன்றின் மீது கட்டப்பட்ட ஒரு மடாலயக்கூடத்தில் கைவிடப்பட்ட பண்டைய கவசமொன்றை டாஷி பிஸ்டா (Tashi Bista) ஆய்வு செய்கிறார். அரிய பழங்கால கலைப்பொருட்கள் அப்பகுதியிலிருந்து திருடப்படுவதைத் தடுக்க முஸ்டாங் உள்ளூர்வாசியான அவர் பல்லாண்டுகளாக போராடி வருகிறார். 14 -ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கேடயங்கள் மற்றும் உடற்கவசம் அருகே அந்த கவசம் இங்கே படத்தில் காணப்படுகிறது.

முஸ்டாங்கிலிள்ள பழங்கால மடாலயமொன்றில் மறைவான அறையில் வைக்கப்பட்டிருக்கும் இந்த ஆளுயர தர்மபாலர்களை (Dharmapalas) சூரிய ஒளி வெளிச்சப்படுத்திக் காட்டுகிறது. இப்பாதுகாப்பு தெய்வங்கள் மடாலயங்களையும், அவற்றைச் சுற்றி வசிப்பவர்களையும் தீங்குகளிடமிருந்து பாதுகாக்க உருவாக்கப்பட்டவை. இருப்பினும், வழிபாட்டுத்தலங்களிலுள்ள பல சிலைகளை கொள்ளையர்கள் திருடிச் செல்வதால் சிலைகள் தங்களை தாங்களே காத்துக் கொள்ள துறவிகள் வேண்டுகின்றனர்.

சாம்டாலிங்கை (Samdaling) சேர்ந்த பண்டைய தாது கோபுரங்களின் சுவர்களில் உள்ள ஓட்டைகளை பாறைகள் மூடியிருக்கின்றன. புத்த வழிபட்டாளர்களால் வைக்கப்பட்ட புத்த சிலைகளை திருடுவதற்காக இந்த சுவர்களை கொள்ளையர்கள் உடைத்திருக்கின்றனர். உலகலாவிய நிழற்சந்தையில் இச்சிலைகளை கோடிக்கணக்கான ரூபாய்க்கு விற்க முடியும்.

சாம்டாலிங்கில்(Samdaling) திருடர்களால் உடைக்கப்பட்ட ஒரு தாது கோபுரத்தில் களிமண் வழிபாட்டு வார்ப்புகளும், 14 ஆம் நூற்றாண்டை சேர்ந்த தொன்மையான ஆடைகளும் இன்னும் மிச்சம் இருக்கின்றன. எந்த கலைப்பொருட்களும் அங்கு இருந்திருக்கவில்லை என்றாலும் உலகளாவிய நிழற்சந்தையில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புடைய புத்தரின் செம்பு மற்றும் வெண்கலச் சிலைகள் இந்த தாது கோபுரங்களில் இருப்பதாக நம்பப்படுகிறது.

முஸ்டாங், லு மந்தாங்கை (Lo Manthang) சேர்ந்த இளம் பிக்குகள் ஒரு வழிபாட்டு நடைமுறையை பின்பற்ற முயல்கின்றனர். தொடர்ந்து வழிப்பாட்டு இடங்களிலிருந்து ஏராளமான சிலைகள் களவாடப்படும் நிலையில், புத்தமும், இமயத்தின் தொலைதூர பகுதிகளின் பழங்கால வாழ்க்கை முறையும் பாதிக்கப்படுவதாக குறிப்பாக இளம் தலைமுறையினர் தங்கள் மூதாதையர்கள் வழிபட்ட பல சிலைகள் இல்லாமல் வளர்ந்து வருவதாக பலர் அச்சமடைகின்றனர்.

முஸ்டாங் மலைத்தொடரொன்றில் புத்த பிக்குகள் வழிபாடு செய்கின்றனர். இத்தொலைதூர பகுதிகளில் உள்ள மடாலயங்களில் சிலைத் திருட்டு எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் தங்கள் தெய்வங்களின் பாதுகாப்பிணை அதிகரிக்க துறவிகள் வழிபாடு செய்கின்றனர்.

காத்மண்டுவிலுள்ள மூன்று தொல்பொருள்கள் அங்காடிகளில் மே மாதத்தில் நடத்தப்பட்ட ஆய்வின் போது மீட்கப்பட்ட 100 சிலைகளை ஒரு செய்தியாளர் சந்திப்பில் அதிகாரிகள் காட்டுகின்றனர். ஆசிய மற்றும் பசிபிக் பகுதிகள் பற்றிய நடப்பு நிகழ்ச்சிகளுக்கான அல் ஜசீராவின் வார தொலைகாட்சி நிகழ்ச்சி “101  கிழக்கு” புலனாய்வு செய்து கொடுத்த தகவலின் பேரால் முறைகேடான அரிய பொருட்கள் விற்பனைகள் பற்றிய அந்த ஆய்வு செய்யப்பட்டது.

நேபாளத்தின் முஸ்டாங் பள்ளத்தாக்கிற்குள் செங்குத்தான பாறையொன்றின் மீது கட்டப்பட்ட பண்டைய மடாலயமொன்றிற்கு வருகை தரும் பார்வையாளர்களை பயங்கரமான இந்த சிலைகள் எதிர்கொள்கின்றன. ஆனால் திபெத்திய மக்களால் தெய்வங்கள் என நம்பப்படும் சிலைகளை கொள்ளையர்கள் உடைப்பதிலிருந்தோ திருடுவதிலிருந்தோ அச்சுறுத்தும் இந்த அடையாளங்கள் கிஞ்சித்தும் தடுப்பதில்லை.

திருடர்களைத் தடுப்பதற்காக கடவுளரின் முகங்கள் மீது வண்ணம் பூசும் முயற்சியில் ஈடுபடுகின்றனர் நேபாளத்தின் நம்கியால்(Namgyal) மடாலயத்தை சேர்ந்த பிக்குகள். உலக கலைப்பொருள் வணிகர்களால் செப்பு மற்றும் வெண்கல சிலைகள் மிகுந்த ஆவலுடன் தேடப்படுகின்றன. வழிப்பாட்டுத் தலங்களில் உள்ள சிலைகளைத் திருடுவதற்கு கொள்ளையர்களை பல நேரங்களில் அவர்கள் பயன்படுத்துகின்றனர்.

நேபாளத்தின் லோ மந்தாங்கில்(Lo Manthang) உள்ள புத்த மடாலயமொன்றில் தூய்மையான பொன்னால் பொறிக்கப்பட்ட பண்டைய கையெழுத்துப்படியான டாஷி பிஸ்டாவை(Tashi Bista) காட்டுகிறார் புத்த துறவியான சிமி குறுங்(Chime Gurung). ஒரு தாது கோபுரத்திலிருந்து அதன் சகோதரி புத்தகம் திருடப்பட்டதாக நம்பப்படுகிறது. இந்த கையெழுத்துப்படி மட்டுமே பாதுகாக்கப்பட்டது.

  • வினவு செய்திப் பிரிவு

நன்றி : அல்ஜசீரா Nepal’s stolen gods புகைப்படக் கட்டுரையின் தமிழாக்கம்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க