முகப்புபார்வைஃபேஸ்புக் பார்வைகருணாநிதி – எனது சென்னை அனுபவம் - சந்தானு சென்குப்தா

கருணாநிதி – எனது சென்னை அனுபவம் – சந்தானு சென்குப்தா

ஒரு சராசரி வட இந்தியனுடைய கிண்டலடிக்கும் குணம் மு.கருணாநிதி அவர்களைப் பகடி செய்வதில் வெளிப்படுவதை விட வேறு எதிலும் வெளிப்படாது. அவனால் எதைப் புரிந்து கொள்ள முடியவில்லையோ அதனை பகடி செய்கிறான்.

-

கருணாநிதிஎனது சென்னை அனுபவம்

சென்னைக்கு பணியிடமாற்றம் செய்யப்படுவதென்பது ’அந்தமான் செல்லுலர் சிறையில் ஒரு பெரும் விடுமுறையைக் கழிப்பதற்குச் சமம்’ என்று விந்திய மலைகளுக்கு வடக்கே உள்ள எனது நண்பர்களால் எப்போதுமே அறிவுறுத்தப்பட்டுவந்தேன்.

சந்தானு சென்குப்தா

தங்களது மொழியைப் பேசாத – வெறுமனே தமிழ் மட்டுமே பேசக்கூடிய – தங்களது மொழியின் ஒரு வார்த்தையைக் கூட அறியாத, தங்களுக்கு அன்னியமான உணவுகளை எடுத்துக் கொள்கிற, மிகக்குறைவாகவே கலந்து பழகுகின்ற நபர்கள் இருக்கக்கூடிய பகுதி என்பது கண்டிப்பாக அன்னியமானதாகவும், நம்பிக்கையற்றதாகவுமே இருக்கும்.

நல்வாய்ப்பாக, சென்னையில் சுமார் ஒன்றரை ஆண்டுகள் செலவழிப்பதற்கான ஒரு சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்தது. அந்த வட இந்திய நண்பர்கள் கூறியது எவ்வளவு தவறு என்பது அப்போது எனக்குப் புரிந்தது.

சென்னையில் எனக்குக் கிடைத்த புலால் உணவானது வேறு எங்கும் நான் பெற்றதைக் காட்டிலும் சிறப்பானது. அடையாறு கடற்கரையிலிருந்த எனது தங்குமிடத்திலிருந்து தினமும் சென்றுவரும் போது, சப்புகொட்டச் செய்யும் செட்டிநாடு உணவிலிருந்து தெருவோரக் கடைகளில் ஆவி பறக்க வழங்கப்படும் மாட்டுக்கறி பிரியாணி, பொன்னுசாமி ஹோட்டலில் கிடைக்கும் கறி விருந்து மற்றும் சாராவின் ஸ்பானிய உணவுக் கடை (டபாஸ்) வரை சென்னையின் புலால் உணவு என்னைக் கொள்ளை கொண்டது.

உணவு சரி… மக்கள் ? ஆம், இந்தியின் மீது அவர்களுக்கு பெரும் மதிப்பு ஏதும் கிடையாது. அவர்களுக்கு ஏன் மதிப்பு இருக்க வேண்டும்? அது அவர்களுக்கு ஆங்கிலத்தை விட அந்நியமானது. இங்கு அனைத்து இடங்களிலும் ஆங்கிலம் ஈர்க்கக்கூடிய வகையில் செயல்படுகிறது.

ஆட்டோ ஓட்டுனர்கள் வரையிலும் கூட, வாரி இறைக்கப்பட்ட குறிச்சொற்களால் ஆன உடைந்த ஆங்கிலத்தில் பேசினாலும்கூட அவர்களால் புரிந்து கொள்ள முடிகிறது. அதனைத் தமது முகக்குறியில் காட்டிவிட்டு புன்னகைக்கின்றனர். அங்கு உண்மையான, நெருங்கிய, இதமான, விருந்தோம்பும் நண்பர்களை பெற்றேன். சென்னையை விட்டு வெளியேறும்போது கனத்த இதயத்துடனேயே விடைபெற்றேன்.

ம்.. இட்லியும், தோசையும் கூட அருமையாக இருந்தன. ஒரு தமிழர் உங்களை நண்பராக ஏற்றுக் கொள்ளும்போது, அவர் எப்போதாவது இந்திப் பிரதேசத்திலும் துணிந்து பிரவேசிப்பார்.

ஒரு சராசரி வட இந்தியனுடைய கிண்டலடிக்கும் குணம் மு.கருணாநிதி அவர்களைப் பகடி செய்வதில் வெளிப்படுவதை விட வேறு எதிலும் வெளிப்படாது. அவனைப் பொறுத்தவரையில் சக்கர நாற்காலியில் கருப்புக் கண்ணாடி போட்டுக் கொண்டு, இந்தியோ அல்லது ஆங்கிலமோ கூட தெரியாமல் இருக்கும் 80 வயதுக்கும் மேற்பட்ட வயோதிகர் ஒருவர் எவ்வாறு பல பத்தாண்டுகளாக தமிழக மக்களின் உள்ளம் கவர்ந்தவராக இருக்க முடியும் என்பது புரிந்துகொள்ள முடியாத ஒன்று.

இந்த மதராசிகளிடம் ஏதோ பிரச்சினை இருக்கிறது. (தென் இந்தியர்கள் – மதராசிகள் குறித்த மற்றுமொரு மிகச்சிறந்த வட இந்திய உதாரணம் இது). அவனால் எதைப் புரிந்து கொள்ள முடியவில்லையோ அதனை கிண்டல், பகடி செய்து கொள்கிறான்.

நான் கண்ட வகையில் தமிழக அரசியல் கவனத்தை ஈர்க்கக் கூடியது. எனது சிறு வயது முதல் நான் தேர்தல்களை அக்கறையோடு கவனித்து வருகிறேன். இரண்டு திராவிட கட்சிகளில் (திமுக, அதிமுக) ஏதேனும் ஒரு கட்சி மொத்தமாக ஓட்டுகளை வாரி ஜெயித்துவிடும் என்பது உறுதி. இந்த விசயத்தில் தமிழ்நாடு தனித்துவமானது. இந்தியாவிலேயே முக்கியமான தேசியக் கட்சிகள் ஒரு பொருட்டற்றவைகளாக, கிட்டத்தட்ட அவை இல்லவே இல்லாததான ஒரு மிகப்பெரிய மாநிலம் தமிழ்நாடு மட்டும்தான்.

நான் வளர்ந்ததும், தமிழகத்தின் மொழி இயக்கத்தைப் பற்றியும் தமிழர்கள் தங்கள் அடையாளம், மொழி, கலாச்சாரம் ஆகியவற்றின் மீது கொண்டிருக்கும் ஆழமான காதல் மற்றும் கட்டுக்கடங்கா உணர்வெழுச்சி குறித்தும், எவ்வளவு மூர்க்கமாக அவர்கள் அதனைக் காத்தனர் என்பது குறித்தும் படித்திருக்கிறேன்.

தங்களது மொழியின் மீது ஆழமான பற்று கொண்ட மக்களின் மத்தியிலிருந்து வந்திருக்கக் கூடிய யாராக இருந்தாலும், அவர்களுக்கு தமிழர்களின் இந்த மனநிலையை புரிந்து கொள்வதும், தமிழர்களுக்கு மரியாதை செலுத்துவதும் எளிது.

இந்தித் திணிப்பை எதிர்த்து தமிழக மாணவர்களும் இளைஞர்களும் நடத்திய மொழிப் போர். (கோப்புப் படம்)

தமது ஒரே மொழி, தமது சகிப்புத்தன்மையற்ற கலாச்சாரம், தமது ஆழமான முன்முடிவுகள், சாதிய நம்பிக்கைகள் மற்றும் தமது மதவெறி ஆகியவற்றால் ஒட்டுமொத்த நாட்டையே பீடிக்கச் செய்யும் தெளிவான நிகழ்ச்சிநிரலைக் கொண்ட சாதிய வெறிக் கும்பலின் சர்வாதிகாரிக்கும் அதிகாரத்திற்கும் அடிபணிவது அல்ல தேசபக்தி.

உண்மையில் தேசபக்தி கொண்ட ஒரு சுதந்திர நாட்டில், ஒவ்வொரு தனிநபரும் சமமானவர்களே. ஒருவர் எங்கிருந்து வந்தார், எந்த மதத்தை பின்பற்றுகிறார், என்ன மொழி பேசுகிறார் என்பதெல்லாம் ஒரு பொருட்டானவையே அல்ல. குறுகிய நம்பிக்கைகளையும், வழக்கங்களையும் ஒட்டுமொத்த நாட்டின் தொண்டைக் குழிக்குள் திணிப்பது என்பது ”வேற்றுமையில் ஒற்றுமை”, ”ஒவ்வொரு சக இந்தியனுக்கும் மரியாதை” என்ற இந்தியாவின் அடிப்படைக் கொள்கைகளுக்கு எதிரானது. அச்செயலைக் காட்டிலும் தேச துரோகமான செயல் வேறெதுவும் இல்லை.

மைய தேசிய வெறியர்களை வெகுகாலத்திற்கு முன்பே வெளியேற்றிவிட்டதில், மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாகத் திகழ்கின்றனர் தமிழர்கள். மைய தேசிய வெறியர்களால் நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் தற்போது ஏற்பட்டிருக்கும் அபாயகரமான சூழலைக் கண்டு இப்போதுதான் பிற மாநிலங்கள் விழித்திருக்கின்றன.

ஒரே உண்மையான கடவுள், ஒரே உண்மையான மொழி, ஒரே உண்மையான கலாச்சாரம் ஆகியவற்றிற்கு ஒத்துவராத மாநிலங்களில் மிகப்பெரும் அளவிலான பணபலமும், அடியாள் பலமும் கொண்டு தமது கருத்தை புகுத்தி பல்வேறு நிறங்களைக் கொண்ட தளமாக விளங்கும் இந்த நாட்டை ஒரே நிறமாக மாற்றும் வேலையில் தேசிய வெறியர்கள் ஈடுபட்டிருக்கிறார்கள்.

மதக் கோட்பாடுகளுக்கு மேலாக, மனித மகிழ்ச்சியையே மதிப்புமிக்கதாகக் கருதிய ஊரறிந்த கடவுள் மறுப்பாளரான கலைஞர், பலதலைப் பாம்பான சாதிய அமைப்பிற்கு எதிராக சமரசமின்றி போராடினார். அவர் வேறெவரையும் விட அதிகமாக தமிழுணர்வை அறிவுறுத்தியவர். இந்தி மேலாதிக்கத்தை எதிர்ப்பதில் முக்கியப் பங்காற்றிய கலைஞர்தான், பிற எல்லா மாநிலங்களையும் விட தமிழகம் மனித வளர்ச்சிக் குறியீட்டில் முன்னிலையிலிருந்து, மாதிரி மாநிலமாகத் (Model Indian State) திகழ்வதற்குக் காரணமானவர்.

தமிழகம் அவருக்கு நன்றி தெரிவிக்கிறது. அதே போல் இந்தியாவும்.

உங்களுக்கு எனது மரியாதைகள் ஐயா.

  • சந்தானு சென்குப்தா

ஆகஸ்ட் 8 – இரவு 8:51 மணி

நன்றி : சந்தானு சென்குப்தா அவர்களின் முகநூல் பக்கத்தில் இருந்து தமிழாக்கம் செய்யப்பட்ட கட்டுரை.

– வினவு செய்திப் பிரிவு

  1. கட்டுரையாளர் சொல்வது எல்லாம் சரிதான். ஆனால் முடிக்கும்போது “இதே கருணாநிதிதான் மத்திய கூட்டணி ஆட்சியில் தனது ஊழல் மற்றும் குடும்ப அராஜகம் ஆகிய நடவடிக்கைகள் மூலம் மையவாத மதவெறி சக்தி தனிப்பட்ட மெஜாரிட்டியோடு ஆட்சிக்கு வர வழியமைத்தார்” என சொல்லியிருக்கலாம்

    • அது என்ன தனது ஊழல் மற்றும் குடும்ப அராஜகம் ? புரியவில்லை எனக்கு… ….. அவர் கூட்டணி வச்ச காலத்துல தமிழ்நாடு எப்படி இருந்தது என்பதை கொஞ்சம் நினைவு கூறவும்….. அது தமிழ்நாட்டோட பொற்காலம்…. அதுவும் வாஜிபாய் பிரதமரா இருந்த காலம்…. மனசில இருக்கிற தனிப்பட்ட பகைமையையும், ஜாதி உணர்வையும் தூக்கி எறிந்தால் கலைஞர் எல்லோர்க்கும் ஒரு அதிசயமாக தெரிவார்… இப்படி ஒருவர் சதையும், ரத்தமுமாய் நம்மோடு ஒருவர் வாழ்ந்தான் என்பது நமக்கெல்லாம் ஒரு பெருமை…. உங்க பாஷைல சொல்லனும்னா அவர் ஒரு உதாரண புருஷர்….

  2. This is problem… “ஒரே உண்மையான கடவுள்” why are you doing marketing here??? when you have rights, others too have rights and this is not an arabic nation to insist what you want on others…

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க