தஞ்சையில் அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் சாக்கு பைகள் இல்லை என்றுகூறி விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்யாமல் அரசு காலம் தாழ்த்தி வருகிறது.
இதனால் வண்டி வாடகை கொடுத்து விவசாயிகள் எடுத்து வந்த நெல்லை திருப்பி எடுத்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆனால் மீண்டும் வண்டிக்கூலி கொடுக்கமுடியாத நிலையில் அங்கேயே திறந்த வெளியில் கொட்டி காத்திருந்தனர் விவசாயிகள்.
குவித்து வைத்துள்ள நெல்லை சாக்கு மூட்டைகளை போர்த்தி விவசாயிகள் பாதுகாத்து வருகின்றனர். இரவு, பகலாக நெல்லை பாதுகாப்பதால் நாள் ஒன்றுக்கு ரூ.300 செலவாகிறது என்கிறார்கள் விவசாயிகள்.

அண்மையில் சில நாட்களாக பெய்துவரும் மழையின் காரணமாக நெல்மணிகள் துளிர் விட துவங்கியிருக்கிறது. தனியார் நெல் கொள்முதல் நிலையங்களில் அடிமாட்டு விலைக்கு கேட்பதால் அங்கும் கொண்டு செல்ல முடியாத கையறு நிலையில் நமது விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து தஞ்சாவூர் அருகே ஆழிவாய்க்கால் கிராமத்தைச் சேர்ந்த கார்த்தி கூறியதாவது:
“எங்கள் பகுதியில் பல நூறு ஏக்கரில் குறுவை நெல் சாகுபடி செய்யப்பட்டு தற்போது அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அறுவடை செய்த நெல்லை கொள்முதல் நிலையத்தில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக குவித்து வைத்துள்ளோம். கொள்முதல் நிலையம் திறக்கப்படவில்லை. அருகே உள்ள கொள்முதல் நிலையங்களில் சாக்குகள் இல்லை என்கின்றனர். மழை பெய்வதால் நெல்மணிகள் முளைவிடத் தொடங்கியுள்ளன. இதனால் விளைவித்த நெல்லை விற்பனை செய்யமுடியாமல் தவித்து வருகிறோம்” என்றார்.
இது குறித்து விவசாய சங்கங்களின் கூட்டு இயக்க துணை தலைவர் சுகுமாரன் கூறுகையில் :
“நேரடி கொள்முதல் நிலையங்களில் சாக்கு இல்லை என்று கூறி 15 நாட்களாக விவசாயிகள் கொண்டு வரும் நெல்லை கொள்முதல் செய்ய மறுக்கிறார்கள். இதனால் ஒவ்வொரு நிலையத்தின் முன்பும் விவசாயிகள் கொண்டு வந்த நெல் அனைத்தும் மழையில் நனைகின்றன. ஒவ்வொரு நிலையத்திலும் குறைந்தது 20 மூட்டைகள் அளவுக்கு நெல் முளைவிட்டு பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகளுக்கு பேரிழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே ஈரப்பத விதிமுறையை தளர்த்தி அனைத்து நெல்லையும் அரசு கொள்முதல் செய்ய வேண்டும்”. என்கிறார் .
இதே போல தஞ்சை அருகே வயலூர் நரசநாயக்கபுரத்தில் விவசாயிகள் அறுவடை செய்த குறுவை நெல்லை வாங்குவதற்கு கடந்த ஒரு மாதமாக நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கவில்லை. இதனால் விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை நேரடி கொள்முதல் நிலையம் முன்பு விவசாயிகள் கொட்டி வைத்துள்ளனர். கஷ்டப்பட்டு அறுவடை செய்த நெல்லை வாங்குவதற்கு கூட அரசு தயாராக இல்லை.
இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது :
வயலூர் நரசநாயக்கபுரத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் உள்ளது. இந்த நெல் கொள்முதல் நிலையத்துக்கு வயலூர், ராமபுரம், குருவாடி, தோட்டக்காடு, கரம்பை உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள 350 ஏக்கர் உள்ளது. இங்கு அறுவடை செய்யப்படும் குறுவை, சம்பா நெல் கொள்முதல் செய்யப்படும்.
கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்காததால் அறுவடை செய்த 7,000 நெல் மூட்டைகளை நேரடி நெல் கொள்முதல் நிலையம் முன்பும், சாலைகளிலும் குவித்து வைத்துள்ளோம். இந்நிலையில் தஞ்சை பகுதியில் கடந்த சில நாட்களாக லேசான மழை பெய்தது. நேற்று காலை முதல் பலத்த மழை பெய்தது. இந்த மழை நீடித்தால் அறுவடை செய்துள்ள நெல்லை எப்படி விற்பனை செய்ய முடியும்.
17 சதவீத ஈரப்பத்துக்குள் இருந்தால் மட்டுமே நெல் கொள்முதல் செய்யப்படும். கடந்த 3 நாட்ளாக மழை பெய்வதால் நெல் முளைக்கும் அபாயம் உள்ளது. அறுவடை செய்த நெல்லை தனியாரிடம் விற்பனை செய்யலாம் என்றால் அடிமாட்டு விலைக்கு விற்பனை செய்ய வேண்டியுள்ளது. எனவே காலதாமதமின்றி நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் தஞ்சை – கும்பகோணம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனர்.
இதே போல வாண்டையார் இருப்பு, சின்னப்புலிகுடிகாடு பகுதி நெல் கொள்முதல் நிலையங்களில் வைத்திருந்த நெல்லும் முளைத்துவிட்டதால் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டதாக பத்திரிகை செய்திகள் தெரிவிக்கின்றன.

இதே போல தஞ்சாவூர் மாவட்டம் திருமண்டங்குடி ஆரூரான் சர்க்கரை ஆலை, திருவிடைமருதூர் வட்டம் கோட்டூர் ஸ்ரீஅம்பிகா சர்க்கரை ஆலை ஆகியவற்றில் பணியாற்றும் 500-க்கும் கூடுதலான பணியாளர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் முதல் 9 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை.
ஊதியத்தை நிலுவைத் தொகையுடன் வழங்கும்படி பலமுறை வேண்டுகோள் விடுத்தும் பயனில்லாத சூழலில், இரு சர்க்கரை ஆலைகளின் ஊழியர்களும் ஆலை வளாகங்களில் கடந்த 03-ம் தேதி முதல் உண்ணாநிலைப் போராட்டம் மேற்கொண்டுள்ளனர்.
மேலும் இவ்விரு ஆலைகளும் கடந்த 3 ஆண்டுகளாக கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய சுமார் ரூ.100 கோடி நிலுவைத் தொகையை இன்னும் வழங்கவில்லை. இந்த ஆலைகள் மட்டுமின்றி, தமிழகத்தில் மொத்தமுள்ள 24 தனியார் சர்க்கரை ஆலைகளும் கரும்பு விவசாயிகளுக்கு ரூ.1347 கோடி நிலுவை வைத்துள்ளன. “ ஆலை அதிபர்களிடம் 10 முறைக்கு மேல் பேச்சு நடத்திவிட்டோம். ஆனால், சர்க்கரை ஆலைகள் நஷ்டத்தில் இயங்குவதால் நிலுவைத்தொகை வழங்க முடியாது என்று அவர்கள் கூறி விட்டனர்” என்று அமைச்சர் துரைக்கண்ணு ஆட்சியாளர்களின் கையாலாகாதத்தனத்தை ஒப்புக்கொண்டிருக்கிறார்.
காவிரியில் தண்ணீருக்கு போராடி கிடைக்கப்பெற்ற கொஞ்ச நஞ்ச தண்ணீரில் கடைமடை கால்வாய்களுக்கு தண்ணீரும் வரவில்லை. இதை மீறி விளைவிக்கும் நெல்லையும் கொள்முதல் செய்யாமல் வீணாக்குகிறது அரசு. தன் கண்முன்னே விளைவித்த நெல்மணிகள் வீணாவதை தடுக்க இயலாமல் என்ன செய்வதென்று விழி பிதுங்கி நிற்கிறார்கள் விவசாயிகள். விளைவித்த கரும்புக்கு உரிய நிலுவையை ஆலைகள் தராமல் இழுத்தடிக்கிறார்கள்.
சாக்கு இல்லை என்பதெல்லாம் ஒரு காரணமா? ஒரு பொறுப்புள்ள அரசு இப்படி சொல்லமுடியுமா? இது போன்ற காரணத்தை கார்ப்பரேட் நிறுவனங்களிடம் அரசு சொல்லுமா? சொன்னால் தான் 24 மணிநேர கார்ப்பரேட் ஊடகங்கள் சும்மா விட்டுவிடுவார்களா? அது நாடு முழுவதும் விவாதிக்கப்படும் பொருளாகியிருக்கும். ஆனால் விவசாயிகளிடன் அரசு துணிந்து சொல்ல காரணம் :
- கொள்கை அளவில் விவசாயிகளிடம் நேரடி கொள்முதல் செய்வதையும் அதை ரேசன் கடைகளில் விநியோகிப்பதையும் எதிர்க்கின்றன அரசுகள். உலக வங்கியின் திட்டப்படி இத்திட்டங்களுக்கு மூடுவிழா நடத்த திட்டமிட்டே அரசுகள் செயல்படுகின்றன.
- விவசாயிகள் தாமாகவே வெளியேறி டெல்டாவை ஹைட்ரோ கார்பன் மண்டலமாக்க வேண்டும் என்பது தான் இவர்கள் விருப்பம். எவ்வளவு தடைகளை கொடுத்தாலும் விவசாயிகள் மனம் தளராமல் விவாசாயத்தை தொடருவதை அரசுகள் விரும்பவில்லை. தொடர்ந்து தொல்லைகள் அளித்து வருகிறார்கள். டெல்டாவில் வேதாந்தா உள்ளிட்ட நிறுவனங்களுக்கு சமீபத்தில் அனுமதி அளித்திருக்கிறது மத்திய பா.ஜ.க அரசு.
- நாடு முழுவதும் விவாசயிகளின் நிலை இதுதான் என்றாலும் தமிழகத்தில் பா.ஜ.க-எடப்படி கும்பல் சீரழிந்த நிலையை அடைந்திருக்கிறது. விவசாயிகளை எவ்வளவு கிள்ளுகீரையாக நினைத்தால் சாக்கு இல்லை என்பதை காரணமாக சொல்லும் எடப்படி கும்பல்.
அடுத்த தேர்தலுக்கு மக்களிடம் செல்ல வேண்டும் என்ற குறைந்தபட்ச எண்ணம் கூட இக்கும்பலுக்கு கிடையாது. இது தான் தங்கள் கடைசி ஆட்சி என்பதால் முடிந்த அளவு கொள்ளை அடிப்பதில் மட்டுமே கவனம் செலுத்துகிறது. சட்டவிரோத ஆட்சிக்கு முட்டுகொடுத்து வருகிறன நீதிமன்றமும், மத்திய பா.ஜ.க அரசும்.
இது தமிழக நிலை என்றால் டெல்லியில் போராடிய விவசாயிகளை அடித்து மண்டையை உடைத்து அனுப்புகிறது எடப்பாடியின் ஓனரான மோடி அரசு.
பங்கு சந்தையில் சிறு இறக்கம் ஏற்பட்டாலே ஓடி சென்று விளக்கம் சொல்கிறது அரசு. முதலீட்டாளர்களின் நம்பிக்கையை காப்பாற்ற நடவடிக்கை எடுக்கிறது அரசு. சமீபத்தில் நிர்வாக திறமை இல்லாமல் வீதிக்குவரவிருந்த ஐ.எல் & எஃ.எஸ் என்கிற நிறுவனத்தை கைதூக்கிவிடுவது என்கிற பெயரில் அதில் தலையிட்டு எல்.ஐ.சி பணத்தை அந்நிறுவனத்திற்குள் புகுத்த முயற்சி செய்துவருகிறது மத்திய அரசு. ஆனால் விவாசாயிகளுக்கோ சாக்கு இல்லை ஊசி இல்லை என உப்புசப்பில்லாத காரணத்தை கூறி அவர்களை துன்புறுத்துகிறது அரசு. போராடினால் மண்டையை உடைக்கிறது அரசு.
நமக்கு வேறு வழியில்லை, வெற்றி கிட்டும் வரை புது புது வழிகளில் போராடுவதை தவிர.
செய்தி ஆதாரங்கள் :
- கொள்முதல் நிலையத்தில் தேங்கிய நெல் முளைப்பு விவசாயிகள் சாலை மறியல்
- போதிய அளவு சணல் சாக்குகள் இல்லாததால் கொள்முதல் செய்ய முடியாமல் பல ஆயிரம் டன் குறுவை நெல் தேக்கம்: மழையில் நனைந்து முளை விடுவதால் விவசாயிகள் வேதனை
- கொள்முதல் நிலையம் திறக்கவில்லை 10ஆயிரம் நெல் மூட்டைகள் மழையில் நனைகின்றன
- சர்க்கரை ஆலைகளை கட்டுப்படுத்த பினாமி எடப்பாடி அரசால் முடியாதா? ராமதாஸ்