privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புதலைப்புச் செய்திதேசிய பசுமைத் தீர்ப்பாய விசாரணைக் குழு அறிக்கை - ஸ்டெர்லைட் திறக்கப்படுவதற்கு முன்னோட்டமா ?

தேசிய பசுமைத் தீர்ப்பாய விசாரணைக் குழு அறிக்கை – ஸ்டெர்லைட் திறக்கப்படுவதற்கு முன்னோட்டமா ?

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டிற்கும், தற்போது ஸ்டெர்லைட்டைத் திறக்க கோயல் வழங்கவிருக்கும் தீர்ப்புக்கான முன்னறிவிப்பிற்கும் உள்ள தொடர்புக்கும் பெரிய வேறுபாடு எதுவுமில்லை.

-

தூத்துக்குடி கணேசம்மாள் – புற்று நோயால் இறந்தவர் சாவதற்கு முன் சென்னை வந்து போராடட்டுமா என்றார்.

ஸ்டெர்லைட் விவகாரத்தில் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் அறிக்கை நேற்றைய (28-11-2018) அமர்வில் வெளிவந்திருக்கிறது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடியது தொடர்பாக தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தால் அமைக்கப்பட்ட தருண் அகர்வால் தலைமையிலான குழு தனது ”ஆய்வறிக்கையை” தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் சமர்ப்பித்தது.

இவ்வறிக்கையில் ஸ்டெர்லைட் ஆலையை மூடியது தவறான நடவடிக்கை என்றும், இந்த ஆலையால் எவ்வித சுற்றுச் சூழல் பாதிப்பும் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளது. மேலும் சில நிபந்தனைகளின் கீழ் மீண்டும் இந்த ஆலை இயங்கலாம் என்றும் அக்குழு பரிந்துரைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து இந்த வழக்கு விசாரணையை டிசம்பர் 7-ம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டுள்ளது தேசிய பசுமைத் தீர்ப்பாயம்.

தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் ஆய்வுக் குழு தலைவர்

கடந்த மே 22-ம் தேதியன்று வேதாந்தா அனில் அகர்வாலின் ஆசியோடு தமிழக அரசு நடத்திய தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் உலகத்தையே உலுக்கியது. இந்தக் கொடூர செயலுக்கு உலகம் முழுவதும் கடுமையான கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து கண்துடைப்பு நடவடிக்கையாக, சட்டப்பூர்வமாக செல்லுபடியாகாத வகையிலான ஒரு மொக்கை அரசாணையை வெளியிட்டு, ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைத்தது எடப்பாடி அரசு.

அதனை அப்போதே பல்வேறு ஜனநாயக மற்றும் புரட்சிகர அமைப்புகள் கண்டித்தன. இத்தகைய கண் துடைப்பு வேலைகளுக்கு நடுவே, ஸ்டெர்லைட் எதிர்ப்புக் கூட்டமைப்பை உருத்தெரியாமல் ஒடுக்கும் வேலையை முடுக்கி விட்டது அனில் அகர்வால் – எடப்பாடி – மோடி கூட்டணி.

ஒட்டுமொத்த தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் குற்றவாளியாக ”மக்கள் அதிகாரம்” அமைப்பைக் காட்டி வழக்கை முடித்து வைக்க முயற்சித்தது. தமிழகம் முழுவதும் ஸ்டெர்லைட்டுக்கு எதிராகவும், மக்கள் அதிகாரத்திற்கு ஆதரவாகவும் வலுவான குரல்கள் தொடர்ந்து கேட்கவே, அந்த முயற்சியை நீதித்துறை வலுவந்தமாக முறிக்க நேர்ந்தது.

ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக மூடவேண்டும் என்பதே மக்களது கோரிக்கை (பசுமைத் தீர்ப்பாய விசாரணைக் குழு வந்த போது நடந்த ஆர்ப்பாட்டம்)

தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் தமிழக அரசின் கண் துடைப்பு ஆணைக்கு எதிராக வழக்கு தொடர்ந்தது ஸ்டெர்லைட் நிறுவனம். கூடுதலாக ஊடகங்களின் வாயை அடைக்க அவர்களின் முதல் பக்கத்தில் அன்றாடம் விளம்பரங்களைக் கொடுத்தது ஸ்டெர்லைட். அதற்கேற்றாற் போல ஊடகங்களும், ஸ்டெர்லைட்டுக்கு ஊதுகுழல்களாய் செயல்பட்டன.

அதனைத் தொடர்ந்து தேசிய பசுமைத் தீர்ப்பாயம் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான ஆய்வுக்குழு ஒன்றை அமைத்து ஸ்டெர்லைட் ஆலை மற்றும் தூத்துக்குடி மக்கள் மத்தியிலும் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிட்டது.

இந்த ஆய்வுக்குழு தலைவராக தமிழகத்தைச் சேர்ந்த நீதிபதியை நியமிக்கக்கூடாது என தேசிய பசுமைத் தீர்ப்பாயத்திடம் முறையிட்டது ஸ்டெர்லைட் நிர்வாகம். ’எஜமானர்’ காலால் இட்ட உத்தரவை தலையால் ஏற்றுக் கொண்டது தேசிய பசுமைத் தீர்ப்பாயம். குற்றம்சாட்டப்பட்ட குற்றவாளி தனக்கு யார் நீதிபதியாக வரவேண்டும் என கருத்துச் சொல்லும் அளவிற்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் ’ஜனநாயக’த்தில் திளைக்கிறது.

வழக்கறிஞர் அரிராகவன்

அதே போல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தலைவர் கோயல், உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்ற நாளிலேயே தே.ப.தீர்ப்பாயத்தின் தலைவராக மோடியால் நியமிக்கப்பட்டார் என்பதையும் இங்கு கருத்தில் கொள்ளவேண்டும்.

ஆய்வுக்குழு தலைவராக முதலில் பரிந்துரைக்கப்பட்ட ஓய்வுபெற்ற பஞ்சாப் உயர்நீதிமன்ற நீதிபதி, அனில் அகர்வால் – மோடி – கோயல் சம்பந்தப்பட்ட இவ்விவகாரத்தின் யோக்கியதை என்னவாக இருக்கும் என உணர்ந்தாரோ என்னவோ, அந்தப் பொறுப்பை கை கழுவினார். அவருக்கடுத்தபடியாக மேகாலயா உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி தருண் அகர்வாலைத் தலைவராக நியமித்தார். தருண் அகர்வால் தக்லைமையிலான மூவர் குழுவில், மத்திய சுற்றுச்சூழல், வனத்துறை அமைச்சகத்தின் விஞ்ஞானி சதீஷ் சி.கார்கோட்டி மற்றும் மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் வரலட்சுமி ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

இந்தக் குழு விசாரணை என்ற பெயரில் தூத்துக்குடியில் செய்த கண் துடைப்பு வேலைகளும், சென்னையில் விசாரணைக் குழு கருத்துக் கேட்பின் போது பொதுமக்களை சந்திக்கவிடாத வண்ணம், விதவிதமான கண்டிசன்களைப் போட்டு ஸ்டெர்லைட் தரப்பு நபர்களை மட்டும் சந்தித்த கிரிமினல் வேலைகளும் ஏற்கெனவே நாம் அறிந்ததே.

அப்போதே இந்த ஆய்வுக்குழுவின் அறிக்கை எவ்வாறு வரும் என அனைவராலும் யூகிக்க முடிந்ததை, கடந்த 26-ம் தேதி அறிக்கையாகவே தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் சமர்ப்பித்திருக்கிறது தருண் அகர்வால் குழு.

முன்னதாக கடந்த மாதமே சமர்ப்பிக்கப்பட்டிருக்க வேண்டிய இந்த ஆய்வறிக்கை முழுமையாக முடிவடையாத சூழலில் டிசம்பர் 10 வரைக்கும் கால அவகாசம் நீட்டித்து, விசாரணையை டிசம்பர் 10-க்கு தள்ளி வைத்தது, தேசிய பசுமைத் தீர்ப்பாயம்.

ஆனால் அனில் அகர்வாலுக்கு அவசரமோ அல்லது தருண் அகர்வாலுக்கு அவசரமோ தெரியவில்லை, ஆய்வறிக்கை நவம்பர் 26 அன்றே தே.ப.தீர்ப்பாயத்தில் சமர்ப்பிக்கப்பட்டு விட்டது.

நவம்பர் 26-ல் அறிக்கை வந்தாலும் டிசம்பர் 10 அன்றுதான் வழக்கு என்ற நிலையில் தே.ப.தீர்ப்பாயத்துக்கு ’திடீரென’ வந்த ஞானோதயத்தின் பலனாய் நவம்பர் 28-ம் தேதியன்று விசாரணைக்கு திடீரென பட்டியலிடப்பட்டது. தே.ப.தீர்ப்பாயத்துக்கு என்ன ’அவசரமோ’? தெரியவில்லை.

விசாரணையின் போது தருண் அகர்வாலின் அறிக்கையின் கடைசிப் பக்கத்தை வாசித்தார் கோயல். அதில், தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை மூட பிறப்பித்த உத்தரவு நிலைக்கக் கூடியதல்ல என்றும், ஸ்டெர்லைட் ஆலையின் கருத்தைக் கேட்காமலேயே தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.  மேலும் தமிழக அரசின் இந்த முடிவு இயற்கை நீதிக்கு முரணானது என்றும் குறிப்பிட்டுள்ளனர் ஆய்வுக் குழுவினர். முதலாளித்துவத்தின் இயற்கை நீதிக்கு முரணானது என்று தெளிவாக குறிப்பிட்டிருந்தால் மக்களுக்கும் தெளிவாகப் புரிந்திருக்கும்.

இது போக சில நிபந்தனைகளின் அடிப்படையில் ஆலை இயங்குவதில் எவ்விதப் பிரச்சினையும் இல்லை எனக் கூறி துப்பாக்கிச் சூட்டில் உயிர்துறந்த 13 பேரின் உயிர்த் தியாகத்தில் மண்ணள்ளிப் போட்டிருக்கிறது தருண் அகர்வால் குழு.

தருண் அகர்வால் குழுவின் அறிக்கையை, தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டின் முதல் குற்றவாளியான வேதாந்தா தரப்புக்கும், இரண்டாவது குற்றவாளியான தமிழக அரசுக்கும் மட்டுமே தருண் அகர்வால் குழுவின் அறிக்கையின் நகல்களை வழங்கவேண்டும் என உத்தரவிட்டுள்ளார், கோயல். பாதிக்கப்பட்ட மக்கள் தரப்பு வழக்கறிஞர்களுக்கு அறிக்கையின் நகலைத் தர மறுத்துவிட்டார்.

இந்த வழக்கில், இந்த அறிக்கையின் மீது தமது சந்தேகங்கள் மற்றும் கருத்துக்களை தமிழக அரசு ஒரு வாரத்தில் நிவர்த்தி செய்துகொள்ள வேண்டும் என்றும் இந்த வழக்கை வரும் டிசம்பர்-7 அன்று ஒத்திவைப்பதாகவும் கூறியுள்ளார் கோயல். எனினும் பின்னர் வழங்கப்படவிருக்கும் தீர்ப்பின் சாரத்தை தருண் அகர்வாலின் ஆய்வுக்குழு அறிக்கை வாயிலாக நமக்கு முன்னரே முன்னறிவித்திருக்கிறார் கோயல்.

காவிரி டெல்டாவில் அனில் அகர்வாலுக்கு வழங்கப்பட்டுள்ள இரண்டு ஹைட்ரோகார்பன் உரிமங்களுக்கும், மேக்கேதாட்டுவில் கர்நாடக அரசு அணை கட்ட மத்திய மோடி அரசு கொடுத்துள்ள அனுமதிக்கும் உள்ள தொடர்புக்கும், தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டிற்கும், தற்போது ஸ்டெர்லைட்டைத் திறக்க கோயல் வழங்கவிருக்கும் தீர்ப்புக்கான முன்னறிவிப்பிற்கும் உள்ள தொடர்புக்கும் பெரிய வேறுபாடு எதுவுமில்லை.

இரண்டுமே பாஜகவிற்கு அனில் அகர்வால் நன்கொடையாக அளித்த 36.5 கோடிக்காக மட்டுமே நடைபெறும் நிகழ்வல்ல. இந்த நாட்டின் உழைக்கும் மக்களின் மீதான, குறிப்பாக தமிழகத்தின் மீதான பாஜகவின் வன்மத்தின் வெளிப்பாடுகளே இந்நிகழ்வுகள்.

ஒவ்வொரு ஆண்டும் நவம்பர், டிசம்பர் மாதங்கள், தமிழகத்தை இயற்கையின் சீற்றங்கள் புரட்டிப் போடும் மாதங்களாகவே முடிகிறது. தொடர்ந்து தமிழகத்தைப் புறக்கணித்து வரும் இந்த அரசு இயந்திரத்தை தமிழகத்தின் சீற்றங்கள் புரட்டிப் போடும் ஆண்டாக அமைந்தால் மட்டுமே இனி உயிர்வாழ முடியும். தமிழகம் சீறுமா ?

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க