க்களவைத் தேர்தல் நெருங்கும் நேரத்தில் ஆட்சியை இழக்கும் சூழலை உணர்ந்து கொண்ட பாஜக காவி கும்பல் வன்முறை வெறியாட்டங்களை அரங்கேற்றி வருகிறது.  காஷ்மீரி வியாபாரி ஒருவர், பாஜக குண்டர்களால் தாக்கப்பட்ட செய்தி சமூக வலைத்தளங்களில் பரவி வரும் நேரத்தில், மோடி ஆட்சியில் வேலையில்லை எனக்கூறிய முசுலீம் மாணவர் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கிறார்.

பாஜக ரவுடி சாமியார் ஆதித்யநாத் ஆளும் உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள முசாஃபர்பூர் நகரத்தில் மோடியின் ஆட்சி குறித்து விவாத நிகழ்ச்சி நடத்தியது ‘பாரத் சமாச்சார்’ என்ற தொலைக்காட்சி. இந்த நிகழ்ச்சியில் பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்களுடன் பொதுமக்களும் தங்களுடைய கருத்துக்களை கூறினர்.

நிகழ்ச்சி நடத்தப்படுவதை கவனித்த பள்ளி மாணவர் அத்னான் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மோடி ஆட்சியில் வேலையின்மை அதிகரித்துள்ளதாக கருத்து கூறினார்.  உடனே, அங்கிருந்த பாஜக குண்டர்கள் அவரைத் தாக்க ஆரம்பித்தனர். மாணவர் முசுலீம் என்பதால் அவரை ‘தீவிரவாதி’ எனச் சொல்லி அடித்துள்ளனர்.

“இந்த வழியாகப் போய்க்கொண்டிருக்கும் போது, நிகழ்ச்சி நடப்பதைப் பார்த்து அதில் பங்கேற்றேன். இங்கே வேலை கிடைக்கவில்லை என சொன்னேன். உடனே அவர்கள் என்னை தீவிரவாதி என சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள்; அடிக்க ஆரம்பித்துவிட்டார்கள். அவர்கள் அனைவரும் பாஜகவினர். போலீசு ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவர்கள் தண்டிக்கப்படவேண்டும். நான் முசுலீம் என்பதற்காகவே என்னை அடித்தார்கள். நான் பாஜகவுக்கு எதிராக பேசினேன்.  அதனால்தான் என்னை அடித்தார்கள்” என ஊடகங்களிடம் நடந்த சம்பவம் குறித்து தெரிவித்துள்ளார் அத்னான்.

தொலைக்காட்சி நிகழ்ச்சியின் தொகுப்பாளர் பிரதாப் இந்த சம்பவம் குறித்து சொல்லும்போது, “நான் அவரிடம் உங்கள் பகுதியில் வேலைவாய்ப்பு மற்றும் கல்வி நிலவரம் எப்படி உள்ளது என பேசும்படி கூறினேன். அவர் பேச ஆரம்பித்தார். தன்னுடைய பகுதியில் எந்த மாற்றமும் இல்லை என பேசியபோது, பாஜகவினர் அவரை பேசவிடாமல் தடுத்தனர். 3-4 வாக்கியங்களை சொல்லி முடித்தபோது, பாஜகவினர் அவரை அடிக்கத் தொடங்கினர். ரத்தம் வரத்தொடங்கியபோது, தப்பியோட முயற்சித்தார். அப்போது ராஷ்ட்ரிய லோக் தள் கட்சியினர் அவரைக் காப்பாற்றினர்.” என்கிறார்.

படிக்க:
அதிமுக : குற்றக்கும்பல் ஆட்சி – புதிய கலாச்சாரம் மார்ச் மின்னிதழ் !
விழுப்புரம் கெடார் : மருத்துவர் இல்லாததால் இறந்து பிறந்த குழந்தை – ஆபத்தான நிலையில் தாய் !

விவாத நிகழ்ச்சியில் மோடி குறித்த விமர்சனத்தை மாற்று கட்சியினர் சொன்னபோதெல்லாம், ‘மோடி…மோடி…’ என முழுக்கமிட்டு பாஜக குண்டர்படை பேசவிடாமல் தடுத்ததாகவும் அவர் குறிப்பிடுகிறார்.

பாஜக குண்டர்படை ‘தீவிரவாதி’ எனக்கூறிக்கொண்டு மாணவரை தாக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் பரவியது.  காவி குண்டர்களின் தாக்குதலை கண்டித்து பலர் எழுதத் தொடங்கினர்.

“காவி குண்டர்களின் இத்தகைய தாக்குதல்களை தடுத்து நிறுத்த முடியவில்லையா ஆதித்யநாத்” என அம்மாநில முதல்வரை நோக்கி கேட்கிற தான்யா தத்தா, முதலில் காஷ்மீரிகள். இப்போது விமர்சனம் செய்கிறவர்களை குண்டர்கள் தாக்குவதாக அவர் எழுதியுள்ளார்.

கல்வி மற்றும் வேலைவாய்ப்பு குறித்த மோடியின் பொய்களை எதிர்கொண்ட இளைஞருக்கு நேர்ந்த கதி என இளைஞரை தாக்கும் வீடியோவை பகிர்ந்து தனது கருத்தை பதிவிட்டுள்ளார் தீபக் சிங்.

‘புதிய இந்தியா’வில் வேலைவாய்ப்பு மற்றும் கல்வி குறித்து கேள்வி எழுப்பினால் அடிதான் உங்களுக்கு பதிலாகக் கிடைக்கும் என்கிறார் ஸோனி கான்.

மோடியின் ‘புதிய இந்தியா’ 70-களின் வேலைவாய்ப்பின்மை திண்டாட்டத்தை சந்தித்துக் கொண்டிருக்கிறது. அதாவது ஐம்பது ஆண்டுகள் பின்நோக்கி போய்விட்டது என தினம் தினம் வந்துகொண்டிருக்கும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. அதுகுறித்து பேசவிடாமல் செய்யவே ‘தேசபக்தி’ வேடம் போடுகிறது பாஜக. கேள்வி எழுப்புகிறவரை ‘தீவிரவாதி’ என முத்திரை குத்தி, தாக்கத் தொடங்கியுள்ளது காவி குண்டர் படை.

2019-ம் ஆண்டு தேர்தலில் காவி குண்டர் படை என்னவெல்லாம் செய்யும் என்பதை இச்சம்பவம் உணர்த்தியிருக்கிறது. சங்க பரிவாரத்தினரை வீதி தோறும் எதிர்கொள்வதற்கு, மக்களைத் தற்காத்துக் கொள்வதற்கு முற்போக்கு அமைப்புகள் அனைத்தும் கீழ் மட்ட அளவில் ஒன்று சேர்ந்து போராட வேண்டியது அவசர அவசிய கடமையாக இருக்கிறது.


கலைமதி
நன்றி: கேரவன் டெய்லி

 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க