privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திஇந்தியாஜம்மு காஷ்மீர் : சரத்து 370-ஐ ரத்து செய்த பாசிசம் !

ஜம்மு காஷ்மீர் : சரத்து 370-ஐ ரத்து செய்த பாசிசம் !

காஷ்மீருக்கான தன்னாட்சி அதிகாரத்தை ஒழிப்பது என்ற சங்க பரிவாரத்தின் வெகுநாள் பிரகடனத்தை இன்று நிறைவேற்றியிருக்கிறது மத்திய பாஜக அரசு.

-

ம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு தன்னாட்சி அதிகாரம் கொடுக்கும் பிரிவு 370, சட்டப் பிரிவை ரத்து செய்வதாக நாடாளுமன்றத்தில் அறிவித்திருக்கிறார் அமித்ஷா. இச்சட்டப்பிரிவை ரத்து செய்து இந்தியக் குடியரசுத் தலைவர் ஆணை பிறப்பித்துள்ளார். மேலும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் லடாக் பகுதியைத் தனியாகப் பிரித்து, தனி யூனியன் பிரதேசமாகவும், எஞ்சியுள்ள ஜம்மு காஷ்மீர் பகுதியை தனி யூனியன் பிரதேசமாகவும் அறிவித்துள்ளது மத்திய அரசு.

காஷ்மீருக்கான தன்னாட்சி அதிகாரத்தை ஒழிப்பது என்ற சங்க பரிவாரத்தின் வெகுநாள் பிரகடனத்தை இன்று நிறைவேற்றியிருக்கிறது மத்திய பாஜக அரசு. கடந்த ஒரு மாதத்தில் அனைத்து மாநில அரசுகளின் உரிமைகளைப் பறித்து ஒரே நாடு என்ற முழக்கத்தின் பேரில் பல்வேறு சட்டத் திருத்தங்களையும், புதுப் புது சட்டங்களையும் நிறைவேற்றியது மத்திய பாஜக அரசு.

இந்தச் சட்டங்களின் தொடர்ச்சியாக ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் பிரிவு 370-ஐ ரத்து செய்யும் உத்தரவை 05-08-2019 அன்று நிறைவேற்றியுள்ளது.

இந்திய அரசியல்சாசன சட்டப்பிரிவு 370, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் தன்னாட்சி அதிகாரத்தை உறுதிபடுத்துகிறது. காஷ்மீர் மாநிலத்திற்குத் தனியான அரசியல் அமைப்புச் சட்டம் வைத்துக் கொள்ள அனுமதிக்கிறது. இச்சட்டப் பிரிவின்படி இராணுவம், வெளியுறவுத்துறை மற்றும் தொலைதொடர்பு ஆகிய துறைகளைத் தவிர்த்து பிற துறைகளில் இந்திய நாடாளுமன்றம் இயற்றும் சட்டங்களும் உத்தரவுகளும், காஷ்மீர் மாநிலத்தில் அமல்படுத்துவதற்கு காஷ்மீர் மாநில அரசாங்கத்தின் அனுமதியைப் பெறவேண்டும். மத்திய அரசு தன்னிச்சையாக தனது முடிவை அமல்படுத்த முடியாது. அதே போல மத்திய அரசு காஷ்மீரில் நிதி அவசரநிலையைப் பிரகடனம் செய்வதற்கும் அதிகாரம் இல்லை. இந்த சட்டப் பிரிவைத்தான் தற்போது நீக்கி உள்ளது பாஜக அரசு.

படிக்க:
காஷ்மீர் : இந்தியாவின் பாலஸ்தீனம் !
♦ காஷ்மீர் : பொது பாதுகாப்புச் சட்டத்தின் அத்துமீறல்கள் | அம்னெஸ்டி அறிக்கைக்கு தடை !

சட்டப் பிரிவு 370(1)(C)-க்கு உட்பட்டுதான், ஜம்மு காஷ்மீர் மாநிலம், இந்திய அரசியல்சாசன சட்டப்பிரிவு 1-ன் படி உள்ள இந்திய ஒன்றியத்தின் கீழ் உள்ள மாநிலங்களின் பட்டியலில் கொண்டு வரப்பட்டிருக்கிறது. ஆகவே பிரிவு 370-ஐ நீக்கினால், காஷ்மீர் இந்திய யூனியனில் இருந்து தானாக வெளியேறியதாகவே கருதப்படும். அத்தகைய சிக்கலைத் தவிர்ப்பதற்காக ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் லடாக் பகுதியைத் தனியாக சட்டமன்றம் இல்லாத யூனியன் பிரதேசமாகவும் (உ.ம் சண்டிகர்), இதர ஜம்மு காஷ்மீர் பகுதியை சட்டமன்றம் உள்ள யூனியன் பிரதேசமாகவும் (உ.ம் டில்லி, புதுச்சேரி) அறிவித்துள்ளது மத்திய அரசு.

இது அம்மாநிலத்தில் கடும் பதட்ட சூழலை ஏற்படுத்தும் என்பதை அறிந்து வைத்திருக்கும் பாஜக, கடந்த ஜுலை 26-ம் தேதி தொடங்கி அங்கு படிப்படியாக படையணிகளை குவித்துவந்தது. கடந்த சனிக்கிழமை (03-08-2019) முதல் முக்கியமான பகுதிகளில் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியது. கடந்த ஞாயிறு (04-08-2019) இரவு முதல் காஷ்மீர் மாநில அரசியல் தலைவர்களான மெக்பூபா முப்தி மற்றும் ஓமர் அப்துல்லா உள்ளிட்டோரை வீட்டிலேயே சிறைவைத்தது. மேலும் காஷ்மீர் மாநிலத்தில் இணையச் சேவையை நிறுத்தி வைத்துள்ளது மத்திய அரசு.

இந்த இச்சட்டப் பிரிவுகள் நீக்கப்பட்டுள்ளதை காஷ்மீர் மாநிலக் கட்சிகளான, தேசிய மாநாட்டுக் கட்சி, மக்கள் ஜனநாயகக் கட்சி, ஜம்மு காஷ்மீர் மக்கள் இயக்கம் உள்ளிட்ட கட்சிகள் எதிர்த்துள்ளன. நாடாளுமன்றத்தில் காங்கிரசு கட்சி அமித்ஷாவின் இந்த அறிவிப்பிற்கு கண்டனம் தெரிவித்துள்ளது.

370 பிரிவு ரத்து செய்யப்பட்டதன் மூலம் பிரிவு 35A-வும் ரத்தாகிறது. இதன் காரணமாக காஷ்மீர் குடிமக்களுக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்புச் சலுகைகளும் ரத்தாகின்றன. குறிப்பாக காஷ்மீரில் உள்ள சொத்துக்களை வெளிமாநிலத்தவர் யாரும் வாங்க முடியாது. இது பன்னாட்டு நிறுவனங்களும், இந்தியத் தரகு முதலாளிகளுக்கும் மிகப்பெரும் உறுத்தலாக பன்னெடுங்காலமாக இருந்துவந்த விசயம். தற்போது காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்த்தை ரத்து செய்ததன் மூலம் தனது எஜமானர்களுக்கு காஷ்மீரையும் திறந்து விட்டிருக்கிறார் மோடி.

பிரிவு 370 நீக்கப்பட்டதற்குக் கண்டனம் தெரிவித்து, ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி குறிப்பிடுகையில் “மத்திய அரசு சட்டப்பிரிவு 35A மீது கைவைப்பது, எரியும் நெருப்பில் வெடிமருந்தைக் கொட்டுவதைப் போன்றது. பிரிவு 35A மீது யாரேனும் கைவைக்க முயற்சித்தால், கை மட்டுமல்ல மொத்த உடலும் எரிந்து சாம்பலாகும்” என்றும் எச்சரித்துள்ளார் மெகபூபா முப்தி.

இதனையொட்டி, தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் முப்தியைக் கைது செய்யவேண்டுமென பொங்கியிருக்கிறது சிவசேனா கட்சி. இச்சட்டப் பிரிவு நீக்கத்திற்கு சிவசேனா உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. ஆம் ஆத்மி கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், அதிமுக உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு அளித்துள்ளன.

தனது இந்து ராஷ்டிரக் கனவுக்கும், ஏகாதிபத்திய நலன்களுக்கும் மாநிலங்களின் சுய ஆட்சி உரிமை பாதகமாக உள்ள சூழலில் பல்வேறு சட்டதிருத்தங்களின் மூலம் அனைத்து மாநில உரிமைகளையும் பறித்துக் கொண்ட பாஜக, இறுதியாக வெகுநாளாக தக்க வைக்கப்பட்டிருந்த காஷ்மீரின் தன்னாட்சி உரிமையையும் பறித்து விட்டது.

போர்க்குணமிக்க காஷ்மீர் மக்களின் அடிப்படை உரிமையையே திட்டமிட்டு படைகளைக் குவித்து நசுக்கிய பாஜகவிற்கு, இதர மாநிலங்களெல்லாம் எம்மாத்திரம் ? இது காவி கார்ப்பரேட் பாசிச ஆட்சியின் ஒரு வெள்ளோட்டம்தான் ! நாடு முழுவதும் இனி அன்றாடம் அறிவிக்கப்படாத எமெர்ஜென்சிதான் நிலவும் என்பதற்கான முன்னறிவிப்பு இது !


நந்தன்

(பின்குறிப்பு : இந்த கட்டுரை 06-08-2018 அன்று பிரிவு 35A குறித்த தகவல்களை இணைத்து மேம்படுத்தப்பட்டது)