privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபுதிய ஜனநாயகம்இந்தியாகுஜராத் : இந்து ராஷ்டிரத்தின் சோதனைச்சாலை !

குஜராத் : இந்து ராஷ்டிரத்தின் சோதனைச்சாலை !

இந்துக்களையும் முஸ்லீம்களையும் பிளவுபடுத்தும் தந்திரத்தை வெற்றிகரமாக அமலாக்கியிருக்கும் நகரம் அகமதாபாத். சிறுபான்மை மக்களை வஞ்சிப்பதற்கு மோடி அரசு கடைப்பிடித்த சூழ்ச்சிகளுள் சிலவற்றை அம்பலப்படுத்துகிறது, இக்கட்டுரை.

-

குஜராத் மக்கள் தொகையில் முஸ்லீம்கள் 10 விழுக்காடு. ஆனால், அவர்கள் சார்பில் நாடாளுமன்ற மக்களவையில் ஒரு பிரதிநிதி கூடக் கிடையாது. இந்து ராஷ்டிரம் எப்படி உருவாக்கப்படுகிறது என்பதற்கு குஜராத் ஒரு எடுத்துக்காட்டு.

மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் திருத்தியமைக்கப்பட்டு விட்டது என்கிறார்கள். அதுவா பிரச்சனை? மக்களின் சிந்தனை திருத்தியமைக்கப்பட்டு விட்டது. “கடந்த 17 ஆண்டுகளில் மக்கள் சிந்திக்கும் முறையையே அவர்கள் மாற்றி விட்டார்கள். அதன் விளைவுதான் இந்தத் தேர்தல் வெற்றி” என்கிறார், 2002 குஜராத் படுகொலையில் தப்பிப் பிழைத்த ஷரீப் மலேக்.

அனைவரது நம்பிக்கையையும் பெறுவது (சப் கா விஸ்வாஸ்) தனது நோக்கம் என்றும், தனது அரசின் கீழ் சாதி, மத அடிப்படையில் எவருக்கு எதிராகவும் பாகுபாடு காட்டப்படாது என்றும் மோடி சொல்கிறார். ஆனால், குஜராத் முஸ்லீம்கள் யாரும் நம்பவில்லை. குஜராத்தில் எங்களுக்கு என்ன நடக்கிறதோ, அதுதான் நாடு முழுவதும் நடக்கப் போகிறது என்கிறார் மலேக்.

”இந்து ராஷ்டிரத்தின் ஹல்வாத் நகரம் உங்களை வரவேற்கிறது விஷ்வ இந்து பரிஷத்-பங்ரங்தள்” என குஜராத்தி மொழியில் எழுதப்பட்டிருக்கும் விளம்பரப் பலகை.

குஜராத்தில் நடந்தது நாடு முழுவதும் நடக்காதா என்ன?… 2002-ல் என்ன நடந்தது என்பதை நாடு மறந்துவிட்டதா? ஏற்கனவே இது மே.வங்கத்தில் நடக்கத் தொடங்கிவிட்டது. வேண்டுமானால் எழுதி வைத்துக்கொள்ளுங்கள், அவர்கள் உருவாக்கும் இந்து ராஷ்டிரத்துக்கு முன்மாதிரிதான் குஜராத்” என்று சொல்கிறார் 2002-ல் நரோதா காம் கொலைக்களத்திலிருந்து உயிர் தப்பிய இம்தியாஸ் குரேஷி.
2002-ல் நடைபெற்றதைப் போன்ற வெளிப்படையான வன்முறை மீண்டும் ஒரு முறை குஜராத்தில் நடக்க வாய்ப்பில்லை. ஆனால், முஸ்லீம் மக்களுக்கு எதிரான தாக்குதல்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருவதைச் சான்றுகள் காட்டுகின்றன. அல்ப சங்கியா அதிகார் மஞ்ச் என்ற குஜராத்தை சேர்ந்த மனித உரிமை அமைப்பு வெளியிட்டிருக்கும் அறிக்கை, அந்த மாநிலமே எங்ஙனம் மதரீதியாகப் பிளவுபட்டிருக்கிறது என்பதைத் தரவுகளுடன் விளக்குகிறது.

இந்துக்களையும் முஸ்லீம்களையும் பிளவுபடுத்துவதிலும் சகிப்பின்மையை அதிகரிப்பதிலும் சிறு அளவிலான கலவரங்கள்தான் பெரும்பங்கு வகிக்கின்றன. அதே நேரத்தில் குஜராத்தில் மதக் கலவரமே நடப்பதில்லை என்பது போன்ற ஒரு பொய்த்தோற்றத்தையும் இந்த உத்தியின் மூலம் வெளியுலகிற்குக் காட்ட முடிகிறது என்று கூறுகிறது அந்த அறிக்கை.

தேசியக் குற்ற ஆவணக் காப்பகம் அளிக்கும் புள்ளி விவரங்களின்படி 1998 முதல் 2016 வரையிலான காலத்தில் குஜராத்தில் 35,568 மதக் கலவரங்கள் நடந்துள்ளன. 2014-ம் ஆண்டு மட்டும் 164 கலவரங்களில் 305 பேர் கொல்லப்பட்டிருக்கின்றனர். இந்தக் கலவரங்கள் நடைபெற்ற இடங்கள் எல்லாம் 2002 படுகொலையின்போது அமைதியாக இருந்தவை என்பதும், சமூக ஊடகங்கள்தான் மதத் துவேசத்தைப் பரப்புவதில் பெரும்பங்கு வகித்திருக்கின்றன என்பதும் கவனிக்கத்தக்கவை.

இந்துக்களையும் முஸ்லீம்களையும் பிளவுபடுத்தும் தந்திரத்தை வெற்றிகரமாக அமலாக்கியிருக்கும் நகரம் அகமதாபாத். முன்னர் நகரின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக வசித்து வந்த முஸ்லீம்கள் இப்போது நகரின் குறிப்பிட்ட சில இடங்களுக்குள் ஒதுக்கப்பட்டு விட்டனர். நகரின் மேட்டுக்குடி வர்க்கத்தினர் வசிக்கும் பகுதிகளில் வசதி படைத்த முஸ்லீம்கள்கூடக் குடியேற முடியாது. நகருக்கு வெளியே உள்ள ஜுகாபுரா போன்ற சேரிப்பகுதிகளில் குடியேறும்படி பணக்கார முஸ்லீம்களும் நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கிறார்கள்.

சிறுபான்மை மக்களை வஞ்சிப்பதற்கு மோடி அரசு கடைப்பிடித்த சூழ்ச்சிகளில் சிலவற்றைப் பார்ப்போம். ஒரு மதத்தைச் சேர்ந்தவர் மாற்று மதத்தைச் சேர்ந்த இன்னொருவருக்கு தனது சொத்தை விற்க விரும்பினால், அதற்கு மாவட்ட ஆட்சியரின் முன் அனுமதியைப் பெறவேண்டும் என்று ஒரு சட்டம் அமலில் இருப்பது இந்தியாவிலேயே குஜராத் மாநிலத்தில் மட்டும்தான்.

மலைபோல் குவிந்திருக்கும் குப்பைகளுக்கு மத்தியில் ”சிட்டிசன் நகர்” குடியிருப்புகள்.

மதக் கலவரத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், வாடகைக்குக் குடியிருக்கும் சிறுபான்மை சமூகத்தைச் சார்ந்த மக்களை வீட்டின் உரிமையாளர்கள் வெளியேற்றுவதைத் தடுக்கும் பொருட்டும், அவர்களது வீடு, மனைகளைக் கட்டாயப்படுத்தி விற்பனை செய்வதைத் தடுக்கும் பொருட்டும் ஒரு சட்டம் 1991-ல் இயற்றப்பட்டிருந்தது. 2012-ம் ஆண்டில் அந்த சட்டத்தில் மோடி அரசு கொண்டு வந்த திருத்தம், மாவட்ட ஆட்சியரின் அனுமதி இல்லாமல் ஒரு மதத்தைச் சேர்ந்தவர் பிற மதத்தைச் சேர்ந்த ஒருவருக்கு சொத்தை விற்க முடியாது என்ற நிலையை ஏற்படுத்தியது.

இந்தச் சட்டம் கலவரம் பாதித்த பகுதிகளுக்கானது என்பதால், அந்தப் பகுதிகளிலிருந்து பாதுகாப்பு காரணங்களுக்காக வெளியேற விரும்பிய முஸ்லீம்கள்தான் இதனால் பாதிக்கப்பட்டனர். நகரின் மையப்பகுதியில் சொந்த வீட்டில் குடியிருந்த முஸ்லீம்கள், 2002 கலவரத்துக்குப் பின் நகருக்கு வெளியே உள்ள பாதுகாப்பான ஜுகாபுரா, ஜமால்பூர் ஆகிய பகுதிகளுக்குக் குடிபெயர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அதேநேரத்தில், இந்தச் சட்டத் திருத்தத்தின் காரணமாக நகரின் மையப்பகுதியில் அவர்கள் ஏற்கனவே குடியிருந்த சொந்த வீடுகளை விற்கவும் முடியவில்லை. முஸ்லீம்களைப் பாதுகாப்பது என்ற பெயரில் அவர்களை ஏதிலிகளாக மாற்றியது மோடியின் சதித்தனமான இந்தச் சட்டத்திருத்தம்.

2012-ல் மைய அரசு சிறுபான்மை சமூகத்தின் மாணவர்களுக்கு அளித்த உதவித்தொகையை அவர்களுக்கு வழங்குவதில்லை என்று அன்றைய மோடி அரசு முடிவெடுத்தது. இதற்கு மோடி அரசு அளித்த விளக்கம் வக்கிரமானது. சிறுபான்மையினருக்கு வழங்கப்படும் இந்தச் சலுகையின் காரணமாகப் பெரும்பான்மை சமூகத்தினர் ஆத்திரம் கொள்வார்கள் என்றும், பெரும்பான்மையினரின் கோபத்திலிருந்து சிறுபான்மை மக்களைப் பாதுகாக்கும் பொருட்டு அவர்களுக்கு உதவித்தொகை வழங்குவதைத் தவிர்ப்பதாகவும் விளக்கமளித்தது மோடி அரசு.

2002 இனப்படுகொலையின் காரணமாக நிவாரண முகாம்களில் வசித்து வந்த முஸ்லீம்களுக்கு நிரந்தரக் குடியிருப்புப் பகுதியை ஒதுக்குவதாகக் கூறி, அவர்களை அகமதாபாத் நகரத்தின் குப்பைக் கிடங்கிற்கு அருகில் குடியேற்றியது அன்றைய மோடி அரசு. குப்பை மேட்டின் காம்பவுண்டு சுவரை ஒட்டி சாக்குகளாலும் தார்பாலின்களாலும் உருவாக்கப்பட்ட குடிசைகள், மண் சாலைகள், திறந்த சாக்கடை, குடிநீர் இல்லை என்ற அவலங்கள் நிறைந்த, மனிதர்களே வாழமுடியாத அந்தப் பகுதிக்குச் சூட்டப்பட்டிருந்த பெயர் சிட்டிசன்ஸ் நகர்.

குப்பைக்கிடங்கு – சாக்கடைகளுக்கிடையே குடிநீர் விநியோகம்.

“குப்பைகளின் வாடை தோலைத் துளைத்துக் கொண்டு உடலுக்குள் செல்கிறது” என்கிறார் அந்தக் குப்பை மேட்டின் ஓரத்தில் குடியிருக்கும் கடூனப்பா என்ற பெண். அவர் நரோதா பாட்டியா தாக்குதலில் உயிர் தப்பியவர். அந்தக் குடியிருப்பின் பெரும்பாலான மக்கள் நுரையீரல் நோயால் அவதிப்படுகிறார்கள்.

மோடி, அமித் ஷா விடம் என்னை அழைத்துச் செல்லுங்கள். என் படத்தைப் போட்டு முகவரியைப் போட்டு உங்கள் பத்திரிகையில் எழுதுங்கள். வேண்டுமானால் என்னைச் சுடட்டும். எனக்கொன்றும் பயமில்லை. மிருகங்கள்கூட வாழமுடியாத சூழலில் அவர்கள் எங்களை வைத்திருக்கிறார்கள். எங்களைக் கொல்லாமல் விட்டிருக்கிறார்கள், – அவ்வளவுதான். எங்கள் மீதான அவர்களுடைய கோபத்தையும் வெறுப்பையும் என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. நாங்கள் அவர்களுக்கு என்ன குற்றம் செய்தோம்?” என்று கேட்கிறார் கடூனப்பா.

படிக்க :
காஷ்மீர் : கார்கில் பகுதியில் தொடரும் போராட்டங்கள் | படங்கள்
டெல்லிக்கு காஷ்மீர்தான் வேண்டும் – காஷ்மீரிகள் தேவையில்லை

முகலாயர்கள் நம் நாட்டைச் சூறையாடினார்கள். கோயில்களை இடித்தார்கள் என்று தங்கள் முஸ்லீம் வெறுப்புக்கு காரணம் சொல்கிறார்கள். இவர்களுடைய வரலாறும் ஒரு நாள் எழுதப்படும். முகலாயர் வரலாற்றைப் பற்றி என்ன சொல்கிறார்களோ அதைப் போன்றதாகத்தான் இவர்களுடைய வரலாறும் இருக்கும்” என்கிறார் குரேஷி.

அஜித்.

புதிய ஜனநாயகம் ஆகஸ்ட் 2019

மின்னூல்:

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.

பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.

புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!

தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம்,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் : puthiyajananayagam@gmail.com

புதிய ஜனநாயகத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்

15.00Add to cart

15.00Add to cart

15.00Add to cart

 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க