privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திஇந்தியாகாஷ்மீரா ? குஜராத்தா ? எது வளர்ச்சியடைந்த மாநிலம் ? | ஜீன் ட்ரீஸ்

காஷ்மீரா ? குஜராத்தா ? எது வளர்ச்சியடைந்த மாநிலம் ? | ஜீன் ட்ரீஸ்

காஷ்மீர் மக்களின் உரிமை பறிப்பு பற்றியும், வளர்ச்சி குறித்த அமித்ஷாவின் கட்டுக்கதை குறித்தும் குஜராத்தோடு காஷ்மீரை ஒப்பிட்டு அம்பலப்படுத்துகிறார் பொருளாதார அறிஞர் ஜீன் ட்ரீஸ்

-

காஷ்மீரை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வதற்காகத்தான் சரத்து எண் 370, 35A ஆகியவற்றை நீக்கியதாக அமித்ஷா மாநிலங்களவையில் தெரிவித்து இருந்தார். பிரபல பொருளாதார அறிஞர் ஜீன் ட்ரீஸ், அமித்ஷாவின் இந்தப் பச்சைப் பொய்யை அம்பலப்படுத்தியுள்ளார்.

கடந்த ஆகஸ்ட் 5, 2019 அன்று மாநிலங்களவையில் பேசிய அமித்ஷா, “சரத்து 370 மற்றும் 35A ஆகியவை காஷ்மீர் மக்களுக்கு எவ்வளவு பெரிய இழப்புகளை ஏற்படுத்தியிருக்கின்றன என்பதை மக்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறேன். இந்தப் பிரிவுகளால் இம்மாநிலத்தில் ஜனநாயகம் முழுமையாக அமல்படுத்தப்படவில்லை. மேலும் ஊழல் மலிந்து வளர்ச்சி ஏதுமின்றி இருக்கிறது இம்மாநிலம். பிரிவு 35A –வை ஆதரிப்பவர்கள், ஓட்டுரிமையோ, சொத்து வாங்கும் உரிமையோ இல்லாத நிலையில் எந்த ஒரு பிரபலமான மருத்துவராவது காஷ்மீருக்கு பணிபுரிய வருவாரா என்பது குறித்து பதிலளிக்க வேண்டும்.” என்று ‘உணர்ச்சி’ பொங்கப் பேசினார்.

படிக்க :
♦ குஜராத் : இந்து ராஷ்டிரத்தின் சோதனைச்சாலை !
♦ காஷ்மீர் : பயங்கரவாதத்தையும் போர் சூழலையும் வளர்க்கும் இந்தியா !

இந்நிலையில் சமூக வலைத்தளங்களில், பொருளாதார அறிஞர் ஜீன் ட்ரீஸ் பேசிய காணொளி ஒன்று வலம் வந்தது. அதில் ஜீன் ட்ரீஸ் அனைத்துவிதமான சமூக மற்றும் பொருளாதார அளவீடுகளிலும் காஷ்மீர், குஜராத் மாநிலத்தை விட எவ்வளவு முன்னேறியிருக்கிறது என்பதை விவரிக்கிறார்.

மேலும் தனது உரையில், “இந்த பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சிக்கு அடித்தளமாய் விளங்கியது 1950-களில் முழுவீச்சில் நடைபெற்ற நிலச் சீர்திருத்தம்தான் காரணம். இந்த நிலச் சீர்திருத்தத்திற்கு சரத்து 370 அடித்தளமாய் அமைந்தது.” என்றார்.

கடந்த 2015-2016 காலகட்டத்தில் காஷ்மீரில் நிலவிய உயிர்வாழும் சராசரி வயது, ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் மரணவிகிதம், குழந்தைப்பேறு விகிதம், 15-19 வயதுக்குட்பட்ட பெண்களில் எட்டாண்டுப் பள்ளிக் கல்வி முடித்த விகிதம், குறை எடை கொண்ட குழந்தைகள் விகிதம், தடுப்பூசி போடப்பட்ட குழந்தைகள் விகிதம், வயது வந்த பெண்களுக்கான உடல் நிறை அளவீடு ஆகியவற்றுடன் குஜராத் மநிலத்தின் அளவீட்டோடு ஒப்பிட்டு அந்த காணொளியில் விளக்கியுள்ளார்.

2011- 12 காலகட்டத்திற்கான புள்ளிவிவர கணக்குப்படி, கிராமப்புறத்தில் வறுமைக் கோட்டிற்குக் கீழ் இருப்பவர்கள் மற்றும் கிராமப்புற தொழிலாளர்களுக்கான கூலி ஆகியவை குஜராத்தை ஒப்பிடுகையில் காஷ்மீரில் முன்னேறிய நிலையே காணப்படுகிறது என்கிறார்.

ஜீன் ட்ரீஸ்

டெலிகிராப் நாளிதழிடம் பேசுகையில், “காஷ்மீருக்கு தனது சொந்த அரசியல்சாசனம் இருந்ததன் காரணமாகத்தான், எவ்வித ஈட்டுத் தொகையும் இன்றி பெரும் நிலச்சுவான்தாரர்களிடமிருந்து நிலத்தைக் கைப்பற்றி நிலமற்றவர்களுக்கு அதை விநியோகிக்க முடிந்தது. இதுவே இந்திய அரசியல்சாசன பிரிவின்படி இது அனுமதிக்கப்பட்டிருக்காது.” என்றார்.

இந்திய அளவீடுகளின்படி வறுமைக்கோட்டிற்கு கீழுள்ள நபர்களின் எண்ணிக்கை காஷ்மீரில் மிகவும் குறைவாக இருப்பதற்கும், கிராமப்புற பொருளாதாரம் அங்கு சிறப்பாக இருப்பதற்கும் இந்த நிலப் பகிர்மானம்தான் முக்கியக் காரணம்.

ஆகவே குஜராத்தின் வளர்ச்சியை விட முன்னேறிய நிலையில் இருக்கும் காஷ்மீருக்கு ‘முன்னேற்றம்’ குறித்தும் ‘வளர்ச்சி’ குறித்தும் மோடியும் அமித்ஷாவும் பாடம் எடுப்பது எவ்வளவு அருவருப்பானது.

இது குறித்து நேஷனல் ஹெரால்டு பத்திரிகை, 370, 35A நீக்கம் காஷ்மீர் மக்களின் அமைதியைக் குலைக்குமா என ஜீன் ட்ரீசிடம் கேட்டபதற்கு பதிலளிக்கையில், “முதலில் ஒரு விசயத்தைப் புரிந்து கொள்ளவேண்டும். காஷ்மீரில் ஒரு சில பிரிவினைவாதிகள் மட்டுமே குழப்பம் விளைவிப்பதாகவும், மற்றபடி மக்கள் அனைவரும் அமைதியை விரும்புவதாகவும் ஒரு கருத்து பரப்பப்படுகிறது. அது ஒரு கட்டுக்கதை. அனைவரும் அமைதியைத்தான் விரும்புகின்றனர். ஆனால் காஷ்மீர் மக்களின் விடுதலைகான வேட்கை மிகவும் பரந்துபட்டது, ஆழமானது. ஆகையால் மக்கள் அவ்வளவு சாதாரணமாக இதனை விடமாட்டார்கள்” என்றார்.

மேலும், அங்கு அமைதி நிலவுவதாக மீடியாக்கள் செய்தி வெளியிட்டிருப்பதைச் சுட்டிக்காட்டி கேட்கப்பட்ட போது, “முழுக்க முழுக்க இராணுவம் குவிக்கப்பட்டிருக்கும்போது எவ்வாறு அங்கு அமைதி நிலவுவதாகக் கூற முடியும். அங்கு மக்களுக்கான தகவல்தொடர்புகள் அனைத்தும் முடக்கப்பட்டிருக்கின்றன.  அப்படி இருக்கையில் அங்கு அமைதி நிலவுவதாக எப்படி சொல்லமுடியும். எதார்த்தம் இப்படி இருக்க அமித்ஷாவின் மனதில் மட்டும்தான் அமைதி நிலவமுடியும்.” என்று பதிலளித்தா ஜீன் ட்ரீஸ்.

படிக்க :
♦ தேங்கிக்கிடக்கும் கார்கள் ! வேலையிழக்கும் தொழிலாளர்கள் ! காரணம் என்ன ?
♦ அறிவுத்துறையினரின் மௌனம் – பாசிசத்தின் பாய்ச்சல் !

மக்களின் தனிப்பட்ட வளர்ச்சியிலும், பொருளாதாரத்திலும் முன்னேறியிருக்கும் காஷ்மீர் விவகாரத்தில் மோடியும் அமித்ஷாவும் சொல்லக்க்கூடிய வளர்ச்சி என்பது, அதானி, அம்பானி போன்ற பெரும் கார்ப்பரேட் முதலைகளுக்கும், ரியல் எஸ்டேட் முதலைகளுக்கும்தான் மட்டுமே என்பதோடு, காஷ்மீர் மீண்டும் ஒரு போர்க்களமாக மாறுவதற்கான வாய்ப்புகளே அதிகம் !

நந்தன்

நன்றி : டெலிகிராப், நேஷனல் ஹெரால்ட்